சிறப்புக் கட்டுரைகள்

குருப் பெயர்ச்சியும் திருமண யோகமும்

Published On 2024-04-02 12:15 GMT   |   Update On 2024-04-02 12:15 GMT
  • குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்ளும் போது 5 முறை குரு பலம் வருகிறது.
  • குரு பார்த்தால் எத்தகைய தோஷமும் விலகும் என்று அனைவரும் கூறுகிறார்கள்.

மனிதர்களின் வாழ்வில் சுபிட்சத்தை வாரி வழங்கும் சக்தி படைத்த ஒரே சுப கிரகம் குருபகவான். ஜனன ஜாதக அடிப்படையில் குரு ஜாதகருக்கு ஆதரவானவராகவோ, பாதகராகவோ, அஷ்டமா அதிபதியாகவோ இருந்தால் கூட கோட்சாரத்தில் 2 , 5, 7, 9, 11-ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறும் போதும் 5, 7, 9 பார்வையால் பார்க்கும் பாவகத்தையும், அந்த பாவகத்தில் உள்ள கிரகத்தின் மூலமும் சுப பலனே கிடைக்கச் செய்வார். பலமிழந்து அமையப் பெற்ற கிரகங்களுக்கு குரு பார்வை இருந்தால், அதில் உள்ள தோஷங்கள் விலகி பலமுள்ளதாக மாறிவிடும்.

அதாவது திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 ஆகிய இடங்களுக்கு கோட்சார குருவின் பார்வை கிடைத்தால் திருமணம் நடந்து விடும் என்று நம்பப்படுகிறது.

2,5,7,9,11 ல் கோட்சார குரு வரும் போது குரு பலம் என கூறுகிறோம். குரு ஒரு சுற்றுக்கு 12 வருடம் எடுத்து கொள்ளும் போது 5 முறை குரு பலம் வருகிறது. அப்படி 12 வருடத்திற்கு 5 முறை குரு பலம் வரும் போது ஏன் பலர் 40 வயதைக் கடந்தும திருமணம் நடைபெறாமல் இருக்கிறார்கள்?

என்பது யோசிக்க வேண்டிய கேள்வி தானே?

குரு பலத்தை மூன்று பிரிவாக பிரிக்கலாம்.

1. திருமணம் தொடர்பான பாவங்களான 1,2,7,8 சுப வலிமை பெற்று தசா - புத்திகள் சாதகமாக இருந்தால் ராசிக்கு 2,5,7,9,11ம் இடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைக்கும் போது திருமணம் எளிதில் நடைபெறும்.

ஒருவருக்கு எந்த சிரமமும் இன்றி எளிதில் திருமணம் நடைபெற ஜனன கால ஜாதகத்தில் களத்திரக்காரகன் சுக்கிரன் பல முள்ளதாக அமைய வேண்டும்.

ஏழாம் அதிபதி இயற்கை சுப கிரகமாக இருந்து ஜாதகத்தில் வலிமை பெற வேண்டும் ஏழாம் பாவக அதிபதி சுக்கிரனுடன் இணைந்து திரிகோணத்துடன் தொடர்பு பெற வேண்டும்.

இரண்டில் சுக்ரன் அமர்ந்து செவ்வாயுடன் தொடர்பு பெறுவது. இரண்டு மற்றும் ஏழாம் பாவக அதிபதிகள் பலம் பெற்று திரிகோணாதிகளுடன் தொடர்பு பெறுவது.

ஏழாம் பாவகாதிபதி இயற்கை சுபராகி ஜாதகத்தில் வலிமை பெறுவது. ஏழாம் பாவகாதிபதி மற்றும் சுக்ரன் லக்னத்திலோ, லக்னாதிபதியுடனோ அல்லது லக்னாதிபதியின் பார்வை பெறுதல் ஏழாம் பாவகாதிபதி நட்சத்திரத்தில் இருக்கும் கிரகம் வலிமையோடு இருப்பது.

இரண்டு, ஏழாம் பாவகங்கள் திதி சூன்யம் அடையாமல் இருக்க வேண்டும். ஏழாம் பாவகம் ஏழாம் அதிபதி, சுக்ரன் அமர்ந்த வீடு ஆகிய 3-ம் 30 பரல்களுக்கு குறையாமல் இருக்க வேண்டும்.

