- ஒருகாலத்தில் மக்கள், தங்களின் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கேற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர்.
- ஒருகாலத்தில் ’செல்வந்தர்’ என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள், இன்று ’பணக்காரர்’ என்று அழைக்கப்படுகின்றனர்.
பணத்தின் அருமை அறிந்து கொள்ளப் பரிவோடு காத்திருக்கும் வாசகர்களே! வணக்கம்!
பணம் என்பது இன்று நாணயங்களாகவும், அச்சடித்த தாள்களாகவும் மக்களின் பயன்பாட்டில் இருந்து வருவது. அண்மைக்காலமாகிய கணினி யுகத்தில், பணம் என்பது உருவப் பொருளின்றி அருவப் பொருளாகவும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மூலமாகப் புழக்கத்தில் உள்ளது. உருவத்தோடு இருந்தாலும் உருவமின்றிக் கையாளப்பட்டாலும் பணத்தின் மதிப்பு எப்போதுமே குறைவதில்லை.
உலகத்தில் பணம் கிறிஸ்து பிறப்புக்கு முந்தைய காலந்தொட்டே தோன்றி, நடைமுறையில் இருந்து வருகிறது. தொடக்கத்தில் நாணயங்களாகத் திகழ்ந்த பணம், காலப்போக்கில் தாள்களாகவும் உருவளர்ச்சி பெற்றது. தற்போது கண்களுக்கும் கைகளுக்கும் அகப்படாத கடவுள்போல, மனிதர் ஒவ்வொருவரின் கைபேசிக்குள்ளும் செயலியாக அடங்கி, வழக்கமான வரவுசெலவுகளைக் கண்டுவருகிறது.
ஒருகாலத்தில் மக்கள், தங்களின் உணவு, உடை, வாழ்வியல் தேவைகளுக்கேற்ற பொருள்களை மட்டுமே உற்பத்தி செய்து வந்தனர். தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களைக் கொண்டு, தங்களுக்குத் தேவையான பொருள்களைப் பண்டமாற்று முறையில் மட்டுமே பெற்றும் வந்தனர். பண்டமாற்றுமுறை பெருகாத வரையில் வாணிகம் என்கிற தனிமுறை வளராமல் இருந்தது. வாணிகம் பெருகப் பெருகக், கூடுதல் உற்பத்திப் பொருள்களை விற்கவும், தங்களது தேவைக்கு மீறிய பொருள்களை வாங்கிச் சேர்த்து வைக்கவும் ஆரம்பித்தனர். வாணிகம் தனித் துறையாக உருவெடுத்த போது, அடிப்படையான உற்பத்திப் பொருள்கள், நுகர்பொருள்கள் எனும் கூடுதல் மதிப்பைப் பெற்றன; அவற்றை வாங்குவதற்கும் விற்பதற்கும் இடையில் பணம் ஓர் மதிப்புமிக்க கருவியாக விசுவரூபம் எடுத்து நிற்கத் தொடங்கியது .
ஒருகாலத்தில் செல்வம் என்பது, வேளாண் நிலங்களாகவும், உதவுகிற ஆடுமாடுகளாகவும், வீட்டில் இருக்கும் தங்கங்களாகவும் இருந்தன. அவற்றின் மதிப்புகள், பத்து ஏக்கர் நிலம், நூறு ஆடுகள், பத்து மாடுகள், ஐந்து கிலோ தங்கம்… என்பதுபோல அளவைகள் அடிப்படையில் இருந்தன. ஆனால் பணம் தனது ஆதிக்கத்தைக் காட்டத் தொடங்கிய பிறகு, இன்று ஐந்துகோடி ரூபாய் மதிப்புள்ள நிலம், ஒருகோடி ரூபாய் மதிப்புடைய ஆடுமாடுகள், இரண்டுகோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் என்று பணமதிப்பை வைத்தே செல்வத்தின் மதிப்புகள் கணக்கிடப் படுகின்றன.
