null
- ஜாதக கட்டத்தில் 6-வது இடம் சுத்தமாக இருக்க வேண்டும்.
- சிலருக்கு ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கும்.
ஜாதகத்தில் ஒவ்வொரு கட்டத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு என்பது உங்களுக்கு தெரிந்ததுதான். ஜாதகத்தில் லக்னத்தில் இருந்து 6-வது இடம் என்பது ஒவ்வொருவரது வாழ்க்கைக்கும் முக்கியமானது. ஏனெனில் இந்த 6-வது இடம்தான் கடன், நோய், எதிரிகள் ஆகியவற்றை நிர்ணயிப்பதாகும்.
ஜாதக கட்டத்தில் 6-வது இடம் சுத்தமாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால்தான் கடன் பிரச்சினைகள் வராது. மிகப்பெரிய நோய்கள் தாக்காது. எதிரிகள் தொல்லையும் இருக்காது. எனவே 6-வது இடம் வேறு எந்த கிரக சேர்க்கையும் இல்லாமல் தனித்து இருப்பது நல்லது.
ஆனால் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு 6-வது இடத்தில் நிச்சயமாக ஏதாவது ஒரு கிரக சேர்க்கை இருக்கும். 6-வது இடத்தில் எந்த கிரகம் உச்சம் பெற்று இருக்கிறதோ அதற்கு ஏற்ப பலன்கள் அமையும். 6-வது இடத்தில் செவ்வாய், சனி, ராகு, கேது போன்றவை உட்கார்ந்திருந்தால் நோய் தாக்கம் இருக்கும் என்பார்கள்.
பொதுவாக 6-வது இடத்தில் சூரியனும் சேர்ந்து இருந்தால் தலை வலி பிரச்சினை இருக்கும். சந்திரன் இருந்தால் தைரியம் குறையும். செவ்வாய் இருந்தால் உடல் சூடு நோய்கள் வரும். புதன் இருந்தால் நரம்பு தளர்ச்சி உண்டாகும். வியாழன் இருந்தால் உடலில் எப்போதும் சோர்வு காணப்படும். சுக்கிரன் இருந்தால் சர்க்கரை நோய் உண்டாகும். சனி இருந்தால் பித்தம் மற்றும் மர்ம நோய்கள் ஏற்படும். ராகு இருந்தால் வாயு தொல்லையும், கேது இருந்தால் தோல் வியாதியும் ஏற்படும் என்று ஜோதிடர்கள் கணிப்பது உண்டு.
அந்த அளவுக்கு 6-வது இடம் நோய், கடன், எதிரி ஆகிய மூன்றையும் நிர்ணயிப்பதாக அமைந்துள்ளது. ஒருவரது ஜாதகத்தில் லக்னத்திற்கு 6-க்கு உடையவன் வலு பெற்று இருந்தால் அந்த ஜாதகக்காரருக்கு கடன் இருந்து கொண்டே இருக்கும். இதைதான் கடன் தோஷம் என்று குறிப்பிடுவது உண்டு.
மேலும் இந்த தோஷத்தால் எதிரிகளாலும், நோய்களாலும் ஒருவருக்கு தொடர்ச்சியாக தொல்லைகள் இருந்து கொண்டே இருக்கும். இந்த தோஷத்தை உணர்ந்து கொள்வது என்பது எல்லோராலும் இயலாது. கடன் வாங்கும்போது அதை திருப்பி செலுத்துவதற்கான திட்டமிடல் இல்லாமல் செய்வதை இந்த தோஷம் ஏற்படுத்தி விடும்.
அதுபோல ஒருவருக்கு நோய்களையும் அவர்கள் அறியாமலேயே இந்த தோஷம் உண்டாக்கும் ஆற்றல் கொண்டது. பெரும்பாலும் நோய் தாக்கினால் பரம்பரையை குறை சொல்வார்கள். ஆனால் தற்போது தானாக தேடிக்கொள்ளும் நோய்கள் அதிகரித்து விட்டது. இதைத்தான் 6-ம் இடத்தில் தோஷம் என்று ஜோதிடர்கள் குறிப்பிட்டு சொல்கிறார்கள்.
ஒருவரது சுற்றுச்சூழல், உணவு பழக்க வழக்கம், செய்யும் வேலை, உட்கொள்ளும் தவறான மருந்துகள் போன்றவையும் நோய் தாக்கத்துக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன. இவையெல்லாம் 6-ம் இடம் சுத்தம் இல்லாமல் இருப்பதுதான் காரணமாகும். 6-ம் இடம் சுத்தமாக இருந்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக இருந்து கொண்டே இருக்கும். நோய் தாக்கமும் அதிகமாக வராது.
