சிறப்புக் கட்டுரைகள்
null

முயற்சி செய்துதான் பாரேன்.. வெற்றி நிச்சயம் கிட்டும்!

Published On 2024-03-27 12:22 GMT   |   Update On 2024-03-27 12:23 GMT
  • தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் ஏராளம்.
  • ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

உயர்ந்த தொழில்களில் ஒன்றான நெசவுத் தொழிலில் தறிகளை இயக்க ஆரம்பித்த ஒருவர் பல லட்சம் கார்களை உலகெங்குமுள்ள நகரங்களில் ஓட வைத்தார் என்றால் சற்று ஆச்சரியமாக இல்லை.

யார் அவர்? அவர் தான் டொயோடா நிறுவனத்தை நிறுவிய கீச்சிரோ டொயோடா!

இவர் சாதித்தவை ஏராளம்; ஆகவே தான் அடிக்கடி கூறுவார் இதை : "என்னால் இதைச் செய்ய முடியாது என்று கூறுவதற்கு முன்னால், முயற்சி செய்து தான் பாரேன்!"

ஆம், அவர் முயற்சி செய்து பார்த்து ஒவ்வொரு புதுமையாகப் படைத்துக் கொண்டே இருந்தார். அவரைப் பற்றி அறிவது முன்னேறுவதற்கான அடிப்படை வழிகளில் ஒன்று.

பிறப்பும் இளமையும்: ஜப்பானில் யமாகுச்சி என்ற நகரில் யோஷிட்சு என்ற சிறிய கிராமத்தில் 1894-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ந் தேதி பிறந்தார் கீச்சிரோ டொயோடா.

தந்தை சகிச்சி டொயோடா வறுமையில் இருந்ததன் காரணமாக தறி வேலையைச் செய்து கொண்டிருந்தார். தன்னால் படிக்க முடியவில்லையே என்று வருந்திய அவர் தனது புதல்வனை நன்கு படிக்க வைக்க உறுதி பூண்டார்.

தாயார் டமி, ஸஹாரா குழந்தை கீச்சிரோ பிறந்த இரண்டாம் மாதமே குழந்தையையும் கணவனையும் விட்டுப் பிரிந்து சென்று விட்டார். அவர் கூறிய காரணம், " கணவர் சகிச்சி குடும்பத்தை விட தொழிலில் மிக அதிக நேரத்தைச் செலவழிக்கிறார்" என்பதே.

குழந்தையை தாத்தாவும் பாட்டியுமே வளர்த்தனர்.

முதலில் ஆரம்பப் பள்ளியில் கல்வி பயில ஆரம்பித்த டொயோடா, டோக்கியோ இம்பீரியல் பல்கலைக்கழகத்தில் பயின்று மெக்கானிகல் என்ஜீனியர் ஆனார். படிப்பில் முதன்மையாகவே எப்போதும் விளங்கினார் அவர்.

1921 ஜூலையில் இருந்து 1922 பிப்ரவரி முடிய சான் பிரான்சிஸ்கோ, லண்டன் முதலான இடங்களில் நூற்புத் தொழில் பற்றியும் வீவிங் பற்றியும் நன்கு அறிந்து கொண்டார். 1922-இல் ஜப்பான் திரும்பிய அவர் டிசம்பர் மாதம் ஹடாகோ லிடா என்பவரை மணம் செய்து கொண்டார்.


அந்தக் காலத்தில் வாகனத் தயாரிப்பிற்கு - குறிப்பாக கார்களைத் தயாரிப்பதற்கு - ஒரு நல்ல எதிர்காலம் உண்டு என்பதை உணர்ந்த அவர் தனது தந்தையாரிடம் இந்த தறியில் ஈடுபடுவதை மாற்றி கார் தயாரிப்பில் கவனம் செலுத்தலாமே என்று கூறினார்.

தந்தை தந்த ஊக்கம்: அவரது தந்தையாரும் தனது மகனின் விருப்பத்தை ஆமோதிக்க, 1937-இல் டொயோடோ மோட்டார் கார்பரேஷன் என்ற நிறுவனத்தை அவர் நிறுவினார்.

கார்களைத் தயாரிப்பதில் அவர் ஈடுபட்டார். முதலில் AA என்ற மாடல் காரை அவர் தயாரித்து அறிமுகப்படுத்தினார்.

கிடுகிடுவென அவரது நிறுவனம் உயர்ந்தது. கார்களின் தேவை உலகெங்கும் அதிகமாகும் என்ற அவரது கணிப்பு சரியானது என்பதை பின்னால் எடுக்கப்பட்ட புள்ளி விவரக்கணக்குகள் உறுதி செய்தன. ஜப்பானில் உற்பத்தியான வாகனங்களின் எண்ணிக்கை 1955-ல் 70000 என்ற எண்ணிக்கையில் இருந்தது. அது 1980-ல் 114லட்சம் என்ற எண்ணிக்கை அளவு உயர்ந்தது.

