சிறப்புக் கட்டுரைகள்

மாற்றங்களை ஏற்படுத்தும் ஆன்மீகம்!

Published On 2024-03-18 16:53 IST   |   Update On 2024-03-18 16:53:00 IST
  • நம்மை நாம் சரி செய்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
  • ஆன்மீக வழியில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக கூறப்படும் நீருக்கு நிறைந்த முக்கியத்துவம் உண்டு.

ஒவ்வொருவரின் ஆன்மீகப் பயணமும் ஒவ்வொரு விதத்தில் இருக்கும்.

* சிலர் கண் மூடி தியானம் செய்வார்கள்.

* சிலர் தான் செய்யும் வேலையினை கர்மயோகியாக செய்வார்கள்.

* சிலர் கோவிலுக்கு அடிக்கடி செல்வார்கள்.

* சிலர் வீட்டின் பூஜை அறையினை தெய்வ உலகமாய் அலங்கரித்து ஆனந்தப்படுவார்கள்.

* அபிஷேகம், ஆராதனை, தேரோட்டம் என சிலரது வழிபாடு அமர்களமாய் இருக்கும்.

* ஒரு சிலர் பூசலார் நாயனார் போல் மனதுக்குள் கோவில் கட்டி மானசீகமாய் வழிபடுவர்.

இப்படி ஆன்மீக பயணம் செய்வது பொதுவாக கீழ்வரும் மாற்றங்களை ஏற்படுத்தும்.

* யாரையும் மிக நல்லவர் என தூக்கி வைத்து ஆடுவதும், பின்னர் அவராலேயே பாதிப்புகளுக்கு உள்ளாவதும் இருக்காது. இறைவன், பிரபஞ்சம், சித்தர்கள், மகான்கள், ஆடம்பரமில்லாத அரிய இடங்கள். இங்கு மட்டுமே மனம் செல்லும். நிம்மதி காணும்.

 * நமது தனிப்பட்ட வாழ்வில் ஏற்படும் பாதிப்புகளை வீடியோ போட்டு அனுதாபம் தேடும் குணம் நீங்கும். அநேகர் பிறரின் சோகக் கதைகளை கேட்டு சிரிப்பவர்களாகவே இருக்கிறார்கள்.

* யாரை பற்றியும் எந்த முடிவும் எதற்கு எடுக்க வேண்டும். நாம் நல்லவர் என்று நினைப்பவர் மிகவும் கெட்டவராக இருக்கலாம். அல்லது விதி அவரை மாற்றலாம். அது போல் மிக கெட்டவர் என நாம் நினைக்கும் ஒருவர் உள்ளத்தில் நல்லவராக இருக்கலாம். அல்லது விதியை மாற்றலாம். அவரவர் வாழ்வினை அவரவர் விதிபடி வாழ்கின்றனர். இந்த நிலைகள் காலத்தின் சூழலுக்கேற்ப மாறுகின்றன என்பது புரியும்.

* தியானம் செய்வது ஒருவரை தேவையின்றி பேசாது இருக்கச் செய்யும். அதிகம் பேசாது இருந்தாலே சிறப்பு.

* ஒருவர் அதிகம் கோபப்படுகின்றாரா, கூச்சல் போடுகின்றாரா, ஊர் வம்பினை ஓயாது பேசுகின்றரா- முடிந்தால் அந்த இடத்திலேயே இல்லாது இருப்போம். இருந்தால் மவுனம் காப்போம். இந்த பொறுமை ஒருவருக்கு ஏற்படும்போது மவுனம் போன்ற ஒரு தண்டனையை உங்களால் வேறு எந்த விதத்திலும் மற்றவர்களுக்கு கொடுக்க முடியாது.

* பணம் தலை விரித்து ஆடினால் அங்கே உண்மை போராடி போராடிதான் ஜெயிக்க வேண்டும்.

* கவலை என்பது ஒருவருக்கு வந்து விடக்கூடாது. கவலை வர, வர மரணம் நெருங்குகின்றது என்று பொருள்.

* மன வலிமையை கூட்டிக் கொள்ள வேண்டும். கடைசி நொடியில் கூட அநேக அற்புதங்கள் நிகழ்கின்றன.

நீங்கள் நான் பல வசதிகளை தியாகம் செய்கிறேன் என்பது மட்டும் தியாகம் ஆகாது. ஆசைகளை அழிப்பது, ஆசைகளே இல்லாமல் இருப்பதுதான் வாழ்க்கை என்கிறார் புத்தர்.

