சிறப்புக் கட்டுரைகள்

பன்முகப் பரிமாணம் கொண்ட பிர்லா

Published On 2024-03-13 12:15 GMT   |   Update On 2024-03-13 12:15 GMT
  • சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது.
  • இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார்.

சாதாரண சின்ன பெட்டிக் கடையில் பதினாறாம் வயதில் வணிகத்தைத் தொடங்கி பிரம்மாண்டமான அளவு அதை வளரச் செய்த ஒரு சாதனையை நிகழ்த்தியவர் யார் தெரியுமா? அவர் தான் கணஷ்யாம் தாஸ் பிர்லா.

ஜி.டி. பிர்லா என்று சொன்னால் அனைவருக்கும் தெரியும். பெரிய தொழில் அதிபர், தேசபக்தர், ஆகப் பெரும் பணக்காரர்.

அனைவருக்கும் கொடுத்துக் கொடுத்துக் கைகள் சிவந்தவர், தேசத்தை தொழில்மயமாக்க உதவியவர், காந்திஜிக்கு மிக நெருக்கமானவர்களில் ஒருவர், தடைகள் பலவற்றை வென்றவர், கல்வி அறிவு பரப்புவதில் ஆர்வம் கொண்டவர் என்று இப்படி சொல்லிக் கொண்டே போகலாம் இவரைப் பற்றி!

பிறப்பும் இளமையும்: ராஜஸ்தான் மாநிலத்தில் ஜுன் ஜுனு என்ற மாவட்டத்தில் பிலானி என்னும் சிறு நகரில் ஒரு மார்வாடி குடும்பத்தில் பல்தேவ்தாஸ் பிர்லாவுக்கு மூன்றாவது மகனாக 1894ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 10ம் நாள் கணஷ்யாம் தாஸ் பிர்லா பிறந்தார். அன்று ராம நவமி தினம்.

இளமையில் உள்ளூரிலேயே ஆரம்பக் கல்வியை முடித்துக் கொண்ட இவர் தந்தையுடன் கல்கத்தா சென்று சணல் வியாபாரத்தைக் கற்றுக் கொண்டார். பின்னர் சணல் தொழிற்சாலை ஒன்றைத் தொடங்கினார்.

1914 முதல் ஆரம்பித்த முதலாம் உலகப் போர் பிரிட்டிஷாரைத் திணற அடித்துக் கொண்டிருந்தது. சணலால் ஆன சாக்குகளுக்கு நல்ல கிராக்கி இருந்தது. நிலைமையை நன்கு கவனித்த பிர்லா அதை நன்கு பயன்படுத்திக் கொண்டு நன்கு உழைத்து முன்னேறலானார். உலகப் போர் முடிந்த 1919ஆம் ஆண்டில் குவாலியரில் ஜவுளி ஆலை ஒன்றைத் தொடங்கினார்.

பிரிட்டிஷாரின் எதிர்ப்பு: பிர்லா தனியாகத் தொழில் தொடங்குவதைக் கண்ட பிரிட்டிஷார் எரிச்சல் அடைந்தனர். ஏராளமான இடையூறுகளைத் தந்தனர். அவர்கள் உபயோகிக்கும் லிப்டில் ஏறக் கூடாது. ஒரு சந்திப்பில் காத்திருக்கும் போது அங்குள்ள பெஞ்சுகளில் பிரிட்டிஷாருக்குச் சமமாக உட்காரக் கூடாது. இப்படி ஒவ்வொரு சிறு விஷயத்திலும் அவர் படாதபாடு பட்டார். பிரிட்டிஷாருக்கு எதிராக சுயமாக சுதேசி ஜவுளியைத் தயாரித்து அவர்களுக்கு ஈடு கொடுத்தார் அவர்.

எப்படியும் தேச பொருளாதாரத்தை உயர்த்த வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் விதையூன்றியது. எந்த பிரிட்டிஷ் அரசு அவரை அவமதித்ததோ அதே அரசால் லண்டனில் 10, டவுனிங் சாலையில் அவரது 40வது வயதில் அவர் வரவேற்கப்பட்டது குறிப்பிடத்தகுந்த நிகழ்ச்சியானது.