1980-ல் ஜப்பானிய உற்பத்தியானது அமெரிக்க உற்பத்தியை விட அதிகமானது!

டொயோடோ என்ற பெயரை அவர் ஜப்பானிய எழுத்து முறையில் ஒன்றான கடகணா என்ற முறையில் எழுதும்படி அமைத்தார். ஏனெனில் அந்த முறைப்படி எட்டு கோடுகளால் அது எழுதப்படும்! எட்டுக் கோடுகள் என்பது அதிர்ஷ்டத்திற்குரிய ஒன்றாகக் கருதப்பட்டது. இப்படி உருவானது தான் டொயோடா என்ற பெயர்.

ச.நாகராஜன்

இரண்டாம் உலக மகாயுத்தம் ஆரம்பிக்கவே கார்களின் உற்பத்தியைத் தற்காலிகமாக நிறுத்திய டொயோடோ ராணுவத்திற்காக லாரிகளையும் ராணுவ வாகனங்களையும் தயாரிக்க ஆரம்பித்தார்.

தொழிலில் ஈடுபாடு: தனது தொழிலில் விசேஷ அக்கறை கொண்டார் அவர். மேஜையில் முதலாளியாக அமர்ந்திராமல் தொழிலகத்தில் தொழிலாளர்களோடு சேர்ந்து பழகி தொழிலில் உள்ள கஷ்டங்களை அறிந்து அவற்றை நீக்கும் வழிகளை மேற்கொள்ளலானார் அவர்.

தொழிலில் அவர் சந்திக்க நேர்ந்த பிரச்சினைகள் ஏராளம். அனைத்தையும் அவர் எதிர் கொண்டு சமாளித்தார்.

நிர்வாகத்தைத் திறம்படச் செய்வதில் முனைந்த அவர் தனது தொழிலகத்தை ஏழு பிரிவுகளாகப் பிரித்து ஒவ்வொரு பிரிவிற்குமான வேலையைத் துல்லியமாக நிர்ணயித்தார்.

ஒவ்வொரு நாளும் வங்கிக்கு தானே நேரில் சென்று நிதி பற்றிய அறிக்கையைப் பெறுவது வழக்கம்.

பின்னர் மாஸ் புரடக்ஷன் என்னும் பெரும் அளவிலான உற்பத்திக்கு வழி கோலினார்.

லீன் மானுபாக்சரிங்: இதற்காக புதிய உத்தியான லீன் மானுபாக்சரிங் என்னும் ஒடுங்கு நிலை உற்பத்தியை அவர் மேற்கொண்டார்.

இந்த வழி புதிய வழி– 'டொயோடா வழி' என்றே உலகினரால் போற்றப்பட்டது.

வாடிக்கையாளரின் தேவையை சரியாக அறிவது, அவருக்கு அவர் கேட்டபடி தயாரிப்பை சரியான நேரத்தில் விநியோகிப்பது, இதற்காக உற்பத்தியை குறுகிய காலத்தில் திறனுடன் செய்வது இது தான் லீன் மானுபாக்சரிங் வழி.

முடா, முரா, முரி: இதற்காக தவிர்க்க வேண்டியவை மூன்று. முடா, முரா, முரி.

அது என்ன முடா, முரா, முரி? ஜப்பானிய வார்த்தைகளான இவை ஆழ்ந்த அர்த்தம் கொண்டவை.

இந்த மூன்று வார்த்தைகளுக்கான அர்த்தம் என்ன?

முடா- கழிவு;, முரா - சமமற்ற தன்மை அல்லது உரிய தரத்துடன் இல்லாமலிருப்பது, ; முரி - அதிகச் சுமை – இது தான் இவற்றிற்கான அர்த்தம்.

இந்த மூன்றும் தவிர்க்கப்பட வேண்டும்.

முடா: ஒரு தயாரிப்பில் அதன் மதிப்பைக் கூட்டாத எந்த ஒரு செயலும் முடா தான்! பொருளுக்கான தேவை சந்தையில் இல்லை என்றால் அதை உற்பத்தி செய்து என்ன பிரயோஜனம்? மூலப் பொருள்களை அதிகமாக வாங்கி இருப்பு வைப்பது தேவையற்ற ஒன்று. பொருளை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு கொண்டு செல்லும் போக்குவரத்து உரிய முறைப்படி இருக்கிறதா?

இவை எல்லாம் முடா – தவிர்க்கப்பட வேண்டியவை.

முரா: அடுத்து முடாவுடன் கூடவே பார்க்க வேண்டியது முரா!

