சிறப்புக் கட்டுரைகள்

நோபல் பரிசு வென்ற முதல் இந்திய விஞ்ஞானி சர் சி.வி. ராமன்

Published On 2024-04-17 11:15 GMT   |   Update On 2024-04-17 11:15 GMT
  • விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.
  • பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

தமிழ்நாட்டில் திருச்சி மாநகருக்கு அருகில் உள்ள திருவானைக்காவலில் ஒரு எளிய பள்ளி ஆசிரியருக்கு மகனாகப் பிறந்து உலகப் புகழ் பெற்ற நோபல் பரிசைப் பெற்ற பெரும் விஞ்ஞானி யார்?, பாரத் ரத்னா பட்டதைப் பெற்றவர் யார் என்று கேட்டால் அனைவரும் மன மகிழ்ச்சியோடுக் கூறும் பெயர் சர் சி. வி.ராமன். அனைத்து இளைஞர்களையும் அறிவியலில் ஈடுபடுத்தப் பாடுபட்டு அவர்களுக்கென இடைவிடாது உழைத்த விஞ்ஞானி இவர்.

பிறப்பும் இளமையும்: சந்திரசேகர் ராமநாதன் ஐயருக்கும் பார்வதி அம்மாளுக்கும் பிறந்த எட்டு பேரில் இரண்டாவது மகனாக 1888-ம் ஆண்டு நவம்பர் 7-ம் தேதி தோன்றியவர் சி.வி,ராமன்.

தந்தையார் உள்ளூர் உயர்நிலைப்பள்ளியில் ஆசிரியர். தந்தையாருக்கு ஆந்திர பிரதேசத்தில் நரசிம்மராவ் கல்லூரியில் இயற்பியல் பிரிவில் வேலை பார்க்க அழைப்பு வந்தது. அவருடன் சென்ற ராமன் விசாகப்பட்டினத்தில் பள்ளிப் படிப்பை முடித்தார். 13 வயதில் இண்டர்மீடியட்டில் தேறினார். பின்னர் பட்டம் பெற்றதும் அரசுப் பணியில் ஒரு கணக்காயராகச் சேர்ந்தார்.

அப்போதே அறிவியலில் மிக்க ஆர்வம் கொண்டு தனிப்பட்ட முறையில் பல சோதனைகளைச் செய்ய ஆரம்பித்தார்.

கத்தாவில் 1917-ல்,; புதிதாக ஏற்படுத்தப்பட்ட பாலித் பீட இயற்பியல் பிரிவில் பேராசிரியராகச் சேர்ந்தார்.

1926-ல் இயற்பியல் ஆய்விதழ் ஒன்றை நிறுவி அதன் ஆசிரியராகப் பணியாற்ற ஆரம்பித்தார்.

கண்டுபிடிப்புகள்:

இங்கிலாந்திற்கு முதல் தடவையாக மத்தியதரைக் கடலில் கப்பலில் அவர் சென்ற போது கடல் நீர் ஏன் நீல நிறமாகத் தோன்றுகிறது என்ற எண்ணம் அவர் மனதில் தோன்றியது. சிதறிய ஒளியாலேயே நீல நிறமாக அது தோன்றுகிறது என்று அப்போது கூறப்பட்ட காரணம் அவருக்கு ஏற்புடையதாக இல்லை. ஒளி ஊருவிச் செல்லும் ஊடகம் திடப்பொருளாகவோ திரவப் பொருளாகவோ அல்லது வாயுப் பொருளாகவோ எதாக இருந்தாலும் சரி, அதில் ஒளி செல்லும் போது ஒளியின் மூலக்கூறு சிதறல் ஏற்படுகிறது என்பதைத் தன் ஆய்வுகளின் மூலமாக அவர் கண்டறிந்தார். இதை ஸ்பெக்டோகிராப் என்ற கருவியைப் பயன்படுத்தி அவர் கண்டார்.

அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்பு ராமன் எபெக்ட் அதாவது – ராமன் விளைவு என்று அழைக்கப்பட்டது.

1928-ம் ஆண்டு புதிய கதிர்வீச்சு என்னும் தலைப்பில் தனது ஆய்வு முடிவுகளை அவர் வெளியிட்டார். இது அனைவரையும் பிரமிப்பில் ஆழ்த்தியது.

1930-ம் ஆண்டு உலகின் தலை சிறந்த விருதான நோபல் பரிசு வெள்ளையரல்லாத ஒரு இந்தியரான இவருக்கு அளிக்கப்பட்டது. இதை அறிவியலில் பெற்ற முதல் இந்தியர் இவரே. (ரவீந்திரநாத் தாகூர்1913-ல் இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றார்.)

ச.நாகராஜன்

இசைக் கருவிகள் மீது தீரா ஆர்வம் கொண்ட ராமன், வயலின், மிருதங்கம் உள்ளிட்ட இசைக் கருவிகள் பற்றியும் அதில் எழுப்பும் அதிர்வலைகள் ஏற்படுத்தும் ஒலியின் நுட்பத்தையும் நுண்மையாக ஆராயலானார்.

இந்தக் கண்டுபிடிப்புகளும் அவருக்குப் பெரும் புகழைப் பெற்றுத் தந்தது.

பார்க்கின்ற எதையும் அறிவியல் கண் கொண்டு பார்ப்பதே அவரது பழக்கமாக ஆனது.

அறிவியலில் அனைவரும் ஈடுபட வேண்டும், இந்தியா அறிவியல் நாடாகத் திகழ வேண்டும் என்று அவர் ஆசைப்பட்டார்.

முதன்முதலில் இந்தியன் சயின்ஸ் அகாடமியை ஆரம்பித்து அதன் தலைவராகவும் இருந்து பணியாற்றினார்.

இவரது வாழ்க்கையில் நூற்றுக் கணக்கான சுவையான சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. ஒவ்வொரு சம்பவமும் இவரது அரிய குணநலன்களை வெளிப்படுத்துபவையாக அமைந்தவையாகும். எடுத்துக்காட்டிற்குச் சில சம்பவங்கள் இதோ:

பத்து கிலோவாட் மூளை!

ஒரு முறை அவரது இந்தியன் சயின்ஸ் இன்ஸ்டிடியூட்டில் வேலை பார்த்து வந்த விஞ்ஞானியான பிஷரொடி என்பவர் மிகவும் சோர்வுடன் அமர்ந்திருந்தார். அவர் சோர்ந்திருப்பதைப் பார்த்த ராமன் காரணம் என்ன என்று கேட்டார்.

"இதே போன்று சோதனையை பிரிட்டனில் செய்து வரும் விஞ்ஞானி ஐந்து கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறார். நானோ ஒரு கிலோவாட் எக்ஸ்-ரே டியூபை வைத்திருக்கிறேன்" என்று அவர் தனது சோர்விற்கான காரணத்தைக் கூறினார்.

"ஓ! இந்தப் பிரச்சனையை சுலபமாகச் சமாளித்து விடலாமே! இந்த சோதனைக்கு புத்து கிலோவாட் மூளையைப் பயன்படுத்து!" என்று சிரித்தவாறே பதில் கூறினார் ராமன்.

இப்படி பத்து கிலோவாட் மூளை உள்ளவர்களைக் கண்டுபிடிப்பதில் அவர் வல்லவராக இருந்தார்.

ஹோமி ஜே.பாபா, விக்ரம் சாராபாய் ஆகியோரின் திறனைக் கண்டு அவர்களைப் பாராட்டினார் ராமன். இந்த இருவருமே பின்னால் இந்திய விண்வெளி விஞ்ஞானத்தில் பெரும் சாதனை நிகழக் காரணமாக அமைந்தனர்.

