சிறப்புக் கட்டுரைகள்

ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம், மாத்ரு தோஷம் நீக்குவது எப்படி?

Published On 2024-02-06 17:51 IST   |   Update On 2024-02-06 17:51:00 IST
  • ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது பித்ரு தோஷமாகும்.
  • ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடம் வாய், உண்ணும் உணவு இவைகளை குறிக்குமிடம்.

பித்ருக்கள் என்ற சொல் இறந்து போன முன்னோர்களைக் குறிக்கும். தந்தை வழியில் மற்றும் தாய் வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் பித்ருக்களாவார்கள். தந்தை வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் பிதுர் வழி பித்ருக்கள் எனவும், தாய் வழியில் இறந்து போன முன்னோர்கள் அனைவரும் மாதுர் வழி பித்ருக்கள் எனவும் அழைக்கப்படுவர். ஒருவருக்கு உடல், உயிர் மற்றும் பொருள் அனைத்தும் பித்ருக்கள் அளித்தது. முன்னோர்கள் வழங்கிய உடல், உயிர் பொருட்களுக்கு நன்றி தெரிவிக்க தாய், தந்தை, தாத்தா, பாட்டி ஆகியோர்கள் வாழும் போது அவர்களை பேணிக் காத்து பசியினை போக்க வேண்டும். அதே போல் அவர்கள் மறைந்த பின்பும் அவர்களின் ஆன்மப் பசியைப் போக்க வேண்டும். இதுவே பிதுர்கடன் எனப்படும். இதையே திருக்குறள் தந்த திருவள்ளுவர் நீத்தார் கடன் என்ற அதிகாரத்தில் தெளிவாக எடுத்துரைக்கிறார்.

முன்னோர்களின் ஆத்மாக்களுக்கு செய்யும் வழிபாடு தான் பிதுர்கடன் தீர்த்தல் எனப்படுகிறது. பித்ருக்கள் தான் ஒருவருக்கு கடவுளரின் அருளையும் ஒருவரின் வேண்டுதல்களையும், விருப்பங்களையும் எளிதில் பெற்றுத் தரும் வல்லமை பெற்றவர்கள். எனவே தனது வாரிசுகள் மீது அதீத அக்கறை கொண்ட பித்ருக்களை வழிபாடு செய்து அவர்களின் பசியினைப் போக்க வேண்டும். அவ்வாறு பசியினை போக்காமல் விட்டுவிட்டால் பித்ருக்கள் பசியினால் வாடுவர். அவ்வாறு பசியினால் வாடும் பித்ருக்கள் ஒவ்வொரு அமாவாசையன்றும் தனது வாரிசுகளின் இல்லங்களில் உள்ள நீர் நிலைகளில் வந்து தங்குவர். அமாவாசையன்று பித்ருக்களுக்கு வழிபாடு செய்து அவர்களின் பசியை போக்காமல் இருந்தால் பித்ருக்கள் வருத்தத்துடன் பிதுர்லோகம் செல்வர். பித்ருக்களின் கோபம் தெய்வத்தின் அருளையே தடை செய்யும் வலிமை கொண்டது. எனவே அவர்களின் கோபத்திற்கோ அல்லது சாபத்திற்கோ ஆளாகாமல் பித்ருக்களின் பசியைப் போக்கி அவர்களை அமைதிப்படுத்த வேண்டும்.

ஒரு ஜாதகத்தில் சூரியன் பிதுர்காரகன், சந்திரன் மாதுர்காரகன். ஒரு ஜாதகத்தில் ஒன்பதாம் பாவகம் எனும் பாக்கிய ஸ்தானம் முன்னோர்கள் செய்த நல்வினை, தீவினைப் பயனை குறிக்குமிடம். இந்த ஒன்பதாம் பாவகத்தில் சனி, ராகு, கேது மற்றும் ஒன்பதாம் அதிபதி நீசம், ஒன்பதாம் அதிபதியுடன் ராகு, கேதுக்கள் மிக நெருக்கமாக இணைந்து பலம் இழக்க வைத்திருப்பது, ஒன்பதாம் அதிபதி பாவ கர்த்தாரி தோஷத்தில் இருப்பது, பித்ரு காரகனாகிய சூரியன் ராகு, கேது சனியுடன் சேர்ந்து இருப்பது, அது போல், மாத்ரு காரகன் எனப்படும் சந்திரன் ராகு, கேது, சனியுடன் சேர்ந்து இருப்பது, மட்டுமல்லாமல், ராகு, கேதுக்கள் சூரிய, சந்திரனுடன் நெருக்கமான இணைவில், கிரகண தோஷத்தில் இருந்தால், கடுமையான பித்ரு, மாத்ரு தோஷம் உண்டு. சூரியன், சந்திரனுக்கு சனி சம்பந்தம் இருப்பதும் சூரிய, சந்திரன், சனி, ராகு கேதுவின் நட்சத்திரத்தை பெறுவதும் பித்ரு தோஷமாகும். ஒன்பதாம் பாவகத்தில் சூரியன், சந்திரன் உடன் சனி அல்லது ராகு கேதுக்கள் இணைந்தால், கடுமையான பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷமாகும்.

