- சகட தோஷம் 2 விதமாக சொல்லப்படுவது உண்டு.
- பணம் மட்டுமல்ல பதவியிலும் கூட சகட தோஷம் விளையாட்டு காட்டும்.
வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரி பிரச்சினைகள், போராட்டங்கள் இருந்து கொண்டே இருக்கும். சிலருக்கு பணம் சேரும் விஷயத்தில் பிரச்சினைகள் இருக்கலாம். சிலருக்கு குடும்பம், மனைவி, வாரிசுகள் போன்றவர்களால் ஏதாவது ஒரு பிரச்சினை இருந்து கொண்டே இருக்கும்.
இதற்கு அடிப்படையாக இருப்பது ஜாதக ரீதியிலான ஏதாவது ஒரு தோஷம் என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. அது என்ன தோஷம்? எப்படி நிவர்த்தி செய்வது? என்பது தான் முக்கியமானது.
சில வகை தோஷங்கள் பரிகாரமோ அல்லது பூஜைகளோ அல்லது தான தர்மமோ செய்து விட்டால் குறையும் அல்லது கட்டுப்படும். சில பிரச்சினைகள் விருந்தாளி போல வருவதும், போவதுமாகவே இருக்கும். திடீரென கையில் பணம் சேரும், அடுத்த மாதமே கையில் ஒரு பைசா இல்லாத நிலை தான் காணப்படும்.
வாழ்க்கை சக்கரத்தில் இந்த மாதிரி பணம் வருவதும், போவதுமாக இருந்தால் அதுவும் ஒரு வகை தோஷம் தான். அதை சகட தோஷம் என்று ஜாதக ரீதியாக சொல்வார்கள். சகடம் என்றால் சக்கரம் என்று அர்த்தமாகும். சக்கரம் சுற்றும் போது ஒரு பகுதி ஒரு நேரத்தில் கீழே இருக்கும், அடுத்த நேரத்தில் மேலே செல்லும். வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சினைகள் இப்படி மேலும், கீழும் செல்வதை சக்கரத்துடன் ஒப்பிட்டு நமது முன்னோர்கள் அதை சகட தோஷம் என்று வரையறுத்து இருக்கிறார்கள்.
இந்த சகட தோஷத்தில் ஒருவரது ஜாதகத்தில் உருவாக்குவது குருவும், சந்திரனும் தான். குருவும், சந்திரனும் வரும் ஜாதகத்தில் சரியான சேர்க்கைப்படி அமைந்திருந்தால் அந்த ஜாதகக்காரர் வாழ்க்கையில் எல்லா செல்வங்களும் பெற்று ஓகோ என்று இருப்பார். அதை சகட யோகம் என்பார்கள்.
அதே சமயத்தில் குருவும், சந்திரனும் சரியான கட்டங்களில் இல்லாமல் மாறுபட்ட அம்சங்களுடன் காணப்பட்டால் அது தோஷசத்திற்கு வழிவகுக்கும். அதாவது ஜாதகத்தில் குரு பகவானுக்கு சந்திரன் 6, 8 மற்றும் 12-ம் இடங்களில் இருக்கும் பட்சத்தில் அதை சகட தோஷம் என்று சொல்வார்கள்.
நவகிரகங்களில் குருபகவான் செல்வம் தருவதை குறிப்பவர் ஆவார். அது போல சந்திரனையும் குபேர சம்பத்து தருபவர் என்று அழைப்பார்கள். இந்த இரண்டுமே சரியில்லாத பட்சத்தில் வாழ்க்கை அடிக்கடி போராட்டமாக மாறி வருவது உண்டு. செல்வம் தேடுவதற்காக ஓடிக்கொண்டே இருக்கும் நிலை சிலருக்கு ஏற்படுவதுண்டு.
இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால் ஜாதகத்தில் சகட தோஷம் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக ஏற்ற, இறக்கத்துடன் தான் இருப்பார்கள். அந்த ஏற்ற, இறக்கங்கள் குருவும், சந்திரனும் எப்படி? எப்படி அமைகிறார்கள் அல்லது மாறுகிறார்கள் என்பதை பொறுத்து இருக்கும்.