1967-ம் ஆண்டு உஸ்மேனியா பல்கலைக்கழக கோல்டன் ஜூபிளி கொண்டாட்டத்தில் தலைமை விருந்தினராக ராமன் அழைக்கப்பட்டார். அவர் தனது உரையில் என்ன சொல்லப் போகிறார் என்பதைக் கேட்க அனைவரும் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தனர்.

அந்தச் சமயம் அவர் அதனது லாபரட்டரியில் வைரங்களைப் பற்றிய ஆராய்ச்சியில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். வைரங்களைப் பற்றித் தனது சிறப்புரையில் அனைத்து விவரங்களையும் தந்து அனைவரையும் அவர் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.

உரை முடிந்த பின்னர் ஒரு மாணவர் எழுந்திருந்து, "சார்! நீங்கள் வைரங்களைப் பற்றிய அனைத்து அம்சங்களையும் விளக்கி விட்டீர்கள். ஆனால் வைரங்களை எப்படிச் செய்வது என்பது பற்றி ஒன்றுமே கூறவில்லையே" என்று கேட்டார்.

இடக்கான இந்தக் கேள்வி அங்கிருந்தோரை துணுக்குற வைத்தது.

ஆனால் விஞ்ஞானி ராமனோ ஒரு கணம் கூடத் தாமதிக்கவில்லை.

"அது ரொம்ப சுலபம். நீங்கள் ஒரு கரித்துண்டை எடுத்துக் கொள்ளுங்கள். பூமிக்கடியில் ஆயிரம் அடி தோண்டி அதைப் புதைத்து விடுங்கள். ஆயிரம் ஆண்டு காத்திருங்கள். மீண்டும் தோண்டுங்கள். உங்களுக்கு வைரம் கிடைத்து விடும்" என்றார்.

அரங்கம் அனைவரின் கரவொலியால் அதிர்ந்து போனது! அவரது பதிலை அனைவரும் ரசித்து மகிழ்ந்தனர் – கேள்வி கேட்டவர் உடபட!

உடனடியாக பதில் கூறுவதில் வல்லவர் அவர்.

நேர்மையே வெல்லும்!

இன்னொரு சம்பவம் இது.

ஒரு சமயம் பகவான் சத்யசாயி பாபா பெங்களூரில் உள்ள இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் சயின்சுக்கு விஜயம் செய்தார்.

அதனுடைய டைரக்டரும் சிறந்த விஞ்ஞானியுமான டாக்டர் பகவந்தம் பாபாவின் பக்தராவார். அவர் பகவந்தத்தின் வீட்டில் தங்கியிருந்தார். அந்த மாடியில் கிளார்க் வேலைக்காக ஒரு நேர்காணல் பேட்டி நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொண்ட ஒரு பையன் சோகமாக ஒரு மரத்தடியில் நின்று கொண்டிருந்தான். அவனைப் பார்த்த பாபா அவனை அழைத்து, "என்ன விஷயம்?" என்று கேட்டார்.

இண்டர்வியூவில் கலந்து கொண்ட தன்னால் சரியாகப் பதில் சொல்ல இயலவில்லை என்றும் இண்டர்வியூவை நடத்திய பெரும் விஞ்ஞானியான ராமன் தன்னைத் திட்டி அனுப்பி விட்டதாகவும் அவன் வருத்தத்துடன் சொன்னான்.

பாபா, "அது சரி, நீ இங்கு வருவதற்காக அலவன்ஸ் ஏதாவது உனக்குத் தந்தார்களா" என்று கேட்டார்.

அந்தப் பையன், " ஆமாம். நான் பக்கத்து கிராமத்தில் இருந்து வருகிறேன். வந்து போக அலவன்ஸாக பதினைந்து ரூபாய் தந்திருக்கிறார்கள். போக வர செலவு பத்து ரூபாய். மீதி ஐந்து ரூபா என்னிடம் இருக்கிறது" என்றான்.

