சிறப்புக் கட்டுரைகள்
null

விதியை மதியால் வெல்வது எப்படி?

Published On 2024-03-30 12:16 GMT   |   Update On 2024-03-30 12:18 GMT
  • கோபத்தின் மூலமாக ஒரு மனிதர் தன்னையே அழித்து கொள்கிறார்.
  • நாம் பார்க்கும் அனைத்தும் இறைவனின் அம்சங்களாகவே தெரியும்.

அன்பார்ந்த வாசகர்களே, கடந்த பகுதியில் நாம் புற உலக தொடர்பை துண்டித்து அக உலக பிரயாணத்திற்கு வரும் வித்தையை பற்றி பேசினோம். நமது புலன்கள் எப்போதும் புற உலக்தோடு தான் தொடர்பில் இருக்கும். இதை கடந்து அக உலகம் என்ற ஒன்று உள்ளது என்பதை பற்றி நாம் அறிய முயற்சி செய்யவில்லை.

புற உலக தொடர்பு என்பது நமது புலன்கள் வழியாக நமக்கு இருப்பதால்தான், நமக்கு நான் இருக்கிறேன் என்கின்ற உணர்வு ஏற்படுகிறது. ஆனால் அக உலகத்தின் உள்ளே ஒரு நான் இருக்கிறது என்பதை அறியும் / உணரும் பயிற்சி தான் பிராணாயாமம்.

புற உலகோடு தொடர்பில் உள்ள நான், பொருள் பற்று மற்றும் அதிகார பற்றோடு இணைந்து இருக்கிறது. அதனால் நான் என்கின்ற கர்வம் நமக்குள் ஏற்படுகிறது. இதில் நாம் நினைப்பது மற்றவர்கள் மூலமாக நடக்காவிட்டால் / கிடைக்காவிட்டால் நமக்கு கோபம் ஏற்படுகிறது. அந்த கோபத்தின் மூலமாக ஒரு மனிதர் தன்னையே அழித்து கொள்கிறார். நாம் யாரும், கோபத்தால் ஒரு மனிதர் சாதனையை செய்தார் என்று எங்காவது வரலாறு உள்ளதா என்பதை பற்றி சிந்திப்பது இல்லை. எனவே, கோபம் என்பது தற்கொலைக்கு சமமாகிறது. நம் உடலை நாமே அழித்து கொள்கிறோம்.

அப்படி என்றால் பிராணாயாமம் பயிற்சி மூலமாக, நாம் அக உலகோடு தொடர்பு கொள்ளும்போது, புற உலக நான் என்பது மறைந்து அக உலகில் உள்ள நான் என்கின்ற ஆத்மாவை உணர முடிகிறது. இந்த நிலைக்கு வாழும் காலத்திலேயே சென்ற மனிதர்களை தான் நாம் மகான்கள் என்கிறோம்.

காரணம் என்னவென்றால் புற உலக தொடர்பு உள்ள வரை நமக்கு தியானம் என்பது சித்தி ஆகாது. தியானம் என்பது யாரும் நமக்கு சொல்லி கொடுத்து வருவது கிடையாது. அது தானாகவே நமக்கு உள்ளாக நடக்கக் கூடிய ஒரு சுயம்புவான நிகழ்வாகும். அந்த பேரானந்தத்தை அடைவதற்கு, நாம் அக உலகம் உள்ளே செல்ல வேண்டும்.

அதற்கு நாடி சுத்தி பிராணாயாமம் செய்யும்போது, புற உலகத்தின் தொடர்பானது கொஞ்சம் கொஞ்சமாக துண்டித்து கொண்டு அக உலகத்தின் உள்ளே பிரவேசிக்க முயலும். இதை நாம் தொடர் முயற்சியின் மூலமாகதான் பெற முடியும்.

சுயம்பு என்பது யாராலும் தோற்றுவிக்கப்பட்டது அல்ல. தானாகவே உருவானது என்று பொருள். அப்படித்தான் தியானம் என்பதும் தானாக உருவாகும். இதற்கு நம்முடைய கர்மவினை பதிவுகள், அவ்வளவு சீக்கரம் நம்மை அடையவிடாது. எனவே நாம் விதி என்கின்ற கர்மாவை மதி என்கின்ற புத்தி மூலமாக தொடர் முயற்சி செய்தால் தானாக உருவாகும்.

இதற்கு இந்த புலன்களை கடக்க வேண்டும். இந்த புலன்களை கள்ள புலன்கள் என்று கூறுகிறார்கள். காரணம் என்னவென்றால், இது கர்ம வினை பதிவுகள்படி விதியை நிறைவேற்றுவதற்கு, நம் நடைமுறை வாழ்க்கையில் காரண, காரியங்களை உருவாக்கி அதன் கணக்கை முடிக்க முயற்சி செய்யும். அது வெற்றி பெறும்போது, விதிப்படி நடக்கிறது என்று நாம் நம்மை சாமாதானம் செய்து கொள்கிறோம்.