அதுபோல தான் 6-ம் இடம் சரியில்லா விட்டால் கண்டபடி பேசி எதிர்ப்புகளை சம்பாதித்து விடுவார்கள். அதிலும் 6-ம் இடத்தில் கிரக சேர்க்கை மோசமாக அமைந்து விட்டால் எதிரிகளால் ஏற்படும் தொல்லைக்கு அளவு இல்லாமல் போய் விடும். எனவே 6-ம் இடம் என்பது கடன், நோய், எதிரி ஆகிய மூன்று பிரச்சினைகளையும் நிர்ணயம் செய்வதாக இருக்கிறது.
இந்த மூன்று பிரச்சினைகளையும் எதிர் கொள்ள வேண்டும் என்றால் 6-ம் இடத்து தோஷம் எப்படி இருக்கிறது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். 6-ம் இடத்துபடி கடன் தொல்லை இருந்து கொண்டே இருந்தால் உரிய பரிகாரம் செய்வதன் மூலம் அந்த பிரச்சினையை போக்கிக் கொள்ள முடியும்.
இதற்கு மிகப்பெரிய செலவு ஒன்றும் ஆகாது. குலதெய்வ வழிபாட்டை செய்தாலே போதுமானதாகும். மூன்று மாதம் பவுர்ணமி தினத்தில் குலதெய்வ ஆலயத்துக்கு சென்று அபிஷேகம் செய்து தேவையான நைவேத்தியங்களையும் படைத்து மனமுருக வேண்டிக் கொண்டாலே போதும் கடன் பிரச்சினைகளை குலதெய்வம் தீர்த்து வைக்கும்.
பெரும்பாலும் முற்பிறவிகளில் செய்த வினைகள் காரணமாகவே 6-ம் இடத்து கிரக சேர்க்கைகள் தாறுமாறாக ஏற்பட்டு கடன் பிரச்சினைக்கு வழி வகுக்கும். குல தெய்வத்தை எந்த அளவுக்கு வழிபடுகிறோமோ அந்த அளவுக்கு இந்த கடன் பிரச்சினையில் மீண்டு வர முடியும்.
சிலர் சொந்த ஊரை விட்டு வெளியூரில் பணி நிமித்தமாக தங்கி இருப்பார்கள். அவர்களுக்கு அடுத்தடுத்து 3 மாதங்கள் குல தெய்வ கோவிலுக்கு செல்ல முடியாத நிலை இருக்கலாம். இதற்காக கவலை வேண்டாம். குல தெய்வ படத்தை வீட்டு பூஜை அறையில் வைத்து வழிபட்டால் போதும். ஆனால் அந்த வழிபாட்டுக்கு சில விதிமுறைகள் இருக்கின்றன.
பவுர்ணமி தினத்தன்று குல தெய்வ படத்தை நன்கு அலங்கரிக்க வேண்டும். உங்கள் குல தெய்வம் எந்த திசையில் இருக்கிறதோ அந்த திசை நோக்கி 5 விளக்குகளில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். குல தெய்வத்துக்கு பாரம்பரியமாக என்ன நைவேத்தியம் படைக்கிறார்களோ அதை படைத்து வழிபட வேண்டும். 9 பவுர்ணமி தினங்களில் இந்த வழிபாட்டை தொடர்ச்சியாக செய்து வந்தால் கடன் பிரச்சினைகளில் இருந்து விடுபட முடியும்.
வைணவ பக்தர்கள் சுதர்சனரை வழிபட்டால் கடன் பிரச்சினைகளில் இருந்து மீள முடியும். ஆலயத்துக்கு செல்லும்போது சக்கரத்தாழ்வார் சன்னதிக்கு செல்ல வேண்டும். அவரை வழிபட்டு 12 முறை சன்னதியை சுற்றி வந்து வழிபட்டால் கடன் பிரச்சினை பனிபோல் நீங்குவதை அனுபவப் பூர்வமாக உணர முடியும். சனிக்கிழமை அல்லது புதன் கிழமைகளில் இந்த வழிபாடு செய்வது நல்லது.
இது இல்லாமல் வேறு சில வழிபாடுகளும் கடன், நோய், எதிரிகள் பிரச்சினைக்கான தோஷத்தை தீர்க்க உள்ளன. தினமும் காலை பசு மாட்டுக்கு பழமும், புல்லும் கொடுத்து வழிபடுவது மிகப்பெரிய சிறந்த பரிகாரம் ஆகும். பசு வழிபாடு மூலம் கடன் தோஷம் காணாமல் போய் விடும். பசுக்களை மனம் குளிர செய்தால் வீட்டில் இருந்து வந்த ஏழ்மை நீங்கி செல்வ செழிப்பு உண்டாக தொடங்கும்.
