சிறப்புக் கட்டுரைகள்

சந்திரதோஷத்தை சமாளிக்கலாம்

Published On 2024-03-26 12:12 GMT   |   Update On 2024-03-26 12:12 GMT
  • சந்திரன் பற்றி புராணங்களிலும், வேதங்களிலும் ஏராளமான குறிப்புகள் உள்ளன.
  • சந்திரனுக்கு சூரியன், புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்கள் ஆகும்.

நவக்கிரகங்கள் ஒவ்வொன்றின் இருப்பிடம், நகரும் திசை, பார்க்கும் பார்வை ஆகியவற்றை பொறுத்து அவை ஒவ்வொருவரின் வாழ்க்கையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். கிரகங்கள் சுபமாக இருந்தால் வாழ்க்கையில் நல்லது நடக்கும். இல்லையென்றால் அவை தோஷமாக மாறி விடும்.

அந்த வகையில் சந்திரன் கிரகத்துக்கும் மனிதர்கள் வாழ்க்கையில் நல்லது-கெட்டது செய்யும் ஆற்றல் உண்டு. ஒருவரது மனநலம் எப்படி இருக்கிறது என்பதை தீர்மானிக்கும் ஆற்றல் சந்திரனுக்கு மட்டுமே உண்டு. அதுபோல மூதாதையர்களை பற்றி அறிந்து கொள்ளவும் சந்திரன் உதவி செய்கிறது.

ஜோதிடர்கள் சந்திரனை மாத்ருகாரகன் என்று சொல்வார்கள். அதாவது சந்திரன் தாயாரை குறிப்பதை இப்படி சொல்கிறார்கள். சந்திரன் பற்றி புராணங்களிலும், வேதங்களிலும் ஏராளமான குறிப்புகள் உள்ளன. மகாவிஷ்ணுவின் இருதயத்தில் தோன்றியவர் என்று சந்திரனை சொல்வார்கள்.

பாற்கடல் கடையப்பட்டபோது லட்சுமிக்கு முன்னதாக இவர் தோன்றியதாகவும் குறிப்புகள் உள்ளன. பெரும்பாலான புராணங்களில் அத்திரி முனிவருக்கும், அனுசுயாவுக்கும் மகனாக பிறந்தவர் சந்திரன் என்று சொல்லப்பட்டு உள்ளது. சிவபெருமானின் இடது கண்ணாக இவர் திகழ்கிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


வெண்மைதான் இவருக்கு பிடித்த நிறம் ஆகும். அதனால்தான் வெள்ளை குதிரையை இவரது வாகனமாக வரையறுத்துள்ளனர். வெள்ளை உடை, முத்து, ஈயம் போன்றவை இவரோடு தொடர்புடையவை. மன்மதனுடைய வெண் கொற்றக் குடையாகவும் இவர் திகழ்கிறார்.

தட்சனின் 27 மகள்கள் 27 நட்சத்திரங்களாக கருதப்படுகிறார்கள். இந்த 27 பெண்களையும் சந்திரன் திருமணம் செய்துள்ளார். அந்த 27 பேரில் ரோகிணியிடம் மட்டும் சந்திரன் அதிக அன்பும், பாசமும் காட்டியதாக மற்ற பெண்கள் புகார்கள் தெரிவித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த தட்சன் சந்திரனை சாபமிட்டதாக புராணங்களில் சொல்லப்பட்டுள்ளது. அந்த சாபம் காரணமாகவே சந்திரன் ஒளியிழந்து தேய்பிறை ஆனதாக சொல்லப்படுகிறது.

சந்திரனுக்கு சூரியன், புதன் ஆகிய இரண்டும் நட்பு கிரகங்கள் ஆகும். செவ்வாய், வியாழன், சனி, சுக்கிரன் ஆகியவை சமநிலை கொண்டவை. ராகு, கேது இரண்டும் பகை கிரகங்கள் ஆகும். இந்த கிரகங்களின் அமைப்பு அடிப்படையில்தான் ஒருவரது ஜாதகத்தில் சந்திரதோஷம் இருக்கிறதா? என்பதை அறிய முடியும்.