மகாத்மாவின் எழுச்சி: இந்த நிலையில் தான் "இந்த வையத்து நாட்டிலெல்லாம் தாழ்வுற்று, வறுமை மிஞ்சி, விடுதலை தவறிக் கெட்டு, பாழ்பட்டு நின்றதாம் ஓர் பாரத தேசம் தன்னை வாழ்விக்க வந்த காந்தி மகாத்மா" மக்களை எழுச்சியுறச் செய்ய ஆரம்பித்தார். பிர்லாவையும் கவர்ந்தார்.

முதலில் ஐயாயிரம் ரூபாயை நன்கொடையாக அவர் காந்திஜிக்கு அனுப்பினார். அதைப் பெற்றுக் கொண்ட காந்திஜி ஒரு கடிதத்தை அனுப்பினார்.

"நீங்கள் நலமுற இருக்க வேண்டும். எனக்கு உங்களால் ஆக வேண்டிய காரியம் நிறைய இருக்கிறது" என்று எழுதினார் காந்திஜி.

உண்மையும் அப்படித்தான் ஆனது. காந்திஜியின் திட்டங்களுக்கெல்லாம் அவர் உதவினார்.

ச.நாகராஜன்

இத்தனைக்கும் அவர் காந்திஜியின் அனைத்துக் கொள்கைகளையும் அப்படியே ஏற்றுக் கொள்ளவில்லை. பல விஷயங்களில் மாறுபட்ட கருத்து கொண்டிருந்தாலும் அடிப்படைக் கொள்கைகளில் அவர் காந்திஜியை அப்படியே பின்பற்றினார்.

காந்திஜியை அவர் எவ்வளவு மதித்தார் என்பதற்கு ஒரு சிறிய சம்பவம் உண்டு. 1931-ல் இரண்டாம் வட்ட மேஜை மாநாட்டில் லார்ட் சாலிஸ்பரி, பிர்லாவிடம், "நல்ல குணாதிசயத்துடன் கூடிய அனுபவத்தைக் கொண்ட ஒருவரை மகானாக ஆக்கி விடும் பெரும் தவறை நீங்கள் உங்களது குழப்பத்தினால் செய்கிறீர்கள். இங்கிலாந்து ஆயிரம் ஆண்டுகளின் பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது, உங்களுக்கோ ஒன்றும் இல்லை" என்று காந்தியடிகளை மகானாக ஆக்கும் இந்தியரை ஏளனம் செய்தார். உடனே பிர்லா, "எங்களது பாரம்பரியம் உங்களுடையதை விடப் பழமையானது. அது அனைவராலும் மதிக்கப்படுவதும் கூட" என்று பளீரென்று பதிலைக் கூறிவிட்டு அவரிடமிருந்து அகன்றார்.

காந்திஜியுடன் கடிதங்கள்: நூற்றுக் கணக்கான கடிதங்கள் காந்திஜிக்கும் அவருக்கும் இடையே பரிமாறப்பட்டன.

ஒரு கடிதத்தில், பிர்லா என்னென்ன சாப்பிட வேண்டும், எப்படி, எப்போது சாப்பிட வேண்டும் என்று அன்புடன் அறிவுரை கூறி இருந்தார் காந்திஜி. இன்னொரு கடிதத்தில் தன்னிடமிருந்து உடனடியாக பதில் வரவில்லை என்றால் தான் மிக முக்கியமான வேலையில் ஈடுபட்டிருந்ததாகவே எப்போதும் கொள்ள வேண்டும் என்றும் அன்புரை கூறி இருந்தார்.

நான் ஒரு காந்தியவாதி: மகாத்மா என்ன சொன்னாலும் அதைச் செய்ய என்னால் மறுக்க முடியாது என்று கூறினார் பிர்லா. "நான் காங்கிரஸ்காரன் இல்லை; ஆனால் காந்தியவாதி" என்று இங்கிலாந்தில் அவர் முழங்கினார்.

