சிறப்புக் கட்டுரைகள்

சரும நோய் தீர்க்கும் கோணேஸ்வர்!

Published On 2024-04-11 10:00 GMT   |   Update On 2024-04-11 10:01 GMT
  • சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது.
  • கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.

கும்பகோணத்தில் இருந்து சுமார் 19 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடவாசல். கடந்த வாரம் இந்த ஊரில் அமைந்துள்ள சீனிவாச பெருமாள் ஆலயம் பற்றி பார்த்தோம். இந்த குடவாசலில் மற்றொரு பகுதியில் சிறப்பான சிவாலயம் ஒன்று அமைந்துள்ளது.

பல்வேறு தனித்துவமான சிறப்புகள் அந்த சிவாலயத்துக்கு உண்டு. இந்த சின்னஞ்சிறிய ஊரில் அந்த கோவில் அற்புதமான மாடக் கோவிலாக அமைந்துள்ளது. இங்கே உள்ள இறைவியின் பெயர் ஸ்ரீபெரிய நாயகி. சிவனாரின் பெயர் ஸ்ரீகோணேஸ்வரர்.

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சங்க காலச் சோழ மன்னர்களின் மனம் கவர்ந்த இடமாக குடவாசல் விளங்கியது. குறிப்பாக சோழர்களின் நிதி சேமிப்புக் கிடங்காக ஊர் திகழ்ந்தது. குடவாயிற் கீர்த்தனார் என்ற சங்கப்புலவர் இவ்வூரின் சிறப்புகள் பற்றி நற்றிணை, அகநானூறு போன்ற சங்கப் பாடல்களில் சிறப்பித்துக் கூறியுள்ளார்.

பழம் பெருமை பல பெற்ற இவ்வூரின் நான்கு ராஜ வீதிகளின் நடுவே அமுத தீர்த்தம் என்ற குளக்கரையின் கீழ்பகுதியில் மேற்கு நோக்கிய ஆலயமாகக் கோணேச்சரம் என்ற சிவாலயம் காட்சி தருகின்றது.

இந்த ஆலயத்துக் கோபுரவாயில் கடந்து உள்ளே நுழையும்போது கொடி மரம் பலிபீடம், இடபம் ஆகியவற்றைக் கடக்கும் போது நம் முன் காட்சி அளிப்பது பெரியநாயகி என்னும் அம்பிகையின் அருள் காட்சி ஆகும். இந்த ஆலயத்தில் தனித்த துர்க்கை வடிவம் இடம் பெறவில்லை.

பெரிய நாயகியே இங்கு துர்க்கையாகவும் அருள்பாலிக்கின்றாள். இரண்டாம் கோபுரம் கடந்து உள்திருச்சுற்றில் வலம் வரும்போது ஆலயத்துக் கணபதியார், தேவாரமூவர், லட்சுமி, கந்தவேள், சண்டீசர், நவ கிரகங்கள், அட்ட மாதர்கள், தட்சிணா மூர்த்தி என்று அந்தந்த தெய்வங்களின் சிலைகளை அவரவருக்குரிய சிற்றாலயங்களில் தரிசிக்கலாம்.

முன்பு மலைக்கோவிலில் மேலே இருந்த நடராசர், சிவகாமி அம்மை சிலைகள் கட்டுமலையின் அடிவாரத்தில் தற்போது காசி விஸ்வநாதரோடு தனிச்சந்நதியில் காட்சி தருகின்றனர்.

கட்டுமலை மீது முதலாம் திருச்சுற்று விளங்குகின்றது. அங்கு கோணேசபெருமானின் பெரிய லிங்க உருவம் மூலவராக இடம் பெற்றுள்ளது. சதுர பீடத்தின் நடுவில் கோணேசலிங்கம் கம்பீரமாகக் காட்சி தருகின்றது.

கருட பகவானால் இத்தலம் தோற்றுவிக்கப்பட்டு வழிபடப்பட்டது என்பது புராணத்தின் சாராம்சமாகும்.

காச்யப முனிவரின் மனைவிகளாக விநதை, கத்ருதேவி இருந்தனர். இந்த இரு பெண்களுக்கு முறையே கருடனும், கார்க்கோடகன் என்ற பாம்பும் மகன்களாகப் பிறந்தனர். இளைய மனைவி சூழ்ச்சியால் விநதை பல துன்பங்களுக்கு ஆளானாள். விநதையின் துன்பத்தைப் போக்க, முன்பு பாற்கடலைக் கடைந்தபோது வெளிப்பட்ட அமிர்தம் இருந்த கலசத்தை தேவர் உலகம் சென்று முயன்று பெற்று வந்தான் கருடன்.

பூலோகத்தில் அமிர்த கலசத்துடன் குடவாயில் அருகே பறந்து வந்தபோது மகாபயங்கரன் எனும் அசுரன் கருடனுடன் போரிட அழைத்தான். அவனுடன் போரிட முடிவு செய்த கருடபகவான் தான் எடுத்து வந்த அமிர்த கலசத்தை தரையில் தர்பையின் மீது வைத்தான். பிறகு அசுரனுடன் போர் புரிந்தான்.