மேலே கூறிய விதிகளில் எதேனும் ஒரு சில விதிகள் சுபமாக இருந்தால் கூட குருவின் இரண்டாம் சுற்றில் (12 வயதிற்கு ஒரு சுற்று) 18 முதல் 23 வயதிற்குள் திருமணம் நடந்து விடும். திருமணம் தொடர்பான பாவகங்கள் வலிமையாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் திருமணம் நடக்கும்.

ஒருவருக்கு ஜனன கால ஜாதகத்தில் ஏழாம் பாவக அதிபதி 3, 6, 8, 12-ல் மறைந்து இருந்தாலும் திதி சூன்ய பாதிப்பு இருந்தாலும் 1, 2, 7, 8, பாவகங்களும் அதன் அதிபதிகளும் வலிமை குறைந்து இருந்தாலும் ஏழாம் பாவக அதிபதி 3, 6,8,12-ல் அமர்ந்து இருந்தாலும் ஏழாம் பாவ அதிபதி பகை, நீச, அஸ்தமனம், மற்றும் கிரக யுத்தத்தில் தோற்றாலும் ஏழாம் பாவக அதிபதிகள் வலிமை குறைந்து திரிகோணாதிகள் தொடர்பு இல்லாமல் இருந்தாலும் 7-ம் பாவக அதிபதி நட்சத்திரத்தில் இருக்கும், கிரகம் வலிமையற்று இருந்தாலும் சனி, ராகு, கேது போன்ற கிரகங்கள் 1, 2, 7, 8 ஆகிய பாவக அங்களை பாதித்து இருந்தாலும் பெண் ஜாதகத்தில் 8-ம் பாவகம் அல்லது 8-ம் பாவகாதிபதி பாதிக்கப்பட்டு இருப்பது தசா - புத்திகள் சாதகமாக இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் இல்லாவிட்டாலும் 24- 36 வயதிற்குள் திருமணம் நடக்கும்.

தசா -புத்திகள் சாதகமாக இருந்து ராசிக்கு 2, 5, 7, 9,11-ல் கோட்சாரம் வரும் போது திருமணம் தொடர்பான பாவகங்கள் தோஷ நிவர்த்தி பெற்று குருவின் மூன்றாம் சுற்றில் 24-36 வயதிற்குள் திருமணம் நடைபெறும்.

2. திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 சுப வலிமை பெற்றாலும் தசா - புத்திகள் சாதகமற்று இருக்கும் போது ராசிக்கு 2,5,7,9,11-ம் இடங்களுக்கு கோட்சார குருவின் சம்பந்தம் கிடைத்தாலும் திருமணம் நடைபெறாது.

3. திருமணம் தொடர்பான பாவகங்களான 1, 2, 7, 8 அசுப வலிமை பெற்று தசா புத்திகள் சாதகமற்று இருக்கும் போது எத்தனை குருப் பெயர்ச்சி வந்தாலும் திருமண வாழ்க்கை கேள்வி குறியாகவே இருக்கிறது.

இங்கே வாசகர்களுக்கு ஒரு சந்தேகம் வர வேண்டும். குரு பார்த்தால் எத்தகைய தோஷமும் விலகும் என்று அனைவரும் கூறுகிறார்கள். தாங்களும் அதை இந்த கட்டுரையின் முகப்பில் ஒப்புக் கொண்டு இருக்கிறீர்கள். அப்படி இருக்க தோஷம் உள்ள பாவகங்களுக்கு குரு பார்வை கிடைக்கும் போது ஏன் தோஷ நிவர்த்தி கிடைப்பது இல்லை? என்ற சந்தேகம் உங்கள் மனதில் வந்து இருக்குமே? அதாவது ஜனன கால ஜாதகத்தில் கீழ்காணும் தோஷம் இருந்தால் கோட்சார குருவின் சம்பந்தம் திருமணம் தொடர்பான பாவகங்களுக்கு கிடைத்தாலும் திருமணம் நடைபெறும் வாய்ப்பு மிகக் குறைவு.