அதுபோல தினமும் பறவைகளுக்கு உணவு வைப்பது நோய் தீர்க்கவும், கடன் தீர்க்கவும் மிக சிறந்த பரிகாரம் ஆகும். வசதி வாய்ப்பு இருப்பவர்கள் திருதியை திதி தினத்தன்று ஏழைகளுக்கு அன்னதானம் செய்யலாம். இந்த அன்னதானம் என்பது ஏழைகளின் ஒரு நேர வயிற்று பசியையாவது தீர்க்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த அன்னதானத்தால் ஏழைகள் மனம் குளிர்ந்தால் கடன் தோஷம் நிவர்த்தி ஆகும்.
செவ்வாய்க்கிழமைகளில் வரும் பிரதோஷத்தை ருண விமோசன பிரதோஷம் என்று சொல்வார்கள். அந்த பிரதோஷ நாளில் சிவாலயத்துக்கு சென்று நந்தி பகவான் அபிஷேகத்துக்குரிய பொருட்களை வாங்கி கொடுத்து வழிபட்டால் கடன் தோஷம், நோய் தோஷம், எதிரிகள் தோஷம் மூன்று தோஷங்களும் அடியோடு விலகும்.
இந்த பிரதோஷத்துக்கு நந்தி அபிஷேகத்துக்காக பசும் பால், இளநீர் ஆகிய இரண்டையும் வாங்கி கொடுத்து அந்த அபிஷேகத்தை நீங்களும் கண்குளிர பார்க்க வேண்டும். இப்படி செய்வதன் மூலம் முற்பிறவிகளில் இருந்து தொடர்ந்து வரும் கடன் பிரச்சினை களுக்கு விடிவு ஏற்படும்.
பொதுவாக கடன் என்றதும் பொருளாதார ரீதியிலான கடனை மட்டுமே பெரும்பாலான வர்கள் நினைக்கிறார்கள். ஒருவருக்கு பிறவி தோறும் எத்தனையோ கடன்களை தீர்க்க வேண்டிய பொறுப்புகள் உள்ளன. இந்த பிறவியிலும் அந்த கடன்கள் தொடரும். அதை தெரிந்து கொண்டு வழிபாடு செய்வது நல்லது.
ஆலயங்களுக்கு சென்று வழிபட்டு கடன் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்று விரும்புபவர்கள் கும்பகோணத்தில் திருவாரூர் செல்லும் வழித்தடத்தில் சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ள திருச்சேறை தலத்துக்கு செல்ல வேண்டும். அங்கு கடன் நிவர்த்தீஸ்வரர் ஆலயம் உள்ளது. இது கடன் நிவர்த்தி செய்யும் அற்புதமான தலமாகும்.
இந்த தலத்து சிவபெருமானை செவ்வாய்க் கிழமைகளில் வரும் ருண விமோசன பிரதோஷத்தில் வழிபட்டால் எவ்வளவு பெரிய கடன் இருந்தாலும் அது நீங்கும் என்பது பல்லாயிரக்கணக்கானவர்களின் அனுபவம் ஆகும். ஜோதிட ரீதியாக கடன் பிரச்சினை தீர வேண்டும் என்றால் சனி பகவானின் அருள் பார்வை வேண்டும் என்பார்கள். சனி பகவான் ஆதிக்கம் பெற்ற ஆலயங்களுக்கு சென்று வழிபட்டால் கடன் தோஷம் படிப்படியாக குறையும்.
சிலருக்கு ஆலயங்களுக்கு செல்ல முடியாத நிலை இருக்கும். அவர்கள் வீட்டிலேயே சில குறிப்பிட்ட பரிகாரங்களை செய்யலாம். எதுவுமே செய்ய முடியாவிட்டால் பாசி பருப்பு வாங்கி தானம் செய்யுங்கள் போதும். கடன் தோஷம், நோய் தோஷம், எதிரிகள் தொல்லை தோஷம் விலகி சென்று விடும்.
சனிக்கிழமைகளில் சனி ஓரை நேரத்தில் விநாயகர் அல்லது ஆஞ்சநேயரை வழிபட்டாலும் கடன் தோஷத்தில் இருந்து விடுபட வாய்ப்பு உள்ளது. கடன் தோஷம் கஷ்டப்படுத்திக் கொண்டே இருக்கும் நிலையில் மேலே குறிப்பிட்ட ஆலய வழிபாடுகளில் ஏதாவது ஒன்றை செய்து நிவர்த்தி பெறலாம்.