நோய் தொற்றில் இருந்து நுரையீரலை காப்பது எப்படி?
- உடலில் வலதுபுறம், இடதுபுறம் என 2 பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது.
- மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல்.
மனித உடலில் மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல், சிறுநீரகங்கள், இவை முக்கியமான உறுப்புகள். இவற்றில் ஒன்று கெட்டு போனாலும் உயிருக்கு ஆபத்தாகி விடும். இதயத்துக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறோமோ, அத்தகைய முக்கியத்துவம் நுரையீரலுக்கும் அளிக்கப்படுகிறது.
காற்றில் உள்ள ஆக்சிஜனை ரத்தத்தில் சேர்ப்பதும், ரத்தத்தில் உள்ள கார்பன்டை ஆக்சைடை (கரியமில வாயு) பிரித்து உடலில் இருந்து வெளியேற்றுவதும் நுரையீரலின் முக்கிய பணியாகும்.ஆக்சிஜன், கார்பன்டை ஆக்சைடு, நைட்ரஜன் உள்பட பல்வேறு வாயுக்கள் அடங்கிய வெளிக்காற்று சுவாச குழாய் வழியே நுரையீரலுக்குள் நுழைகிறது. இவ்வாறு வெளிக்காற்று வந்தவுடன் அதில் பெரும்பகுதியாக உள்ள ஆக்சிஜனை மட்டும் பிரித்தெடுத்து ரத்த அணுக்களுடன் சேர்த்து நல்ல ரத்தமாக மாற்றி இதயத்துக்கு அனுப்பும் பணியை நுரையீரல் செய்கிறது.
பின்னர் இதயத்தில் இருந்து தொடங்கி உடல் முழுவதுக்கும் பயணம் செய்து விட்டு வரும் கெட்ட ரத்தத்தை மீண்டும் சுத்திகரித்து ஆக்சிஜன் கலந்து நல்ல ரத்தமாக மாற்றி அனுப்புவதையும் நுரையீரல் செய்கிறது.
உடலில் வலதுபுறம், இடதுபுறம் என 2 பக்கமும் நுரையீரல் பரவி உள்ளது. வலதுபுறம் மூன்று பகுதிகளாகவும், இடதுபுறம் 2 பகுதிகளாகவும் நுரையீரல் அமைந்துள்ளது. 3 பகுதிகள் உள்ளதால் வலதுபுறம் நுரையீரலின் அளவு சற்று பெரிதாக காணப்படும். இதயத்துக்கு இருபுறமும் பாதுகாப்பாக இருந்து இதயத்தை அதிர்வுகளில் இருந்து காப்பாற்றுகிறது. பிறக்கும் போது சில குழந்தைகள் ஒரு பக்கம் நுரையீரல் இல்லாமலேயே பிறப்பார்கள். அந்த குழந்தைகளுக்கு ஒரு பக்கம் நுரையீரல் உருவாகாமலேயே இருக்கும். அதனால் பிரச்சினை ஒன்றும் ஏற்படாது.
நுரையீரலின் செயல்பாடு
நுரையீரலுக்கு காற்று செல்ல மூச்சுக்குழாய் முக்கிய பங்கு வகிக்கிறது. மூக்கு வழியாக போகும் காற்று தொண்டையை கடந்து மூச்சுக்குழாய்க்குள் நுழையும். கழுத்து பகுதியில் தொட்டுப்பார்த்தால் மூச்சுக்குழாயை நம்மால் உணர முடியும். மூச்சுக்குழாய் கீழே போய் வலது, இடது என 2 பக்கம் பிரிகிறது. வெளியே இருக்கும் காற்று உள்ளே போகும்போது அந்த 2 நுரையீரலுக்கும் சரியாக போய் சேருகிறது. தேன் கூட்டில் சிறு, சிறு ஓட்டைகள் இருப்பது போன்று ஒவ்வொரு நுரையீரலிலும் இருக்கும். இதற்கு அல்வியோலி (alveoli) என்று பெயர். அல்வியோலியின் சுவர்கள் மிகவும் மெல்லியதாக இருக்கும். அந்த சுவர்களில் ரத்தக்குழாய் இருக்கிறது.
அந்த குழாய்களுக்குள் ஆக்சிஜன் செல்லும். அந்த சமயம் ரத்தக்குழாய்க்குள் இருக்கும் கார்பன்டை ஆக்சைடு வெளியே வரும். உள்ளே போகிற ரத்தக்குழாயில் பிராணவாயு எனப்படும் ஆக்சிஜன் அதிகம் இருக்கும். வெளியே வரும் சுவாச காற்றில் கார்பன்டை ஆக்சைடு அதிகம் இருக்கும்.