தயாரிப்பு சரியான தரத்துடன் இருக்கிறதா? எப்படியாவது விற்பனை செய்வது என்பதல்ல நோக்கம். வாடிக்கையாளர் தாமே முன் வந்து வாங்க வேண்டும். ஆகவே சமமற்ற தன்மை எனப்படும் முராவும் தவிர்க்கப்பட வேண்டும்.

முரி: அடுத்து முரி எனப்படும் அதிகச் சுமை! சிக்கலாக உள்ளவற்றை எல்லாம் தொழிலாளர் மீது ஏற்றி அவர்களைச் சிரமப்படுத்துவது முரி.

அவர்களுக்குத் தேவை நல்ல பயிற்சி; அருமையான கருவிகள், சுத்தியலோ, ஸ்க்ரூ டிரைவரோ அற்புதமாக வேலை செய்ய வேண்டும்.

ஆக மிகக் கடுமையான தர நிர்ணயத்துடன் தயாரிக்கப்பட்ட டொயோடா வழி முறையிலான கார்கள் உலகெங்கும் ஓட ஆரம்பித்தன; அனைவரையும் பிரமிக்க வைத்தன!

ஓய்வும் மறைவும்: 1950-ம் ஆண்டு 13 ஆண்டு கால உழைப்பிற்குப் பின்னர் தனது நிறுவனத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து ஓய்வு பெற்ற டொயோடா ஒகோமோடோ என்ற இடத்தில் தனது இல்லத்தில் அமைதியாக ஓய்வு பெற வந்தார். ஆனால் அங்கும் அவர் சும்மா இருக்கவில்லை. தனக்கென ஒரு லாபரட்டரியை அங்கு உருவாக்கினார். ஒரு சிறிய ஹெலிகாப்டரை வடிவமைக்க ஆரம்பித்தார்.

ஆனால் மூளையில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக ஒரு நாள் கிழே விழ அதுவே அவரது மரணத்திற்குக் காரணமாக அமைந்தது. 1952-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ம் நாள் அவர் தனது 57-ம் வயதில் மரணமடைந்தார்.

''ஜப்பானிய தாமஸ் எடிஸன்'' என்று போற்றப்பட்ட அவரது மறைவிற்கு அனைவரும் வருந்தினர்.

இன்றைய வளர்ச்சி: இன்று டொயோடா என்றால் நம்பிக்கைக்குரிய திறனுள்ள வாகனம் என்று உலக அளவில் பெயர் எடுத்துள்ளது. 20 வருட காலம் நீடித்து உழைக்கும் என்று வாடிக்கையாளர்களிடம் நன்மதிப்பைப் பெற்றுள்ளது.

என்ன தான் கார் தயாரிப்பில் உலக அளவில் பெயரைப் பெற்று முன்னனியில் இருந்தாலும் டொயோடோ என்னும் தனது ஆரம்ப கால நெசவுத் தொழிலையோ தானியங்கித் தறிகள் தயாரிப்பையோ இன்னும் விடவில்லை. மின்னியங்கி தையல் மெஷின்களை அது தயாரித்து இப்போது உலகெங்கும் விநியோகித்து வருகிறது.

2023-ல் டொயோடாவின் பணியாளர்களின் எண்ணிக்கை 3,75,275, 2022-ல் டொயோடாவின் உற்பத்தி எண்ணிக்கை 10.61 மில்லியன் (106.1 லட்சம்) என்ற பிரமிக்க வைக்கும் எண்ணிக்கையாகும்.

வெற்றிக்குக் காரணம்! டொயோடாவின் வெற்றிக்குக் காரணம் தொடர்ந்து புதிய உத்திகளை அவர் கையாண்டது தான்!

தொடர்ந்து முன்னேற்றங்களை மேம்பாடுகளைச் செய்து கொண்டே இருக்கும் ஜப்பானிய உத்திக்குப் பெயர் கைஸன். இதை அவர் கையாண்டார்; வெற்றி பெற்றார்.

ஒரு முறை அவர் கூறினார் இப்படி: "திருடர்கள் எங்களது வடிவமைப்புகளையும் திட்டங்களையும் பின்பற்றி தறிகளை அமைக்கலாம். ஆனால் நாங்கள் ஒவ்வொரு நாளும் புதுப் புது வழிமுறைகளைக் கையாண்டு எங்கள் தறிகளை புது மாதிரியாக மாற்றி முன்னேற்றிக் கொண்டிருக்கிறோம். அவர்களால் எங்களது ஒரிஜினலில் நாங்கள் பட்ட தோல்விகளைத் தெரிந்து கொள்ள முடியாது. ஆகவே எங்களுக்குக் கவலையே இல்லை. நாங்கள் முன்னேற்றங்களை உருவாக்கி முன்னேறிக் கொண்டே இருப்போம்."

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News