1916-ல் முதன் முதலாக மகாத்மாவை சந்தித்த அவர் ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு உள்ளிட்ட முக்கிய போராட்டங்களில் பங்கேற்றார்.

டில்லியில் இருந்த 12 அறைகளுடன் கூடிய அவரது பெரிய வீடு இந்தியாவின் தலைநகர் வீடாக கருதப்பட்டது. தேசியத் தலைவர்கள் அங்கே குழுமுவது வழக்கம். மகாத்மா தனது கடைசி நான்கு மாதங்கள் இங்கு தான் தங்கி இருந்தார்.

லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினர்:

பிரிட்டிஷ் இந்தியாவில் 1926ஆம் ஆண்டு அவர் லெஜிஸ்லேடிவ் அசெம்பிளி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிர்லாவின் வணிக சாம்ராஜ்யம்: சர்க்கரை ஆலை, பேப்பர் ஆலை என ஒவ்வொன்றாக அவர் தொழில் சாம்ராஜ்யம் விரிவை அடைந்தது.

1925-ல் பல தொழில் அதிபர்களை இணைத்து இந்தியன் சேம்பர் ஆப் காமர்சை அமைத்தார்.

சிமெண்ட், அலுமினியம், கெமிக்கல்கள், ரேயான், இரும்பு பைப்கள், டெலிகாம் என்று எந்தத் துறையையும் விட்டு வைக்காமல் ஒவ்வொன்றாக ஆரம்பித்தார்.

1940-களில் அவர் கவனம் கார் தயாரிப்பில் திரும்பியது. இந்துஸ்தான் மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து கார்களை உற்பத்தி செய்ய ஆரம்பித்தார்.

இந்துஸ்தான் அலுமினியம் நிறுவனத்தின் சேர்மனாக அவர் இறுதி வரை இருந்தார். பிர்லா குழுமத்தில் மூன்று லட்சம் பேர் வேலை பார்க்கின்றனர் என்றும் 2,50,000 பங்குதாரர்களுக்கு லாபத்தில் பங்கு அளிக்கப்படுகிறதென்றும் அவர் பெருமையுடன் கூறினார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் முடிந்த பின்னர் அவருக்கு வங்கி ஒன்றைத் தொடங்க வேண்டும் என்ற எண்ணம் உதிக்கவே யுனைடெட் கமர்ஷியல் வங்கியை 1942ல் அவர் ஆரம்பித்தார். (பின்னால் இது யூகோ வங்கி என்று ஆனது)

கல்வித் துறையில் தன் கவனத்தைச் செலுத்திய அவர் பிலானியில் பிர்லா என்ஜினீயரிங் காலேஜ் என்று பொறியியல் கல்லூரியை ஆரம்பித்தார். இன்று பிட்ஸ் பிலானி (Birla Institute of Technology and Science) என்று அனைவராலும் வியந்து அழைக்கப்படும் பெரிய கல்வி நிறுவனத்தை அவர் வளர்த்ததோடு, கல்லூரிகள், பாலிடெக்னிக்குகள் என பலவற்றிற்கும் ஆதாரமாகத் திகழ்ந்தார்.

பிர்லா நாட்டிற்காகச் செய்த சேவையை கவுரவிக்க 1957-ல் அவருக்கு பத்ம விபூஷண் விருது வழங்கப்பட்டது. தபால்தலையும் வெளியிடப்பட்டது.

குடும்பமும் வணிகமும்: துர்கா தேவி என்ற முதல் மனைவி மூலம் அவருக்கு ஒரு மகனும் இரண்டாம் மனைவி மகாதேவி மூலம் இரு மகன்களும் அவருக்கு உண்டு. மகாதேவி மறைந்தவுடன் தனது மகன்களை கூட்டுக் குடும்பத்தின் பரிபாலிப்பில் அவர் விட்டார். தனது மகன்களை தனது சமூகத்தில் உள்ள இதர நல்ல வணிகர்களிடம் அனுப்பி வணிக முறைகளைக் கற்றுக் கொள்ளச் சொன்னார்.

