சிறப்புக் கட்டுரைகள்
null

உறக்கம் என்னும் மாமருந்து!

Published On 2024-03-01 17:45 IST   |   Update On 2024-03-01 17:45:00 IST
  • சரியான உறக்கம் அமையாத உடல்களில் பலவிதமான பாதிப்புகள் வருகின்றன.
  • உண்ணும் நேரத்தில் உணவைத் தவறவிட்டால் அது உடம்பில் பலவிதத் தொந்தரவுகளை உருவாக்கி விடுகிறது.

உறக்கத்தின் மேன்மைகளை அறிந்து கொள்ளத் தயாராகும் உன்னத வாசகர்களே! வணக்கம்.

வாழ்வியலில் "உறக்கம் என்பது மரணத்தைப் போன்றது!; உறங்கி விழிப்பது புதிதாகப் பிறப்பதைப் போன்றது!' என்று தத்துவ நோக்கில் வள்ளுவப் பெருந்தகை திருக்குறளில் குறிப்பிடுவார். அவ்வளவு பெரிய அளவிற்குத் தத்துவக் கண்ணோட்டத்தில் நாம் உறக்கத்தைப் பற்றிப் புரிந்துகொள்ள வேண்டாம். காலப் போக்கில் அது விளங்கி விடும்.

பெரும்பாலும் நமது அன்றாட வாழ்வில், ஒரு நாளைக்கு மூன்றில் ஒருபங்கு நேரத்தை நாம் உறங்கிக் கழிக்கிறோம் என்று அறிவியலாளர்கள் குறிப்பிடுகிறார்கள். உண்மையிலேயே நாம் உறங்கும் நேரத்தை உறங்கிக் 'கழி'க்கிறோமா? உறங்கிக் 'களி'க்கிறோமா?. கழித்தலுக்கும் களித்தலும் வேறுபாடு உண்டு. கழித்தல் என்பது, பொழுதை உறங்கிப் போக்குவது; ஆனால் களிப்பது என்பது, பொழுதை உறங்கி அனுபவிப்பது. உறங்கி அனுபவிக்கும் மனிதனே விழிப்புணர்வுள்ள மனிதனாக இருப்பான். ஒரு மணி நேர உறக்கத்தைக்கூட, எட்டுமணிநேர உறக்கத்தைப் போல ஆழ்ந்து அனுபவித்து உறங்குபவர்களை நான் பார்த்திருக்கிறேன்.

மனித வாழ்க்கைக்கு உணவும் தண்ணீரும் எவ்வளவு அவசியமோ, உறக்கமும் அவ்வளவு அவசியமானதாகக் கருதப்படுகிறது. உணவுக்கென நேரத்தை ஒதுக்கி உண்ணப் போவதைப்போல உறக்கத்திற்கும் நேரத்தை ஒதுக்கிக் கட்டாயம் உறங்கச் செல்லவேண்டும். உண்ணும் நேரத்தில் உணவைத் தவறவிட்டால் அது உடம்பில் பலவிதத் தொந்தரவுகளை உருவாக்கி விடுகிறது. உறக்கமும் அப்படித்தான்; சரியான நேரத்தில், சரியான கால அளவில் தூங்கவில்லையென்றால், உடல் அளவில் மட்டுமல்ல, மன அளவிலும் பெரும் பிரச்சினைகளை அது கொண்டுவந்து சேர்த்துவிடும்.

சிலர் நேரத்திற்கு உண்பதை விட்டுவிட்டுக், கிடைக்கும் நேரத்திலெல்லாம் வயிற்றை நிரப்பிக்கொண்டே இருப்பார்கள். அப்படிப்பட்ட பெருந்தீனியும் பெருநோய்களைக் கொண்டுவந்து தந்து விடும். அதைப்போல நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதைத் தூங்கியே கழிப்பது என்று கருத்தாய்ச் சிலபேர் இருப்பார்கள். அப்படிப்பட்ட தூங்கு மூஞ்சிகளுக்கும் வாழ்க்கை விடியாமலேயே போய் விடும். பசிக்கும்போது உண்பது, தாகம் எடுக்கும்போது தண்ணீர் பருகுவது, அதைப்போல உறக்கம் வரும்போது உறங்குவது, இதையே பழக்கப்படுத்தி வழக்கமாக்கிக் கொண்டால் உறக்கத்தின் மூலமாகவும் உன்னத சிகரங்களை எட்டிப் பிடிக்கலாம்.

