சிறப்புக் கட்டுரைகள்
null

தனக்கென வாழ்ந்தால் தனதும் போகும்!

Published On 2024-05-26 11:00 GMT   |   Update On 2024-05-26 11:00 GMT
  • தன்னலத்திற்காக மட்டும் உழைப்பவரைப் 'பேயுள்ளம்' என்றும் கூறலாம் தானே!.
  • தன்னலம் மனிதனைச் சிறிய புத்திக்காரனாகச் சிதைத்துவிடும்.

தனக்கென வாழாத தன்மையாளராய்த் திகழும் நன்மையாளரே! வணக்கம்!.

இந்த உலகத்தில் வாழப் பிறந்தவர்களில் தன்னுடைய நலத்தில் மட்டுமே எப்போதும் தனி அக்கறை செலுத்துபவர்களைச் சுயநலவாதிகள் என்று அழைக்கிறோம். தன்னுடைய உழைப்பிலும் தன்னுடைய சம்பாத்தியத்திலும் மட்டுமல்லாமல் அடுத்தவர் உழைப்பிலும் அடுத்தவர் சம்பாத்தியத்திலும் கூடக், கிடைக்கின்ற பலன்களைத் தன்னுடைய நலத்திற்காகவே பயன்படுத்தக் கூடியவர்கள் தன்னலவாதிகள்.

இந்தத் தன்னலச் சிந்தனையில் இருந்து மனிதன் விரிநிலை வளர்ச்சி பெற்றுப், பொதுநலவாதியாகப் பொலிகின்ற படிநிலையைப், பாவேந்தர் பாரதிதாசன் ஒருபாடலில் தெளிவுற விளக்குகிறார். மனிதன் தனக்காக மட்டுமல்லாமல், தன் மனைவி, தன் மக்கள், தன் வீடு, தன் உணவு, தன் சம்பாத்தியம் என்று குடும்பம் சார்ந்த உறுப்பினர் நலனில் மட்டும் அக்கறை காட்டுவதைக் 'கடுகு உள்ளம்' என்கிறார். குடும்பம் தாண்டிக், கரும்பென இனிப்பது என்னுடய சிற்றூர் என்று பிறந்த ஊர் நலத்திற்குப் பாடுபடுவதைக், கடுகைவிடச் சற்றுப் பெரிய 'துவரம் பருப்பு' உள்ளம் என்கிறார்.

பிறகு நாட்டு நலம் பேணுவோர், உலக நலத்திற்காகப் பரிந்து பேசுவோர், சண்டையிட்டுக் கொள்வோர் போன்றோரை 'தென்னையுள்ளம்', 'மாம்பிஞ்சியுள்ளம்' என்றெல்லாம் கூறுகிற பாவேந்தர், நிறைவாகத் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்று பொதுநலத்தாலே தொண்டுசெய்கிற பொதுநலவாதிகளைத் 'தாயுள்ளம்' என்று தகுதிப்படுத்திப் பாராட்டுகிறார்.

ஆம்! தாயுள்ளத்தோடு பேதம் பார்க்காமல், பொதுநலத்திற்காகப் பாடுபடுவோரைத் 'தாயுள்ளம்' என்று சிறப்பித்தால், தன்னலத்திற்காக மட்டும் உழைப்பவரைப் 'பேயுள்ளம்' என்றும் கூறலாம் தானே!.

எல்லோரும் தன்னுடைய நலத்திற்காகவும் தன்னுடைய வாழ்க்கைக்காகவும் தான் செயல்படுகிறார்கள் என்றாலும் தன்னை தவிர்த்து பிற உயிரின மேம்பாட்டிற்காகவும் பாடுபட வேண்டியது, சார்ந்து வாழும் உலகியல் கோட்பாடுகளில் அவசியமானது ஆகும்.

ஒரு தேநீர்க் கடை நடத்தும் ஒருவர், தன்னுடைய சொந்த முதலீட்டைப் போட்டுத் தொழிலை நடத்துகிறார்; அதில் கிடைக்கும் லாபமும் நன்மையும் முழுவதும் தனக்கு மட்டுமே கிடைக்க வேண்டும் என்று அவர் நினைத்தால் அது தொழில் சுயநலம். பணம் அவருடையது; கடை அவருடையது. என்றாலும், அந்தத் தேநீர்க்கடைத் தொழிலில் பங்காளிகளாகத், தேநீர் தயாரிக்கும் மாஸ்டர் தொடங்கி, பால்காரர், தேயிலை, சர்க்கரை, எரிபொருள், தண்ணீர் வழங்குபவர், கிளாஸ் கழுவுபவர் வரை பல பேருடைய உழைப்பு இதில் பரிபூரணமாக இருப்பதைப் புறந்தள்ளிவிட முடியாது. இத்தனைபேரும் சேர்ந்து, பருக வரும் வாடிக்கையாளர் மனம் கோணாதபடி, தரமான சுவையுடன், நியாய விலையுடன் தேநீர் வழங்க வேண்டும். முதலாளி லாபம் சம்பாதிப்பது ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டிருந்தால், உழைப்பாளர் மனமுவந்து ஒத்துழைக்க மாட்டார்கள்; ஏனென்றால் அவர்களுக்கு உரிய ஊதியமும் கிடைக்காமல் போகும்.

