சிறப்புக் கட்டுரைகள்

ஹோண்டாவின் வெற்றி சூத்திரம்

Published On 2024-02-14 17:45 IST   |   Update On 2024-02-14 17:46:00 IST
  • ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார்.
  • 150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன

ஹோண்டா - இந்தப் பெயரை அறியாதவரே இன்று இருக்க முடியாது. ஏனெனில் சாலையில் நாம் பார்க்கின்ற கார்களும் மோட்டார் சைக்கிள்களும் பெரும்பாலும் ஹோண்டாவாகவே இருக்கும். ஜப்பானுக்கு ஒரு தனி கவுரவத்தைத் தந்தது ஹோண்டா நிறுவனத் தயாரிப்புகள்.

ஆனால் ஆயிரத்தி தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் 'மேட் இன் ஜப்பான்' என்று பொறிக்கப்பட்டிருந்த வார்த்தைகளை எந்த ஒரு பொருள் மீது பார்த்தாலும் அனைவரும் எள்ளி நகையாடுவர். அது தரமில்லாத உதவாக்கரை பொருள் என்று தூக்கி எறிவார்கள்.

இந்த அவமானத்தைத் தாங்க முடியாத ஜப்பானியர்கள் ஒரு உறுதிமொழியை எடுத்தனர். தரமில்லாத எதையும் விற்பனைக்கு அனுப்பாதே என்று.

நாளடைவில் தரக் கட்டுபாடுகள் அதிகமானது. உற்பத்தி உத்திகள், கடுமையான மேற்பார்வை சோதனைகள் எல்லாமாகச் சேர்ந்து ஜப்பானில் உற்பத்தி செய்யப்படும் பொருள்கள் தரத்தில் நம்பர் ஒன் என்ற பெயரைப் பெற ஆரம்பித்தன. இதற்கு எடுத்துக்காட்டாகச் சொல்ல, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளைச் சொல்லலாம்.

ஹோண்டா உற்பத்தி செய்யும் கார், மோட்டார் சைக்கிளைப் பார்ப்பவர்கள் அந்த நிறுவனத்தின் நிறுவனரான ஹோண்டாவைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பிறப்பும் இளமையும்: சோய்சிரோ ஹோண்டா 1906-ம் ஆண்டு நவம்பர் மாதம் 17-ம் நாளன்று ஜப்பானில் உள்ள கோம்யா என்ற கிராமத்தில் ஒரு எளிய குடும்பத்தில் பிறந்தார். தந்தை ஜிஹெய் ஒரு கொல்லர். தாய் மைகா ஒரு நெசவாளி. ஏழ்மையான குடும்பம் என்றாலும் மனதிருப்தியுடன் ஒழுக்கத்துடன் வாழ்ந்த குடும்பம் அது.

ஹோண்டாவின் இளமைப் பருவத்தில் எங்கு பார்த்தாலும் சைக்கிள் மயம். ஆகவே சைக்கிள் ஓட்டுபவர்கள் தங்கள் சைக்கிளை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் ரிப்பேர் செய்யவும் ஹோண்டாவின் தந்தையிடம் வருவது வழக்கம். அங்கு ஆரம்பித்தது ஹோண்டாவின் மெஷின்கள் மீதான ஆர்வம். தானே சொந்தமாக ஒரு ரிப்பேர் கடையை ஆரம்பித்தார்.

1922-ல் பள்ளியை விட்டு வெளி வந்த ஹோண்டா டோக்கியோ சென்று கார்கள், மோட்டார் சைக்கிள்கள் பற்றி அறிய ஆர்வம் கொண்டார்.

ஆகவே வீட்டை விட்டு வெளியேறி டோக்கியோவில் ஹோங்கோ என்ற இடத்தில் யூஜோ சகாகிபாரா என்பவரிடம் கத்துக்குட்டி வேலையாளாகச் சேர்ந்தார். ஹோண்டாவின் ஆர்வத்தைப் பார்த்த யூஜோ அசந்து போனார். ஹோண்டாவிற்கு எல்லாவற்றையும் சொல்லித் தர ஆரம்பித்தார்.

