சிறப்புக் கட்டுரைகள்

ஓட்டு வாங்க உதவுமா, ரோடுஷோ?

Published On 2024-04-12 11:04 GMT   |   Update On 2024-04-12 11:04 GMT
  • கிராம வீதிகள் வழியாக 1-2 கிலோமீட்டர் ரோடுஷோ சென்று மந்தைத் திடலில் முடிப்போம்.
  • இரண்டு பேர் சைக்கிளில் போவது அப்போது சட்ட விரோதம்

புதிய அறிமுகத்தின்போது நிறுவனங்கள் கடைப்பிடிக்கும் மார்க்கெட்டிங் உத்தி ரோடுஷோ. தனியார் நிறுவனத்தில் விவசாய அதிகாரியாகப் பணிபுரியும் போது 70களில் திண்டுக்கல் கிராமப் பகுதிகளில் இதைப் பயன்படுத்தி இருக்கிறேன்.

புது வரவான டி.ஏ.பி. உர மூட்டைகளை ஏற்றுக்கொண்டு ஒரு மாட்டு வண்டியில் ஊர்வலம் போல செல்வோம். ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற ஆடல் கலைகளை நிகழ்த்திக்கொண்டு தொழில்முறைக் கலைஞர்கள் அணிவகுப்பார்கள். கொட்டு மேளம் கண்டிப்பாக உண்டு.

கிராம வீதிகள் வழியாக 1-2 கிலோமீட்டர் ரோடுஷோ சென்று மந்தைத் திடலில் முடிப்போம். நிறைவாக உள்ளூர் விவசாயிகளை வைத்துக் கூட்டம் போட்டு டி.ஏ.பி. உரத்தின் அருமை பெருமைகளை எடுத்துக் கூறுவோம்.

இறுதியில் 16 எம்.எம். புரஜெக்டர் வைத்து ஏதாவது எம்.ஜி.ஆர். படம் திரையிடுவோம். கூட்டம் அள்ளும்! பட், ரோடுஷோ அறிமுகத்துக்காக மட்டுமே உதவும்.

மார்க்கெட்டிங்குக்குச் சரி! பொலிடிக்கல் ரோடுஷோ என்ன பயன் தரும்? அறிமுகத்துக்கான உத்தி வாக்கரசியலுக்கு உதவுமா? சந்தேகம்தான். பிரதமர் மோடியின் சென்னை பனகல் பார்க் ரோடுஷோ படக்காட்சிகளை டிவிக்களில் பார்க்கும் போது என் மனதில் எழும்பிய கேள்வி இதுதான்.

திராவிட இயக்க சிந்தனைகளை எதிர்க்கும் பாரதிய ஜனதா ரோடுஷோவுக்குத் தேர்ந்தெடுத்த இடம் நீதிக்கட்சி மூத்த தலைவர்களின் நினைவைப் போற்ற உருவாக்கப்பட்ட பகுதி என்பதே ஒருவகை முரணோ?

பிரதமரின் 2 மணி நேர ரோடு ஷோவுக்கு செய்யப்பட்டிருந்த விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் அன்றைய நாள் முழுவதும் வியாபார கேந்திரமான தி.நகர் பகுதியைப் பாதித்தது என்பதே உண்மை.

அந்தக் காலத்தில் மதுரையில் இந்திராகாந்தி ரோடுஷோ, நெல்லையில் நாவலர் சாலைப் பேரணி.. இப்படிப் பல தலைவர்களின் ஊர்வலங்களைப் பார்த்திருக்கிறேன். ஆனால் சாலைப் பேரணிகள் முதல் பிரம்மாண்டப் பொதுக்கூட்டங்கள் வரை சாமானிய வாக்காளர்கள் கலந்து கொள்வது இல்லை. பனகல் பார்க் ஏரியாவில் 2 கி. மீ ரோடுஷோ நடத்தி சென்னை முழுவதும் வாக்கு வாங்குகிற வித்தை எப்படிச் சித்தியாகும்? தெரியல சாமீ!

