சிறப்புக் கட்டுரைகள்
null

நியாய வணிகம்!

Published On 2024-02-23 16:45 IST   |   Update On 2024-02-23 16:57:00 IST
  • வீடு மனைகளைப் பொருத்தவரை, விற்பனை செய்பவருக்கு நல்ல விலை என்பது கூடுதலான விலைக்கு விற்பதே ஆகும்.
  • எல்லாவற்றிலும் நியாயத்தை எதிர்பார்க்கும் தரமான வாசகர்களே! வணக்கம்!.

உலகம் இன்று வணிகமயமாகி விட்டது என்று எல்லாரும் பேசுகிறோம். வணிகமயம் என்றால் என்ன? வணிகம் என்றால் என்ன?. ஒரு பொருளையோ அல்லது சேவையையோ உரியவரிடமிருந்து பெற்று மற்றொருவருக்கு விலைக்கு வழங்குவது வணிகம். விலைக்குப் பெறும்போது உள்ள பணமதிப்பைவிட, விற்கும்போது கூடுதலான பணமதிப்பில் வழங்குவது வணிகம் ஆகும்.

அந்த அடிப்படையில் கொள்முதல் பணமதிப்பிற்கும், விற்பனைப் பண மதிப்பிற்கும் இடையேயுள்ள கூடுதலான பணப்பயனை நாம் 'லாபம்' என்கிறோம். அதுவே கொள்முதல் மதிப்பை விட விற்பனை மதிப்புக் குறைந்து போனால் அதனை 'நஷ்டம்' என்கிறோம். வணிகம் என்பது லாப நோக்கம் உடையது என்பதில் இருவேறு கருத்தில்லை; அதே நேரத்தில் நட்டத்திற்காக யாரும் வணிகத்தில் ஈடுபடப் போவதுமில்லை;ஆயினும் எதிர்பாராமல் வணிகத்தில் நட்டம் ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பலன் அல்லது பயனை எதிர்பார்த்தே இன்றைய மனிதர்களின் செயல்பாடுகள் இருப்பதையே வணிக நோக்கு என்கிறோம்.

ஒரு செருப்புக்கடை. நவீன முறையில் அக்கடை செருப்புக்களைக் காட்சிப்படுத்தி விற்பனை செய்வதால் அதனை 'ஷோரூம்' என விளம்பரப் படுத்தி இருந்தனர். அந்தக் கடையில் அன்றுதான் புதிதாக ஒரு நடுத்தர வயதாளர், விற்பனையாளர் வேலைக்குச் சேர்ந்திருந்தார். அந்தக் கடைக்குத்தான் அவர் புதியவரே யொழிய செருப்பு விற்பனைத் துறையில் பத்தாண்டுகளுக்கும் மேலான அனுபவம் நிறைந்தவர். அவர் விற்பனை செய்யும் அழகை அக்கடையின் முதலாளி எட்டநின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.

கடைக்கு வந்த ஒரு வாடிக்கையாளர் வெகுநேரமாக செருப்புகளை ஆராய்ச்சி செய்து ஒரு ஜோடி செருப்பைத் தேர்ந்தெடுத்தார்; விலை என்ன என்று விற்பனையாளரிடம் கேட்டார்; 800 ரூபாய் எனப்பதில் வந்தது. தான் பக்கத்திலுள்ள ஊரிலிருந்து வருவதாகவும், தற்சமயம் தன்னிடம் 400 ரூபாய் மட்டுமே இருப்பதாகவும், 400 ரூபாயை வாங்கிக்கொண்டு செருப்புகளைத் தந்தால், மீதமுள்ள 400ஐ நாளை நிச்சயம் கொண்டுவந்து தருவேன் என்றும் கேட்டார் வாடிக்கையாளர்.

எதையும் யோசிக்காமல், செருப்புகளைப் பெட்டிக்குள் போட்டு,"400 ரூபாய் பணத்தைக் கல்லாவில் முதலாளியிடம் கொடுத்துவிட்டுச் செல்லுங்கள்" என்று சொல்லிவிட்டார் விற்பனையாளர். "இவர் ஒரு மரியாதைக்கு, முதலாளியாகிய நம்மிடம் கூட ஒரு வார்த்தை கேட்காமல் இப்படிச் செய்கிறாரே!" என்று நினைத்துக்கொண்டே ஒன்றும் பேசாமல் 400ஐ வாங்கிக் கல்லாவில் போட்டுவிட்டுச் செருப்பைக் கொடுத்து வாடிக்கையாளரை அனுப்பியும் விட்டார் முதலாளி.