சிலருக்கு குறுகிய காலத்தில் நிறைய பணம் வரும். கார், பங்களா என்று வாங்கி குவிப்பார்கள். ஆனால் உறவினரோ அல்லது நண்பரோ மிக முக்கியமான காலக்கட்டத்தில் செய்யும் ஏதாவது ஒரு துரோகம் அவர்களை மீண்டும் அதாள பாதாளத்துக்கு கொண்டு போய் நிறுத்திவிடும்.
பணம் மட்டுமல்ல பதவியிலும் கூட சகட தோஷம் விளையாட்டு காட்டும். சிலருக்கு எதிர்பாராமல் மந்திரி பதவி கூட கிடைக்கும். சில மாதங்களிலேயே கொடுத்த வேகத்தில் பதவியை பறித்து விடுவார்கள். இதற்கு காரணமே சகட தோஷம் தான்.
சகட தோஷத்திற்கு முன்ஜென்ம வினைகளையும், சில ஜோதிடர்கள் காரணமாக சொல்வது உண்டு. எது எப்படி இருந்தாலும் சகட தோஷம் வந்து விட்டாலே அது பணம் மற்றும் பொருட்களை தருவதும், பறிப்பதுமாக இருப்பதால் வாழ்க்கையில் நிம்மதியே இருக்காது. ஒரு வித விரக்தி வந்துவிடும்.
சகட தோஷம் 2 விதமாக சொல்லப்படுவது உண்டு. சகட தோஷம் உள்ள ஜாதகர் புனர்பூசம், பூசம், அனுசம், விசாகம், பூரட்டாதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் அவரை ஏழ்மை நிலையில் இருந்து நல்ல வசதி உள்ள மனிதராக மாற்றி பிறகு மீண்டும் ஏழ்மை நிலைக்கே தள்ளுவதாக இருக்கும்.
இரண்டாவது வகையில் சகட தோஷசம் உள்ள ஜாதகாரர் அஸ்வின், பரணி, ஆயில்யம் (4-ம் பாதம்), பூராடம், மூலம், ரேவதி (4-ம் பாதம்), ஆகிய நட்சத்திரத்தில் பிறந்து இருந்தால் அவர்கள் மிகப்பெரிய வசதியில் இருந்து பிறகு கஷ்டமான நிலைக்கு தள்ளப்பட்டு மீண்டும் வசதியான நிலைக்கு மாறுவார்கள்.
இந்த இரண்டு நிலையில் தான் சகட தோஷம் நல்லதையும் செய்யும், கெட்டதையும் செய்யும். இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்களுக்கு எப்போது நல்லது நடக்கும், எப்போது தீயது நடக்கும் என்பதெல்லாம் கணிக்க முடியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் தான் இருக்கும். அதனால் தான் சகட தோஷம் என்பது வாழ்நாள் முழுக்க ஒட்டிக்கொண்டே இருக்கும் தோஷம் என்று நமது முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர்.
ஆனால் நாம் நினைத்தால் சகட தோஷத்தில் இருந்து விடுபட முடியும். அல்லது குறைந்த பட்சம் சகட தோஷத்தை கட்டுப்படுத்தவாவது முடியும். இதற்கு என்று சில பரிகாரங்கள் நமது முன்னோர்களால் வரையறுத்து வைக்கப்பட்டு உள்ளன.
சகட தோஷம் இருப்பவர்கள் நவகிரகங்களில் குருவையும், சந்திரனையும் மனதார வழிபட வேண்டும். வாரத்தில் இரண்டு நாட்கள் இதற்காக ஒதுக்கி கொள்ள வேண்டும். திங்கட்கிழமைகளில் சந்திர வழிபாடு செய்ய வேண்டும். சந்திரனுக்கு உகந்த பூ, பழங்கள், நைவேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.
அது போல வியாழக்கிழமைகளில் குரு பகவான் வழிபாடு செய்ய வேண்டும். குருவுக்கு உகந்த மலர்கள், மஞ்சள் ஆடை, நைவேத்தியங்கள் செய்து வைப்பது நல்லது.