உடனே பாபா, " சி.வி. ராமன் இப்போது மாடியிலிருந்து இறங்கி வருவார். அவரிடம் மீதி இருக்கும் பணத்தைத் திருப்பிக் கொடுத்து விடு" என்றார்.

பையனும் அதற்கு ஒப்புக் கொண்டு சி.வி,ராமனுக்காகக் காத்திருந்தான்.

ராமன் கீழே இறங்கி வந்து காரில் ஏறும் சமயத்தில் அங்கு நின்று கொண்டிருந்த பையனைப் பார்த்தார். "நீ இன்னமுமா இங்கு நிற்கிறாய்?" என்றார்.

பையன் அவர் அருகில் சென்று, "கொடுத்த பதினைந்து ரூபாயில் எனக்குச் சேர வேண்டியது போக மீதி ஐந்து ரூபாய் இருக்கிறது. அதை உங்களிடம் தருவதற்காகத் தான் காத்து நிற்கிறேன்" என்றான்.

இதைக் கேட்டவுடன் அளவிலா மகிழ்ச்சி அடைந்த ராமன், "ஆஹா! இந்த வேலைக்கு உன்னைப் போன்ற நேர்மையுடைய ஒருவன் தான் வேண்டும்" என்று கூறி விட்டு அங்கிருந்த நிறுவன அதிகாரியைக் கூப்பிட்டு உடனடியாக அப்பாயின்ட்மெண்ட் ஆர்டரை அடித்துத் தர உத்தரவிட்டார்.

ஐந்து ரூபாயையும் அவனிடமே திருப்பித் தந்தார்.

பையன் கண்ணீர் மல்க பாபாவிடம் வந்து நடந்ததை எல்லாம் சொன்னான்.

பாபா, "பார்த்தாயா! நேர்மைக்குக் கிடைத்த பரிசை! நேர்மையை எப்போதும் கடைப்பிடி" என்று அருளுரை பகிர்ந்தார்.

ஏராளமான விருதுகளை சி.வி.ராமன் பெற்றுள்ளார்.

1929-ல் இங்கிலாந்து அரசியார் அவருக்கு சர் பட்டத்தை அளித்துக் கவுரவித்தார்.

1954-ம் ஆண்டு இந்திய அரசு மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை அவருக்கு வழங்கி கவுரவித்தது.

1928-ல் அவர் பிப்ரவரி 28-ந் தேதி அவர் தனது மாபெரும் கண்டுபிடிப்பைக் கண்டுபிடித்ததையொட்டி ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 28-ம் நாளை இந்திய அரசு அதை தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாட ஆணை பிறப்பித்தது.

மறைவு: 1970-ம் ஆண்டு நவம்பர் மாதம் 21ம் நாளன்று தனது 82-ம் வயதில் மறைந்தார். தனது மனைவியிடம் மிக மிக எளிமையாக எந்த வித சடங்குமின்றி தான் எரியூட்டப்பட வேண்டும் என்று கூறினார்.

ஊக்கமூட்டும் உரைகள்

சர் சி.வி, ராமனின் ஊக்கமூட்டும் பொன்மொழிகள் ஏராளம்.

அவற்றில் முக்கியமான இரண்டு இதோ:

அறிவியல் என்பது சரியான விடைகளைக் கண்டுபிடிப்பது அல்ல; சரியான கேள்விகளைக் கேட்பதே அறிவியல் ஆகும்.

நாம் ஒரு தாழ்வு மனப்பான்மையைக் கொண்டிருக்கிறோம் என்று நான் நினைக்கிறேன். இந்தியாவில் இன்றையத் தேவை என்னவெனில் அந்த தோல்வி மனப்பான்மையை அழிப்பது தான்!"

ஆம், தோல்வி மனப்பான்மையை உதறித் தள்ளிவிட்டு இந்தியர்கள் அனைவரும் ஆக்கபூர்வமாக மேலெழுவோமாக! உலகின் தலைமை இடத்திற்கு முன்னேறுவோமாக!

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News