பிறகு மெதுவாக விற்பனையாளரை அருகே அழைத்தார் முதலாளி," அந்த வாடிக்கையாளர் உனக்குத் தெரிந்தவரா?" என்று கேட்டார். "எனக்குத் தெரியாது. முன்னே பின்னே பார்த்ததுகூடக் கிடையாது" என்றார் விற்பனையாளர். "அப்படியானால் எந்த நம்பிக்கையில் அவர் நாளை நமது கடையைத் தேடிவந்து மீதமுள்ள 400 ரூபாயைத் தந்து விடுவார் என்று கொடுத்தனுப்பினாய்? அவர் நாளை வரவில்லையென்றால் நமக்கு 400 ரூபாய் நட்டம்தானே!. அதை எனக்கு யார் தருவார்? உன் சம்பளத்தில் இருந்துதானே பிடிக்க நேரிடும்? என்று கேட்டார் முதலாளி.

இப்போது அனுபவம் வாய்ந்த அந்த விற்பனையாளர் பேசத் தொடங்கினார். " ஐயா, முதலாவது, அந்தச் செருப்பை 400 ரூபாய்க்கே கொடுத்தாலும் நமக்கு நட்டம் வராது!. ஏனெனில் அதன் கொள்முதல் விலை ரூபாய் 350 என்பது ரகசியக் குறியீட்டில் அதில் எழுதப் பட்டிருக்கிறது. இரண்டாவது, அந்தப் பெட்டிக்குள் நான் வைத்திருக்கும் இரண்டு செருப்புகளும் ஒரே காலுக்கு மட்டுமே பொருந்தக் கூடியவை. இரண்டு ஜோடிகளை எடுத்து அவருக்குத் தெரியாமல், ஒருகாலுக்குப் பொருந்தும் இரண்டு செருப்புகளை ஒரு ஜோடிபோல வைத்துக் கொடுத்தனுப்பி இருக்கிறேன். வீட்டுக்குப் போனவுடன் போட்டுப் பார்ப்பார்; நாளைக்கு அல்ல, இன்று மாலையே கூட வந்து செருப்பு மாறிப்போனதைப் புகாராகச் சொல்லி மாற்றி வாங்கிக்கொண்டு பணத்தையும் தந்துவிட்டுச் செல்வார்" என்றார். விற்பனையாளரின் திறமைகண்டு அதிர்ந்து போனார் கடைமுதலாளி.

ஒரே காலுக்குப் பொருந்தும் இரண்டு செருப்புகளை, ஒருஜோடிபோலத் தந்தது விற்பனையாளரின் திறமை என்றாலும், சந்தடி சாக்கில் 350 ரூபாய் செருப்பை 800 ரூபாய்க்கு விற்கத் துணிந்த முதலாளியின் திறமையை எந்த வணிகத்தில் சேர்ப்பீர்கள்?. அந்த வாடிக்கையாளர், திரும்பவராமல் இருந்திருந்தால் ஒருவேளை இது நியாய வணிகமாக ஆகியிருக்கும்; ஆனால் பொருந்தாத ஜோடிகளால் இது, ஏமாந்த நட்ட வணிகமாக அல்லவா மாறியிருக்கும்?.

வணிகம் என்பது ஒரு தொழில்; அதில், மற்ற தொழில்களைப் போல, உழைப்பிற்கேற்ற ஊதியம் என்பதைப் போலல்லாமல், மூலதனத்திற்கேற்ற லாபம் என்பதே சரியாக இருக்கும். மற்ற தொழில்களில், அறிவும், உடலுழைப்பும் மூலதனங்களாக அமைகின்றன. ஆனால், வணிகத்தில், கூடுதலாகப் பணம் முதன்மை முதலீடாக அமைகிறது. இங்கே பணம் வணிகத்தில் முதலீடு ஆகும் காலம் முதற்கொண்டு, விற்பனையாகிப் பணமாகத் திரும்பி வரும் காலம்வரை கிடப்பில் இருந்தாலும் அதற்கும் ஒரு வட்டித்தொகை வந்தே ஆக வேண்டும்.