வீட்டில் இருந்தே பரிகாரம் செய்ய வேண்டும் என்று சிலர் நினைப்பது உண்டு. அத்தகைய நிலையில் இருப்பவர்கள் தினமும் காலையில் எழுந்ததும் வழக்கமான வழிபாட்டை முடித்து விட்டு 108 தடவை ஓம் நமச்சிவாய என்ற 5 எழுத்து மந்திரத்தை சொல்ல வேண்டும். இந்த மந்திரத்தை உச்சரிக்க, உச்சரிக்க சகட தோஷத்தின் பாதிப்பு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
வசதி, வாய்ப்பு இருப்பவர்கள் அமாவாசையில் பித்ரு தர்பணம் செ்யத பிறகு பசு மாட்டுக்கு பச்சரிசி கலந்த தவிட்டை உணவாக கொடுக்கலாம். அகத்திக்கீரையையும் சேர்த்து கொடுக்கலாம். இந்த பரிகாரத்திற்கு அதிக சக்தி உண்டு.
ரியல் எஸ்டேட், கமிஷன் வியாபாரம், சில்லறை வியாபாரிகள் சகட தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் முன்னேற்றம் என்பது கானல் நீர் போல இருக்கிறது என்று கருதுவது உண்டு. அந்த குழப்ப நிலையை தவிர்க்க தமிழ் கடவுளான முருகன் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு வர வேண்டும்.
சிலருக்கு ராசி கல் மோதிரம் அணிவது விருப்பம் இருக்கும். அந்த மாதிரி இருப்பவர்கள் மோதிரத்தில் யானை முடி பதித்து அணியலாம். யானை முடி சேர்த்து அணிவது சகட தோஷத்தை முறியடித்து கஜகேசரி யோகத்தை கொண்டு வரும் என்று சொல்கிறார்கள்.
எந்திர தகடுகளில் நம்பிக்கை இருப்பவர்கள் ராஜராஜேஸ்வரி எந்திரத்தை வைத்து பூஜைகள் செய்து வந்தால் சகட தோஷத்தை கட்டுப்படுத்த முடியும்.
தானம், தர்மங்களும் இந்த தோஷத்தை கட்டுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் வயதான பெண்களுக்கு வஸ்திர தானம் செய்யலாம். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் வாழும் இல்லங்களுக்கு சென்று உணவு, உடை வழங்கலாம். இது மாறி மாறி வரும் துன்பத்தை துடைத்து எரியும் சக்தி கொண்டது.
பவுர்ணமி வழிபாடு மூலம் சந்திர பகவானை குளிர்ச்சி படுத்த முடியும் என்பதால் பவுர்ணமி தோறும் ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் இந்த தோஷத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. பவுர்ணமி தினத்தன்று முழு நிலவுக்கு தீபாராதனை காட்டி வழிபடுவது நல்லது.
பவுர்ணமி நாளில் சித்தர்கள் அடங்கி இருக்கும் ஜீவ சமாதியில் ஒரு வித எழுச்சி உண்டாகும். அந்த சமயத்தில் ஜீவ சமாதிக்கு சென்று வழிபட்டால் இந்த தோஷம் கட்டுப்பாட்டுக்குள் வரும் என்கிறார்கள்.
ஆலயங்களில் நடக்கும் தேராட்டங்களை பார்ப்பதும், அந்த தேரோட்டத்திற்கு தேவையான உதவிகளை செய்து கொடுப்பதும் இந்த தோஷ நிவர்த்தி க்கு உதவி செய்யும். சென்னையில் வசிப்பவர்கள் பங்குனி மாதம் உத்திர தினத்தன்று மயிலாப்பூர் கபா லீஸ்வரர் ஆலயத்தில் நடக்கும் தேரோட்டத்தை பார்ப்பது நல்லது. ஆலயங்களில் உழவார பணிகளை மேற்கொள்வதும் சகட தோஷத்தை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் என்ற குறிப்பு உள்ளது.