1928இல் வீடு திரும்பிய ஹோண்டா தன் சொந்தத் தொழிலை ஆரம்பித்தார். அவருக்கு வயது 22 தான்! இரண்டே வருடங்களில் அவரது நிறுவனத்தில் 30 பேர் வேலை செய்தனர். ஹோண்டாவிற்கு திருமணம் ஆனது. அவரது மனைவி சசியும் நிறுவனத்தில் சேர்ந்து தொழிலைக் கவனிக்க ஆரம்பித்தார்.

உழைப்பதில் இன்பம்: உழைப்பதில் அவருக்கு இருந்த ஈடுபாட்டால் அவர் பசி, தாகத்தையே மறந்தார். அவரே பின்னால் கூறியது இது: "நான் கத்துக்குட்டி பயிற்சியாளராக உழைத்துக் கொண்டிருந்த போது எனது கவனத்தைத் திசை திருப்ப விடமாட்டேன். எனது நண்பர்கள் என்னை விரும்பி அழைத்தாலும் போக மாட்டேன். 'உணவுக்கான நேரம் வந்து விட்டது. சாப்பிட வா' என்று என் தாயார் என்னை அழைத்தாலும் போக மாட்டேன். என்னை இழுத்துக் கொண்டு போய் எனக்கு உணவைப் பரிமாறுவார் அம்மா. என் காதுகள் இப்படி 'செயலிழப்பதைக்' கண்ட எனது தாயார் நாளடைவில் எனது கவனத்தின் தீவிரத்தை உணர்ந்து கொண்டார். 'வேலையை முடித்து விட்டு சாப்பிட வா' என்று கூறும் அளவுக்கு அவருக்கு மனப்பக்குவம் வந்து விட்டது. பசி தாகம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை.

உலகப் போர்: காலம் மாறத் தொடங்கியது. 1937-ல் ஜப்பானுக்கும் சீனாவிற்கும் போர்.

பின்னர் வந்தது இரண்டாம் உலகப் பெரும்போர். ரிப்பேர் செய்வதை விட்டு விட்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார் தயாரிப்பில் ஆர்வம் காட்டத் தொடங்கினார் ஹோண்டா. சிசிரோ கதோ என்ற நண்பருடன் ஒரு தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கினார்.

ச.நாகராஜன்

பிஸ்டன் ரிங்குகளைத் தானே தன் கையால் தயாரிக்கத் தொடங்கினார் ஹோண்டா. ஆனால் அவை தரத்துடன் இல்லை. ஒரே தோல்வி மயம். ஆகவே உலோக இயல் பற்றிய தனது அறிவு போதுமானதாக இல்லை என்பதை அறிந்து கொண்ட ஹோண்டா அதில் கவனம் செலுத்தி தரமான படைப்புகளை உருவாக்குவதில் வெற்றி பெற்றார்.

நிறுவன வளர்ச்சி: 1939-ம் ஆண்டு அவர் ஒரு தேர்ந்த நிபுணராக ஆக முடிந்தது. மெல்ல மெல்ல ஆர்டர்கள் வர ஆரம்பித்தது. தரமோ சூப்பர். 2000 பேர்கள் உள்ள பெரிய நிறுவனமாக அவரது நிறுவனம் வளர்ந்தது.

1948-ல் மோட்டார் பொருத்தப்பட்ட முதல் சைக்கிளை அவர் அறிமுகப்படுத்தினார். அவரது தயாரிப்பின் பெயர் ட்ரீம் (கனவு).

1959-ல் அவர் கார்களைத் தயாரிக்க ஆரம்பித்தார். தனது முதல் ஸ்போர்ட்ஸ் காரில் அவர் பழைய விமானம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்ட எஞ்சினைப் பொருத்தி ஓட்டினார்.

