சிறப்புக் கட்டுரைகள்

கருணை தெய்வம் காஞ்சி மகான்-65

Published On 2022-10-26 15:45 IST   |   Update On 2022-10-26 15:45:00 IST
  • கருணை தெய்வம் காஞ்சி மகான் குறித்து ஆன்மிக சொற்பொழிவாளர் பி. சுவாமிநாதன் ‘மாலைமலர்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.
  • பெரியவாளை வணங்கி அனைத்தையும் ஒப்புவித்தார்.

'மகானுக்கு பிக்‌ஷாவந்தனம் செய்வதற்காக சென்னையில் இருந்து காஞ்சிபுரம் வந்தார்கள் தியாகராஜனின் குடும்பத்தினர்.

முதல் நாள் மாலை தன் சந்நிதியில் தியாகராஜன் இருக்கும்போதே, 'எவற்றை பிக்‌ஷாவந்தனம் செய்தால் சிறப்பு?' என்று ஒரு வேத பண்டிதரிடம் கேட்டார் பெரியவா.

'என்னது... பெரியவாளுக்குத் தெரியாத விஷயமா?' என்று திகைத்த அந்த வேத பண்டிதர் 'என்ன காரணமோ... யாருக்காக இந்தக் கேள்வியோ?' என்று உணர்ந்தார். பெரியவாளை வணங்கி அனைத்தையும் ஒப்புவித்தார். அவை தனக்காகச் சொல்லப்படுவது போல் உணர்ந்த தியாகராஜன், அடுத்த நாளே அனைத்தையும் தயார் செய்தார்.

இதோ, இப்போது காஞ்சி ஸ்ரீமடத்துக்குள் நுழைந்து விட்டார்.

பிக்‌ஷாவந்தனத்துக்குத் தேவையான சகல விதமான மாவுப் பொருட்களையும் மிகப் பெரிய பாத்திரங்களில் சேகரித்தார்கள். அவற்றைக் கச்சிதமாக எடுத்துக் கொண்டு வந்தார்கள். எல்லாவற்றையும் மகா பெரியவா திருச்சந்நிதி முன் வைத்தார்கள்.

அதன் பின் நமஸ்கரித்து எழுந்தார்கள் தியாகராஜனின் குடும்பத்தினர். அப்போதுதான் பக்தர்களுக்கு தீர்த்தப் பிரசாதம் கொடுத்து முடித்து விட்டு, ஏகாந்தமாக இருந்தார் பெரியவா.

தியாகராஜனையும் மற்றும் அவரது குடும்பத்தினரையும் தீர்க்கமாகப் பார்த்தார். அவர்கள் கொண்டு வந்து வைத்த மிகப் பெரிய பாத்திரங்களைப் பார்த்தார். பிறகு தனக்கு எதுவுமே தெரியாதது போல், ''ஓ... நேத்திக்குக் கார்த்தால பேசிண்டிருந்ததைக் கேட்டுட்டு, எல்லாத்தையும் கொண்டு வந்து வெச்சுட்டியோ?'' என்று ஒரு புன்னகையுடன் கேட்டார்.

தியாகராஜன் விதிர்விதிர்த்துப் போனார். 'அப்படியானால், இவற்றையெல்லாம் உன் பிக்‌ஷாவந்தனமாகக் கொண்டு வந்து சேர்க்க வேண்டும் என்பதற்காகத்தான் அந்தப் பண்டிதருடன் பேசிக் கொண்டிருந்தாரா பெரியவா?'

பெரியவா இப்படிக் கேட்ட மறு விநாடி, தியாகராஜனின் விழிகளில் நீர் சுரந்தது. கன்னங்களில் மாறி மாறி அறைந்து கொண்டு 'சர்வேஸ்வரா...' என்று நெடுஞ்சாண்கிடையாகத் தரையில் நமஸ்கரித்தார்.

ஒருவருக்கு ஒரு பொருளைக் கொடுப்பது என்பது சிறப்பு.

அதுவும், அவருக்குப் பிடித்தமான பொருளைக் கொடுப்பது என்பது வெகு சிறப்பு. ஒரு வீட்டில் இருக்கிற குழந்தையைப் பார்க்கப் போகிறோம். அந்தக் குழந்தைக்குக் கொடுக்க ஏதேனும் பொருள் வாங்க வேண்டுமென்றால், பொம்மைகளையும் சாக்லெட்டுகளையும் வாங்கிப் போகிறோம்.