நுரையீரலில் இருந்து ரத்தம் சிவப்பு நிறத்தை அடைந்து, ஆக்சிஜன் நிறைந்த சுத்தமான ரத்தமாக இதயத்துக்கு செல்லும். இதயத்தில் இருந்து மற்ற பாகங்களுக்கு சுத்த ரத்தம் செலுத்தப்படுகிறது.எனவே இதயம் வேலை செய்தாலும், நுரையீரல் வேலை செய்யவில்லை என்றால் சுத்தமான ரத்தத்தை இதயமோ, மற்ற பாகங்களோ பெற முடியாது. எனவே தான் நுரையீரல் பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் அளிக்கிறோம்.
மனித உறுப்புகளில் மிகவும் சுலபமாக கிருமி தொற்று மற்றும் பாதிப்பு ஏற்படும் உறுப்பு நுரையீரல். மற்ற உறுப்புகளை விட நுரையீரலானது நேரடியாக நாம் சுவாசிக்கும் காற்றுடன் தொடர்புடையது. சுவாசிக்கும் காற்று முதலில் மூக்கு வாயிலாக நுரையீரலுக்கு சென்று பின்னர் மற்ற உறுப்புகளுக்கு ரத்தத்தின் மூலம் செல்கிறது. எனவே தொற்று கிருமிகள் (பாக்டீரியா, வைரஸ், பூஞ்சை), காசநோய் கிருமி, கொரோனா கிருமி போன்றவை நேரடியாக நுரையீரலுக்கு சென்று எளிதில் நுரையீரல் தொற்றை ஏற்படுத்தி விடுகிறது.
ஜி.பக்தவத்சலம்
ஆஸ்துமா, நிமோனியா, காசநோய், நுரையீரல் புற்றுநோய், தொழில் சார்ந்த நுரையீரல் நோய்கள் போன்றவை நுரையீரல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஆகும். இருமல், சளி, காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம், சளியில் ரத்தம் கலந்து வெளி வருதல், நெஞ்சு வலி போன்றவை நுரையீரல் பாதிப்பின் அறிகுறிகள். சாதாரணமாக இந்த தொந்தரவுகள் 2 வாரத்தில் சரியாகி விடும். அப்படி இல்லாமல் இத்தொந்தரவுகள் 2 வாரங்களுக்கு மேல் தொடர்ந்தால் உடனே மருத்துவரை அணுகி பரிசோதனைகள் மேற்கொள்ள வேண்டும்.
ஆஸ்துமா:
சிறு வயதில் குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஆஸ்துமா. ஏதோ ஒரு ஒவ்வாமை காரணங்களால் ஆஸ்துமா வரலாம். வீட்டில் சுத்தப்படுத்தும் போது பறக்கும் கண்ணுக்கு தெரியாத தூசு மூச்சுக்குழாய்க்குள் நுழைந்து நுரையீரலை அடையும். இதனால் நுரையீரல் பாதிக்கப்பட்டு அதில் உள்ள சிறு, சிறு குழாய்கள் சுருங்கும். அதனால் காற்று உள்ளே சென்று வெளியே வரும்போது நன்றாக சுருங்கி விரியாது. அப்போது குழந்தைகள் மூச்சு விட மிகவும் சிரமப்படுவர். மூச்சு விடும்போது 2 விலா எலும்புகளுக்கு நடுவில் உள்ள தசை உள்ளேயும், வெளியேயும் போய் வரும். 2 வயதில் இருந்து 8 வயது வரைக்கும் இந்த ஆஸ்துமா தொடரும். ஆஸ்துமா பாதிப்பு வந்தவுடன் குழந்தையை டாக்டரிடம் கொண்டு போய் சிகிச்சை அளிக்க வேண்டும். இதற்கு நெபுலேசர் சிகிச்சை அளிக்கப்படும். இது எளிமையானது தான்.