தனிப்பட்ட மனிதர் நடத்தும் தனியார் தொழில் என்றாலும், அதிலும் வாடிக்கையாளர் உள்ளிட்ட அனைவர் சார்ந்த பொதுநலனும் கலந்திருந்தால் மட்டுமே அது சிறந்திருக்கும். தன்னலம் எல்லா நிலைகளிலும் நம்முடைய முயற்சிகளைத் தரம் தாழ்த்திவிடும்.

தன்னலம் பேணுகிற மனிதர்கள் எப்போதும் தேவையில்லாமல் தன்னை முன்னிலைப் படுத்துவதிலேயே குறியாய் இருப்பார்கள்; தன்னை முன்னிலைப்படுத்துகிற மனிதன் நாளடைவில் ஆணவமும் கர்வமும் நிறைந்தவனாக மாறித் தன் தலையிலே தானே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளும் அவல நிலைக்குத் தள்ளப்படுவான்.

சுந்தர ஆவுடையப்பன்

சிலபேரைப் பார்த்திருப்போம். எப்போதும் வரிசையறிந்து வருகிற உரிமைகளையும் பெருமைகளையும், குறுக்குவழியில் முந்திச் சென்று அடுத்தவரிடமிருந்து தட்டிப்பறித்து விடவேண்டும் என்கிற குறுகிய சிந்தனையோடேயே இருப்பர். பேருந்து நிலையம், திரையரங்கம், ரேசன் அங்காடி, திருமண விருந்துக்கூடம், வழிபாட்டுக்கூடம் என எங்குச் சென்றாலும் வரிசையில் நிற்காமல் குறுக்கே புகுவதிலேயே சிலர் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். போக்குவரத்து நெரிசலிலும் முந்திப் புகுந்து முட்டி அடிபடுகிற அவல நிலையில் சிக்குவோரும் உண்டு.

தன்னலம் மனிதனைச் சிறிய புத்திக்காரனாகச் சிதைத்துவிடும். சிலருக்கு எப்போதும் தன்னை வியப்பதிலேயே தனி ஆர்வம் உண்டு. என்னைவிடத் திறமைசாலி இந்த உலகத்திலேயே கிடையாது. எனக்குத் தெரியாதவர்கள் இந்த உலகத்திலேயே இன்னும் பிறக்காதவர்கள்; எத்தனைபேர் வந்தாலும் அத்தனைபேரையும் வெல்லும் ஆற்றல் எனக்கு மட்டுமே உண்டு! என்று தற்புகழ்ச்சியிலேயே காலத்தைத் தள்ளிவிடுவர்.

தன்னுடைய உழைப்பால் கிடைப்பதும், அடுத்தவர் உழைப்பால் கிட்டுவதும் என உழைப்பு யாருடையதாக இருந்தாலும், பலன் தன்னுடையதாகவே இருக்கவேண்டும் என்கிற பேராசைக் குணமும் தன்னலவாதிகளை விட்டு அகலாமல் போகும். இதனால் இவர்களைச் சுற்றியுள்ள அனைவராலும் வெறுக்கப்படும் நிலைக்கு இவர்கள் தள்ளப்படுவர். இவர்களை அறியாமலேயே அடுத்தவரைப் பார்த்துப் பொறாமைப்படும் தீய குணமும் ஒட்டிக்கொள்ளும். அந்த வகையில் எல்லோராலும் எள்ளி நகையாடி விலக்கப்படும் தன்னல குணத்தினால் விளையும் நன்மைதான் என்ன?

ஒரு கிராமத்து விவசாயி, தன்னுடைய வயலில் இருந்த வைக்கோலைத் தனது மாட்டு வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டை நோக்கிச் சென்று கொண்டிருந்தார். ஓர் ஆற்றின் கரைவழியே அவர் செல்லும் பாதை இருந்தது. ஏற்றப்பட்டிருந்த வைக்கோல் பாரத்தோடு மாடுகள் ரெண்டும் மகிழ்ச்சியாக வண்டியை இழுத்துச் சென்று கொண்டிருந்தன. அந்த விவசாயி நல்ல குரலெடுத்துப் பாடிக்கொண்டும் ஆற்றின் கரைவழியே வண்டியில் சென்று கொண்டிருந்தார்.