அவர் வணிகத்தை நடத்திய விதமே தனி.' நான் ஒரு பிசினஸ்மேன் இல்லை' என்று அவர் ஒரு முறை கூறிய போது அனைவரும் வியந்தனர்.

'ஆம், எனது வணிகம், தொழில்கள் தானியங்கி பைலட்டாக செயல்படும், முக்கியமான பெரிய முடிவு எடுக்க வேண்டும் என்றால் தான் என்னை அழைப்பார்கள்' என்றார் அவர். அப்படி ஒரு நிர்வாகத் திறமை அவருக்கு இருந்தது.

பம்பாய் அலுவலகத்தில் நாட்டில் உள்ள எல்லா மாநிலங்களிலும் உள்ள அவரது நிறுவனங்களிடமிருந்து உற்பத்தி, விற்பனை உள்ளிட்ட விவரங்கள் காலையில் அவருக்கு வந்து குவியும். அதில் சிவப்பு, நீலம் போன்ற வண்ணங்களில் கேள்விக் குறி, ஆச்சரியக் குறி, க்ராஸ் X குறி போடப்பட்டு உரியவர்களுக்கு உடனடியாக அனுப்பப்பட்டு விடும். தனது மேலாளர்களிடமும் குடும்பத்தினரிடமும் அவர் கறாராகவே இருந்தார்.

காந்திஜி நினைவு இல்லம்: புது டெல்லி, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் சலவைக் கற்களால் ஆன பிரம்மாண்டமான கோவில்களை பிர்லா குடும்பத்தினர் கட்டியுள்ளனர்.

காந்திஜி தங்கி இருந்த பிர்லா மாளிகையை அரசு தன் கைவசத்தில் 1971-ம் ஆண்டு எடுத்தது, அதை பொதுமக்களின் பார்வைக்காக காந்திஜியின் நினைவு இல்லமாகத் திறந்து வைத்தது.

மறைவு: இந்தியாவின் பொருளாதாரத்தையும் கல்வித் துறையையும் தொழில் துறையையும் பெரிதும் மேம்படுத்திய ஜி.டி.பிர்லா 1983-ம் ஆண்டு ஜூன் மாதம் 11-ம் நாள் தனது 89-ம் வயதில் மறைந்தார்.

சம்பாதித்ததை சந்தோஷமாக அறவழியில் நன்கொடையாக அளி என்பது அவர் காட்டிய வழி!

உலகில் உள்ள எல்லா பொக்கிஷமும் மதிப்பே இல்லாதவையாகி விடும், அவற்றை நீங்கள் யாரிடமும் பகிர்ந்து கொள்ளவில்லை எனில்! என்பது அவரது பொன்மொழி!

ஆகவே கோடி கோடியாக அவர் நன்கொடையை தகுதி உள்ளோருக்குத் தந்து வந்தார். அவரது வழி வந்த அவரது குடும்பத்தினர் தவறாது அவர் வழியை இன்றும் பின்பற்றி வருகின்றனர். ஆதித்ய பிர்லா குழுமம் கடந்த ஆண்டுகளில் ரூ.50 கோடி, ரூ.276 கோடி, ரூ.400 கோடி என்று அளித்து வரும் நன்கொடை விவரங்களை அவ்வப்பொழுது செய்திகளாக நாம் பார்த்து வருகிறோம்.

அனைவருடனும் ஒத்து வாழ் என்பதே அவர் அனைவருக்கும் கூறிய அன்புரை.

'அழகிய ரோஜா மலரும் வலியைத் தரும் முள்ளும் இணைந்து ஒன்றோடொன்று ஒத்துழைத்து இருப்பதைப் பார்த்தால் நம்மால் அப்படி இருக்க முடியாதா என்ன?' என்றார் அவர்.

இந்தியாவை சுதந்திரத்துடன் பொருளாதாரத்தில் வலிமை உள்ள நாடாக ஆக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வாழ்ந்த அவரது தாரக மந்திரம்: அனைவருக்கும் உதவுங்கள் என்பதே!

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News