மெல்ல மெல்ல வளர்ந்த அவரது நிறுவனம் 1959-ல் நம்பர் ஒன் நிறுவனமாக மாறியது. தனது மாடலை மாற்றும் போதெல்லாம் அந்த மாடலின் முதல் காரை அவரே ஒட்டிப் பார்ப்பது வழக்கமானது. இந்தப் பழக்கத்தை தனது 65 வயது முடிய அவர் விடவில்லை.

தோல்விகளில் துவளாதே: வாழ்க்கை முழுவதும் அவருக்கு ஏற்பட்ட தோல்விகள் பல. தடைகளும் பற்பல. இரண்டாம் உலகப் போரில் இடாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை மீது குண்டு போடப்பட்டு அது முற்றிலுமாக சேதம் அடைந்தது.

1945-ல் மிகாவா என்ற இடத்தில் இருந்த அவரது தொழிற்சாலை பெரிய பூகம்பம் ஒன்றினால் சேதமடைந்தது. ஆனால் ஒருபோதும் அவர் மனம் தளர்ந்ததில்லை.

உலகப்போர் முடிந்த பிறகு கார் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. ஆகவே அனைவரும் சைக்கிளுக்குத் திரும்பி வர ஆரம்பித்தனர். ஹோண்டா ஒரு சிறிய எஞ்சினை சைக்கிளுடன் இணைத்தார். அனைவரும் அதை விரும்பி வாங்க ஆரம்பித்தனர். ஆனால் தேவைக்குத் தகுந்தபடி அவரால் உற்பத்தி செய்ய முடியவில்லை.

ஜப்பானை வலிமையுள்ளதாக்க தனக்கு உதவி செய்யுமாறு 18000 சைக்கிள் விற்பனையாளர்களுக்கு அவர் உத்வேகமூட்டும் கடிதம் ஒன்றை எழுதி அனுப்பினார். 5000 பேர்கள் அவருக்கு உதவ முன்வந்தனர். அதை வைத்து சிறிய எஞ்சின்கள் ஏராளமானவற்றை அவர் உருவாக்கி அனைவருக்கும் தந்தார்.

முதலில் அவர் உருவாக்கிய எஞ்சின்கள் சற்று பெரிதாக இருந்ததால் சந்தையில் விற்பனையாகவில்லை. ஹோண்டா விடவில்லை. தொடர்ந்து முயற்சி செய்து சிறிய மாடல் எஞ்சினை உருவாக்கினார். விற்பனை சக்கை போடு போட்டது. சூப்பர் கப் என்ற அந்த மாடலை அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும் வாங்க ஆரம்பித்தன.

இதே போல இன்னொரு முறை ஆயிரத்தி தொள்ளாயிரத்து எழுபதுகளில் கார் எரிபொருளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட மறுபடியும் களத்தில் இறங்கினார் ஹோண்டா. இந்த முறை அவர் சிறிய காரைத் தயாரித்தார். எரிபொருள் சிக்கனத்தைக் கொண்ட அந்த காரை அனைவரும் வாங்க இந்த முறையும் பெரிய வெற்றி அவருக்குக் கிடைத்தது!

பீப்பிள் பத்திரிகை 1980-ம் ஆண்டின் உலகின் ஆகப்பெரும் மனிதர்கள் 25 பேரில் ஒருவராக அவரை அறிவித்தது. அனைவரும் அவரை 'ஜப்பானின் ஹென்றி போர்டு' என்று புகழ ஆரம்பித்தனர்.

பழகுவதற்கு இனிமையானவர், தவறுகளைச் சுட்டிக் காட்டும் போது உடனடியாக அப்படியே ஏற்றுக் கொள்வார். அதைத் திருத்திக் கொண்டு முன்னேறுவார். இரண்டு மகன்களையும் இரண்டு மகள்களையும் அவர் அன்புடன் வளர்த்தார்; நற்பண்புகளை தன் வாழ்க்கை மூலம் வாழ்ந்து காட்டினார்.

ஆனால் தனது மகன்களை அவர் வற்புறுத்தி தனது நிறுவனத்தை மேற்கொள்ளச் செய்ய அவர் விரும்பவில்லை. அவரது மகன் ஹிரோடோஷி ஹோண்டா தனக்கென ஒரு மோட்டார்ஸ் போர்ட்ஸ் நிறுவனத்தை ஆரம்பித்தார்.

