சிறப்புக் கட்டுரைகள்
null

சிம்மராசியும் கண்டகச் சனியும்

Published On 2024-02-27 17:00 IST   |   Update On 2024-02-27 17:00:00 IST
  • ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது.
  • ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷமாகும்.

சிம்ம ராசி

தலைமைப் பண்பு கொண்டு அனைவரிடமும் அன்போடு நடக்கும் கம்பீர மனம் படைத்த சிம்ம ராசி அன்பர்களே..

ராசி சக்கரத்தில் 5-வது ராசி சிம்மமாகும். இதன் அதிபதி சூரியன்.

உலகில் உள்ள உயிர்கள் தோன்றுவத்றகு காரணமாக இருப்பவர் சூரியன். இதன் கதிர் வீச்சு இல்லாத இடமே இல்லை எனும் வகையில் உலகமே சூரிய ஒளியில் தான் இயங்குகிறது. அதனால் இதனை ராஜகிரகம் என்பார்கள். இது ராஜகிரகம் என்பதால் காட்டு விலங்குகளின் அரசன் சிங்கம் என்பதால் சிம்ம ராசிக்கு சிங்கத்தின் உருவம் தரப்பட்டுள்ளது. இதன் அதிபதி சூரியன் என்பதாலும் இதன் உருவம் சிங்கம் என்பதாலும் இதில் பிறந்தவர்கள் அதிகார தோரணையும் மிடுக்கும், தைரியமும் எதையும் எதிர்கொள்ளும் மனப்பக்குவமும் உள்ளவர்களாக இருப்பார்கள். தற்போது கோட்சாரத்தில் சிம்ம ராசியினருக்கு கண்டகச் சனியின் ஆதிக்கம் உள்ளது.

சமீபகாலமாக ஜாதகம் பார்க்க சிம்ம ராசியை சார்ந்த நபர்கள் அதிகமாக வந்து கொண்டு இருக்கிறார்கள். அதுவும் குறிப்பாக 1978 நவம்பர் மாதம் முதல் 1980 மே மாதம் வரை பிறந்த சிம்ம ராசியினர் ஜோதிடம் பார்க்க வருகிறார்கள். இந்த கால கட்டத்தில் பிறந்தவர்களின் சுய ஜாதகத்தில் சிம்ம ராசியில் சனி பகவான் ராகுவுடனும் கேது பகவான் கும்ப ராசியிலும் சஞ்சரிப்பார்கள். தற்போது கோட்சாரத்தில் கும்பத்தில் பயணிக்கும் சனிபகவான் சிம்ம ராசியினரின் ஜனன கேது, ராகுவை தொடர்பு கொள்வதால் தொழில் உத்தி யோகத்தில் ஒரு நிலையற்ற தன்மை, நண்பர்கள் தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்களால் மன உளைச்சல், ஆரோக்கிய கேடு. ஊர் மாற்றம், நாடு மாற்றம், கணவன்-மனைவி பிரிவினை என பல்வேறு இன்னல்களை அனுபவிக்க நேரிடும். இதற்கு காரணம் கண்டகச் சனியின் ஆதிக்கமா? பிறப்பு ஜாதகத்தில் உள்ள ராகு, கேதுக்களா? இதற்கு தீர்வு உள்ளதா போன்றவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.

சனி பகவான்

ஒரு மனிதனின் வினைப் பதிவிற்கு ஏற்ப தசா புத்திக்கு ஏற்ப வாழ்வியல் மாற்றத்தை தருவது கோட்சார கிரகங்கள். அந்த வகையில் கர்ம வினைப் பதிவை வெளிப்படுத்தும் வருட கிரகங்களான குரு, சனி, ராகு, கேதுவின் பெயர்ச்சிகள் தசாபுத்திகள் மனிதர்களுக்கு மிகப் பெரிய சுப அசுப மாற்றத்தை தருகிறது. அதே போல் சுப கிரகங்கள் சுப பலனைத் தரும். அசுப கிரகங்கள் அசுப பலனைத் தரும் என்ற கருத்தும். தவறானது. முழுச் சுப கிரகமான குரு பகவானின் தசை, கோட்சார காலத்தில் இருந்த இடம் தெரியாமல் காணாமல் போனவர்களும் இருக்கிறார்கள். சனி, ராகு, கேதுவின் தசையில், கோட்சாரத்தில் வளமை அடைந்தவர்களும் உள்ளார்கள் என்பது மறுக்க முடியாத நிதர்சனமான உண்மை.

ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, பூர்வ புண்ணிய பலத்திற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர் சனியே. சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அதே நேரத்தில் அதிபுத்திசாலி, பெரிய ராஜதந்திரியைக்கூட தெருவில் தூக்கி வீசிவிடுவார். ஏழை, பணக்காரன், படித்தவன், படிக்காதவன், பதவியில் இருப்பவன், பதவி இல்லாதவன் என்ற வித்தியாசம் எதுவும் சனி பகவானுக்கு கிடையாது. பல காரியங்களை கண் இமைக்கும் நேரத்தில் நடத்திக் காட்டும் சர்வ வல்லமை படைத்த, ஒரே கிரகம் சனியாகும். ஒருவருக்கு கெட்ட நேரம் வந்துவிட்டால் அவர் எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சரி, என்ன நடக்கிறது என்று அவர் யூகிக்கும் முன்பே எல்லாம் நடந்து முடிந்து இருக்கும். அதே நேரத்தில் சனியால் யோக பலன்கள் அனுபவிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் இருந்தால் அவரை எந்த உயரத்திற்கும் கொண்டு செல்லும் ஆற்றல், வல்லமை சனி பகவானுக்கு உண்டு. ஆகையால் தான் 'சனியைபோல் கொடுப்பவனும் இல்லை, கெடுப்பவனும் இல்லை' என்றும், 'சனி கொடுத்தால் அதை யார் தடுப்பார்' என்றும் கூறுவார்கள்.

அதாவது தடைக்கற்களை படிக்கற்களாக மாற்றுபவரும் சனிபகவான் தான். வாழ்க்கை எனும் படிக்கட்டில் நியாயம். தர்மத்தை மதிக்காதவர்களுக்கு நியாயத் தீர்ப்பு வழங்குபவரும் சனி பகவான் தான். ஜாதகத்தில் எல்லா கிரகங்களுக்கும் தசா, புக்தி, அந்தரங்களுக்கு ஏற்ப பலன் தரும். ஆனால் சனீஸ்வரருக்கு மட்டும் தசா புக்திகளுடன், கோட்ச்சார பலமும் அதிகமாகும். எத்தனை பெரிய யோக ஜாதகமாக இருந்தாலும் அந்த ஜாதகத்திற்கு ஏற்ப சனி தனது தீர்ப்பை கொடுத்துதான் தீருவார்.

ஒருவர் செய்த பாவங்களும் அவருக்கு எப்படி திரும்ப கிடைப்பது என்றால் அவருக்கு ஜாதகப்படி மோசமான தசா, புக்தி நடக்கும் காலங்களில். அல்லது அஷ்டமச்சனி, ஜென்ம சனி நடக்கும் காலங்களில் சனி பகவான் தயவு தாட்சண்யமின்றி கடுமையாக தண்டிக்கிறார். எந்தப் பிரச்சினையாக இருந்தாலும் எல்லோருக்கும் பாதிப்பு எல்லா காலத்திலும் தொடர்வது கிடையாது. சுருக்கமாக சந்திரன், ராகு, கேது, சனி, செவ்வாய் தசை புக்தி அந்தர காலங்களிலும், லக்ன ரீதியான 6,8,12ம் இடத்துடன் சம்பந்தம் பெறும் கிரகங்களின் தசை, புக்தி, அந்தர காலங்களில் பாதிப்பு மிகுதியாக இருக்கும். சாதகமான தசை, புக்தி நடப்பவர்களும் நல்ல பலன்களே நடைபெறும். சனி பெயர்ச்சி ஒருவர் ராசியில் இருக்கும் சந்திரனுடன் சேர்ந்த கிரகங்களைப் பொறுத்தே அமைகிறது.