அவர் இயல்பாகவே நன்றாகப் பாடுவார். இன்று என்னவோ அதிகப்படியான மகிழ்ச்சியில் இருந்ததால் பாடல் பிரமாதமாக நதிக் கரையெங்கும் பரவி ரீங்காரமிட்டது. அவரது பாடலில் மயங்கிய தேவதை ஒன்று ஆற்றிலிருந்து வெளிவந்து விவசாயியின் முன் தோன்றியது." விவசாயியே! உன் பாடலை மெச்சுகிறேன்; இதோ உன் பாடலுக்கான பரிசாக உனக்கு இரண்டு தங்கக் காசுகளை வழங்குகிறேன்!; பெற்றுக்கொள்!. இந்தத் தங்கக் காசுகளை ஒவ்வொன்றாக இந்த ஆற்றில் வீசுவதன் மூலம் ஒவ்வொரு வரங்களை நீ பெற்றுக்கொள்ளலாம். இரண்டு தங்கக் காசுகள்! இரண்டு வரங்கள்! இரண்டே வாய்ப்புகள்!" என்று கூறிக் காசுகளை வழங்கி மறைந்தது தேவதை.

மகிழ்ச்சியடைந்த விவசாயி, தான் பெற்ற இரண்டு தங்கக் காசுகளில் ஒன்றை ஆற்றுக்குள் எறிந்து, 'தன்னுடைய மாட்டுவண்டியில் ஏற்றப்பட்டிருக்கும் வைக்கோல் முழுவதும் தங்கமாக மாறிவிடக் கடவது!' என்று மனத்திற்குள் வேண்டினார். அடுத்த நொடியே வண்டியில் இருந்த வைக்கோல் அத்தனையும் தங்கமாக மாறி ஜொலிக்கத் தொடங்கியது. இரண்டுமடங்கு குதூகலத்துடன் மேலும் பாடிக்கொண்டே ஆற்றின் கரைவழிப் பாதை வழியே வண்டியை ஊரை நோக்கிச் செலுத்தினார் விவசாயி.

தன்னுடைய பாட்டிற்காகத் தனக்குப் பரிசாகக் கிடைத்த இரண்டு தங்க நாணயங்களில் ஒன்றின் மூலம் ஒரு வண்டித் தங்கம் தனக்கு வாய்த்திருப்பதில் மகிழ்ந்திருக்கும் விவசாயி, அதனை வேறு யாருக்கும் தெரியாமல் எப்படித் தானே அனுபவிப்பது? என்று யோசிக்கத் தொடங்கினார்.

அந்த நேரம் பார்த்துக், கொஞ்ச தூரத்தில், எதிர்த்தாற்போல இவரது ஊர் நண்பர்கள் சிலர் கரைவழியே வந்து கொண்டிருப்பதைப் பார்த்தார் விவசாயி. 'இவர்கள் நெருங்கி வரும்போது, வண்டியிலுள்ள தங்க வைக்கோலைப் பார்த்தால், அவர்களும் பங்கு கேட்பார்களே! அவர்களின் பார்வையில் இருந்து எப்படி தங்கத்தை மறைப்பது?' என்று யோசிக்கத் தொடங்கினார் விவசாயி.

படக்கென்று ஒரு முடிவெடுத்தார். தேவதை கொடுத்த தங்கக் காசுகளுள் கையில் எஞ்சியிருந்த ஒன்றையும் ஆற்றினுள் வீசியெறிந்தார். 'தனது வண்டியில் இருக்கும் தங்க வைக்கோல் புற்கள், தனது கண்களுக்கு மட்டுமே தங்கமாகத் தெரிய வேண்டும். அடுத்த எவர் கண்களுக்கும் அவை வைக்கோலாகவே தெரிய வேண்டும்!' என்று மனதிற்குள் வேண்டிக் கொண்டார்.

வண்டி இப்போது எதிரே வந்துகொண்டிருந்த நண்பர்களை நெருங்கியிருந்தது. அவர்களில் ஒருவன் விவசாயியைப் பார்த்துக் கேட்டான், " என்ன? வயலில் இருந்து வைக்கோலை வண்டியில் ஏற்றிக்கொண்டு வீட்டுக்குப் போய்க்கொண்டிருக்கிறாயா?". விவசாயி திரும்பி வண்டியைப் பார்த்தார், வண்டிக்குள் தங்க வைக்கொல் ஜொலித்துக் கொண்டிருந்தது. நமது இரண்டாவது வரமும் கிடைத்து விட்டது என்று மகிழ்ச்சியோடு வீட்டை நோக்கி வண்டியைச் செலுத்தத் தொடங்கினார்.

