சிறப்புக் கட்டுரைகள்

சுகத்தை தடுக்கும் சுக்கிர தோஷம்!

Published On 2024-04-09 11:32 GMT   |   Update On 2024-04-09 11:32 GMT
  • சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள்.
  • ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும்.

ஒருவர் செல்வ செழிப்புடனும், மகிழ்ச்சியுடனும் ஆடம்பரமாக சொகுசாக வாழ்கிறார் என்றால் அவரது ஜாதகத்தில் சுக்கிர பகவான் மிக மிக நல்ல இடத்தில் அனுகூலமான அம்சங்களுடன் இருக்கிறார் என்று அர்த்தம். அதனால்தான் புதிய வசதி வாய்ப்புகளுடன் வாழ்பவர்களை பார்த்ததும் சிலர், "உனக்கென்னப்பா.... சுக்கிர திசை...." என்று சொல்வதை பார்த்து இருக்கலாம்.

சுக்கிர பகவான் பெரும்பாலும் கெடுதல் செய்யவே மாட்டார். 64 கலைகளுக்கும் அதிபதியான இவர் ஒவ்வொருவர் வாழ்விலும் நல்ல விசயங்களை செய்யக்கூடியவர். இதனால் இவரை களத்திரகாரகன் என்றும் சொல்வார்கள்.

அசுர குருவாக இருந்தாலும் உலக இன்பங்களுக்கும் வசதியான வாழ்க்கைக்கும் அடிப்படை அமைத்து கொடுப்பது சுக்கிரன்தான். பொதுவாக ஒருவரது இல்வாழ்க்கை, வாகன வசதி, உடல் அமைப்பு, கல்வி, அழகு, வியாபாரம் போன்றவற்றுக்கு சிறப்பு சேர்ப்பது சுக்கிர பகவான்தான்.

சுக்கிரனுக்கு உரிய திசை என்று கிழக்கு திசையை சொல்வார்கள். இந்திராணியை இவரது அதிதேவதை என்று குறிப்பிடுவார்கள். அதுபோல சுக்கிரனுக்குரிய ரத்தினமாக வைரத்தை சொல்கிறார்கள். அதனால்தான் சுக்கிர பகவான் நன்றாக இருந்தால் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் நகைகள் சேர்ந்து கொண்டே இருக்கும் என்பார்கள்.

ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் சரியான இடத்தில் வலிமையாக இருந்தால் அவரது இல்வாழ்க்கை நினைத்தபடி அமையும். குறிப்பாக காதலிப்பவர்கள் சுக்கிரன் உதவியுடன் தாங்கள் நினைத்தவர்களையே திருமணம் செய்து கொள்ள முடியும்.

மொத்தத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் நல்ல நிலையில் இருந்தால் அவரது வாழ்க்கையில் செல்வ செழிப்புகளுக்கும், சுகபோகங்களுக்கும் எந்த குறையும் வரவே வராது. அதே சமயத்தில் சுக்கிரன் ஜாதகத்தில் தோஷமான நிலையில் இருந்தால் சில பாதிப்புகளை நிச்சயம் ஏற்படுத்துவார்.


முதல் பாதிப்பு செல்வசெழிப்பில் சற்று சறுக்கல் உண்டாகும். 2-வது முயற்சிகளில் வெற்றி கிடைக்க காலதாமதம் ஏற்படும். 3-வது திருமண பேச்சுவார்த்தைகள் சிறப்பாக நடந்தாலும் ஏதாவது ஒரு காரணத்தால் தள்ளி போய்க் கொண்டே இருக்கும். சுக்கிரன் சரியில்லை என்றால் இந்த மூன்றும் ஏதாவது ஒரு ரூபத்தில் தோஷமாக இருப்பதை காண்பித்து விடும்.

சிலருக்கு தொழில் ரீதியாகவும் தடை ஏற்பட வாய்ப்புகள் உண்டு. பொதுவாக சுக்கிரன் தோஷத்துடன் அமர்ந்து இருந்தாலும் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்த மாட்டார். ஆனால் சிறிய பாதிப்பாக இருந்தாலும் அது ஒருவரது வாழ்வின் வளர்ச்சியில் தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து விடும்.

எனவே சுக்கிர தோஷம் இருக்கிறதா? என்பதை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். அந்த சுக்கிர தோஷம் பலமாக உள்ளதா? பலவீனமாக உள்ளதா? என்பதையும் தெரிந்துக் கொள்ளுங்கள். அதற்கேற்ப பரிகாரம் செய்தால் போதுமானது.