நமது உறக்கத்தின் மூலமாகவே மூளை புத்துணர்வு அடைகிறது. பகலில் விழித்திருந்து நாம் செயல்படும்போது நமது உடம்பில் சேரும் தீமைவிளைவிக்கும் நச்சு வேதிப்பொருள்களெல்லாம், நாம் உறங்கும்போதுதான் வெளியேற்றப் படுவதாக ஆராய்ச்சியாளர்கள் அண்மையில் கண்டுபிடித்துள்ளனர். நமது உடம்பின் பாகங்கள் ஒவ்வொன்றும் ஒழுங்கமைக்கப் படுவதும் நாம் உறங்கும் நேரத்தில்தான். ஒவ்வொரு உறக்க இரவிலும் நாம் சீரமைக்கப்பட்டால் ஒவ்வொரு விழிப்பு விடியலும் நமக்குப் புதிய பிறப்பாகத்தானே அமையும்.

நாம் நன்றாக உறங்கிக் கொண்டிருக்கின்றோமா என்பதை நாம் உறங்கிக் கொண்டிருக்கும்போது கண்டுபிடிக்க முடியாது. உறங்கி விழித்தபிறகுதான் உணர்ந்து கண்டுபிடிக்க முடியும். விழித்தெழுந்த பிறகு உடலிலும் மனத்திலும் ஏற்படும் சுறுசுறுப்பையும் சோர்வின்மையையும் வைத்தே நாம் நன்றாக உறங்கினோமா என்பதை அறிய முடியும்.

சரியான உறக்கம் அமையாத உடல்களில் பலவிதமான பாதிப்புகள் வருகின்றன. உடல் பருமனாவது, இரத்த அழுத்தம் பெருகுவது, இதயக் கோளாறுகளுக்கு ஆளாவது, மன அழுத்தத்தில் ஆழ்ந்துபோவது போன்றவை அவற்றில் சில பாதிப்புகள்.

சுந்தர ஆவுடையப்பன்

மனிதர்கள், குழந்தையாகப் பிறந்ததுமுதல், முதியவர்களாக வளரும் வரை பருவம்தோறும் அவர்கள் தூங்கும் கால அளவுகள் மாற்றம் பெறுகின்றன. ஒருவர் இவ்வளவு நேரந்தான் உறங்கவேண்டும் என்கிற காலநிர்ணயம் இல்லையென்றாலும் அவர்கள் குறைந்தபட்சம் தூங்கவேண்டிய காலத்திற்குத் தூங்கியே ஆகவேண்டும்.

வளரும் குழந்தைகள் ஒருநாளைக்குக் குறைந்தபட்சம் 16 மணி நேரத்திலிருந்து 18 மணிநேரம் தூங்கவேண்டும் என்று மருத்துவர்கள் கணக்கிட்டிருக்கிறார்கள். அப்படித் தூங்கினால்தான் அவர்களுக்கு முறையான மூளை வளர்ச்சியேற்படும் என்கிறார்கள். உடல், மன ரீதியான சீரான வளர்ச்சிக்கு இந்தத் தூக்கக் கணக்கு அவசியமானதாகும்.

அதேபோல பள்ளிக்குப் போகும் சிறுவர்கள் ஒருநாளைக்கு ஒரு இரவுக்கு 9 மணி முதல் 10 மணி நேரம் தூங்க வேண்டும். வளர்ந்த பெரியவர்கள் ஓர் இரவுக்கு 7 மணி முதல் 9 மணிநேரம் தூங்கியாக வேண்டும். 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இரவில் இடையிடையே எழுந்து உறங்கும் நிலைக்கு ஆளாவதால் அவர்களின் உறங்கும் நேரங்கள் தடைப்பட்டதாகவே இருக்கும்.

இந்தக் காலக்கணக்குகள் இன்றைய தொலைக்காட்சி, சமூக ஊடகங்களின் ஆதிக்கத்தால் மனித வாழ்வில் முற்றிலும் மாறுபட்டு நிற்கிறது. ஊடகங்களோ கைபேசிகளோ இல்லாத அந்தக் காலத்தில், இரவுநேரம் வந்து இருட்டியதுடன், கொஞ்சநேரக் கதைப் பேச்சுகளுடன், இரவு எட்டுமணிக்கே மொத்தக் கிராமமும் உறங்கிவிடும்; உதயக்கதிர் தோன்றிய பிறகுதான் கண்விழிக்கும். இன்றோ எல்லாம் தலைகீழாகி விட்டது. உறங்கும் நேரத்தைவிட மின்னணுச் சாதனங்களோடு கழிக்கும் நேரம் அதிகமாகிவிட்டது. அதனால் வாழ்வில் மகிழும் நேரத்தைவிட வருந்தும் நேரமும் அதிகமாகிவிட்டது.