கிரகணத்திற்கு ஒரு வாரம் முன்பும் ஒரு வாரம் பின்பும் பூமிக்கு தோஷ காலம். இந்த 15 நாட்களில் பிறக்கும் குழந்தைகள் செவ்வாய் , சனி தொடர்பு பெறுபவர்களுக்கு திருமணம் நடப்பது மிகவும் கடினம் 9-ம் பாவகத்தில் வலிமை இழந்த ராகு/கேது, சனி சம்மந்தம் இருந்தாலும் 2,7-ம் அதிபதிகள் பாவ கிரகத்துடன் சம்மந்தம் அஸ்தமனம், நீசம் பெற்றாலும் 2, 7-ம் அதிபதி 12-ல் மறைந்தாலும் 1, 7-ம் அதிபதிகள் இணைந்தாலும் 6,8,12ல் பலவீனமடைந்தாலும் 5, 6-ம் அதிபதிகள் இணைந்து 7ம் அதிபதியுடன் சம்பந்தம் பெற்றாலும் 7, 12 ம் அதிபதி சூரியனுடன் 7-ம் பாவகத்தில் இணைந்தாலும் சுக்கிரனுக்கு 1,5,9-ல் வலுவற்ற கிரகங்கள் நின்றாலும் சனி லக்னத்தை, லக்னாதிபதியை, சந்திரனை பார்த்து சுப கிரகங்கள் பார்வை ஜனன குரு தொடர்பு இல்லாமல் இருந்தாலும் திருமணம் நடைபெறுவதுதில்லை.

ஒரு சிலருக்கு ஜனன கால ஜாதகத்தில் ஏழாமிடத்திற்கு கோட்சார குருவின் சம்மந்தம் கிடைக்கும் காலங்களில் 24 வயதிற்கு மேல் 36 வயதிற்குள் குறைந்தது 3 திருமணம், விவாகரத்து நடக்கும். ஒரு சிலருக்கு அந்தரங்கத்தை பகிர்ந்து கொள்ளும் விதமான நட்பு மட்டும் கிடைக்கும். என்ன வாசகர்களே திருமணத்திற்கு சுய ஜாதக வலிமை மிக முக்கியம் என்பது புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன்.

மேலும் பலருக்கு கோட்சார குரு சந்திரனை பார்க்கும் போது திருமணம் நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது. சந்திரன் என்பவர் மனோகாரகன், உடல் காரகன். சூரியன் என்பவர் ஆத்மக் காரகன்.

ஒரு ஆன்மாவை சுமக்க, இயக்க உடல் தேவை. ஆன்மாவின் இயக்கத்திற்கு உதவும் கருவியான உடல் காரகன் சந்திரனுக்கு கோட்சார குருவின் சம்மந்தம் கிடைக்கும் போது ஆன்மாவும் உடலும் புனிதமடையும்.

12 வயது வரை தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை குருவின் ஒரு சுற்று முடிந்த பிறகு (குரு வட்டம் ) தனித்து சுயமாக சிந்திக்க துவங்கும். பய உணர்வு குறைந்து தைரியம், தெம்பு அதிகரிக்கும். ஒவ்வொரு முறை குருவின் பார்வை ராசிக்கு கிடைக்கும் கால கட்டங்களில் குழந்தை பருவத்திலிருந்து வாலிப பருவத்திற்கு ஏற்ற உடல் வளர்ச்சி ஏற்பட்டு சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த தேவையான ஆத்ம சிந்தனை அதிகரிக்கும். திருமண உறவில் ஈடுபட மனமும் உடம்பும் தயாராகும். உடலில் நோய் தாக்கம் குறையும். தேக அழகு கூடும். பணப் புழக்கம் அதிகரிக்கும். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.