ஆஸ்துமா பாதிப்பு அதிகமான பிறகு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தால் உள்நோயாளியாக அனுமதித்து வென்டிலேட்டர் வைத்து தான் குழந்தையை மீட்க முடியும். 2, 3 நாட்களுக்கு பிறகு தான் குழந்தை இயல்பு நிலைக்கு வரும். எனவே குழந்தைகளுக்கு ஆஸ்துமா பாதிப்பு வந்தால் தாமதம் செய்யக்கூடாது.தாய், தந்தை யருக்கு ஆஸ்துமா இருந்தாலும் குழந்தைகளுக்கு அந்த நோய் பாதிப்பு வர வாய்ப்புள்ளது. ஆனால் இது தொற்று வியாதி கிடையாது. ஜீன்களால் வரக்கூடியது. ஆஸ்துமாவால் உயிருக்கு ஆபத்து கிடையாது. டாக்டரிடம் செல்வதை தாமதப்படுத்தினால் உயிருக்கு ஆபத்தாகி விடும். மாரடைப்பு சிகிச்சைக்கு எவ்வளவு அவசரம் காட்டுகிறோமோ அதேபோல குழந்தைகளுக்கும் ஆஸ்துமா பாதிப்பு இருந்தால் உடனே சிகிச்சை அளிக்க வேண்டும்.
அடுத்து 10 வயது முதல் 30 வயது வரை உள்ளவர்களுக்கு ஏற்படக் கூடிய ஆஸ்துமா மூச்சுக்குழாய் அலர்ஜி (Asthmatic bronchitis). இதுவும் ஒருவகையான ஆஸ்துமாவே.
நிமோனியா:
நிமோனியா கிருமி தாக்கினால் நுரையீரல் முழுவதும் வீங்கி விடும். நுரையீரலில் உள்ள அல்வியோலி முழுக்க நீர்க் கோர்த்து கொள்ளும். இதனால் காற்று உள்ளே நுழைய முடியாமல் போகும். ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் நோயாளி மரணத்தை தழுவுவார். நிமோனியாவானது கொரோனா நிமோனியா, பாக்டீரியா நிமோனியா, வைரஸ் நிமோனியா, பங்கல் நிமோனியா என 4 வகைப்படும். கொரோனா நோய்த் தொற்றின் போது நுரையீரல் பாதிக்கப்பட்டு தான் லட்சக்கணக்கானோர் பலியானார்கள்.
அலர்ஜி:
ரோட்டில் பறக்கும் புழுதியினாலோ, பெயிண்ட் அடிக்கும் இடத்தில் நிற்பதாலோ, அருகில் நிற்பவர் புகை பிடித்தாலோ சிலருக்கு ஒத்துக் கொள்வது இல்லை. சிலர் அரிசிக்கே அலர்ஜி ஆவார்கள். சோறு சாப்பிட்ட உடன் அவர்கள் மூச்சு விட கஷ்டப்படுவார்கள். சிலருக்கு மீன், கருவாடு போன்ற உணவுகளால் அலர்ஜி ஏற்படும். நோயாளிகளுக்கு எதனால் அலர்ஜி ஏற்படுகிறது என்பதை முதலில் பரிசோதித்து அதனை தவிர்த்து சிகிச்சை பெற்றால் குணம் அடைவர்.
காசநோய்:
இந்த நோயால் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் மரணம் அடைகிறார்கள். இது தொற்று நோய். தாய், தந்தையருக்கு இந்த நோய் இருந்தால் குழந்தைகளுக்கும் வர வாய்ப்புள்ளது. காசநோய் பாதித்தால் பசி எடுக்காது, எடை குறையும். உடல் சூம்பிப் போகும். இந்த அறிகுறிகள் தென்படும் குழந்தைகளை டாக்டரிடம் கொண்டு சென்று எக்ஸ்ரே எடுத்து பார்த்தால் நோய் பாதிப்பு தெரிந்து விடும். மருந்துகள் மூலம் 3 மாதத்தில் குழந்தைகளை குணப்படுத்தி விடலாம்.
பெரியவர்களுக்கு காசநோய் வந்தால் ஒரு வாரம் இருமல் இருக்கும். மாலை நேரம் வந்தால் காய்ச்சல் வரும். உடம்பு இளைத்துக் கொண்டே போகும். பசி இருக்காது. சுறுசுறுப்பு குறைந்து போகும். நோயாளிக்கு டாக்டர்கள் 2 கோணத்தில் எக்ஸ்ரே எடுத்து பார்த்து காசநோயை உறுதி செய்வார்கள்.பொது இடத்தில் ஒருவர் இருமினால், அவரது தொண்டையில் இருந்து வரும் உமிழ்நீர் 8 அடி தூரம் வரை செல்லும். காசநோய் பாதித்தவர் இருமும்போது அவரது உமிழ் நீர் மற்றவருக்கும் பரவி காசநோய் பாதிப்பை ஏற்படுத்தி விடும். காசநோய் பாதித்தவருடன் ஒரே அறையில் இருந்தாலும் மற்றவர்களுக்கும் பாதிப்பு வரும்.