வணிகத்தில் கொடுப்பவர், கொள்பவர் என இருதிறத்தவர் உண்டு. கொடுப்பவர் என்றால் பொருள்களை விலைபேசிக் கொடுப்பவர் என்று பொருள். கொள்பவர் என்றால் பொருளை உரிய விலை கொடுத்து வாங்கிக் கொள்பவர் என்று பொருள். விற்பவர் பொருளின் தரமறிந்து, பொருளின் மதிப்பறிந்து விலை நிர்ணயம் செய்ய வேண்டும்; வாங்குபவர் உரிய பணம்கொடுத்துப் பெற்றுக் கொள்ளவேண்டும். இதில் அதிக லாபம் வைத்து வணிகம் நிகழ்த்தப்பட்டால், விற்பவர் ஏமாற்றுக்காரராகவும், வாங்குபவர் ஏமாளியாகவும் கருதப்படுவர். வணிகத்தில் பொருள்கள் குறித்த பொய்யான தகவல்கள், விளம்பரங்களாகவோ, உறுதிகளாகவோ வழங்கப் படக் கூடாது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சங்கத் தமிழ் இலக்கியமாகிய பட்டினப்பாலை, வணிகத்தின் மேன்மைத் தன்மைகளைப் படம்பிடித்துக் காட்டுகிறது.

''நெடு நுகத்துப் பகல்போல

நடுவுநின்ற நல்நெஞ்சினோர்

வடுஅஞ்சி வாய்மொழிந்து

தமவும் பிறவும் ஒப்ப நாடிக்

கொள்வதூஉம் மிகை கொளாது

கொடுப்பதூஉம் குறைகொடாது

பல்பண்டம் பகர்ந்து வீசும்"

சுந்தர ஆவுடையப்பன்

தம்முடைய பொருளை விற்கும்போது வாங்குபவர் மனநிலைக்கு மாறிக்கொண்டு, என்ன விலைக்கு விற்றால் வாங்குபவர் மனம்நோகாமல் வாங்குவாரோ அந்த விலைக்கு விற்கும் நியாய வணிகத்தைப் பட்டினப்பாலை வலியுறுத்துகிறது. விற்பவர் அதிகவிலைகூறி விற்றுவிடக் கூடாது; வாங்குபவர் குறைந்த விலைக்கு வாங்கியும் விடக்கூடாது.

மதுரையில் ஒரு நில வணிகம் செய்யும் தரகரை அவரது கடையில் சந்தித்தேன். அவரது கடை முகப்பில், " இங்கு நல்ல விலைக்கு வீட்டு மனைகள் விற்கவும் வாங்கவும் அணுகவும்" என்று விளம்பரப் பலகை வைக்கப்பட்டிருந்தது. எனக்கு உடனே பெருத்த சந்தேகம் பற்றிக்கொண்டது. வீடு மனைகளைப் பொருத்தவரை, விற்பனை செய்பவருக்கு நல்ல விலை என்பது கூடுதலான விலைக்கு விற்பதே ஆகும். ஆனால் வாங்குபவருக்கு நல்ல விலை என்பதோ, மிகக் குறைந்த விலைக்கு வாங்குவதே ஆகும். இந்த இருவரும் ஏற்றுக்கொள்ளும் 'நல்ல விலை' என்பது என்ன? என்று தரகரிடம் கேட்டேன். 'அதை இருவரும் ஏற்றுக்கொள்ளும் வண்ணம் முடிவு செய்வதற்குத்தான் நாங்கள் இருக்கிறோம்' என்று தரகர் பதில் சொன்னார். எது எப்படியாயினும் தரகருக்கு நல்ல 'தரகுப்பணம்' கிடைக்கும் வகையில் முடிவாவதே 'நல்ல விலையோ'?.

திருவள்ளுவரும் பட்டினப்பாலையின் நெறியில் நின்று வணிகம் செய்பவர்களை நீதிவழங்கும் நியாயவான்களுக்கு நேராக வைத்தே மதிப்பிடுகிறார். நீதி வழங்கும் மிக உயரிய பணிக்கு இணையாக வணிகம் செய்யும் பணி போற்றப்படுகிறது. அதனால்தான் நீதிமன்றத்தில் தராசு நீதி வழங்கும் குறியீடாகப் போற்றப்படுவதுபோல, பலசரக்குக் கடைகளில் தராசு நிறுத்து வழங்கும் நியாயப் பணிகளில் ஈடுபடுத்தப் படுகின்றது.