மதுரை யானைமலை மலையாளத்தான்பட்டி கிராமத்தின் அருகில் அரசு விவசாயக் கல்லூரி துவக்கப்பட்ட 65 - 66 காலகட்டம். மேடைப் பேச்சுக் கேட்பதில் விருப்பம். தலைவர்கள் எங்கு பேசினாலும் வாடகை சைக்கிள் எடுத்துக் கொண்டு பல கிலோ மீட்டர் தூரம் "டபிள்ஸ்" செல்வோம்.

இரண்டு பேர் சைக்கிளில் போவது அப்போது சட்ட விரோதம். எனவே போலீஸ் தலைகளைக் கண்டால் கேரியரிலிருந்து இறங்கி சைக்கிளோடு ஓடிச் சென்று காவலர்கள் போனபிறகு மீண்டும் ஏறிக் கொள்வோம்

மேடைப் பேச்சு கேட்பதற்குக் கட்டணம் வசூலிக்கப்பட்ட காலம். ஒப்பந்த அடிப்படையில் 300 ரூபாய் தந்து ஆள் சேர்க்கும் அவலநிலை ஏற்படும் என்று கனவிலும் நினைத்ததில்லை. நுழைவுக் கட்டணம் எவ்வளவு வசூல் ஆனது என்பதை வைத்தே பேச்சாளர்களின் நட்சத்திரத்தனமை அளவிடப்பட்டது.

பார்வையாளர்கள் கேள்விகளுக்கும் சொற்பொழிவாளர்கள் பதில் சொல்வார்கள். அதற்காகச் சீட்டு விநியோகிக்கப்பட்டு வினாக்களை எழுதுவோம்.


ஒரு கூட்டத்தில் "முட்டாள்" என்று மட்டுமே எழுதி ஒரு சீட்டு வந்தது. அதைக் கூட்டத்தில் வாசித்த சிறப்புப் பேச்சாளர் "யாரோ ஒருவர் தன் பெயரை மட்டும் எழுதிவிட்டுக் கேள்வியை எழுத மறந்து விட்டார்!" என்று கிண்டல் செய்தார். இப்படி ஒரு செய்தி உண்டு.

தமிழின் முதல் ரோடுஷோ மற்றும் சொற்பொழிவு என்று கூறப்படுவது தலையாலங்கானத்துச் செருவென்ற நெடுஞ்செழியன் போர்க்களம் காணுமுன் நிகழ்த்தியது என்பார்கள்.

இன்றைய திருவாரூர் மாவட்டம், குடவாசல் வட்டம் சிமிழி ஊராட்சில் உள்ள ஒரு கிராமம் அன்றைய தலையாலங்கானம். படைபலம் கொண்ட ஏழு மன்னர்களுக்கும் பாண்டியன் நெடுஞ்செழியனுக்கும் இடையே பெரும் போர் மூண்டது.

பாண்டிய மன்னன் வயதில் இளையவன். படைபலமும் குறைவு. எனவே எதிரிகள் அவனை எள்ளிநகையாடினார்கள்.

அப்போது பாண்டியன் நிகழ்த்திய பேருரையே தமிழின் முதல் மேடைப்பேச்சு! அது வஞ்சினம் நிறைந்தது.

"இது செய்யாவிட்டால் எனக்கு இன்னது நேரட்டும்!" என்று பலர் முன் கூறுவது வஞ்சினம்.

தலையாலங்கானத்துப் போரைப் பற்றிப் பாடாத புலவர்களே இல்லை. வெற்றி நாயகனான பாண்டியன் மீது நெடுநல்வாடை, மதுரைக் காஞ்சி ஆகியவற்றில் நக்கீரரும், மாங்குடி மருதனாரும் பாடல் புனைந்துள்ளனர்.