காசநோய் பாதித்தவர் இருமும் போது சளி வரும். சளியில் தான் பாக்டீரியா கிருமிகள் இருக்கும். சளியில் ரத்தம் கலந்து வந்து விட்டால் அது கண்டிப்பாக காசநோய் தான். தற்போது காசநோய்க்கு அரசு ஆஸ்பத்திரிகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படுகிறது. 9 மாதங்கள் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை உட்கொண்டால் காசநோயை வெல்லலாம். சிலர் 2 மாதம் மட்டும் மாத்திரை சாப்பிட்டு விட்டு விடுவார்கள். அது தவறானது. பாதிப்பு அதிகமாகி மீண்டும் மருத்துவரை அணுகும்போது மீண்டும் முதலில் இருந்தே மருந்து சாப்பிட வேண்டும். ஆனால் முதலில் மருந்து சாப்பிடும் போது அளித்த பலன் 2-வது முறை சாப்பிடும்போது கிடைக்காது. எனவே காசநோய் என்று வந்து விட்டால் மருத்துவர்கள் ஆலோசனையின்படி மருந்துகள் உட்கொள்வதே சிறந்தது.காசநோய்க்கு சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு மருத்துவர்கள் 2 மாதத்துக்கு ஒருமுறை எக்ஸ்ரே எடுத்து பார்ப்பார். உடல் எடை அதிகரிக்கிறதா? என்று சோதிப்பார். ரத்த பரிசோதனையும் மேற்கொள்வார். காசநோயானது யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.
நுரையீரல் புற்றுநோய்:
சாதாரணமாக புற்றுநோய் எதனால் வருகிறது என்று கண்டுபிடிக்க முடியாது. ஆனால் பீடி, சிகரெட் பிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வர அதிகம் வாய்ப்பு உண்டு. புகைபிடிப்பவர்களுக்கு இதய நோய், காசநோய் அல்லது புற்றுநோய் வரலாம். புற்றுநோயை ஆரம்பத்தில் கண்டுபிடித்தால் கதிரியக்க சிகிச்சை அளித்து சரி செய்யலாம். புற்றுநோய் தீவிரம் அடைந்தால் உயிர் பிழைக்க முடியாது.
நுரையீரல் செயலிழப்பு:
தூசு அதிகமாக பறக்கும் தொழிற்சாலைகளில் பணியாற்றுபவர்கள், கல் உடைக்கும் இடங்களில் பணியாற்றுபவர்கள் இந்த நோயால் பாதிக்கப்படுவர். நுரையீரலை பாதுகாக்க எங்கு சென்றாலும் முக கவசம் அணிந்து கொள்வது சிறப்பு. கொரோனா பரவும் காலத்தில் தான் முக கவசம் அணிய வேண்டும் என்று இல்லை. மக்கள் அதிகம் கூடும் இடங்களுக்கு செல்கிறோம், தூசு நிறைந்த சாலைகளில் பயணிக்கிறோம். அந்த சமயங்களில் முககவசம் அணிந்து கொள்வது நல்லது. 10 ரூபாய் முக கவசம் நம் உயிரை, நுரையீரலை காக்கும் பொக்கிஷம்.
அடுத்து பீடி, சிகரெட் பிடிக்கக் கூடாது. கூட்டம் அதிகமாக இருக்கும் இடங்களில் இருமல் வந்தாலோ, தும்மினாலோ கர்ச்சீப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். நல்ல மூச்சுப்பயிற்சி எடுக்கும் போது நுரையீரல் பலம் பெறும். எனவே தினமும் அதிகாலை வேளையில் 15 நிமிடம் மூச்சுப்பயிற்சி எடுங்கள். உடலை பாதுகாக்க தினமும் 45 நிமிடம் ஒதுக்குங்கள். 15 நிமிடம் மூச்சுப்பயிற்சி, 15 நிமிடம் உடற்பயிற்சி, 15 நிமிடம் தியானம் என பிரித்துக் கொண்டு பயிற்சி செய்தால் நோய்கள் நம்மை எளிதில் நெருங்காது.
தொடர்புக்கு:info@kghospital.com, 98422 66630