தனது தொழிலகத்தில் அவர் தரத்தைக் கண்டிப்பாக வற்புறுத்துவார். நேரம் தவறாமை அவரது முக்கியப் பண்பானது. தனது தொழிலாளர்கள் மத்தியில் அவர் மிஸ்டர் தண்டர்ஸ்டார்ம் - மிஸ்டர் இடிமின்னல் புயல்- என்று அறியப்பட்டார்.

மறைவு: ஹோண்டா 1991-ம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி ஈரல் கோளாறு காரணமாக மரணமடைந்தார். அவர் கண்டுபிடித்த கண்டுபிடிப்புகள் 470. காப்புரிமைகள் 150. ஜப்பான் நாட்டின் உயரிய விருதான 'ப்ளூ ரிப்பன்' விருது அவருக்கு தரப்பட்டது.

3200 டாலருடன் ஆரம்பிக்கப்பட்ட அவரது நிறுவனம் 30 பில்லியன் டாலர் அதாவது 3000 கோடி டாலர் என்ற அளவுக்கு வளர்ந்திருந்தது.

ஹோண்டாவின் தயாரிப்பு நிறுவனங்கள் இப்போது அமெரிக்கா, சீனா, இந்தியா, கனடா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் உள்ளன. அமெரிக்காவில் எங்கு பார்த்தாலும் ஹோண்டா அக்கார்ட் காரைப் பார்க்கலாம். ரேசுக்கான ஹோண்டாவின் மோட்டார் சைக்கிள்கள் உலகப் பிரசித்தி பெற்றவை. 150 நாடுகளில் ஹோண்டாவின் கார்களும், மோட்டார் சைக்கிள்களும் இன்று ஓடுகின்றன.

வெற்றிக்கு வழி: ஹோண்டாவின் கருத்துப்படி அவர் தனது வெற்றிக்குக் காரணமாகக் கூறியவை இரண்டு விஷயங்கள்

1) டிரையல் அண்ட் எர்ரர் வழிமுறை: ஒரு பொருளைத் தயாரித்து சோதனை செய்து அதில் உள்ள குறைகளைக் களைந்து கொண்டே இருந்தால் நல்ல பொருள், தரத்துடன் உற்பத்தியாகி விடும்.

2) தோல்விகளால் துவளாதீர்கள்; ஒரு பொருளைக் கண்டுபிடித்து தயாரிக்கும் போது ஏற்படும் தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள். ஒவ்வொரு தடைக்கல்லும் வெற்றிக்கான படிக்கல் என்று உணருங்கள்.

ரிஸ்க் எடுக்க பயப்படக் கூடாது என்பது அவரது கொள்கை.

மூன்று கொள்கைகளைத் தனது கம்பெனி கொள்கைகளாக அவர் கொண்டிருந்தார். வாங்குவதில் சந்தோஷம், விற்பதில் சந்தோஷம், உருவாக்குவதில் சந்தோஷம் ஆகியவையே அந்த மூன்று.

அவர் ஒரு முறை கூறினார் இப்படி: பலரும் வெற்றி பெற வேண்டுமென்று விரும்புகின்றனர். வெற்றியானது பல தோல்விகளுக்கும் சுயபரிசோதனைகள் செய்த பின்னருமே அடையப்படும் என நான் நம்புகிறேன். வெற்றி பெற ஒரு சதவிகித உழைப்பே தேவை மற்ற 99 சதவிகிதம் தடைகளை மீறி முன்னேறுவது தான்! தடைகளைக் கண்டு பயப்படவில்லை என்றால் வெற்றி தானே உங்களை வந்து அடையும்!

அவரது வாழ்க்கை போதித்த போதனை:தோல்விகளைக் கண்டு துவளாதீர்கள் என்பது தான்.

தொடர்புக்கு:- snagarajans@yahoo.com

Tags:    

Similar News