மேலே கூறிய அனைத்தும் எத்தனை டிகிரியில், சூரியன் சந்திரனோடு பாவ கிரகங்களான, சனி, ராகு கேது இணைந்து உள்ளன என்பதை பொறுத்து தோஷத்தின் வீரியம் மாறுபடும். பித்ரு தோஷம் மற்றும் மாத்ரு தோஷம் இரண்டும் ஒருங்கே அமையப் பெற்ற ஜாதகர்கள், வாழ்க்கையில் நல்லது நடக்க கடுமையாக முயற்சிக்க வேண்டும்.

ஐ.ஆனந்தி

ஜாதகத்தில் உள்ள தோஷங்களிலேயே மிகவும் வலிமையானது பித்ரு தோஷமாகும். இந்த தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் தொடர் வறுமை, படிப்பு, வேலை, திருமணம், மண வாழ்க்கையில் பிரச்சினை, குழந்தையின்மை, குழந்தைகளால் பிரச்சனை, கடன் இவற்றில் ஏதேனும் ஒன்று இருந்து கொண்டே இருக்கும். பிதுர் தோஷம் நீங்காமல் எந்த பரிகாரங்கள் செய்தாலும் பரிகாரங்கள் பலன் தருவதில்லை. எத்தகைய மந்திர செபங்களும் சித்தியடைவதில்லை. எனவே முதலில் பிதுர் தோஷத்தினைப் போக்கிட வேண்டும். பிதுர் தோஷம் உள்ளவர்களின் ஜாதகம் பிதுர் தோஷம் நீங்கிய பின்பு தான் வேலையே செய்ய ஆரம்பிக்கும். இந்த தோஷம் இருக்கும் வரையில் ஜாதகத்தில் உள்ள எந்த ஒரு யோகமும் தன்னுடைய பலனை தராது. மாறாக பிதுர் தோஷம் உள்ளவர்களின் வாழ்க்கையில் மன சஞ்சலம் அதிகமாகும்.

1.பித்ரு தர்ப்பணம் (தை 26, தை அமாவாசை- 9.2.2024, வெள்ளிக்கிழமை)

அமாவாசை தினம் பித்ரு தோஷத்தை நீக்குவதில் மிகவும் சிறப்புடையது. அமாவாசையன்று உலகை இயக்கும் சூரியனும் சந்திரனும் ஒன்று சோ்வதால் ஒரு காந்த சக்தி ஏற்படுகிறது. பிரதிமை முதல் அமாவாசை வரை மொத்தம் 15 திதிகள் இருக்கின்றன. இதில் அமாவாசை திதி முக்கியமானது. அன்று சூரியனும், சந்திரனும் ஒன்றாக இணையும் நாள். மற்ற திதிகளில் ஏதாவது ஒரு கிரகம் திதி, தோஷம் அடையும். ஆனால் அமாவாசையன்று எந்தக் கிரகமும் தோஷம் அடையாது. இதனால் அமாவாசையன்று சில செயல்களை தொடங்கினால் அது வெற்றி பெறும். ராகு, கேது மற்றும் பிற கிரகங்களால் ஏற்படும் பிரச்சினைக்கு தீர்வு காண அமாவாசையன்று பரிகாரம் செய்தால் சிறப்பான பலனைத் தரும். மேலும் மூதாதையர்களின் நல் ஆசியும் கிடைக்கும்.