நடுத்தர வயதுள்ளவர்கள் என்றால், இனிப்புப் பொருட்களை வாங்கிச் செல்கிறோம். முதியவர்களுக்கு என்றால், பழங்களை வாங்கிச் செல்கிறோம். எந்த இடத்துக்குச் செல்கிறோமோ, எவருக்கு எது பிடிக்குமோ, அதற்கு ஏற்ற பொருட்களையே வாங்கிச் செல்கிறோம்.

கொடுப்பது என்று தீர்மானித்து விட்டால், பிடித்ததைக் கொடுக்கலாமே!

பிடித்ததைக் கொடுக்கும்போது அன்பும் அரவணைப்பும் இன்னும் அதிகமாகுமே!

மகா பெரியவாளுக்கு என்ன பிடிக்கும்?

ஒரு சந்நியாசிக்கு இன்னதுதான் பிடிக்கும் என்று சொல்ல முடியுமா?

அப்படி ஒருவேளை 'இன்னது எனக்கு ரொம்பப் பிடிக்கும்' என்று ஒரு சந்நியாசி சொல்லி விட்டால், ஆசைகளை இன்னும் அவர் முற்றும் துறக்கவில்லை என்று அர்த்தம் ஆகி விடும். உள்ளங்கையில் என்ன விழுகிறதோ, அதுவே இன்றைய பிக்ஷை என்று சந்தோஷத்துடன் ஏற்றுக் கொள்பவர்கள் சந்நியாசிகள். கட்டிய வேஷ்டியுடன் வீட்டை விட்டு வெளியேறினார் பட்டினத்தார். துறவு என்று ஆன பிறகு அனைத்தையும் உதறி, கட்டியிருந்த வேட்டியையே கோவணமாக்கி அணிந்தார் ரமண மகரிஷி.

'இனிப்புப் பொருள் உடல்நலனுக்கு உகந்ததில்லை' என்பதை உணர்ந்த பின், இனிப்பு உட்கொள்வதை விடுத்தார் ராமகிருஷ்ண பரமஹம்சர். எனவே, 'எனக்கு இதெல்லாம் பிடிக்கும். இந்த மாவுப் பொருட்களைக் கொண்டு வா' என்று பெரியவா கேட்டதாக இந்த இடத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது.

'பிக்‌ஷாவந்தன காலத்தில் சந்நியாசிகளுக்கு இவற்றை எல்லாம் அளித்தால், உனக்குப் புண்ணியம் கூடும்.'

தனது அத்யந்த பக்தனான தியாகராஜனுக்குப் பெரியவா மறைமுகமாகச் சொன்ன செய்தி இது.

ஒரு சில நிமிட இடைவெளிக்குப் பிறகு, தியாகராஜன் கொண்டு வந்து சேர்த்த மாவுப் பாத்திரங்களை விரலால் அடையாளம் காண்பித்துப் பெரியவா கேட்டார்: ''என்ன... இதெல்லாம் சேகரிக்கறதுக்கு சுமார் முந்நூறு ரூபா ஆகி இருக்குமா?''

தியாகராஜன் ஆச்சரியப்பட்டுப் போனார்.

ஆம்! இத்தனை பொருட்களையும் மளிகைக் கடையில் வாங்குவதற்கு சுமார் முந்நூறு ரூபாய்தான் ஆனது அவருக்கு.

அதெப்படி பெரியவா அத்தனை துல்லியமாகச் சொன்னார்?

உலகின் இயக்கத்தையே இருந்த இடத்தில் சொல்லும் அவருக்கு, சாதாரணமான ஒரு மளிகைக் கடைக் கணக்கு தெரியாமல் போகுமா?

''ஆமா பெரியவா... அவ்ளோதான் ஆச்சு'' என்று கைகூப்பினார் தியாகராஜன். அதன் பின் அனைவரும் ஸ்ரீமடத்தில் உணவு சாப்பிடச் செல்லுமாறு சொன்னார் பெரியவா. ஒரு சிப்பந்தியையும் உடன் செல்லுமாறு உத்தரவிட்டார்.

சாப்பிடப் போனார்கள். பெரியவாளும் ஓய்வெடுக்கப் போனார்.

சாப்பிட்டு முடித்த பின் ஒரு மூலையில் அமர்ந்தார் தியாகராஜன். பெரியவாளுக்குக் கைங்கர்யம் செய்து வரும் சிப்பந்திகளுடன் சிறிது நேரம் அளவளாவிக் கொண்டிருந்தார். நேரம் மெல்ல ஓடியது.

மாலைப் பொழுது வந்தது. சென்னைக்குக் கிளம்பத் தயாரானார்.

மகா பெரியவாளின் திருச்சந்நிதிக்குச் சென்றார் குடும்பத்தினருடன்.