ஒருவரின் ஜாதகத்தில் கன்னி வீட்டில் சுக்கிரன் தனித்து அமர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷமாக கருதப்படும். கன்னி வீட்டில் சுக்கிரன் நீச்சம் அடைந்து செவ்வாயுடன் சேர்ந்து இருந்தாலும் அது தோஷம்தான். லக்னத்துக்கு 8-ம் வீட்டில் சுக்கிரன் இருந்தாலும் தோஷம் என்று குறிப்பிடுவார்கள்.

லக்னத்தில் இருந்து 3 மற்றும் 12-ம் இடத்தில் சுக்கிரன் மறைந்திருந்தால் அதையும் சுக்கிர தோஷம் என்று அழைப்பார்கள். ஒவ்வொருவர் ஜாதக அமைப்பிலும் சுக்கிரனின் தன்மை மாறுபடும். ஏதாவது ஒரு கெடுதலான கிரகத்துடன் சுக்கிரன் சேர்ந்து இருந்தால் அது சுக்கிர தோஷத்துக்கு வழி வகுத்து விடும்.

ஜோதிடர்களை பொறுத்தவரை சுக்கிர தோஷத்தை அதற்குரிய சரியான தசாபுத்தி வரும்வரை காத்திருந்து பிறகு பரிகாரம் செய்வது நல்லது என்று சொல்வார்கள். இல்லையெனில் அது எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் பயம் காட்டுவார்கள். ஆனால் சுக்கிர தோஷத்துக்காக யாரும் பயப்பட வேண்டிய அவசியமே கிடையாது.

மிக மிக எளிய, நம்மால் செய்ய முடிந்த சாதாரண பரிகாரம் மூலமாகவே சுக்கிர பகவானை திருப்திப்படுத்தி விட முடியும். சிவாலயங்களுக்கு செல்லும்போது நவக்கிரக சன்னதிகளை பார்த்து இருப்பீர்கள். அங்கு இருக்கும் சுக்கிர பகவானை மனமுருகி வழிபட்டு வந்தாலே போதும்.


சில ஆலயங்களில் சுக்கிர பகவான் தனித்து இருப்பார். அத்தகைய ஆலயங்கள் மிக மிக சிறப்பு வாய்ந்தவை. தனித்து சுக்கிர பகவானை வழிபட்டால் சுக்கிர தோஷத்தின் மிகப்பெரிய கெடுதல்களை கணிசமான அளவுக்கு குறைக்க முடியும்.

வீட்டில் இருந்தபடியே பரிகாரம் செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள் ஒரு கைபிடி அளவு வெள்ளை மொச்சையை எடுத்து வெள்ளை துணியில் முடிச்சாக போட்டு கட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இரவில் தூங்கும்போது அதை தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

மறுநாள் அதை எடுத்து பத்திரமாக பாதுகாப்பான ஒரு இடத்தில் வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் இரவும் தூங்க செல்லும் போது அதை எடுத்து மீண்டும் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும். இப்படி அதை 9 நாட்கள் தலையணைக்கு அடியில் வைத்து தூங்க வேண்டும்.

10-வது நாள் அதை எடுத்து நன்றாக வேக வைத்து காக்கைக்கு உணவாக வைத்து விடவேண்டும். சுக்கிரனுக்கு உரிய பரிகாரங்களில் இந்த பரிகாரத்தை பெரும்பாலான ஜோதிடர்கள் பரிந்துரை செய்வது உண்டு.

வைணவர்கள் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது நல்லது. வசதி வாய்ப்பு இருப்பவர்கள் பெருமாளுக்கு அனைத்து விதமான வஸ்திரங்கள், நைவேத்தியங்கள் கொடுத்து அர்ச்சனை செய்து வழிபடலாம். இதற்கு வாய்ப்பே இல்லை என்ற நிலையில் இருப்பவர்கள் வீட்டில் இருக்கும் பெருமாள் படத்துக்கு முன்பு விளக்கேற்றி வைத்து வழிபட்டாலே போதுமானவை.

தானம் செய்வதன் மூலமாகவும் சுக்கிரனை மகிழ்ச்சிப்படுத்த முடியும். ஏழை எளியவர்களுக்கு தயிர் சாதம் கொடுக்கலாம். உடை இல்லாமல் தவிப்பவர்களுக்கு வெள்ளை நிறம் கலந்த உடைகளை வாங்கி கொடுத்து மகிழ்ச்சிப்படுத்தலாம். வெள்ளை நிறத்தை தொடர்பு படுத்தி என்ன தானம் செய்தாலும் அது சுக்கிர தோஷத்தை உடனடியாக கட்டுப்படுத்தும் என்பார்கள்.

