சிறப்புக் கட்டுரைகள்

சரணாகதியே மோட்சம்

Published On 2024-04-01 11:20 GMT   |   Update On 2024-04-01 11:20 GMT
  • பூஜையில் இருந்ததால் மன்னன் முனிவரை அதிக நேரம் காக்க வைத்து விட்டார்.
  • பக்தி மார்க்கத்தில் செல்லும் பொழுது சரணாகதி பக்குவம் ஏற்படும்.

மோட்சம்- முக்தி என்ற வார்த்தைக்கு பொருள் துன்பத்தில் இருந்து விடுதலை பெறுவதாகும். பிறப்பு, இறப்பு என்ற சூழலில் இருந்து விடுதலை பெறுவதனை மோட்சம்- முக்தி என குறிப்பிடுகின்றனர்.

ஜீவாத்மா ஆகிய பிறப்புகள் பரமாத்மாவுடன் இணைவதே மோட்சம். இதற்கு சரணாகதி அடைதல், இறைவனே, பரம் பொருளே, நீயே கதி என்ற தத்துவம் பெரிதும் போற்றப்படுகின்றது.

பாகவதத்தில் கூறப்பட்டுள்ள கஜேந்திர மோட்ஷத்தினை பற்றி பார்ப்போம். மிகுந்த வீரம், தோரணை, கம்பீரம் என்ற தோற்றம் கொண்ட யானைகளின் அரசன் தான் கஜேந்திர யானை. இதன் வலிமை காரணமாக சிங்கங்கள் கூட ஓடின. கஜேந்திர யானை தன் குடும்பத்தோடு மகிழ்ச்சியாய் உலாவி வந்தது.

அப்போது கஜேந்திரனுக்கு தாமரைப் பூவின் நறுமணம் வந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட கஜேந்திரன் தன் கூட்டத்துடன் தாமரை பூக்கள் நிறைந்த அந்த பொய்கையினை நோக்கி சென்றது. அனைவரும் அந்த பொய்கை நீரை அருந்தினார்கள். கஜேந்திரன் ஒரு தாமரையினை பறித்து தான் வணங்கும் பெருமாளுக்கு சமர்ப்பிக்க விரும்பினான். அந்த நேரம் ஒரு முதலை கஜேந்திரனின் காலை பற்றி தண்ணீருக்குள் இழுத்தது. கஜேந்திரனால் முதலை வாயில் இருந்து தன் காலை எடுக்க முடியவில்லை. உடன் இருந்த யானைகள் கஜேந்திரனை இழுக்க முயன்றன.

முதலைக்கு எப்பொழுதும் நீரில் பலம் அதிகம். அதனால் கஜேந்திரனின் பலம் குறைந்து கொண்டே வந்தது. கஜேந்திரனுக்கு தான் மரண தருவாயில் இருப்பது புரிந்தது. அந்த இறைவனைத் தவிர தனக்கு இப்பொழுது எந்த பற்றுதலும் இல்லை என்பது தெரிந்தது. முன் ஜென்மத்தில்தான் பெருமாளை பூஜித்தவை ஞாபகத்திற்கு வரவே அவற்றினையே மீண்டும் துதிக்க ஆரம்பித்தான்.

இறைவனே உன்னை வணங்குகிறேன். உன்னிடம் இருந்து தான் சகலமும் தோன்றின. உன்னாலேயே அண்ட சராசரங்களும் இயங்குகின்றன. உன்னைத் தவிர எனக்கு வேறு எதுவும் இல்லை. ஆக உன்னையே சரணடைகின்றேன்.

இவ்வாறு கஜேந்திரன் கதறினான். பெருமாள் கருட வாகனத்தில் சுதர்சன சக்கரம் ஏந்தி வந்து முதலையை வதம் செய்து கஜேந்திரனை காப்பாற்றி மோட்சம் அளித்தார். முதலையும் புண்யம் பெற்று இறைவனை வணங்கியது.

ஏன் முதலை குறி பார்த்து கஜேந்திரன் காலினை பிடித்தது. முற்பிறவியில் யானை பாண்டிய மன்னன் இந்திர துஷ்யனாகப் பிறந்தான். மகா விஷ்ணுவின் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தான். அவன் பெருமாளுக்கு பூஜை செய்து கொண்டு இருந்த நேரம் துர்வாச முனிவர் அவனை காண வந்தார்.