இன்றைய மென்பொருள் உலகில், பணிபுரிபவர்கள் எப்போது உறங்குகிறார்கள்! எப்போது விழிக்கிறார்கள்! என்பது தெரியாமலேலேயே உழைத்துக் கொண்டிருக்கிறார்கள். இப்படி உழைப்பதனால் அவர்கள் பணியில் இலக்குகளை எளிதில் எட்டிப் பிடிக்கலாம். ஆனால் அவர்களின் உடல் ஆரோக்கியக் குறியீட்டு இலக்குகளை எட்டிப்பிடிப்பது எப்போதும் கடினம். சிலர் வார நாட்களான திங்கள் முதல் வெள்ளிவரை ஒரு நாளைக்கு நாலைந்து மணி நேரங்களே தூங்கி, இழந்த தூக்கத்தை சனி ஞாயிறு விடுமுறை நாட்களில் முழுவதும் தூங்கி ஈடு செய்து கொள்வதாகக் கூறுவர். அப்படித் தூங்குவதால் இழந்த தூக்கத்தைச் சரிசெய்து கொள்ளவே முடியாது.

நல்ல தூக்கத்தை 'அடித்துப்போட்ட மாதிரி' என்பார்கள். தன்னை மறந்து தூங்குவதே தூக்கம். ஆயினும் ஒவ்வொரு மனிதனும் தூங்கும்போது ஒரு இரவுக்கு இரண்டு மணி நேரமாவது கனவு காண்பதாகக் கூறுகிறார்கள். கனவுகள் சிலருக்கு வண்ணக் கனவுகளாகவும், சிலருக்குக் கறுப்பு வெள்ளைக் கனவுகளாகவும் வருகின்றன. கனவுகள் வருவது நல்லதா? என்னென்ன மாதிரிக் கனவுகள் வந்தால் என்னென்ன பலன்கள்? என்றெல்லாம் ஆராய்ச்சிகள் நடந்த வண்ணம் இருக்கின்றன.

உறங்கும்போது வருகின்ற கனவுகள், நமது மனவியல் உணர்வுகளுக்கு வடிகால்களாக அமைகின்றன. மன அழுத்தத்தோடும், பெருத்த எதிர்பார்ப்புகள் மற்றும் ஏமாற்றத்தோடும் உறங்கச் சென்றால் பயங்கரக் கனவுகள் வருமாம். அதனால் உறங்கச் செல்லும் முன் சிறு பிரார்த்தனைகள் மற்றும் தியானங்களோடு படுக்கச் செல்ல வேண்டும். தொடர்ந்து பயங்கரக் கனவுகளின் துரத்தல்கள் இருந்தால் மனநல மருத்துவரைப் பார்ப்பது நல்லது.

ஒருவர் ஒரு மனநல மருத்துவரைப் பார்க்கச் சென்றார். அந்த மருத்துவர் 'உறக்கச் சிறப்பு மருத்துவர்'. எவ்வளவு நோய்வாய்ப் பட்டவருக்கும் தன்னுடைய சிகிச்சை மூலமாக நிம்மதியான உறக்கத்தை வரவழைத்து விடுவதில் கெட்டிக்காரர்.

சொல்லுங்க! எவ்வளவு நாளாக தூக்கமில்லாமத் தவிக்கிறீங்க?" மருத்துவர் கேட்டார்.

'தூக்கமெல்லாம் குறையில்லாமல்தான் வருது டாக்டர்!; ஆனா நல்லாத் தூங்கிட்டு இருக்கிறப்ப படக்கு படக்குன்னு முழிப்பு வந்திடுது!" நோயாளர் சொன்னார்.

"வீட்டுல நீங்க கட்டில்ல படுப்பீங்களா? தரையில படுப்பீங்களா?" – மருத்துவர்.

"கட்டில்லதான் படுப்பேன் டாக்டர். படுத்த பத்துநிமிடத்தில அற்புதமாத் தூக்கம் வரும். ஆனா அடுத்த அஞ்சு நிமிடத்துல கட்டிலுக்கு கீழ இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி கேட்கும். படக்குன்னு முழிச்சு, டபக்குன்னு கட்டில விட்டு இறங்கிக் கீழ பார்த்தா ஒன்னுமே இருக்காது!- நோயாளர்.

"இம்புட்டுத் தானே! இன்னைக்கு இரவில் இருந்து கட்டிலுக்குக் கீழ படுத்துப் பாருங்க! நிம்மதியாத் தூங்குங்க!" ஆலோசனை கூறினார் மருத்துவர்.