பணம் என்பது இன்றைய வணிக மேலாதிக்க உலகில், பொருள்களை வாங்குவதற்கான மதிப்புமிகு கருவியாகவும், செய்கிற சேவைக்குப் பெறுகிற கண்ணியம் மிக்க ஊதியமாகவும் திகழ்கிறது. ஒருவருடைய மதிப்பும் மரியாதையும் அவர் மாதந்தோறும் ஈட்டுகிற பணத்தின் அளவையும், வங்கிக் கணக்கில் அவருக்கு இருக்கும் பணக் கையிருப்பையும், பெரும் வணிக நிறுவனங்களுக்குச் சென்று பொருள்களை வாங்குவதற்கு அவருக்கு இருக்கும் சக்தியையையும் பொறுத்தே தீர்மானிக்கப்படுகிறது.
ஒருகாலத்தில் 'செல்வந்தர்' என்று அழைக்கப்பட்டு வந்தவர்கள், இன்று 'பணக்காரர்' என்று அழைக்கப்படுகின்றனர். ஒவ்வொருவரின் செல்வத்தின் மதிப்பும் இன்று பணத்தின் மதிப்பை வைத்தே அளக்கப் படுகின்றன.
பொதுப்படையாக நாம் ஒருவரைப் பார்த்துப் பணம் நல்லதா? தீயதா? என்று கேட்டால் அது தீயதுதான் என்று படக்கென்று சொல்லிவிடுவார். ஆனால் உண்மையில் பணத்திற்கென்று தனிக் குணம் கிடையாது. அது யாருடைய கையில் இருக்கிறதோ அதைப் பொறுத்தே அதற்கு நல்லது தீயது குணங்கள் ஒட்டிக்கொள்கின்றன. நல்லவர்கள் கையில் பணம் இருப்பது, துளிர் முதல் வேர்வரை பயன்படுகிற மருந்து மரம், உள்ளூர் நடுவே பழம் பழுத்துத் தொங்குவதுபோல என்கிறார் திருவள்ளுவர்.
பொதுவாக நம்மிடையே ஒரு கருத்து உண்டு. "பணம் என்பதும் செல்வம் என்பதும் கெட்டவர்களிடம்தான் அதிகமிருக்கும்; பணக்காரர்கள் எல்லாருமே கெட்டவர்கள்" என்பதே அது. இதன் அடிப்படையில், "நல்லவர்களாக வாழ வேண்டுமானால் பணம் சம்பாதிக்க ஆசைப்படக் கூடாது; அப்படிச் சம்பாதித்தாலும் தீய குறுக்கு வழிகளை மட்டுமே பின்பற்ற நேரிடும்" என்றெல்லாம் பணம் குறித்த தவறான கண்ணோட்டங்கள் உண்டு.
நடைமுறை உண்மை அதுவன்று. பணத்தால் தான் எல்லா நல்ல காரியங்களையும் செய்யமுடியும் எனும்போது பணம் எப்படிக் கெட்டதாக இருக்கமுடியும்?. உங்களை முன்னேற விடாமல் தடுத்துக் கொண்டே இருக்கின்ற, ஏழ்மையைக் காரணம் காட்டி உங்களைக் கேலிபேசித் தாழ்த்திக்கொண்டே இருக்கிற எதிரிகளின் கொட்டத்தை, ஆணவத்தை அடக்கச் சிறந்த வழி எது தெரியுமா?
திருவள்ளுவர் சொல்கிறார், "பணத்தைச் சம்பாதியுங்கள்! பணத்தை உருவாக்கிப் பெருகச் செய்வதற்கான செயல்களைச் செய்யுங்கள். எதற்காக?. நீங்கள் சம்பாதித்துப் பெருக்குகிற பணம்தான், உங்கள் எதிரிகளின் செருக்கை அடக்குகிற, அறுக்கிற கூர்மையான ஆயுதம்! "என்கிறார்.
சுந்தர ஆவுடையப்பன்
"செய்க பொருளை செறுநர் செருக்கறுக்கும்
எஃகு அதனிற் கூரியது இல்"
வள்ளுவர் ஒரு சில இடங்களில் மட்டுமே 'செய்க!' எனும் கட்டளை பிறப்பித்திருப்பார். அந்த அடிப்படையில் ஒரு தயக்கமும் இல்லாமல், இன்றே பணம் ஈட்டுகிற முயற்சிகளில் ஈடுபடுக! என இந்தக் குறளில் எல்லாருக்கும் கட்டளையிடுகிறார்.