யாழ்ப்பாணம் வண்ணார்பிள்ளை கோயிலில் ஆறுமுக நாவலர் நிகழ்த்திய ரோடுஷோ மற்றும் சமயப் பொதுச்சொற் பொழிவு 170 ஆண்டுகளுக்கு முன்னால் என்கிறார் தமிழ்ப் பண்பாட்டு ஆய்வாளர் மறைந்த பெர்னார்ட் பேட்.

பெர்னார்ட் பிறப்பால் அமெரிக்கர். ஆய்வுப்பணிக்காக 1982ல் மதுரை வந்தார். பின்னர் அங்கேயே தங்கி "தமிழின் மேடைப்பேச்சு மற்றும் திராவிட அரசியல்" பற்றி கள ஆய்வு நடத்தினார்.

யு.எஸ்.நாட்டின் சிகாகோ பல்கலைக்கழகத்தில் தமிழ் விரிவுரையாளராகப் பணியைத் தொடங்கியவர் பேட். சுமார் 34 ஆண்டுகளாகத் தமிழகத் தொடர்புடன் இருந்தவர்.

இறுதியாக சிங்கப்பூர் யேல் தேசியப் பல்கலைக்கழகக் கல்லூரியில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி மறைந்தார். சுந்தர ராமசாமியின் கதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார் பெர்னார்ட் பேட்.

தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பேசப்படும் பேச்சுத் தமிழை ஊன்றிக் கவனித்தார் பெர்னார்ட் பேட். மூத்த தமிழறிஞர் தொ.பரமசிவன் அவருடைய ஆய்வு வழிகாட்டி மற்றும் பேராசிரியர்.

"உசிலம்பட்டிப் பேச்சுத் தமிழ், மதுரைப் பேச்சுத் தமிழ், திருநெல்வேலி பேச்சுத் தமிழ் ஆகியவற்றுக்கு இடையிலான உச்சரிப்பு வேறுபாட்டைத் துல்லியமாக உள்வாங்கிப் பேசும் ஆற்றல் பெர்னார்டிடம் இருந்தது!" என்று எழுதியுள்ளார்.

அரசியல் பேரணிப் பேச்சு (இன்றைய ரோடுஷோ) மேடைத் தமிழ் பற்றிய அவரது ஆய்வு "திராவிட அழகியலில் பேச்சுத் தமிழ்" என்ற பெயரில் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகப் பதிப்பாக வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டில் பேச்சு மொழிக்கும் மேடைத் தமிழுக்கும் உள்ள இடைவெளியை பெர்னார்ட் பேட் தன் ஆய்வின் மூலம் எடுத்துக் கூறினார். சுதந்திரப் போராட்டகால மேடைத் தமிழ், அதன் வழியாகத் திராவிட இயக்கத்தின் வளர்ச்சி, மக்களின் வாழ்க்கையிலும், அரசியலிலும் சினிமா வசனங்கள் ஏற்படுத்திய பாதிப்பு எனப் பன்முகத்தன்மையுடன் ஆய்வு செய்து உள்ளார் பெர்னார்ட் பேட்.

தமிழகத்தின் மேடைப்பேச்சு திராவிட இயக்கத்தால் செந்தமிழில் வளர்க்கப்பட்டது. செவ்வியல் தமிழைப் பயன் படுத்தித் தங்களுக்கான தனி அடையாளத்தைப் பெறத் திராவிட இயக்கத்தினர் கனவு கண்டார்கள். "திராவிட செவ்வியல் வாதம்" என்று அதை நிறுவினார் பெர்னார்ட் பேட்.

பிரிட்டிஷ் காலத்தில் சுதந்திரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த சுதேசித் தலைவர்கள் மீண்டும் மேடைத் தமிழைக் கையிலெடுத்தார்கள். ஆனால் ஆட்சிக்கு எதிரான அவர்களது "பப்ளிக் ஸ்பீக்கிங்" வாய்ப்பூட்டுச் சட்டத்தால் தடை செய்யப்பட்டது.