ஒருவரது ஜாதகத்தில் சந்திரன் நன்றாக உச்சம் பெற்று இருந்தால் சுகவாழ்வு அமையும். ஜாதகக்காரரின் தாயால் செல்வம் கிடைக்கும். தாய் மூலம் கிடைக்க வேண்டிய அனைத்து நன்மைகளையும் அந்த ஜாதகக்காரர் பெறுவார். அதே சமயத்தில் சந்திரன் சரியில்லாத நிலையில் இருந்தால் அது தோஷமாக மாறி பிரச்சினைகளை ஏற்படுத்தி விடும்.

பொதுவாக சந்திரனுக்கு பல கிரக நிலைகள் உள்ளன. ராகுவும், சந்திரனும் சேர்ந்து இருந்தால் அது சந்திர தோஷமாக கருதப்படும். அதுபோல ஜாதகத்தில் சந்திரன் ராகு பார்வையாக இருந்தால் அதுவும் சந்திர தோஷமாகும். சந்திரன் கேதுவுடன் இணைந்து இருந்தாலும் அதையும் சந்திர தோஷம் என்பார்கள்.

மேலும் ஜாதகத்தில் சந்திரன் பார்வையில் வேறு ஏதேனும் தோஷ கிரகங்கள் இருந்தால் அந்த தோஷத்துடன் சேர்ந்து சந்திர தோஷமாக மாறவும் வாய்ப்பு உள்ளது. சிலரது ஜாதகத்தில் சூரியனும், சந்திரனும் சேர்ந்து இருக்கும். அதுவும் தோஷம் உள்ள அமைப்புதான்.

இப்படி சந்திர தோஷம் இருந்தால் அது முதலில் மனதைதான் பாதிக்கும். இதன் காரணமாக மன அழுத்தம் ஏற்படும். தூக்கம் தொலைந்து விடும். இதனால் நாளடைவில் உடல் பலகீனமாகி விடலாம். உடல் வலி இருந்து கொண்டே இருக்கும்.


சந்திர தோஷம் பெண்களை பாதிக்கும் பட்சத்தில் அவர்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சினைகள் உண்டாகும். மனச்சோர்வை தரும். சில பெண்களுக்கு சந்திர தோஷம் நிதி நெருக்கடியையும் ஏற்படுத்தி விடும். மனம் குழப்ப நிலையிலேயே இருக்கும். இதன் காரணமாக எந்த முடிவையும் உடனடியாக எடுக்க முடியாது.

பொதுவாக சந்திர தோஷம் இருந்தால் அடிக்கடி மன உளைச்சல் உண்டாகும். சுய முயற்சி அல்லது படைப்பாற்றல் பாதிக்கப்படும். உறவினர்கள், நண்பர்களால் அடிக்கடி பிரச்சினைகளை சந்திக்க நேரிடும். தவறான புரிதல்களை ஏற்படுத்தும் ஆற்றலும் சந்திரனுக்கு உண்டு.

இத்தகைய பிரச்சினைகளில் இருந்து மீள வேண்டுமானால் சில பரிகாரங்களை அவசியம் செய்ய வேண்டும். பரிகாரம் செய்தால்தான் சந்திர தோஷம் கட்டுப்படும் அல்லது குறையும். விரதம் இருப்பதன் மூலம் சந்திர தோஷத்தை நிரந்தரமாக நிவர்த்தி செய்யலாம். சந்திரனுக்குரிய திங்கட்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.

குல தெய்வத்தையும், இஷ்ட தெய்வத்தையும் வழிபட்டு 9 வாரங்கள் விரதம் இருந்தால் சந்திர தோஷம் விலகும் என்பது ஐதீகம். தானம் செய்வதன் மூலமாகவும் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம். அரிசி, தானியங்கள், கற்பூரம், வெண்ணிற ஆடை, வெள்ளி, சங்கு, சந்தனம், வெள்ளைப் பூக்கள், சர்க்கரை, தயிர், முத்து போன்றவற்றை தானம் செய்தால் சந்திரனின் அனுகிரகத்தை பெற முடியும்.