* மேற்கூறிய வகையில் நமது சிந்தனைகள் மாற வேண்டும். செயல்கள் மாற வேண்டும். இது நம்மிடம் மாற்றத்தினை ஏற்படுத்தும். பண்பினை பிரதிபலிக்கும்.

* நாம் செய்பவைதான் நமக்குத் திரும்பி வருகின்றன. அதுதான் பிரபஞ்ச வழி. இதற்காக மற்றவர் எந்த கெடுதல் செய்தாலும் அதனை தாங்கிக் கொள் என்பது பொருள் அல்ல. நியாயமாக உறுதியாக போராடலாம்.

* ஆக நம் வாழ்வில் நடப்பவற்றுக்கு நாமே பொறுப்பாகின்றோம்.

* ஒவ்வொரு செயலுக்கும் கர்ம வினை இருக்கும். அது நல்ல வினையா? தீய வினையா? என்பது ஒருவர் செய்யும் செயலைப் பொறுத்தது. ஆகவே ஒருவர் தன் சிந்தனை, செயல்களுக்கு பயப்பட வேண்டும்.

* நம்மை நாம் சரி செய்து கொள்ள சில வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். அதற்கு பழக்கப்படுத்தப்பட வேண்டும். நீங்கள் கவனித்து இருக்கின்றீர்களா? சிறு வயதில் வீட்டில் பெரியவர்கள் ஒன்று சொல்வார்கள். 'தப்பு செய்தால் சாமி ராத்திரி வந்து கண்ணை குத்தும்' என்பார்கள். ஒருவருக்கு நாம் தீங்கு செய்தால் அந்த கர்மவினை செய்பவரை வந்து ஒட்டிக் கொள்ளும் என்பதனை முந்தைய கால முறைக்கு ஏற்ப கற்பித்தார்கள். ஆக ஒருவன் மனம் திருந்தி நல்லவனாக மாற முடியவில்லை என்றாலும் தனது கர்மவினை பாதிப்பிற்கு பயந்தே ஒழுக்கமாய் வாழ்ந்தான்.

* அழிவுப்பூர்வமான எண்ணங்களை அறவே ஒழித்து விட வேண்டும். எப்போதெல்லாம் அழிவுப்பூர்மான எண்ணங்கள் தோன்றுகின்றதோ உடனே விடாது ஆக்கப்பூர்வமான எண்ணங்களை உங்களுடன் நீங்களே மனதிற்குள் பேசுங்கள்.

* உணவில் கட்டுப்பாடு வேண்டும். முறையற்ற உணவு பழக்கம் உடல் நலம், உள்ள நலம் இரண்டினையும் கெடுக்கும்.

* அதிகமாக பேசி தெளிவாக புரிய வைக்கத் தெரிய வேண்டும். தியானம் செய்ய அன்றாடம் பழக வேண்டும். தெளிவான சிந்தனை, சொல், செயல் ஏற்படும்.

* நாம் அனைவரும் இவ்வுலகில் வாழ வேண்டும். கோபப்பட்டு, பொருமைப்பட்டு, அடுத்தவர்களை அழிப்பதற்காக அல்ல.

* ஆன்மீகம், தியானம் இவை இரண்டுமே ஒருவரை மகிழ்ச்சியாய், அமைதியாய் வைக்கும்.

* இந்த அமைதிதான் ஒவ்வொருவரின் இயல்பான அமைப்பு ஆகும். இதில் மாறுபடும் போதுதான் மொத்த பிரச்சினையும் ஏற்படுகின்றது.

* சுய பச்சாதாபம், சுய பரிதாபம் கூடவே கூடாது.

* மவுனமாய் இயற்கையை கவனியுங்கள். இயற்கை உங்களின் பல கேள்விகளுக்கு பதில் தரும்.

வாழைப்பழம் பழுக்க ஆரம்பிக்கும் போது அதில் சர்க்கரை அளவு குறைவாகவே இருக்கும். பழுத்து முடிய வேண்டிய தருவாயில் ஆன்டிஆக்ஸிடன்ட் சத்து கொண்டதாக இருக்கும். பழுத்த நிலையில் குறைவான மாவு சத்து, கூடுதல் சர்க்கரை, கூடுதல் ஆன்டிஆக்ஸிடன்ட் கொண்டதாக இருக்கும். சற்று அதிகம் பழுத்து விட்டால் சிறந்த அளவு ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியும் கூடி இருக்கும். மிக அதிகம் பழுத்து விட்டால் ஆன்டி ஆக்ஸிடன்ட் சத்து கொட்டி கிடக்கும் என ஒரு ஆய்வு கூறுகின்றது. சர்க்கரை நோயாளிகள் அதிகம் பழுக்காத வாழைப் பழம் மருத்துவர் அறிவுரையின் பேரில் எடுத்துக் கொள்ளலாம்.