அதன் பிறகு வரதராஜுலு நாயுடு, திரு.வி.க., பெரியார் ஈ.வே.ரா. ஆகியோர் மூலம் மீண்டும் மேடைப் பேச்சு புத்துணர்வு பெற்றது. இவர்களில் பெரியாரின் பேச்சு மட்டும் வழக்கு மொழியில் இருந்தது.

பிபன் சந்திர பால் சென்னை கடற்கரையில் நிகழ்த்திய ரோடுஷோ மற்றும் உரை மகாகவி பாரதியைக் கவர்ந்தது. மேடைப்பேச்சால் வ.உ.சி, சுப்ரமணிய சிவா போன்ற தலைவர்கள் விடுதலை உணர்வைப் பெருக்கினார்கள். மேடைத் தமிழை நோக்கி பலரை ஈர்த்தவர் திரு.வி.க., மேடைப்பேச்சில் திராவிட இயக்கம் செவ்வியல்வாதத்தை முன்வைத்தது. கிருபானந்த வாரியார், கீரன் முதலிய ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் தமிழின் புராண இலக்கியங்களைப் பிரபலப்படுத்தினார்கள்.

"இதுவா, அதுவா?" என்ற வினாவை எழுப்பும் பட்டிமன்றங்களை மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார் தவத்திரு குன்றக்குடி அடிகளார். இன்று வரை தொலைக்காட்சிகள் அதை உயிர்ப்புடன் வைத்திருக்கின்றன. அது துவங்குவதற்கு முன் பேச்சாளர்களை சாலைப் பேரணியாக (ரோடுஷோ) அழைத்துச் செல்வதுண்டு.

"கல் தூக்கிய கரத்தோர் பின்னர் கனத்த மாலைகளைத் தூக்கி வரும் விசித்திரபுரி மேடை!" என்று பேச்சு மேடைகளை ஒரு முறை வர்ணித்திருக்கிறார் அறிஞர் அண்ணா.

சீர்காழியில் பெரியார் பேச வந்தார். அவரை நோக்கிக் கற்கள், வீசப்பட்டன. "கல்லடிக்கு அஞ்சுபவர்கள் எழுந்து போங்கள். மற்றவர்கள் தலையில் துண்டைக் கட்டிக் கொள்ளுங்கள்." என்றார் பெரியார். அவர் பேசப் பேச மக்கள் கூட்டம் பெருகியது. கூட்டம் முடிந்ததும் அந்நகரின் துணை நீதிபதி "உங்களை ஊர்வலமாக (ரோடுசோவாக)அனுப்பி வைக்கிறோம்" என்றபோது பெரியார் அதற்கு மறுத்தார்.

மாபெரும் இடதுசாரித் தலைவர் ஜீவாவின் செவித்திறன் போனதில் கத்திக் கத்திப் பேசவேண்டிய அன்றைய "மைக் இல்லாச் சூழலுக்கு" பெரும் பங்குண்டு.

தொழிநுட்ப வசதியான ஒலி பெருக்கி (மைக்) அண்ணாவுக்குக் கிடைத்தது. அடுக்குமொழியில் மேடையில் பேசும் புதிய பாணியைத் துவங்கி வைத்தார் அவர். ஸ்டாண்ட் மைக் மற்றும் கூம்புக் குழாய் ஒலிபெருக்கி தான் எங்கள் காலத்தில் மேடை அலங்காரத்தின் முதல் படி. முன்னதாக தலைவர்கள் அணிவகுத்துவரும் ரோடுஷோ ஒரு உற்சாக டானிக்.

கேரண்டி எப்போதும் உத்தரவாதம் மட்டுமே! விற்பனைப் பொருள் உத்தரவாதப் பணிகளை செய்து முடிக்கும் என்ற உறுதி கிடைப்பது "கேரண்டி"யில் தான்!

ரோடுஷோ அறிமுகத்துக்கு மட்டுமே! "வாரண்டி" இருந்தால் மட்டுமே "கேரண்டி"க்கு மரியாதை!

Tags:    

Similar News