சந்திரன் போற்றி தெரிந்து கொண்டு தினமும் அதை படிப்பது மிகவும் நல்லது. இல்லையெனில் மகா மிருத்யுஞ்சய மந்திரத்தை தினமும் உச்சரிப்பது பயன் உள்ளதாக இருக்கும். யோகா பயிற்சிகளில் தேர்ச்சி பெற்றவர்கள் தினமும் பிராணயாமம் செய்து வந்தால் சந்திர தோஷம் விலகுவதாக சித்தர்கள் கணித்துள்ளனர்.

ஆலய வழிபாடுகள் மூலம் இந்த தோஷத்தில் இருந்து விடுபட நினைப்பவர்கள் விநாயகரை வணங்கி வந்தால் கைமேல் பலன் உண்டு. துர்க்கா சப்தசதி வழிபாடு செய்வதாலும் பலன் உண்டு. திங்கட்கிழமைகளில் பால் அல்லது அரிசி பாயாசம் செய்து இறைவனுக்கு படைத்து ஏழை எளியவர்களுக்கு தானம் செய்யலாம்.

பவுர்ணமி நாட்களில் சந்திரனை வழிபாடு செய்ய வேண்டும். வாய்ப்பு இருப்பவர்கள் சந்திரன் ஒளியில் அமர்ந்து சந்திரனுக்குரிய 108 போற்றிகளை சொல்லி வந்தால் சந்திரன் மனமகிழ்ந்து நல்லது செய்வார் என்பது நம்பிக்கையாகும். 'ஓம்' எனும் மந்திரத்தை சந்திரனை பார்த்துக் கொண்டே உச்சரிப்பதும் பிரச்சினைகளுக்கு தீர்வாக அமையும்.

சில சந்திர தோஷம் ஆளுமை, ஆரோக்கியத்தை பாதிப்பதாக இருக்கும். அத்தகைய நிலையில் இருப்பவர்கள் முத்து ரத்தின மோதிரம் அணியலாம் என்று சொல்கிறார்கள். வசதி உள்ளவர்கள் சந்திரன் எந்திரத்தை வைத்து பூஜை செய்யலாம்.

ஆலயங்களுக்கு செல்லும்போது நவக்கிரகங்களில் சந்திர பகவானுக்கு பாலாபிஷேகம் செய்து வெள்ளை உடை அணிவித்து வெள்ளை அல்லி மலர்களால் அலங்காரம் செய்து வழிபட வேண்டும். இந்த சமயத்தில் சந்திரனுக்குரிய காயத்ரி மந்திரம் சொல்வது மிகப்பெரிய நன்மையை தரும்.

சந்திரனுக்குரிய ஆலயங்களான திருப்பதி, திங்களூர் ஆலயங்களுக்கு சென்று வழிபடுவதும் நல்லது. அதுபோல சந்திரனுடன் தொடர்புடைய திருவெண்காடு, திருமாந்துரை, திருவாரூர், திருநெல்லிகா, திருவலிதாயம் (சென்னை பாடி), திருப்பழூவூர், மகேந்திரப்பள்ளி, திருபந்தாந்தால், கும்பகோணம், திருப்புணல்வாயல், சீர்காழி, திருத்திலதைபதி ஆகிய ஆலயங்களுக்கும் சென்று வழிபடலாம்.

சந்திரனுக்குரிய மாதமாக ஆடி மாதத்தை நம் முன்னோர்கள் வரையறுத்துள்ளனர். அந்த மாதத்தில் சந்திரனுக்குரிய வழிபாடுகளை செய்வது கூடுதல் நன்மைகளை தரும். ரோகிணி, அஸ்தம், திருவோணம் ஆகிய மூன்று நட்சத்திரங்களில் பிறந்தவர்களை சந்திர திசையில் பிறந்தவர்களாக ஜோதிட நூல்கள் குறிப்பிடுகின்றன. இவர்கள் சந்திரனை எந்த அளவுக்கு வழிபடுகிறார்களோ அந்த அளவுக்கு மகிழ்ச்சியும், செல்வமும் கிடைக்கும்.

சந்திரனுக்குரிய திசை வடக்கு. எனவே சந்திரன் மூலம் பலன் பெற விரும்புவர்கள் எப்போதும் வடக்கு திசையை நோக்கி தொடங்குவது வெற்றிகளை தரும்.

Tags:    

Similar News