கமலி ஸ்ரீபால்

பூஜையில் இருந்ததால் மன்னன் முனிவரை அதிக நேரம் காக்க வைத்து விட்டார். அதனால் கோபம் கொண்ட துர்வாச முனிவர் ஒரு மதம் கொண்ட யானையாவாய் என்று சாபம் இட்டார். பெருமாள் மீது மிகுந்த பக்தி கொண்ட மன்னனோ நான் யானையாக பிறந்தாலும் மகாவிஷ்ணு மீது பக்தி குறையாது இருக்க வேண்டும் என்று முனிவரிடம் வேண்டினார். முனிவரும் மனம் குளிர்ந்து அந்த மகாவிஷ்ணுவாலேயே உனக்கு மோட்சம் கிடைக்கும் என மன்னனை அருளினார்.

முதலையும் முற்பிறவியில் ஸ்ரீஸ்ரீ என்ற கந்தர்வனாக இருந்தான். பொய்கைக்கு வருபவர்களின் காலை பற்றி இழுத்து பயப்படச் செய்வான். ஒரு முறை தேவலர் என்ற முனிவர் பொய்கையில் கால் கழுவ வந்தார். கந்தர்வனும் அவரது காலை பிடித்து இழுக்க முனிவர் நீ தண்ணீரில் முதலையாக பிறப்பாயாக என சாபம் இட்டார். கந்தர்வன் தன் தவறை உணர்ந்து முனிவரிடம் மன்னிப்பு கேட்டார். முனிவரும் மகாவிஷ்ணுவின் சுதர்சன சக்கரம் பெற்று உனக்கு சாப விமோசனம் ஏற்படும் என்று அருளினார்.

பக்தி மார்க்கத்தில் செல்லும் பொழுது சரணாகதி பக்குவம் ஏற்படும். நான். எனது, என் முயற்சி எனும் வரை சரணாகதி பக்குவம் வராது. பரிபூரண சரணாகதி ஏற்பட்டால் இறைவனே எழுந்தோடி வந்து விடுவான் என்பதனை விளக்குவதாகவே இந்த சம்பவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

எல்லா வைணவ கோவில்களிலும் சித்திரை பவுர்ணமி அன்று கருட சேவையுடன், கஜேந்திர மோட்ச விழாவும் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றது.

பூரண சரணாகதி என்பதன் பொருளை உணர்ந்து நாமும் அதனை பின்பற்றலாமே.

இது நமக்கு மிகவும் தெரிந்தது தான். வெளிநாட்டில் இருப்பவர்கள் கூட தாய்நாடு வந்தவுடன் குல தெய்வ கோவிலுக்கு சென்று வழிபடுவர். குலதெய்வம் மறந்தவர்கள் கூடதம் முன்னோர்களை கேட்டு அறிந்து வழிபடுகின்றனர்.

குல தெய்வ வழிபாடு முறையாய் இருந்தாலே வீட்டில் தோஷங்கள் இராது. குலதெய்வ தோஷம் இருந்தால் மற்ற தெய்வ தோஷங்களின் பாதிப்பும் ஏற்படும்.

பெண்கள் பொதுவில் திருமணத்திற்கு முன் தன் தந்தை வழி குல தெய்வத்தினை வழிபடுவர். மணம் முடிந்த பிறகு தன் கணவன் வீட்டு வழி குல தெய்வத்தினை வழிபடுவர். பல வீடுகளில் கல்யாணத்திற்கு பிறகு பிறந்த வீட்டு வழி குல தெய்வ வழிபாட்டினை மறுப்பர். பெண்கள் பிறந்த வீட்டு குல தெய்வத்தினையும் தரிசிப்பது அம்மா வீட்டிற்கு வந்து செல்வது போல்தான்.

பங்குனி பவுர்ணமி அன்று குலதெய்வ வழிபாடு செய்வது அநேக பிரச்சினைகளை நீக்கும். குலதெய்வ வழிபாடு கோடி தெய்வ வழிபாடு ஆகும்.

குலதெய்வ வழிபாடு இல்லற கடமை, குல தெய்வம் என்பதில் ஆண், பெண் தெய்வங்களே உள்ளன. பொதுவில் மகா சிவராத்திரி, மாசி அமாவாசை, பங்குனி உத்திரம் இவை குலதெய்வ வழிபாட்டிற்கு உகந்தது. அபிஷேகம், பூஜை, பொங்கல் படைத்தல் இவை குல தெய்வ வழிபாட்டிற்கு உகந்தது. முன்னோர்களும் ஆசிர்வதிப்பர்.

பலரும் வழிபாடு முடிந்ததும் பந்தி போட்டு ஊருக்கு சாப்பாடு போடுவார். இதனால் குலதெய்வம் மகிழ்ச்சி அடையும் என்பதே ஐதீகம். இதுவரை குல தெய்வ வழிபாடு செய்யாதவர்கள் உடனடியாக ஆரம்பித்து செய்யலாமே!

Tags:    

Similar News