நவக்கிரக தலங்களில் சுக்கிரனுக்குரிய தலத்துக்கு சென்று வழிபடுவது மிகப்பெரிய பரிகாரம் ஆகும். தஞ்சை மாவட்டம் கஞ்சனூரில் உள்ள அக்னீஸ்வரர் ஆலயம் சுக்கிர தோஷத்தை நிவர்த்தி செய்வதற்கு தமிழகத்தில் உள்ள ஆலயங்களில் முதன்மையான ஆலயம் ஆகும். கும்பகோணத்தில் இருந்து 18 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்த ஆலயத்துக்கு தமிழகம் முழுவதும் இருந்து தினமும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுக்கிர தோஷ நிவர்த்திக்காக வந்து செல்கிறார்கள்.

இந்த ஆலயத்தில் மூலவராக சிவபெருமான் இருந்தாலும் அவரது வயிற்று பகுதியில் சுக்கிரன் இருப்பதாக ஐதீகம். இதன் காரணமாகவே இந்த ஆலயம் நவக்கிரக தலங்களில் ஒன்றாக திகழ்கிறது. சோழ மன்னர்கள் ஆட்சி காலத்தில் இந்த ஆலயத்தை சுக்கிரனின் பிரதான ஆலயமாக கருதி மக்கள் வழிபட்டனர்.

மற்ற நவக்கிரக தலங்களில் அந்தந்த கிரகங்களுக்கு உரிய தனி சன்னதி இருக்கும். ஆனால் கஞ்சனூரில் சிவ பெருமானே சுக்கிரனுக்காகவும் அருள் பாலிக்கிறார். எனவே இந்த ஆலயத்தில் சுக்கிரனுக்கு என்று தனி வழிபாடு எதுவும் கிடையாது. சிவபெருமானை வழிபட்டாலே சுக்கிரனையும் சேர்த்து வழி பட்டதாக கருதப்படும்.

ஒரு தடவை சுக்கிராச்சாரி யாரால் மகாவிஷ்ணுவுக்கு பாதிப்பு ஏற்பட்ட போது விஷ்ணுவை சுக்கிர தோஷம் பிடித்துக் கொண்டது. அந்த தோஷத்தை நிவர்த்தி செய்து கொள்ள அவர் இந்த தலத்துக்கு வந்துதான் வழிபட்டார். எனவே சுக்கிர தோஷம் உள்ளவர்கள் இந்த தலத்துக்கு வந்து சென்றாலே தோஷம் நீங்கி விடுவதாக நம்பிக்கை உள்ளது.

மிக நல்ல நிலையில் இருந்து சுக்கிரனால் செல்வத்தை இழந்தவர்கள் இந்த ஆலயத்துக்கு வந்து அக்னீஸ்வரருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்தாலே போது மானது. இந்த செல்வங்களை மீண்டும் பெற முடியும். பரணி, பூரம், பூராடம் ஆகிய நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கஞ்சனூரில் வழிபடுவது உடனடியாக பலன் பெற வழிவகுக்கும்.

அதுபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் சுவாமி ஆலயமும் சுக்கிரனின் பலத்தை கணிசமான அளவுக்கு ஆற்றலை அதிகரிக்க செய்யும் சிறப்பு கொண்டது. வெள்ளிக்கிழமை இந்த ஆலயத்துக்கு சென்று வழிபடலாம். வெண் தாமரை மலர் கொடுத்து வழிபடுவதும் மிகவும் நல்லது.

வெள்ளிக்கிழமை வீட்டில் மகாலட்சுமி படத்தை அலங்கரித்து நெய் தீபம் ஏற்றி பால் பாயாசம் நைவேத்தியம் படைத்து மகாலட்சுமியை போற்றி பாடி வந்தால் சுக்கிர தோஷம் விலகுவதை அனுபவப்பூர்வமாக உணரலாம்.

ஹோமம் செய்வதில் நம்பிக்கை உள்ளவர்கள் வெள்ளிக்கிழமைகளில் மதியம் 1 மணி முதல் 3 மணி வரை சுக்கிர ஓரை நேரத்தில் சுக்கிர பரிகார மகாஹோமம் நடத்தலாம். அப்போது உரிய முறையில் சங்கல்பம் செய்து கொண்டால் சுக்கிரன் மூலம் எப்போதும் நல்ல பலன்கள் கிடைத்துக் கொண்டே இருக்கும்.

Tags:    

Similar News