சிறப்புக் கட்டுரைகள்

மலரும் நினைவுகள் மீனா: ஆல்ப்ஸ் மலையில்... நடுங்க வைத்த குளிரில்...

Published On 2024-02-12 17:34 IST   |   Update On 2024-02-12 17:34:00 IST
  • மலைப் பகுதியில் படப்பிடிப்பு என்றதும் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல் தான் இருக்கும் என்று நினைத்தேன்.
  • வெளிநாட்டுக்கு சென்று ஒருநாள் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தால் எவ்வளவு செலவாகும்.

சுவிட்சர்லாந்தில் உள்ள ஆல்ப்ஸ் மலைத் தொடர், ஐரோப்பாவில் உள்ள மிகப்பெரிய, மிக நீண்ட மலைத் தொடர்.

இந்த மலைத் தொடரில் பல சிகரங்கள் உண்டு. கடல் மட்டத்தில் இருந்து 4000 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டது. கொண்டை ஊசி வளைவு பாதைகள் மட்டும் 50-க்கும் மேல் இருப்பதாக கூறினார்கள்.

அந்த மலை உச்சியில் படப்பிடிப்பு. 1998-ல் வெளிவந்த 'அரிச்சந்திரா'படத்தின் பாடல் காட்சியை படமாக்க அழைத்து சென்றிருந்தார்கள். அப்போதெல்லாம் வெளிநாடுகளில் படப்பிடிப்பு நடத்துவது மிக குறைவு.

நானும், கார்த்திக் சாரும் தான் ஹீரோ, ஹீரோயின். வெளிநாட்டில் படப்பிடிப்பு என்றதும் ரொம்ப சந்தோசமாக இருந்தது.

அரிச்சந்திரா என்றதும் பலருக்கு சிவாஜி சார் நடித்த படமும் அந்த புராண கதையும்தான் நினைவுக்கு வரும். ஆனால் நாங்கள் நடித்த அரிச்சந்திரா வித்தியாசமானது. புராண கதைப்படி அரிச்சந்திரன் உண்மையை மட்டுமே பேசக்கூடியவர்.

ஆனால் இந்த படத்தில் கதாநாயகன் பொய்யே பேசுவார். அதுவும் மற்றவர்களுக்கு நன்மை செய்வதற்காக. ஆனால் அது அவரது நண்பர்கள் 3 பேருக்கு மட்டுமே தெரியும்.

பள்ளி ஆசிரியையாக வரும் கதாநாயகியை கவருவதற்கும் பொய் சொல்வார். ஆனால் கதாநாயகி அந்த பொய்களையும் கண்டுபிடித்து விடும் புத்திசாலிப் பெண். அந்த புத்திசாலி பெண் வேடத்தில்தான் நான் நடித்தேன்.

சரி இனி படப்பிடிப்புக்கு வருவோம்....

மலைப் பகுதியில் படப்பிடிப்பு என்றதும் நம்மூர் ஊட்டி, கொடைக்கானல் போல் தான் இருக்கும் என்று நினைத்தேன். எனவே அதற்காக பிரத்யேக உடைகள் எதுவும் எடுத்து செல்லவில்லை.

காலையில் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு சென்றதும் அணிந்து இருந்த ஜெர்கினையும் துளைத்து கொண்டு உடலை வதைத்தது குளிர். அதிலும் எனக்கு கைகள், இடுப்பு பகுதி தெரியும்படிதான் ஆடை வடிவமைப்பு. அது குளிருக்கு கூடுதல் வசதியாகி விட்டது. போட்டு தாக்கியது.

நிறைய உலோக நகைகளையும் அணிய வேண்டியிருந்தது. இடுப்பில் ஒட்டியாணத்தை மாட்டியதும் ஐஸ்கட்டியை கட்டியது போல் குளிர்ந்தது.

கார்த்திக் சார் கோட்-சூட்டில் இருந்தார். அவரும் குளிர் தாங்க முடியவில்லை என்றார். அவர் அப்படி சொன்னதும், உங்களுக்கே இப்படி என்றால் என் நிலைமையை யோசித்து பாருங்கள் என்றேன்.

டைரக்டர் ஷாட் ரெடி என்றதும் ஜெர்கினை கழட்டி போட்டு விட்டு ஓடுவேன். ஷாட் முடிந்ததும் ஓடி வந்து ஜெர்கினை மாட்டிக் கொள்வேன்.


காலில் கேன்வாஷ் போன்ற ஷூதான் அணிந்து இருந்தேன். அது குளிருக்கு தாக்கு பிடிக்கவில்லை. எங்கே கால் மரத்து விடுமோ என்று பயந்தேன். ஏனெனில் அங்குதான் உறைபனியையும், பனி மழையையும் நேரில் பார்த்தேன். தங்கியிருந்த ஓட்டலில் ஜன்னலை திறந்து பார்த்தால் நம்மூர் மழை தூறல் போல் விழும். ஆனால் அது வெண்பனி மழை! பார்க்கவே ஆச்சரியமாக இருந்தது.