ஆக கோச்சார குருவின் பார்வை சந்திரனுக்கு கிடைக்கும் காலங்களில் உடலும் உள்ளமும் பரிசுத்தமடையும். வயதிற்கு ஏற்ப உடல் பலமும் மன பலமும் அதிகரிக்கும். திருமண வாய்ப்பு வெகு சிலருக்கே உருவாகும். ஜோதிடத்தில் குருவானவர் தெய்வ அருளை குறிக்கும் கிரகமாகும். எனவே எந்த ஒரு செயலைச் செய்தாலும் அந்த செயலை குரு கோட்சாரத்தில் பலம் வாய்ந்த இடங்களில் சஞ்சரிக்கும்காலங்களில் செய்தால் அந்த செயல் சுபமாக நடக்கும் என்ற அடிப்படையில் தெய்வ அனுக்கிரகத்திற்காக குருபலம் பார்க்க வேண்டும். திருமணத்திற்கு மட்டும் அல்ல வாழ்வில் அனைத்து சுபகாரியம் நடக்கும் போது தெய்வ அனுகிரகம் வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டது குரு பலம்.

ஒருவருக்கு திருமணம் நடக்கும் போது கோட்சார குருவானவர் ஜென்ம ராசிக்கு 2, 5, 7, 9, 11-ல் சஞ்சரித்தால் அந்த நபருக்கு தெய்வ அனுக்கிரகம் கிடைத்து எந்த தடையும் இல்லாமல் திருமணம் நடக்கும் என்ற காரணத்திற்காக முன்னோர்களால் பார்க்கப்பட்டது.

கோட்சாரமும் குருபலமும்

2024-ம் ஆண்டின் மே 1 அன்று குருப் பெயர்ச்சியில் ரிஷப ராசியில் நின்று கன்னி, விருச்சிகம், மகர ராசியை பார்க்கும் குரு பகவானால் விலகும் திருமணம் தொடர்பான தோஷங்கள்.

மாங்கல்ய தோஷம்:-

எட்டாமிடம் என்பது பெண்ணுக்கு மாங்கல்ய ஸ்தானம் ஆணுக்கு ஆயுள் ஸ்தானம்.

ஒருவரின் சுய ஜாதகத்தில் 8ம்மிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம். ரிஷப குருவின் பார்வையால் மேஷம், மிதுனம், மீனம் ராசியினருக்கு மாங்கல்ய தோஷம் விலகி திருமணம் நடைபெறும் சாதகம் உள்ளது.

களத்திர தோஷம்:-

சுய ஜாதகத்தில் ஏழாமிடம் என்பது களத்திர தோஷம். ஒருவரின் சுய ஜாதகத்தில் 7-ம்மிடம் அசுப கிரக தாக்கத்தால் பலம் குறைந்தால் திருமணம் தடைபடலாம். ரிஷப குருவின் பார்வையால் ரிஷபம், கடகம், கும்பம் ராசியினருக்கு களத்திர தோஷம் விலகி திருமணம் நடைபெறும் வாய்ப்புள்ளது.

குடும்ப தோஷம்:-

ஒருவரின் ஜாதகத்தில் தனம், வாக்கு, குடும்ப ஸ்தானத்திற்கு பாவ கிரக சம்பந்தம் இருந்தால் குடும்பம் அமைய காலதாமதமாகும். ரிஷப ராசியில் நிற்கும் குரு பார்வையால் சிம்மம், துலாம், தனுசு ராசியினரின் குடும்ப ஸ்தானம் பலம் பெற்று திருமணம் கூடி வரும் சாத்தியம் உள்ளது.

காதல் திருமணம்:

மணாளனே மங்கையின் பாக்கியம் என பலருக்கு காதல் திருமணத்தில் ஆர்வம் அதிகம். ரிஷப குருவின் பார்வை பலத்தால் ரிஷபம், கடகம், கன்னி ராசியினருக்கு காதல் திருமணம் நடைபெறலாம்.

பரிகாரம்

ஜனன ஜாதகத்தாலும் கோச்சாரத்தாலும் குரு பலம் குறைவால் திருமணத் தடையை சந்திபவர்கள் தேய்பிறை அஷ்டமி திதி தினத்தன்று பைரவருக்கு செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடமாலை சாத்தி மேலும் செந்நிற மலர்கள் கொண்டு பூஜைகள் செய்தால் திருமணத் தடை நீங்கி விரைவில் திருமணம் கைகூடும்.

Tags:    

Similar News