அமாவாசை தோறும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பவர்களின் குடும்பம் அமைதி பெற்று, மென்மேலும் சிறந்து விளங்கும். முன்னோர்கள் இறந்த திதி தெரியாதவர்கள் ஆடி அமாவாசை, தை அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் திதி, தர்ப்பணம் கொடுப்பது உகந்தது. மூதாதையர்கள் உயிருடன் வாழ்ந்த போது, அவர்களை சரிவர கவனிக்காததால், ஒருவர் அடையும் துன்பங்கள்யாவும், பாவத்தின் வடிவில் கவனிக்கத் தவறியவர்களை சேர்வதாக கூறப்படுகிறது. பாவங்களில் பெரிய பாவம் பித்ருக்களின் கர்மாவை நிறைவேற்றாமல் இருப்பதுதான். பித்ரு கடன் முறையாக தீர்க்கும் சந்ததியருக்கு பித்ருக்கள்

தேவையான பல உதவிகளை செய்வதுடன், அவர்களுக்கு வரும் கெடுதல்களை தடுத்து நிறுத்துவார்கள். அமாவாசை அன்று காலை ஆறு, கடல் போன்ற நீர் நிலைகளுக்கு சென்று நீராடி தர்ப்பணம் கொடுக்க வேண்டும். ராகுகாலம், எமகண்டம் ஆகியவை தர்ப்பணத்துக்கு பொருந்தாது.

மதிய வேளை தர்ப்பணம் செய்ய மிகவும் உகந்தது. தர்ப்பணம் கொடுக்கும்போது தங்களின் கோத்திரம், மூன்று தலைமுறையின் பெயர்களை அறிந்து கொள்வது அவசியம். தர்ப்பணம் செய்த பின்னர் வீட்டுக்கு திரும்பி வந்து மறைந்த முன்னோர்களின் படத்தை சுத்தம் செய்து, சந்தனம், குங்குமம் இட்டு துளசி மாலை சாத்த வேண்டும். முன்னோர்கள் பயன்படுத்திய பொருட்களை வைத்து குத்துவிளக்கு ஏற்ற வேண்டும். முன்னோர்களுக்கு பிடித்தமான இனிப்பு, காரம், பழ வகைகளை படைக்க வேண்டும். தலை வாழை இலை படையல் போட்டு வணங்க வேண்டும். கோதுமை தவிடு, அகத்திக்கீரை போன்றவற்றை பசுவிற்கு தானமாக வழங்கவேண்டும். பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிக்கும் வரை, வீட்டில் தெய்வ சம்பந்தமான பூஜைகளை ஒத்திவைத்து விட்டு, பித்ருக்களுக்கு தர்ப்பணம் செய்து முடிந்த பின்னர் தினசரி செய்ய வேண்டிய பூஜைகளை செய்யலாம். அமாவாசை தினங்களில் மாமிசம் சாப்பிடக்கூடாது. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை தவிர்ப்பது நல்லது.

2. அன்னதானம்

தானத்தில் சிறந்தது அன்னதானம் என்கிறது தர்மசாஸ்திரம். அதனால் தான் கிருஷ்ண பகவான் கீதையில், "எவன் தனக்காக மட்டும் ஆகாரம் தேடிச் சாப்பிட்டுக் கொள்கிறானோ அவனுடைய பாபத்தையும், முழுக்க அவனேதான் அனுபவித்தாக வேண்டும். வேறு எவரும் அதில் பங்கு எடுத்துக் கொள்ளமாட்டார் என்கிறார்". அன்னதானத்தில் தான் ஒருவரை பூரணமாக திருப்திபடுத்த முடியும். பணம், காசு, வஸ்திரம், நகை, பூமி, வீடு இதுபோன்றவற்றை எவ்வளவு கொடுத்தாலும் வாங்கிக் கொள்கிறவர்கள், அதற்கு மேல் கொடுத்தால் வேண்டாம் என்று சொல்ல மாட்டார்கள். அன்னம் போடுகிற போதுதான் போதும் என்ற திருப்தி ஏற்படும். என்னதான் வயிறு முட்ட சாப்பிட்டாலும், அவனால் ஒரு அளவிற்கு மேல் சாப்பிட முடியாது. ஒருவர் எதை தானமாக பெற்றாலும் கிடைக்காத ஒரு மன நிறைவை உணவு தானம் ஏற்படுத்துகிறது.

ஜென்ம லக்கினத்திற்கு இரண்டாமிடம் வாய், உண்ணும் உணவு இவைகளை குறிக்குமிடம். இந்த ஜென்மத்தில் பெற்றோர் இட்ட அன்ன ஆகாரங்களை சாப்பிடுவதால், ஏழு ஜென்மத்திற்கும் அவர்களுக்கு கடன்பட்டவர்களாக ஆகிவிடுகிறோம். இதன் அடிப்படையிலேயே பித்ரு வழிபாட்டில் சோற்றுப்பிண்டம் வைக்கப்படுகிறது.. கர்மத்தால் வந்தது தர்மத்தால் போகும் என்பது சான்றோர் வாக்கு. ஒருவர் செய்யும் தான தர்மம் குறிப்பாக உணவு. உடை மறைந்த முன்னோர்களின் நல்லாசிகளைப் பெற்றுத் தரும்.