"அதையும் செஞ்சு பார்த்துட்டேன் டாக்டர்! பிரயோசனமில்லை. கட்டிலுக்குக் கீழ படுத்தாலும் பத்து நிமிடத்தில அற்புதமாத் தூக்கம் வந்திடுது!. ஆனா அடுத்த அஞ்சு நிமிடத்தில கட்டிலுக்கு மேல இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்குது!. படக்குன்னு கண்ணுமுழிச்சு, டபக்குன்னு எந்திருச்சு, கட்டிலுக்கு மேல பார்த்தா ஒன்னுமில்ல!- நோயாளர் பாவமாய்ச் சொன்னார்.

"ஓகோ! கேக்க கொஞ்சம் சிக்கலாத்தான் இருக்குது!" மருத்துவர் சொன்னார்,"ஐயா உங்க நோயைக் குணப்படுத்த குறைஞ்சபட்சம் ஆறுமாசம் ஆகலாம்!; அதிகபட்சம் ஆறு வருடம்கூட ஆகலாம். மாசத்துக்கு ஒருதடவை இங்க வந்து என் கிட்ட மருந்து வாங்கிட்டுப் போகணும். மருந்து மற்றும் மருத்துவச் செலவு ஒரு மாசத்துக்கு மூவாயிரம் ரூபாய் ஆகும். சரின்னா இப்பவே சிகிச்சைய ஆரம்பிச்சிடுவோம்; இந்த மாச பீஸ் மூவாயிரத்தை எடுத்து வைங்க!". நோயாளரும் ஒத்துக்கொண்டு பணத்தைக் கொடுத்து சிகிச்சைக்கு ஒத்துக்கொண்டார்.

ஒருமாதத்திற்கான மருந்து மாத்திரைகளை வாங்கிக் கொண்டு வீட்டிற்குச் சென்ற நோயாளர், ஒரு வாரத்திலேயே அந்த மனநல மருத்துவரைப் பார்க்கத் திரும்ப வந்து விட்டார். " என்னங்க என்ன பிரச்சினை?. ஒரு வாரத் துக்குள்ள எல்லாம் மருந்து வேலை செய்யாது! பொறுமையா இருக்கணும்!" என்று மருத்துவர் ஆலோசனை சொன்னார். நோயாளர் சொன்னார், "டாக்டர் மாதம் மூவாயிரம் ரூபாய் செலவில் நீங்க சொன்ன வைத்தியத்தை என் வீட்டுக்காரம்மா நூறுரூபா செலவில் முடிச்சு வைச்சுட்டாங்க! இப்ப இந்த ஒரு வாரமா நிம்மதியாத் தூங்கிறேன்!" .

"என்ன? நூறு ரூபாய் செலவிலயா? கொஞ்சம் விவரமாச் சொல்லப்பா?" என்று ஹேமநாத பாகவதர் பாணியில் மருத்துவர் கேட்டார்.

"டாக்டர்! எனக்கு என்ன வியாதி? கட்டிலுக்கு மேல படுத்திருந்தா... கீழ யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு! கட்டிலுக்குக் கீழ படுத்திருந்தா... கட்டிலுக்கு மேல இருந்து யாரோ கூப்பிடுற மாதிரி இருக்கு! இதனால நிம்மதியான தூக்கம் வரல!; இது தானே! நீங்க குணப்படுத்த மாசம் மூவாயிரம் செலவாகும்னு சொன்னீங்க!. என் மனைவி என்ன பண்ணாங்க தெரியுமா?. ஒரு தச்சுவேலைக்காரரைக் கூப்பிட்டு அவர் கையில நூறு ரூபாயைக் குடுத்துக், கட்டில்கால் நாலையும் அறுத்து விடச் சொல்லிட்டாங்க! இப்பக் கட்டிலுக்கு மேலும் கிடையாது! கீழும் கிடையாது!; நிம்மதியான தூக்கம்!". படுத்தவுடன் நிம்மதியாக உறங்குவதற்கு,

நாள்தோறும் உறங்கப் போகும் நேரத்தை ஒரே நேரமாக வழக்கப் படுத்திக் கொள்ள வேண்டும்!.உறங்கப் போகுமுன் 20, 30 நிமிடங்கள் மெலிதான நடைப்பயிற்சியோ உடற்பயிற்சியோ மேற்கொள்ள வேண்டும்.உறங்கச் செல்வதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாகவே தொலைக் காட்சி, கைபேசிகள் பார்ப்பதைத் தவிர்த்து விட வேண்டும். ஆழ்ந்த தியானம் மற்றும் பிரார்த்தனைகள் அருமையான நித்திரைக்கு வாசல்கள்.

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News