கண்டகச் சனி

சனி பகவான் சந்திரனுக்கு முன் அல்லது சந்திரனுக்கு பின் அல்லது சந்திரனோடு சேர்ந்து பயணித்தால் அதற்கு ஏழரைச் சனி என்று பெயர். அதே போன்று கோட்சாரத்தில் ராசிக்கு ஏழாம் இடத்தில் சனி பகவான் சஞ்சாரம் செய்யும் நிலையே கண்டகச் சனியாகும். ஏழாம் இடத்தில் இருந்து சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் கண்டக சனி ஏற்படுகிறது. ஏழாமிடம் என்பது நண்பர்கள், தொழில் கூட்டாளிகள், வாடிக்கையாளர்கள் , வாழ்க்கைத் துணை, சமுதாய நட்பு ஆகியவற்றைப் பற்றிக் கூறுமிடம். 7-ம் இடத்தில் நிற்கும் சனி பகவான் தனது 3-ம் பார்வையால் 9-ம் இடம் எனும் பாக்கிய ஸ்தானத்தையும் 7-ம் பார்வையால் ராசியையும் 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தையும் பார்வையிடுவார். சனி பார்வை பட்ட இடம் பாழ் என்பதை நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 9-ம் இடத்தைப் பார்ப்பதால் தொழில், உத்தியோகம் மற்றும் உயர்கல்விக்காக பெற்றவர்களை, பிள்ளைகளை, குடும்பத்தை பிரிந்து பூர்வீகத்தை விட்டு வெகுதூரம் செல்ல நேரும்.

ராசியை 7-ம் பார்வையால் பார்ப்பதால் மன சஞ்சலம், காரியத் தடை, ஆரோக்கிய குறைபாடு ஏற்படும். 10-ம் பார்வையால் சுக ஸ்தானத்தை பார்ப்பதால் அதிக நாள் வைத்தியம் செய்ய வேண்டிய நோய் தாக்கம், சொத்துகளால், தாய் வழி உறவுகளால் சங்கடங்களை சந்திப்பார்கள்.

கண்டகச் சனி என்ன செய்யும்?

தான் நின்ற இடத்தின் மூலமாகவும் தனது பார்வை பலத்தாலும் எந்த ஒரு செயலை செய்ய சிறப்பான சூழல் இருந்தாலும் பல சிரமங்களைப் சந்திக்க வேண்டி வரும். இந்த காலத்தில் ஒருவர் எண்ணியதை குறித்த நேரத்தில் முடிப்பது சிரமம், சுப காரியங்கள் திட்டமிடுதல் நடக்காமல் போகலாம். கணவன்-மனைவி உறவுக்குள் இருந்த நல்லிணக்கம் குறையும். இதுவரை உங்கள் வார்த்தைக்கு மதிப்பு தந்த வாழ்க்கைத் துணை உங்கள் கருத்திற்கு எதிர்மறையாக செயல்பட ஆரம்பிப்பார்கள். வேலை தேடுபவர்களுக்கு சரியான வேலை கிடைக்காது. பணியில். இருப்பவர்களுக்கு பணியிடச் சூழல் சாதகமாக இருக்காது திருமணம் நடைபெறுவதில் தாமதம் ஏற்படும். எடுத்த காரியங்கள் நடைபெறுவதில் தடை ஏற்படும். நண்பர்கள் மற்றும் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு சரிவர இருக்காது. வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்பட்டு குடும்பத்தில் பிரிவுகள் ஏற்படும். பொதுத் தொண்டில் இருப்பவர்களுக்கும், மக்களுக்கும் இடையே பகை ஏற்படும். நன்றாக மதிப்பெண்கள் பெற்று வந்த குழந்தைகளின் படிப்பில் மந்தம் ஏற்படும். முதியவர்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். கழுத்தைப் பிடிக்கும் அளவிற்கு பிரச்சினை இருக்கும். எப்படி குரல் வளையைப் பிடித்தால் மூச்சு விட சிரமம் ஏற்படுமோ அதே போன்று அதிக அளவிற்கு தாங்க முடியாத மன உளைச்சல் இருக்கும்.