ஆனால் இந்த நிலையை நாம் கடப்பதற்கு எப்போது அயறாது வழிப்பு நிலையில் இருந்து நம் செயல்களை செய்யும்போது, நடக்கின்ற செயல்கள் அனைத்தும் நான் செய்யவில்லை, இறைவன் செய்கிறான் என்ற மனநிலையில் நாம் இருந்தால், நாம் கர்மாவில் இருந்து தப்பிக்க முடியும் என்று மகான்கள் கூறுகிறார்கள்.

இந்த நிலை வரவேண்டும் என்றால், மனமானது அகம் நோக்கி பிரயாணம் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும். அப்படி செய்யும்போது நாம் இது நாள் வரை பார்க்காத ஒன்றை, உணராத ஒன்றை உணர செய்கிறது. இதை தான் ஜீவபிரம்ம ஐக்கிய முக்தி நிலை என்கிறோம்.

அந்த நிலையில் நாம் உணர்வது மனதின் மூலமான உயிரை உணர்கிறோம். இந்த உயிரை அல்லது பிராணனை நாம் வாழும் காலத்திலே உணர வேண்டுமா அல்லது இறக்கும் காலத்திலே உணர வேண்டுமா என்பதுதான் கேள்வி. ஏனென்றால் இறக்கும் காலத்திலே உயிரை உணரும்போது அது மனம் என்கின்ற நிலையிலே, நிறைவேறாத எண்ணங்கள், செயல்கள் மற்றும் ஆசைகளோடு உயிரை விடும்போது, அந்த ஆத்மா தன் ஆசைகளை நிறைவேற்றி கொள்வதற்கு மீண்டும் பிறவி எடுக்கிறது என்று வேதாந்த சித்தாந்தங்கள் கூறுகிறது.

ஆனால், நாம் உயிருடன் வாழும்போதே, இருக்கின்ற / வாழ்கின்ற காலத்திலே தியானம் மூலமாக உயிரை உணரும்போது, அதன் மூலமான ஆத்மாவை உணர்கிறோம். அப்போது நாம் மரணத்தை வென்று, சாகா கலையை உணர்கிறோம்.

மனவளக்கலை பேராசிரியர்கள் கி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்


எந்த ஒன்றை உணர்ந்தோமோ, அந்த ஒன்றுதான் எங்கும் இருக்கிறது என்கின்ற, மனம் விரிந்த உணர்வு ஏற்படும். இதன் மூலம் மனம் இந்த பிரபஞ்சம் கடந்து விரிய வைக்கிறது. அப்போது நான் என்கின்ற அதிகாரம் மற்றும் பொருள் பற்று நம்மை விட்டு விலகுகிறது.

இந்த நிலையை நமக்கு வாழும் காலத்திலேயே பக்தி மார்க்கத்திலே நமக்கு கற்று கொடுத்தார்கள். நாம் அனைவரும், சிறு குழந்தைகளாக இருக்கும்போது, உணவு உண்பதற்கு அடம் பிடிப்போம். அப்போது நம் பாட்டியோ, அம்மாவோ, சகோதரியோ நம்மை தன் இடுப்பில் வைத்துக்கொண்டு நிலவைக் காட்டி உணவு ஊட்டினார்கள்.

அப்போதும் நாம் அடம் பிடிக்கும்போது, நிலவிலே பார், அங்கு ஒரு பாட்டி இருக்கிறார். உனக்கு வடை செய்து கொண்டு இருக்கிறார் என்று நிலவுக்கு உள்ளே உள்ள மாயமான நிழலைக் காட்டி கதை சொன்னார்கள்.

உடனே நாம் அடம் பிடிப்பதை நிறுத்திவிட்டு, வாயை பிளந்து கதையை கேட்போம். அப்போது நம் வாயில் உண்மை என்கின்ற உணவை ஊட்டினார்கள். கொஞ்சம் பெரியவர்கள் ஆனவுடன் பௌர்ணமி நிலவை பார்த்தால் நல்லது என்று கற்பித்தார்கள். இன்னும் கொஞ்சம் தெளிவு வரும்போது தினமும் சூரியனைப் பார்த்து வணங்க சொன்னார்கள்.

இதற்கு காரணம் என்னவென்றால், நாம் நிலவை பார்க்கும்போது நமது மனம் ஆனது 2,30,000 மைல் தூரம் விரிகிறது. சூரியனை தினமும் வணங்கும்போது நமது மனம் ஆனது 9 கோடி மைல் தூரம் விரிகிறது. எனவே நம் மனதை இவ்வளவு தூரம் விரிக்கும் ரகசியத்தை கற்றுக் கொடுத்தார்கள்.