நம்மில் ஒவ்வொரு மனிதர்க்கும் பணம் ஈட்டுவது, ஒரு கடினச்செயல் என்றால், அதனைச் சென்றுவிடாமல் சேர்த்து வைப்பது அதைவிட மிகுந்த கடினச்செயல் என்றே கூற வேண்டும். 'கையில வாங்கிப் பையில
போடுவதற்குள் காசுபோன இடம் தெரியாது அல்லாடும் அப்பாவிகளே நம்மில் அதிகம். பணம் சம்பாதிப்பதற்கு எப்படித் திறமை அவசியமோ அதைப்போல அதைச் சேர்த்து வைப்பதற்கும் தனித் திறமை வேண்டும்.
சிலரைக்கேட்டால், செலவழிப்பதற்காகத் தானே சம்பாதிக்கிறோம்? என்று கேட்பார்கள். உண்மைதான்; செலவழிக்கத்தான் செல்வம்!. ஆனாலும் அதனை ஈட்டும்போது நாம் உழைக்கிற உழைப்பைக் கொஞ்சம் எண்ணிப் பார்த்தால், செலவழிக்கும்போதும் கொஞ்சம் அளந்து செலவழிக்க முற்படுவோம். 'ஆற்றில் போட்டாலும் அளந்து போடு!' என்றுதானே பழமொழியும் கூறுகிறது.
ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு மாதமும், ஒவ்வொரு ஆண்டும் நாம் செலவுசெய்யும்போது, அவசியம் எது? அனாவசியம் எது? என்று கொஞ்சம் அக்கறை செலுத்திச் செலவழித்தால் அதுவே சிக்கணம் ஆகிறது. சிக்கணத்தைச் சேர்த்துவைக்கத் தொடர்ந்தால் அதுவே சேமிப்பாகப் பெருக்கெடுக்கிறது. பெருகுகிற சேமிப்பை, வைப்புத் தொகையாகவோ, முதலீடுகளாகவோ மாற்றினால் அதுவே நிலைத்த வருமானத்தைத் தருகிற புது வளமாக மாறிவிடும். அப்புறம் என்ன? நாமும் செல்வந்தர் தான்!; நாமும் பணக்காரர் தான்!.
பணம் பத்தும் செய்யும்! என்கிறார்கள். பத்து என்றால், பத்து என்கிற எண்ணிக்கை அல்ல; எண்ணிக்கையில் அடங்காத பலவற்றைப் பணம் இருந்தால் செய்து காட்ட முடியும் என்கிற நேர்முறை வாசகமாக, நம்பிக்கை வாசகமாக இதனை நாம் கொள்ள வேண்டும்.
ஓர் அரசன், தனது படையினர் சிலரோடு காட்டிற்கு வேட்டைக்குச் சென்றான்; அடர்ந்த வனப்பகுதிக்குள் சென்றபோது பாதை தவறி, தனது படையினரைப் பிரிந்து விட்டான். தனித்து விடப்பட்ட அரசன், தனது குதிரையில் நாட்டிற்குத் திரும்பும் பாதை தேடிக், காட்டிற்குள் அலைந்து கொண்டிருந்தான். அப்போது ஓரிடத்தில் ஒரு ஓலைக்குடிசை இருப்பதைக் கண்டான்; மகிழ்ச்சியோடு குடிசையின் முன்புறம் குதிரையை நிறுத்தி, 'யார் உள்ளே?' என்று குரல் எழுப்பினான். பதில் வரவில்லை; குதிரையை விட்டு இறங்கி, தான் கொண்டு வந்திருந்த ஒரு மூட்டையை எடுத்துக்கொண்டு குடிசைக்குள் போனான். உள்ளே அந்தக் குடிசைக்குச் சொந்தக்காரன் அடுப்புமுன் அமர்ந்து குளிர் காய்ந்து கொண்டிருந்தான்.
"நான் இந்த நாட்டின் ராஜா வந்திருக்கிறேன். எனக்கு மரியாதைக்கு ஒரு வணக்கம்கூடச் சொல்லாமல் அமர்ந்திருக்கிறாயே! ஏன்?" என்று கேட்டான் அரசன்.
"நீங்களே என் வீட்டிற்கு அடைக்கலமாக வந்திருக்கிறீர்கள்!. வணக்கம் சொல்ல வேண்டியது நீங்களா? இல்லை நானா? எதிர்த்துக் கேட்டான் குடிசைவாசி.