சிம்ம ராசியும், கண்டகச் சனியும்

சிம்ம ராசியினருக்கு குறிப்பாக 1978 நவம்பர் மாதம் முதல் 1980 மே மாதம் வரை பிறந்தவர்களுக்கு சனி பகவானை விட ராகு கேதுக்களால் பாதிப்பு சற்று அதிகமாக உள்ளது. இந்த கால கட்டத்தில் பிறந்தவர்களின் ஜாதகத்தில் ராகு பகவான் சிம்ம ராசியில் சனி பகவானுடனும் கேது பகவான் கும்ப ராசியிலும் சஞ்சரித்தார்கள். இது இரண்டு பகை கிரகங்களால் ஏற்படும் வாழ்க்கைப் போராட்டம் எனலாம். கோட்சார சனியின் பயணப்பாதையில் நிற்கும் பிறப்பு கேதுவும். கோட்சார சனியைப் பார்க்கும் பிறந்த கால ராகுவும், கோட்சார சனியின் பார்வை பெறும் பிறந்த கால சந்திரனும், கோட்சார சனியின் பார்வை பெறும் பிறந்த கால சனியினால் ஏற்பட்ட கிரக சம்பந்தம் பல விதமான வாழ்வியல் மாற்றத்தை பிரதி பலிக்கிறது.

ஐ.ஆனந்தி

 சனி + ராகு/ கேது சேர்க்கை

ஒருவருக்கு தொழிலை உத்தியோகத்தை வழங்கக்கூடிய சனி பகவானுக்கும், தடை, தாமதம், காரிய பிரதிகூலம் வழங்கும் ராகு/ கேது சம்பந்தம் எந்த விதத்தில் இருந்தாலும் எதை செய்தாலும் தவறாகவே முடியும். கடுமையான உத்தியோக, தொழில் தடையை ஏற்படுத்தும். வாழ்வில் எவ்வளவு உயரமாக சென்றாலும் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தும். சிலர் புதிய தொழில் முயற்சியில் நல்ல தொழிலை, உத்தியோகத்தை இழக்கிறார்கள். மிகுதியான பண இழப்பை சந்திக்கிறார்கள்.

உத்தியோகத்திற்காக பூர்வீகத்தை விட்டு வெளியேறுவார்கள். சொந்த ஊரில் பூர்வீகத்தில் பூர்வீக சொத்தில் குடியிருக்க விடாது. சம்பளம் இல்லாமல் வேலை செய்யும் நிலை அல்லது மிகவும் அடிமைத்தனமான வேலை செய்யும் நிலை அல்லது குறைந்த ஊதியத்திற்காக அதிக நேரம் வேலை செய்தல், இரண்டு, மூன்று நபரின் வேலையை சேர்த்து செய்து ஒரு நபரின் சம்பளம் பெறுதல் போன்ற நிலையை ஏற்படுத்தும். நன்கு படித்திருந்தாலும் தன் தகுதிக்கு சம்பந்தமில்லாத தகுதிக் குறைவான இடத்தில் குறைவான சம்பளத்தில் வேலை செய்யும் சூழ்நிலை ஏற்படும். சட்டத்திற்குப் புறம்பான அல்லது சட்டத்திற்கு உட்படாத வேலை செய்ய நேரும் அல்லது உயர் அதிகாரிகள், முதலாளிகள், உடன் பணிபுரி பவர்களால் வேலையில் ஆர்வம் குறையும். சிலருக்கு சொல்லிக் கொள்ளும்படியான வேலையில்லாமல் வாழும் சூழ்நிலை ஏற்படும். நல்ல திறமை இருந்தும் சரியாக சம்பாதிக்காமல் வருமானம் இல்லாமல் இருப்பார்கள்.