அசுரனை வென்ற கருடன் தான் தர்ப்பையின் மீது வைத்த அமுத கலசத்தை மீண்டும் எடுக்க முயன்ற போது அது அங்கிருந்த புற்றினுள்ளே அழுந்தி புதைந்து கொண்டிருந்தது. கோபமுற்ற கருடன் தன் அலகினாலும் கால்களாலும் புற்றினைப் பிளக்க முற்பட்ட போது உள்ளிருந்து அமிர்த கலசத்துடன் சிவன் வெளிப்பட்டார்.

கருடனைப் பார்த்து 'உன் மூலம் இத்தலத்தில் நான் வெளிப்பட விரும்பியதால் இவ்வாறு செய்தேன்' என்று கூறி அருள்பாலித்தார். இறைவனின் ஆணைப்படி கருடன் அந்த இடத்திலேயே திருக்கோவில் எடுத்து வழிபட்டான். அவ்வாலயமே குடவாயில் திருக்கோவிலாகும்.

இங்குள்ள தலதீர்த்தத்தின் சிறப்பாக தலபுராணத்தில் கூறும்பொழுது, அமிர்த தீர்த்தத்தைத் தொட்டவருக்கு முற்பிறவியில் செய்த பாவங்கள் அனைத்தும் விலகும். இத்தீர்த்தத்தை அருந்தியவர்கள் புன்ணியவான் ஆகிறார்கள்.

இதில் நீராடல் செய்ய விரும்பி இது இருக்கும் திசையில் ஓரடி எடுத்து வைத்தாலே கங்கா நீராடல் செய்த பலனும், சிவலோக வாழ்வும் பெற்றவர்கள் ஆகிறார்கள். சிவராத்திரியில் பக்தியுடன் இத்தீர்த்தத்தில் மூழ்கினால், பதினாயிரம் அசுவமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.

மார்கழி திருவாதிரை நட்சத்திரத்தில் மூழ்கி ஈசனை தரிசிப்பவர் தேவர் ஆகிறார்கள். இதில் நீராடல் செய்பவர் அனைவரும் அமிர்தமயமான சரீரம் உடையவர்கள் ஆகிறார்கள்.

ராஜ கோபுரத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது கோவிலின் இடது புறத்தில் அனுமதி விநாயகர் சன்னதி உள்ளது. அடுத்து கொடி மரம், பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. வலது புறம் அம்மன் சன்னதி உள்ளது.

அம்மன் சன்னதியின் திருச்சுற்றில் சண்டிகேஸ்வரி சன்னதி உள்ளது. திருச்சுற்றில் இடும்பன், தண்டபாணி, கலைமகள், கஜலட்சுமி, குடவாயிற்குமரன், பைரவர், சந்திரன், சூரியன், நவக்கிரகங்கள், சூத முனிவர், சனி பகவான் சப்தமாதர், ஞானசம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர், பரவை நாச்சியார் ஆகியோர் உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதி உள்ளது. இடது புறம் நடராஜர் சன்னதி உள்ளது.

மூலவர் கருவறை கோஷ்டத்தில் தட்சிணா மூர்த்தி, உள்ளார். மாடக்கோவில் அமைப்பில் உள்ள இக்கோவிலின் மேல் தளத்தில் மூலவர் சன்னதிக்கு முன்பாக பலி பீடம், நந்தி ஆகியவை உள்ளன. மூலவருக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர்.

மூலவர் லிங்கத் திருமேனியாக உள்ளார். மூலவர் சன்னதியில் இடது புறம் தான்தோன்றி நாதர் உள்ளார். கோவிலின் முன்பு குளம் உள்ளது.

கருடன், சூரியன், தாலப்பிய முனிவர், பிருகு முனிவர் ஆகியோர் இத்தலத்தை வழிபட்டவர்கள் ஆவர்.

இத்தலத்து சிவபெருமானை தரிசிக்க 24 படிகள் ஏறி மேலே செல்ல வேண்டும்.

இங்கே முருகப்பெருமானை அருணகிரிநாதர் உருகி உருகி திருப்புகழ் பாடியிருக்கிறார் எனும் பெருமை கொண்ட தலம். அம்பாளே துர்கையாக, சக்தியாக, எதிரிகளை அழிப்பவளாகத் திகழும் அற்புதத் தலம் என்று தல புராணம் விவரிக்கிறது.

இங்கே நடராஜர் சபை அற்புதமாக அமைந்து உள்ளது. நடராஜர் அழகு ததும்பக் காட்சி தருகிறார். மேற்கு நோக்கிய சிவாலயம் அரிது. குடவாசல் கோவில், மேற்கு பார்த்த சிவன் கோவிலாக அமைந்து உள்ளது. அதே போல், கோவிலில் காசி விஸ்வநாதருக்கு தனி சந்நிதி அமைந்திருக்கிறது. அவரும் மேற்கு பார்த்து அருள்பாலிக்கிறார்.