ராஜா ஒரு துணிமூட்டை நிறையத் தங்கக் காசுகள் கொண்டு வந்திருந்தான். அந்த மூட்டையைக் குடிசைவாசிமுன் அவிழ்த்து, " இந்தா மதிப்புமிக்க இந்தத் தங்க மூட்டையில் இருந்து ஒரு நாணயத்தைத் தருகிறேன்! வாங்கிக் கொண்டு ஒரு வணக்கம் சொல்!" என்றான்.
வாங்கிக் கொண்ட குடிசைவாசி," பெரிய தங்கக்காசு மூட்டையை நீங்கள் வைத்துக் கொண்டு, ஒரே ஒரு காசை மட்டும் எனக்குத் தருகிற உங்கள் கருமித்தனத்திற்கு என்னால் எப்படி வணக்கம் சொல்ல முடியும்?" என்று கேட்டான்.
உடனே அரசன், தனது மூட்டையைச் சரிபாதியாகப் பிரித்து," இந்தா பாதியை உனக்குத் தருகிறேன். இப்போதாவது வணக்கம் சொல்!" என்றான்.
குடிசைவாசி இதற்கும் மசிந்த பாடில்லை. ''அரசனே! நீங்கள் கொண்டுவந்த பொற்காசு மூட்டையில் பாதியை எனக்குத் தந்து விட்டீர்கள். இப்போது செல்வநிலைமை என்று பார்த்தால், உங்களிடம் எத்தனையளவு பொற்காசுகள் இருக்கின்றனவோ அதே அளவு காசுகள் என்னிடமும் சமமாக இருக்கின்றன. சமமாக இருக்கும் ஒருவரைப் பார்த்து வணக்கம் சொல்லத் தேவையில்லை. இப்போதும் நான் உங்களுக்கு வணக்கம் சொல்ல இயலாது" என்றான்.
நொந்து போன அரசன் தன்னிடமிருந்த பாதித் தங்கக் காசு மூட்டையையும் குடிசைவாசியிடம் கொடுத்து விட்டான்," இந்தா முழுவதுமாகத் தந்து விட்டேன். என்னிடமிருந்த செல்வம் முழுவதையும் எடுத்துக்கொண்டு, மரியாதைக்காகக் கூட வேண்டாம்; நன்றிக்காகவாவது ஒரு வணக்கம் சொல்!" என்றான்.
அரசன் தந்த அந்தப் பாதி மூட்டையையும் தன்பக்கம் இழுத்துக்கொண்ட குடிசைவாசி இப்போது அரசனைப் பார்த்துப் பேசினான், "ஐயா! தற்போது முழு தங்கக்காசு மூட்டையும் என் வசமிருப்பதால் உண்மையிலேயே பணக்காரன் நான்தான்; இத்தனைப் பொற்காசுகளுக்குச் சொந்தக்காரனாக இருக்கும் நான், ஒரு பொற்காசுகூட இல்லாத, ஏழையான உங்களைப் பார்த்து எதற்காக வணக்கம் வைக்க வேண்டும்?" என்று கேட்டானே பாருங்கள் ஒரு கேள்வி!.
இந்தக் குடிசைவாசியின் மனத்தைப் போலத்தான் நம்மின் பலரது மனத்தைப் பணம் ஆட்டிப் படைக்கிறது.
நேர்வழியில் செல்வம் செய்வது கடினம் என்றால், அதனைச் சிக்கனமாகச் செலவழித்துச் சேமித்து வைப்பதும் பெருக்குவதும் அதை விடக்கடினம். ஆயினும் பணம் என்பது ஈட்டியவர்க்கு மட்டுமே முற்றிலும் பயன்படும் என்பது தன்னலம் சார்ந்தது. தக்கவர்க்கும் தகுந்த செயல்களுக்கும் கொடுத்து மகிழ்கிற ஈகையிலேயே செல்வத்தின் பயன்மதிப்புப் பன்மடங்காகப் பெருகி நிற்கிறது.
செல்வத்துப் பயனே ஈதல்!
இது பத்தோடு பதினொன்று அல்ல! பத்தில் முத்தானது!
தொடர்புக்கு 9443190098