புனர் பூ தோஷம்

ஒரு ஜாதகத்தில் சனி, சந்திரன் சம்பந்தம் இருந்தால் உருவாகும் கடுமையான கருணையற்ற தோஷமாகும். கோட்சார சனி சுய ஜாதக சந்திரனை தொடர்பு கொள்வதால் ஏற்படும் தோஷமாகும். சுய ஜாதகத்திற்கும் கோட்சாரத்திற்கும் சனி, சந்திரன் சம்பந்தம் தொடர்பு எந்த விதத்தில் இருந்தாலும் புனர்பூ தோஷ அமைப்பாகும். இது எந்த ஒரு செயலை செய்தாலும் அது மிக பெரிய தடை, காலதா மதத்தை செய்யும். சனி மந்தம், இருள்.

சந்திரன் வேகம், சந்திரன் ஒளி. இப்படி எல்லாமே எதிரும் புதிருமாக அமைந்துள்ளதால் சனியும், சந்திரனும் எந்த வகையிலாவது சம்பந்தம் பெற்றால் புனர்பூ தோஷம் செயல்படும். ஒரு சிலருக்கு கோச்சார ரீதியாக குறுகிய கால பாதிப்பு இருக்கும். புனர்பூ அமைப்பு இருப்பவர்களுக்கு தூக்கமின்மை இருக்கும். இந்த தோஷமானது எப்போதுமே ஆழ்மனதில் ஒர் இனம்புரியாத சோகத்தை வைத்து இருப்பதுடன் சின்ன சின்ன விசயங்களில் கூட பய உணர்வைத் தரும். மேலும், கோட்சாரத்திலோ அல்லது தசா/புக்தியிலோ சனி மற்றும் சந்திரன் தொடர்புபடும் போது இனம் புரியாத கவலைகள் மற்றும் துக்கங்களை தரும். மன சஞ்சலத்தின் உச்சகட்ட சேர்க்கை இந்த புனர்பூ அமைப்பு. மேலும் புனர்பூ அமைப்பு வாழ்வில் கடுமையாக சந்திக்கும் பிரச்சினைகளில் ஒன்று திருமணத் தடை இரண்டாவது அதீத தொழில் தடை.

பரிகாரம்

சிம்ம ராசியினர் நாகாபரணம் தரித்த சிவனை கண்டகச் சனி முடியும் வரை வழிபட சாதகமான பலனை உணர முடியும். கணவன், மனைவி உறவுக்குள் ஒற்றுமை வலுப்பட குடும்பத்தில் அமைதியை கடைப்பிடிப்பது நல்லது. கண்டக சனி இருக்கும் போது வாழ்க்கைத் துணையுடன் விட்டுக் கொடுத்து செல்ல வேண்டும்.

எந்த ஒரு செயலை செய்வதற்கு முன்பும் யோசித்து செயல்படுங்கள். அது உங்களுக்கு நற்பலன்களை அதிகரிக்கும். சிம்ம ராசிக்கு 7-ம் இடத்தில் சனி-சந்திரன் சம்பந்தம் ஏற்படுவதால் ஆசைகளை குறைக்கும் போது புனர் பூதோஷம் வலிமை இழக்கும். அனைத்து சிம்ம ராசிகளுக்கும் ஒரே மாதிரியான பலன் நடைபெறுவதில்லை.

ஒவ்வொருவருக்கும் அவரவரின் ஜாதக அமைப்பை தசா புத்தியை பொருத்து பலன் மாறுபடும். இந்த தகவல் பொதுநலம் கருதி தரப்பட்டுள்ளது.

நவ கிரகங்களில் எல்லா கிரகங்களுக்கும் நன்மை, தீமை செய்கின்ற அதிகாரம் உண்டு. ஆனால் சனி மட்டுமே கெடுபலன்கள் தருவார் என்ற எண்ணம் எல்லோருக்கும் இருக்கிறது . எந்த கிரக தசா புக்தி மூலம் ஒருவருக்கு கெடுதல் வந்தாலும் சனிபகவானால் தான் பிரச்சனை வருகிறது என்பது பலரின் நம்பிக்கை. இது போன்ற மூட நம்பிக்கையை கைகழுவி உண்மையான காரணம் அறிந்து வழிபாடு செய்வது மிகச் சிறப்பு.

Tags:    

Similar News