கோவிலின் தென்மேற்குப் பிரகாரத்தில், மாலை வழிபாட்டு விநாயகர் சந்நிதி அமைந்துள்ளது. இவர் சக்தி வாய்ந்த விநாயகர் என்கிறார்கள் பக்தர்கள். இவரை வணங்கிவிட்டு, கோணேஸ்வரரையும் அம்பாள் பெரியநாயகியையும் வழிபட்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். மாங்கல்ய பலம் பெருகும் என்கிறார்கள். இந்த விநாயகருக்கு முன்னதாக, மூஷிக வாகனம் இருக்கிறது. இதற்குக் கீழேயும் சின்னஞ்சிறு விநாயகப் பெருமானை தரிசிக்கமுடிகிறது.

கோச்செங்கட் சோழன் எழுப்பிய இந்த மாடக்கோவிலில். 24 படிகள் இருக்கின்றன. இந்தப் படிகளைக் கடந்து சென்றால், நம் வாழ்க்கையை உயர்த்தக் காத்திருக்கும் கோணேஸ்வரரை தரிசிக்கலாம்.

குடந்தையின் மகாமக விழாவுடன் தொடர்பு கொண்டது இந்த குடவாசல் என்கிறது தல புராணம்.

பிரளயகாலம் வந்து உயிர்கள் அழிவுறும்போது, பிரம்மதேவர் படைப்புக்கு உரிய உயிர்கலன்களை ஒரு அமுதக் குடத்தில் இட்டார். அந்தக் குடம் வெள்ளப்பிரளயத்தில் அடித்துச் செல்லப்பட்டு தென்திசையில் மிதந்து வந்தது. அப்போது, சிவபெருமான் வேடுவ வடிவில் வந்தார். குடத்தின் மீது அம்பெய்தினார். அந்த அமிர்தக் குடம் உடைந்தது.

அமிர்தக் குடத்தின் அடிபாகம் விழுந்த இடம் குடமூக்கு என அழைக்கப்பட்டது. பின்னர் இது கும்பகோணம் என்றானது. அமிர்தக் குடத்தின் நடுப்பாகம் விழுந்த இடம், கலயநல்லூர் எனும் சாக்கோட்டை என்றானது. மேல்பாகம் விழுந்த இடம் அதாவது குடத்தின் வாசல் பகுதி விழுந்த இடம் குடவாயில் என்றும் குடவாசல் என்றும் அழைக்கப்படுகிறது.

தலம், தீர்த்தம், மூர்த்தம் மூன்றுமே போற்றப்படுகிற அற்புதத் தலம் இது. இந்தக் கோவிலின் தீர்த்தம் அமிர்த தீர்த்தம் என்றே அழைக்கப்படுகிறது.

எந்தக் கோவிலிலும் இல்லாத ஆச்சரியம்... கோவிலின் பிரமாண்டமான மதிலில் நந்தியுடன் கருடாழ்வாரும் தரிசனம் தருகிறார். கருடன் , சூரியன், சூத முனிவர், தாலப்பிய முனிவர் முதலானோர் வணங்கி வழிபட்டு, வரம் பெற்றுள்ளனர். திருஞான சம்பந்தர் பாடிப் பரவசம் அடைந்த திருத்தலம் இது.

திருணபிந்து எனும் முனிவர் கோவிலின் அமிர்தக் குளத்தில் நீராடி, சிவபெருமானை நோக்கி தவமிருந்தார். அதில் மகிழ்ந்த சிவபெருமான், முனிவருக்கு அருட்காட்சி தந்தார். இதனால், முனிவர், குஷ்ட நோய் நீங்கப் பெற்றார்.

எனவே, சருமத்தில் ஏதேனும் நோய் இருப்பவர்கள், குடவாசல் கோணேஸ்வரரை மனதார வேண்டிக் கொண்டு, ஒவ்வொரு சோமவாரத்திலும் (திங்கட்கிழமை), பிரதோஷ நாளிலும் வீட்டிலிருந்தே வேண்டிக் கொள்ளுங்கள். விரைவில் நோய் நீங்கப்பெறு வீர்கள். பின்னர், இங்கு வந்து, சிவனாரை தரிசியுங்கள்.

கோணேஸ்வரர் பதிகம் பாடினால், கோளாறுகள் அனைத்தும் நீங்கும் என்பது சுற்றுவட்டார மக்களின் நம்பிக்கை.

ஞானசம்பந்தர் இந்த தலத்தில் பாடி அருளிய இரண்டு பதிகத்தைப் பாடி, வீட்டில் விளக்கேற்றி, குடவாசல் கோணேஸ்வரரை மனதார வழிபடுங்கள். 5 பேருக்கு தயிர்சாதம் தானம் வழங்குங்கள். எவ்வளவு பெரிய தீராத நோயையும் தீர்த்தருள்வார் கோணேஸ்வரர் என்பது ஐதீகம். எனவே கும்பகோணம் யாத்திரையில் இங்கு செல்லும் போது நோய் தீர வேண்டிக்கொள்ளுங்கள்.

Tags:    

Similar News