எனவே சந்தர்ப்பம் கிடைக்கும் போது குறிப்பாக சனிக்கிழமை மற்றும் அமாவாசை நாட்களில் இயன்ற உணவு தானம் வழங்க வேண்டும். அதுவும் மனிதனின் அன்றாட தேவையான உணவு, உடை, இருப்பிடம் போன்றவற்றில் பின் தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு வழங்குவது சிறப்பு. ஆதரவற்ற முதியோர்களுக்கு எளிதில் ஜீரணமாகும் உணவை வழங்க வேண்டும். அத்துடன் குழந்தைகள் காப்பகத்தில் வசிக்கும் குழந்தைகளுக்கு இளம் சிறார்கள் உண்ண விரும்பும் உணவை தானம் வழங்க வேண்டும். நாம் விரும்பும் உணவை தானம் தருவதை விட அவரவரின் வயதிற்கும் மன நிலைக்கும் ஏற்ப உணவைத் தானம் தருவதால் எளிதில் பித்ரு தோஷம் விலகும். உணவு தானம் எளிதில் பித்ரு தோஷ தாக்கத்தை குறைக்கும் பரிகாரமாகும்.

3. ஆசிர்வாதம்

உலகில் ஒரு பிரிவினர் மிகுதியானக எப்பொழுதும் மிகுதியான சந்தோஷத்துடன் வாழ்கிறார்கள் ஒரு சிலர் மிகுந்த துக்கத்துடன் எப்பொழுது விடிவு காலம் பிறக்கும் என்ற கேள்வியுடன் வாழ்கிறார்கள். இது போன்ற மாறுபட்ட இரண்டு நிலைகளுக்கும் காரணம் ஒருவர் பெற்ற, பெற்றுக் கொண்டிருக்கிற ஆசிர்வாதம். வாழ்க்கை செழுமையாக பிறருக்கு உதவும் விதத்தில் உள்ளது என்றால் குடும்பத்தினரால், பெரியோர்களால், உற்றார்களால் உறவினர்களால், நண்பர்களால் அன்றாடம் சந்திக்கும் நபர்களின் ஆசிர்வாதம் பெற்றவர் என்று பொருள். ஏன் பிறந்தோம் பூமியில் என்று வறுமையுடன் பிறரிடம் கையேந்தும் நிலையில் வாழ்ந்தால் பிறரின் ஆசீர்வாதம் நிறையப் பெற வேண்டியவர் என்று பொருள்.

தமிழர்களின் கலாச்சார வழக்கத்தில் ஒன்று ஆசீர்வாதம், வாழ்த்தைப் பெறுதல். ஆசி' என்பது ஒரு குறிப்பிட்ட அளவிலான சக்தி. ஒருவரின் வளர்ச்சியை துரிதப்படுத்திக் கொள்ள உதவும் சக்தி. தனது செய்கையால் பிறரின் மன சந்தோஷத்தை அதிகரித்தால் ஆசி எனும் சக்தி உங்களைத் தேடி வரும்.

எனவே முடிந்தவரை பிறரின் மனம் நோகும்படி செயல்படக் கூடாது. எதிர்வரும் தை 26, தை அமாவாசை 9.2.2024 வெள்ளிக்கிழமை அன்று தாய், தந்தை, தாத்தா, பாட்டி, குருமார்கள், சித்தர்கள், வயது முதிர்ந்தவர்களிடம் ஆசி பெற வேண்டும். குறிப்பாக தாய், தந்தையரின் காலில் விழுவது எதற்கென்றால், இவ்வுலகில் பிறப்பதற்கே அவர்கள்தான் காரணம். எனவே நாம் இருப்பதற்கு மூலகாரணமான அவர்களை வணங்கி ஆசி பெறுவது மிகச் சிறப்பு. சித்தர்களை ஜீவ சமாதியிலும் வழிபடலாம். ஜாதகத்தில் உள்ள பித்ரு தோஷம், மாத்ரு தோஷம் மட்டுமல்ல அனைத்து தோஷங்களும் விலகும்.

தாய், தந்தையின் மரபணுவில் உருவாகுவதே குழந்தை. முன்னோர்களின் மரபணுவில் தோன்றிய ஒருவர் முன்னோர்களின் ஆத்மா சாந்தி அடையவும் , சாந்தி அடைந்த ஆன்மாவிடம் இருந்து ஆசி பெறுவதற்கும் முன்னோர்களுக்கு செய்ய வேண்டிய பித்ரு கர்மாக்களை செய்ய வேண்டியது ஒவ்வொருவரின் முக்கிய கடமையாகும்.

Tags:    

Similar News