''புறப்படறேன் பெரியவா... உத்தரவு குடுக்கணும்'' என்று வேண்டி நின்றார். தன் அணுக்கமான பக்தர்களுக்கு அத்தனை சுலபத்தில் உத்தரவு கொடுத்து விடுவாரா பெரியவா?

தனக்கு இன்னொரு அசைன்மெண்ட் பெரியவா வைத்திருக்கிறார் என்பது தியாகராஜனுக்கு எப்படித் தெரியும்?

பெரியவா திருவாய் மலர்ந்தார் தியாகராஜனைப் பார்த்து. ''சின்ன காஞ்சிபுரம் மடத்து பாடசாலைல வேதம் கத்துக்கற பசங்களுக்கெல்லாம் ரொம்ப ஜுரமா இருக்காம். போய்ப் பாத்துட்டு வா'' என்றார்.

எதுவும் யோசிக்கவில்லை. ''உத்தரவு பெரியவா'' என்று பெரியவாளுக்கு நமஸ்காரம் செய்தார். அடுத்த விநாடி, மகானின் ஆணையை நிறைவேற்றக் கிளம்பினார்.

அடுத்த பத்தாவது நிமிடத்தில் சின்ன காஞ்சிபுரம் பாடசாலையில் இருந்தார். தன்னை இந்தப் பாடசாலைக்குப் பெரியவா அனுப்பியதைப் பெரும் பாக்கியமாக எண்ணினார். பாடசாலைக்குள் நுழைந்த தியாகராஜனுக்குப் பேரதிர்ச்சி.

ஆம்! பாடசாலை மாணாக்கர்களின் முகத்தில் ஒரு பொலிவு இல்லை. உஷ்ணத்தின் தகிப்பு அவர்களின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்தது. பிஞ்சு வேத வித்துக்களின் முகத்தின் தென்பட்ட இந்த சோகத்தைக் கண்டு மனம் நொறுங்கிப் போனார்.

மாணாக்கர்கள் ஒவ்வொருவரின் கையிலும் தலா இரண்டு ரூபாயைக் கொடுத்தார். வேத பாடசாலை வாத்தியாரின் கையில் இருபது ரூபாய் கொடுத்தார். அவரை நமஸ்கரித்தார்.

அந்தக் காலத்திலே இரண்டு ரூபாய், இருபது ரூபாய் என்பதெல்லாம் சாதாரணம் இல்லை. தியாகராஜனின் மனம் அப்படி. அதுவும் பெரியவா சொன்ன காரியம் இது. பெரியவா கைங்கர்த்தில் என்றுமே கணக்குப் பார்த்ததில்லை இவர். வேத பாடசாலை மாணாக்கர்களுக்குக் கொடுக்கப்படுகிற சிகிச்சை முறைகளைப் பற்றிப் பாடசாலை வாத்தியாரிடம் (குரு) கேட்டறிந்தார். அரை மணி நேரம் அங்கு இருந்து விட்டு, காஞ்சி ஸ்ரீமடத்துக்குத் திரும்பினார்.

தியாகராஜனின் வரவுக்காகவே காத்திருப்பது போல் பெரியவா அமர்ந்திருந்தார். உள்ளே நுழைந்தவர், பெரியவாளுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து விட்டு மகானின் திருமுகத்தைப் பார்த்தார்.

''பார்த்திட்டு வந்துட்டியா?'' - பெரியவா.

''பாத்துட்டு வந்துட்டேன் பெரியவா.'' ''ஜுரத்துல பசங்கல்லாம் கஷ்டப்படறாளா?'' ''ஆமா பெரியவா. ஒவ்வொருத்தர் முகத்தைப் பாக்கறதுக்கே கஷ்டமா இருக்கு.'' ''பசங்களை ஆஸ்பத்திரிக்கு அழைச்சுண்டு போனாளாமா?'' ''ஆமா பெரியவா.''

''எப்படி அழைச்சுண்டு போனாளாம்?'' - கேள்வியைக் கேட்கிறபோது பெரியவாளின் முகத்தில் ஒரு சோகம் இழையோடியது.

'வேதரட்சகன்' என்று மகா பெரியவாளை இன்றைய பண்டிதர்கள் போற்றுகிறார்கள். 'வேதங்களின் காவலன்' என்று பெருமிதத்துடன் சொல்கிறார்கள். இன்றைக்கு வேதங்கள் தழைத்துக் காணப்படுகின்றன என்றால், அதற்கு மகா பெரியவாளே முழு முதற் காரணம். என்ன பதில் சொன்னார் தியாகராஜன்?

(தொடரும்) swami1964@gmail.com

Tags:    

Similar News