வாணிகம் செய்வார்க்கு வாணிகம் பேணிப்

பிறவும் தமபோற் செயின்

இந்தத் திருக்குறளில், நீதி வழங்குவதைப்போல வாணிகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தவே இதனை நடுவு நிலைமை அதிகாரத்தில் வைத்தார் திருவள்ளுவர். ஒருவனுக்கு நீதி வழங்கித் தீர்ப்புச் சொல்வதற்குமுன், குற்றவாளியின் இடத்தில் தம்மைவைத்து எண்ணி ஆராய்ந்தே வழங்க வேண்டும் என்கிறார். வாங்குகிற நுகர்வோர் நிலைக்கு இறங்கிச் சென்றால், விற்போர் யாரும் கொள்ளை லாபம் வைத்துப் பொருள்களை வணிகம் செய்யும் அவல் நிலை ஏற்படாது.

வணிகத்தில் பொருள்களுக்கான விற்பனை வரி ஒரே சீராக விதிக்கப்படுவது போல, பொருள்களுக்கான விற்பனைவிலை நிர்ணயிப்பிலும் ஒரே சீரான தன்மை பின்பற்றப்பட்டால் அது நியாய வணிகமாக மாறிப்போகும்.

சான்றாகப், பொள்ளாச்சியில் தென்னந் தோப்பில், வெட்டப்படும் போது உற்பத்தியாளரிடம் 20 ரூபாய் விலை பெறும் இளநீர், மூன்று நாளில் சென்னைக்கு வந்து விற்பனையாகும்போது அது இரண்டு மடங்குக்குமேல் விலைபெற்று விடுகிறது. காரணம், உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் இடையில் குறைந்த பட்சம் மூன்று பேர்களிடையே கைமாறி வணிகம் நிகழ்ந்து விடுகிறது. இந்த வணிகத்தில், உற்பத்தியாளர் மற்றும் நுகர்வோரை விட, இடைத்தரகர்களே அதிகப் பலனை அனுபவிக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு சாலையோரத்தில் ஒரு கிராமத்துப் பெண்மணி, தனது தோட்டத்தில் பழுத்த வாழைப் பழங்களைக் கூடையில் வைத்து விற்றுக் கொண்டிருந்தார். அவரிடம் 'வாழைப்பழம் ஒரு சீப்பு எவ்வளவு?' எனக் கேட்டேன். '25 ரூபாய்' என்றார்.'சரி கொடுங்கள்' என்று பேரம் பேசாமல் 25 ரூபாயை நீட்டினேன். அவர் அதிர்ந்து போனார்.

பொதுவாக இப்படி விலை கேட்பவர்கள் பேரம்பேசி வாங்குவார்கள்; அதற்கேற்றவாறு விலையில் 5ரூபாய் அதிகம் சொல்வோம் என நினைத்துச் சொல்லியிருப்பார் போல. நான் 25 ரூபாயை நீட்டியதும், ஒரு சீப்பு வாழைப்பழத்தோடு, கூடுதலாக ஒரு நாலுபழத்தையும் கொடுத்து, .இந்தாங்கையா இதையும் கொண்டுபோய் பிள்ளைகளுக்குக் குடுங்க! சாப்பிடட்டும்!. என்றார். உண்மையில் இதுதான் நியாய வணிகம். யாருக்கும் பாதிப்பு வராமல், இருதரப்பும் மகிழும் வண்ணம் நிகழ்த்தப்படுவது.

அளவுக்கு அதிகமாக லாபம் வைத்துச் சம்பாதிப்பதெல்லாம் நிலைப்பது கிடையாது. மற்றவரை நோகவைத்து ஈட்டுகிற சம்பாத்தியம் நம்மையும் நோகவைத்துப் போய்விடும் என்பதே வள்ளுவம்.

அழக்கொண்ட எல்லாம் அழப் போம்!

நலமான வணிகமே நலம்தரும்!

தொடர்புக்கு 9443190098

Tags:    

Similar News