இப்போது, விவசாயி பெற்ற இரண்டாவது வரத்தினால்தான் அவருக்குப் பிரச்சனையே ஆரம்பித்தது. எப்படியென்றால், இவருக்கு மட்டுமே தங்கமாகத் தெரியும் அந்த வைக்கோல், மற்றொருவருக்கும் சாதாரண வைக்கோலாகவே தெரியுமென்பதால், அதனை விற்கவோ, தங்க அணிகளாக மாற்றிக்கொள்ளவோ இயலாத நிலைக்கு இப்போது தள்ளப்பட்டுள்ளார் விவசாயி. முதல் வரத்தோடு நிறுத்தியிருந்தால், அந்தத் தங்கத்தை மற்றவர் பங்கு கேட்டாலும் அவருக்கும் பயன்பட்டிருக்கும். ஆனாலும் அனைத்தையும் தானே அனுபவிக்கவேண்டும் என்று பேராசைப்பட்டதால் உள்ளதும் போச்சென்று இப்போது தனதும் இழந்து தவித்துக் கொண்டிருக்கிறார்.

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு செயலிலும் தனக்கெனக் கொஞ்சம் வாழ்வதில் தவறில்லை. ஆனால் அடுத்தவர் உழைப்பையும் தனக்கென மாற்றிக் கொண்டு வாழ்வதுதான் பெருந்தவறு. தன்னலம் எப்போதும் தன்னுடைய தேவைகளையும் தன்னுடைய விருப்பங்களையும் நிறைவேற்றிக் கொள்வதிலேயே குறியாக இருக்கும். அடுத்தவர்களும் நம்மைப் போன்ற மனிதர்கள் தாமே! அவர்களுக்கும் தேவைகள், விருப்பங்கள் இருக்கத்தானே செய்யும்! என்று துளிகூட நினைத்துக் கூடப் பார்க்காது.

வாழ்க்கை என்பதே கொடுத்துப் பெறுகிற பெருமை வாய்ந்தது. இதைக் கொஞ்சம்கூட எண்ணிப் பார்க்காமல், நான் பெற்றுக்கொண்டே இருப்பேன்; நீ கொடுத்துக்கொண்டே இரு! என்கிற குறுகிய மனோபாவத்துடன் வாழ்வதே தன்னலமாகும்.

குழந்தையாக இருக்கும்போது எல்லோரும் எல்லாமே தனக்குத்தான் என்று இருந்திருக்கலாம்; சில குழந்தைகள் கையிலிருக்கும் எந்தப் பொருளையும் யார்கேட்டாலும் கொடுக்கவே கொடுக்காது. குழந்தைப் பருவத்தில் இது குறை கிடையாது. ஆனால் ஆளும் அறிவும் வளர வளரப், பொதுநலம் பேணுகிற தயாள குணமும் வளரவேண்டும்.

நம்மிடமுள்ள சுயநல எண்ணங்கள் நம்மை அறியாமலேயே நம்மிடம் ஒட்டிக் கொண்டுள்ளதாக எண்ணினால், அவற்றை வெகு எளிதாக நாம் அகற்றிவிடலாம். ஒரு செயலில் ஈடுபடும் ஒவ்வொரு முறையும், இதற்காக ஒதுக்கப்படும் நேரத்தில் எவ்வளவு நேரம் நமக்கானது? எவ்வளவு நேரம் அடுத்தவர் நலம் பேணுவது? என்று சிந்தித்து ஈடுபட வேண்டும்.

அடுத்தவர்களுக்காக நாம் எவ்வளவுதூரம் நம்முடைய பொருள் வளத்தையும், அக்கறையையும் செலவு செய்கிறோம்?; அல்லது எந்த அளவுக்கு நம்முடைய நலத்திலும் வளத்திலும் அக்கறை செலுத்தும் உரிமையுடையவர்களைப் புறக்கணிக்கிறோம்? இப்படிப்பட்ட ஆரோக்கிய மான சில கேள்விகளை மனத்தில் கேட்டுக் கொண்டு கருணையோடு செயல்படத் தொடங்கினாலே தன்னலமில்லா நல்வாழ்வு பெற்று வெற்றிகளை அடையலாம்.

தொடர்புக்கு : 9443190098

Tags:    

Similar News