இப்பவும் கிராமங்களில் தார், தாராக வாழைப் பழம் இறைவனுக்கு படைப்பார்கள். நம் முன்னோர்கள் இந்த மருத்துவ குணங்களை நன்கு அறிந்தவர்கள் போல் தெரிகிறது. வாழைப்பழம் இல்லாத பூஜையே கிடையாது. பின் அதனையே பிரசாதமாக மனிதன் எடுத்துக் கொள்கின்றான்.

* உடலை அடிக்கடி உள் சேரும் நச்சுப் பொருட்களில் இருந்து சுத்தம் செய்து கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது. அதற்கான அறிகுறிகளை நம் உடலே காட்டும்.

* அதிக இனிப்பு சாப்பிட வேண்டும் என்ற உணர்வு * மலச்சிக்கல் * வயிற்றுப் பகுதியில் பருத்த கடின கொழுப்பு * சதா ரைஸ்மில் போல் ஏதாவது சாப்பிட வேண்டும் என்ற உணர்வு * உப்பிசம்

* காற்று

* சரும பாதிப்பு இப்படி பலவற்றினைக் கூறலாம்.

இதற்காக எத்தனை முயற்சி, கடின பயிற்சி, உணவு கட்டுப்பாடு என திண்டாடுகின்றோம். இதற்காகத்தான் நம் முன்னோர்கள் விரத முறைகளை கட்டாயமாக செய்ய வைத்துள்ளனர். இறைவன் பெயரில் பக்தியோடு செய்ய வைத்துள்ளனர்.

இந்த விரத, உபவாச முறையில் மற்றொன்றும் இருக்கின்றது. சுய ஒழுக்கம், சுய கட்டுப்பாடு ஏற்படும். உணவு கட்டுப்பாடு தான் ஆன்மீக பயணத்தில் ஒருவர் ஏற்படுத்திக் கொள்ள வேண்டிய முதல் கட்டுப்பாடு ஆகும்.

தண்ணீர்: இந்த கோடை காலத்தில் தண்ணீரின் அவசியம் நன்றாகவே எல்லோருக்கும் புரியும். கோடை காலமோ, குளிர் காலமோ உடலுக்கு தண்ணீர் என்பது மிக அவசியம் ஆகின்றது.

ஆன்மீக வழியில் பஞ்ச பூதங்களில் ஒன்றாக கூறப்படும் நீருக்கு நிறைந்த முக்கியத்துவம் உண்டு. மனிதனுக்கு பிறப்பு முதல் இறப்பு வரை நீரோடு தொடர்பு உண்டு. நீர்- ஞானம், அமைதி, சுத்தம்-புனிதம் இவற்றோடு தொடர்பு உண்டு.

* புனித நீராடல்- சக்தி வாய்ந்த நதிகளில் நீராடுதல், கடலில் குளித்தல் போன்றவை உடலையும், ஆன்மாவினையும் புனிதப்படுத்துவதாக கூறப்படுகிறது.

* Holy water, துளசி தீர்த்தம் என கொடுக்கப்படுகின்றது.

* தண்ணீருக்கு ஈர்ப்பு சக்தி அதிகம். அதன் அருகில் இருந்து தீய, தவறான செயல்களை பேசக்கூடாது. அப்படியே பலித்து விடுமாம்.

* ஜபம் செய்யும் நேரத்தில் ஒரு குவளையில் நீரினை பக்கத்தில் வைத்து ஜபம் செய்த பிறகு வேண்டுதலை மனதில் நினைத்து அந்த நீரினை அருந்தி விட வேண்டும்.

* தாரை வார்த்து கொடுப்பதும், கும்பாபிஷேகம் செய்வதும் நீரை வைத்துதான்.

* சாபம் இடுவதும், தலையில் நீர் ஊற்றி உறவினை உதறி விடுவதும் நீரைக் கொண்டுதான்.

* உணவு அருந்தும் போதும், நீர் அருந்தும் போதும் நாம் எதைப் பற்றி நினைக்கின்றோமோ, எதனை பேசுகின்றோமோ அதன்படியே வாழ்க்கை மாறும். எனவே அதிசக்தி வாய்ந்த நீரினை முறையாய், மரியாதையுடன் பயன்படுத்துவோம்.

Tags:    

Similar News