பனி திவலைகள் உடலில் ஆங்காங்கே விழுந்து படர்ந்தது. தலையில் வெள்ளை பஞ்சு காற்றில் பறந்து வந்து விழுந்தது போல் இருக்கும். ஷாட் ரெடியானதும் அதை துடைத்து விட்டு ஓடுவேன். உடலில் எந்த பகுதியில் பனி படர்ந்தாலும் கவலை இல்லை. ஆனால் முகத்திலும், கண் இமைகளிலும் படர்ந்தால் தான் அதை துடைக்கும் போது மேக்-அப் கலைந்து விடும். அப்புறம் மேக்-அப் போடுவது சிரமம். எனவே இரண்டு கைகளையும் நெற்றிக்கு மேல் டான்ஸ் அபிநயனம் போல் வைத்துக் கொள்வேன்.

ஷாட் ரெடி என்றதும் கண்ணாடியில் பார்ப்பேன். அப்பாடா முகமும், கண் இமையும் தப்பிச்சுது என்று நினைத்துக் கொண்டு ஷாட்டுக்கு ஓடுவேன்.

உடல் முழுவதும் மறைக்காத ஆடை அணிந்து இருந்த நான்தான் மிகவும் சிரமப்பட்டேன். ஆனால் காலில் ஷூ, பேன்ட்-கோட், முழுக்கை சட்டை அணிந்து இருந்த கார்த்திக் சாருக்குதான் மாலையில் உடல் சரியில்லாமல் ஆகி விட்டது.

ஜுரத்திலும், குளிரிலும் நடுங்கி கொண்டிருந்தார். நாளை என்னால் ஷூட்டிங் வர முடியாது என்றார். அதை கேட்டதும் தயாரிப்பாளரான தியாகராஜன் பயந்து போனார்.

வெளிநாட்டுக்கு சென்று ஒருநாள் படப்பிடிப்பு நடத்தாமல் இருந்தால் எவ்வளவு செலவாகும்? அந்த கவலை அவருக்கு.

இரவில் ரசம் சாதம் சாப்பிட்டு ஓய்வெடுத்தால் சரியாகி விடும் என்றார்கள். சுவிட்சர்லாந்தில் ரசத்துக்கு எங்கே போவது? என்ன செய்வது? என்று தெரியாமல் எல்லோரும் தவித்தோம்.

அப்போது என்னுடன் வந்திருந்த என் அம்மா 'கிச்சன்' எங்கே இருக்கிறது என்று தேடி பிடித்து அங்கே சென்றார். நம்மூரை போல் ரசத்துக்கு தேயைான மிளகு, பூண்டு, தக்காளி உள்பட எல்லாம் அங்கு கிடைக்கவில்லை.

ஒன்றிரண்டு இந்தியர்கள் அந்த கிச்சனில் வேலை பார்த்தார்கள். அவர்களிடம் பேசி சில பொருட்களுக்கு அம்மா ஏற்பாடு செய்தார். அதை வைத்து சிறிது நேரத்தில் ரசம் தயார் செய்து விட்டார்.

எல்லோருக்கும் ரசம் சாதம்தான் இரவு சாப்பாடு. காலையில் தூங்கி எழுந்ததும் உடல் இலகுவாக இருந்தது. கார்த்திக் சாருக்கும் உடல் நிலை சீராகி விட்டது. எல்லோரும் புதுதெம்புடன் படப்பிடிப்புக்கு சென்றோம்.

அதை பார்த்ததும் தியாகராஜன் சார் உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் ஒரே ஆச்சரியம். அம்மா ரசம் சூப்பர் என்று என் அம்மாவை எல்லோரும் புகழ்ந்து தள்ளினார்கள்.

"முந்தானை சேலை முட்டுதா ஆள!

மாலையா சுத்திக்க மேல

ஏய் கொத்தாத மீனே

கொக்குதான் நானே!

வெக்கமும் நாணமும் வீணே... என்று ஆல்ப்ஸ் மலை உச்சியில் நானும் கார்த்திக் சாரும் ஆடிய டூயட் பாடலை போலவே அந்த அனுபவமும் மறக்க முடியாதவை.

கார்த்திக் சாருடன் நடித்த முதல் படம் 'மருமகன்' நல்ல மருமகனாக அமையவில்லை. எனவே 'அரிச்சந்திரா' நன்றாக வரவேண்டும் என்று மனதில் நினைத்துக் கொண்டேன்.

கதை, காட்சி, பாடல் என்று எல்லாமே அருமையாக இருந்தது. எப்படியும் வெற்றி பெறும் என்று நினைத்தேன். அது போலவே படமும் சூப்பர் ஹிட்டாக அமைந்தது.

மீண்டும் 'மாமன் மகள்' வந்தாள். அவள் எப்படி...? அடுத்த வாரம் பேசுவோம். (தொடரும்)

Tags:    

Similar News