இதையே வேதாந்திரி மகரிஷி அவர்கள் மனம் விரிந்த நிலையில் நல்ல எண்ணங்களும், மனம் குறுகிய நிலையிலே தீய எண்ணங்களும் உருவாகும் என்று குறிப்பிடுகிறார்கள். எனவே, மனம் விரியம்போது தான், குடும்பம், சுற்றம், ஊர், உலகம், பிரபஞ்சம் கடந்து இறைவன் வரை விரிகிறது. அப்போது நாம் பார்க்கும் அனைத்தும் இறைவனின் அம்சங்களாகவே தெரியும்.

அந்த நிலை எது என்றால், செடி, கொடி, மரம் மற்றும் விலங்குகள், நம் உடன் பழகும் மனிதர்கள் அனைவரும் இறைவனின் மறு பிம்பமாகவே தெரியும். அப்படி தெரியும்போது, சகல ஜீவ ராசிகள் மற்றும் மனிதர்கள் இடத்தில் எந்த விதமான போட்டி, பொறாமை இல்லாமல் நம்மால் வாழ முடியும். அப்படி வாழ்பவர்கள்தான் மகான்கள், ரிஷிகன், முனிவர்கள் என்கிறோம்.

இந்த நிலைக்கு நாம் செல்வதற்கு நாடி சுத்தி பிராணாயாமமும், தியானமும் உதவி செய்கிறது. இது தான் உடல், மனம், புலன்கள் கடந்து ஒரு பெரிய நிலைக்கு சென்று நம்மை ஆள வைக்கிறது. எனவே நாம் வாழும் காலத்திலேயே உயிரை உணர்ந்தால் மாமனிதர்கள் என்று அழைக்கப்படுகிறார்கள். மற்றவர்களை மனிதர்கள் என்றும் அழைக்கப்படுகிறார்கள்.

மாமனிதர்கள் யார் என்றால், முதல் மூன்று யுகங்களிலே தேவர்கள் என்று அழைக்கப்பட்டவர்கள், கலியுகத்திலே அவர்களை மாமனிதர்கள் என்று அழைக்கிறார்கள். அப்படி என்றால் இதில் வெற்றி பெறுபவர்கள் கலியுக தேவர்கள் ஆவார்கள். நாம் கலியுக தேவர்களாக மாறுவதற்கு ஒரு குருவை பிடிக்க வேண்டும். ஏனென்றால் விதியை வெல்லும் வழியை கொடுப்பர் தான் குரு ஆவார்.

இறைவனால் கொடுக்கப்பட்ட கர்மாவை, இறைவனால் திருப்பி எடுக்க முடியாது. ஆனால் அதில் இருந்து தப்பித்து கொள்வதற்கு உண்டான வழியை கொடுப்பவர்தான் குரு ஆவார். குரு நம் அறிவு கண்களை திறக்கிறார். அதை நாம் பிடித்துக் கொண்டால் அந்த அறிவே தெய்வமாக நமக்குள்ளாக உள்ளது என்பதை நாம் உணர்நது கொள்ள முடியும்.

இந்த விதியை நம் மூச்சுதான் கால நிர்ணயம் செய்கிறது. எனவே நாம் மூச்சை அதிகம் உபயோகம் செய்யும்போது கர்மாக வேகமாக நம்மை நோக்கி வரும். அதற்குள் முடியவில்லை என்றால், நம் கர்மாவை நம் தலைமுறையினருக்கு பங்கீடு செய்யும். மூச்சை மெதுவாக பிரயோகம் செய்யும்போது அந்த மனம் ஆனது அமைதி என்கின்ற ஆல்பா நிலைக்கு செல்கிறது. அந்த நிலையில் உருவாக வேண்டிய காரண காரியம் என்கின்ற கர்மா உருவாகாது. அதையும் மீறி கர்மா பலமாக இருக்கும்போது அது நம்மை நோக்கி வரும்போது, நாம் அமைதி நிலையில் இருப்பதால் அதை நாம் முதலில் ஏற்றுக்கொள்வோம். எனவே ஏற்றுக் கொள்ளும்போது, கர்மாவின் தாக்கம் குறையும். இதை தான் விதியை மதியால் வெல்வது என்கிறோம்.

அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது என்கிறோம். அந்த அவன் என்பது தான் அறிவு. இதைத்தான் வேதாந்திரி மகரிஷி அவர்கள் "அவன் நீ ஒன்றாய் அறிந்த இடம் அறிவு முழுமை அது முக்தி" என்று கூறுகிறார். எனவே, அறிவு முழுமை பெறும் இடம் தான் முக்தி. அது தான் முழுமை பொருள். அந்த முழுமை பொருளை நோக்கிய நம் பயணத்தை தான் பக்தி மார்க்கம் , ஞான மார்க்கம் என்கின்ற வழிகளை நமக்கு கொடுத்தார்கள். வழிகளின் ஆராய்ச்சியை அடுத்த பகுதியில் ஆராய்வோம்.

போன்: 9444234348

Tags:    

Similar News