சிறப்புக் கட்டுரைகள்

நேருவுக்கு கண்ணதாசன் எழுதிய நிகரில்லா கவிதைகள்

Published On 2022-10-08 16:00 IST   |   Update On 2022-10-08 16:00:00 IST
  • இந்தியத் திருநாட்டினை, நேரு குடும்பம் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதை அனைவருமே அறிவார்கள்.
  • ஒரு மனிதனுடைய பெருமை, அவனது இறப்பிலேதான் தெரிய வரும் என்று சொல்வார்கள்.

இந்தியத் திருநாட்டினை, நேரு குடும்பம் எவ்வளவு தூரம் நேசித்தார்கள் என்பதை அனைவருமே அறிவார்கள். நேருவின் தந்தை மோதிலால் நேரு, அவருடைய தந்தை கங்காதர் நேரு அனைவருமே விசுவாசமுள்ள தேச பக்தர்கள். தங்களின் உடல், பொருள், ஆவி அனைத்தையும் பாரத தேசத்திற்காக ஈந்தவர்கள்.

புகழ் பெற்ற வழக்கறிஞராகத் திகழ்ந்திட்ட மோதிலால் நேரு இந்திய விடுதலைக்காக சொத்து, சுகம் அனைத்தையுமே ஈந்தவர் மட்டுமல்ல இழந்தவரும் ஆவார். தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறடி பாயும் என்பார்களே. அதை நிரூபித்துக் காட்டியவர் பண்டித ஜவகர்லால் நேரு.

தான் எழுதி வைத்த உயிலிலே கூட இந்த பாரத தேசத்தின் வயல்களில் எல்லாம், எனது சாம்பலைத் தூவுங்கள், புண்ணிய நதிகள் அனைத்திலும் எனது அஸ்தியைக் கரைத்து விடுங்கள் என்று வித்தியாசமாக எழுதியிருந்தார் நேரு. அப்படி என்றால் இந்த நாட்டின் மீது எத்தனை பாசமும் நேசமும் நேரு கொண்டிருந்தார் என்பதைச் சொல்லத் தேவையில்லை.

இதைத்தான் நமது கவியரசர் கண்ணதாசன்

கங்கை தனி நதியே- உனக்கோர்

கருணை வாய்த்ததடி...

பொங்கும் கடலலையே-உனக்கோர்

புகழும் வாய்த்ததடி...

மன்னவன் சாம்பலிலே- ஒருதுளி

என்னுடன் சேரா தோ... அவன்

தன்மை படியாதோ-எனக்கோர்

தைரியம் தோன்றாதோ என்று பாடுகிறார்.

கங்கை நதிக்கும், கடல் அலைக்கும் வாய்த்த பெருமை எனக்கும் வாய்த்திருந்தால், இன்னும் பல மடங்கு தைரியமுள்ள மனிதனாக நான் வாழ்ந்திருப்பேனே என்று தனது ஆதங்கத்தை வெளிபடுத்துகிறார் கண்ணதாசன்.

தலைநகர் தெருவில் எங்கள்

தலைவன் நீ செல்லும் பொழுது

தலையசைப்பாரைக் கண்டு

கையசைப்பாயே இன்று

அலையெனத் திரண்ட கூட்டம்

அசைத்ததே கையை ஐயா...

தலையை ஏன் மறைத்துக் கொண்டாய்

தவறென்ன செய்தோம் நாங்கள்

என்று கம்பீரமாக நேரு நடை போட்ட காலங்களையும் இப்போது கண்மூடி விட்ட காலத்தையும் நினைத்துப் பார்த்து உன்னை இழப்பதற்கு நாங்கள் ஏதும் தவறு செய்து விட்டோமா எனக் கேட்டு வருந்துகிறார் கவியரசர்.

உலகம் கூடி ஒரு குரல் கூட்டி

அழுத கண்ணீரே ஆற்றுப் பெருக்கம்

கடல் சூழ் உலகை படை சூழாமற்

காத்தவனாதலால் கடலும் அழுதது

நேரு மறைந்த துயர் எண்ணி உலகம் அழுத கண்ணீர் ஆறாகப் பெருகி... கடலாகவே ஆகி விட்டது. அப்படிப்பட்ட கடலையும், எந்தப் படையும் வந்து சூழ்ந்து விடாமல் பாதுகாத்து நின்ற நேருவை நினைத்து கடலும் அழுதது என்று, உருக்கமாகப் பாடுகிறார் கண்ணதாசன்.

உயர்தினை மாந்தர் மட்டுமல்ல, இயற்கையும் நேருவுக்காக கண்ணீர் வடித்தது என்பதை எத்தனை நயமாக உரைத்திருக்கிறார் கண்ணதாசன்.

நிருபர்களிடம் பேசும் பொழுது, இன்னும் சில காலம் இருப்பேன் என்று சொன்ன நேரு, இப்படித் தவிக்க விட்டுப் போய் விட்டாரே என்பதை

"கண்ணீர் பிறக்கும் கண்ணீரனைத்தும்

இன்று தீர்ந்தது இதயத்திலிருந்த

விளக்கும் அணைந்தது, வீடும் இருண்டது

குன்றதும் சாய்ந்தது கொள் சமாதான

மன்றம் சரிந்தது. தென்றலும் ஓய்ந்தது

தலைவன் பலநாள் சரித்திரம் படைத்தான்

சாவும் இன்னொரு சரித்திரம் கொண்டது

இருப்பேன் பலநாள் என்றவன் சொன்ன

இன்சொல் வந்த இரண்டாம் நாளே

வன்சொல் வந்தது எனப்பாடிப் புலம்புகிறார் கண்ணதாசன்.

வல்லரசு நாடுகளான அமெரிக்காவும், ரஷ்யாவும் ஒன்றுக்கொன்று மோதாமல் நடுவிலே நின்றவர் நமது நேரு. கீழ்த்திசை நாடுகளை மேற்திசை நாடுகள், விழுங்கி விடாமல் பாதுகாத்தவரும் நமது நேருவே என்பதை

"வலமும் இடமும் மோத விடாது

நடுவில் நின்றான் எங்கள் நாயகன்

மேற்கே கிழக்கை விழுங்க விடாது

விழித்தே கிடந்தான் எங்கள் மன்னவன்"

எனச்சொல்லி போயின... போயின...

அனைத்தும் போயின என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார் கண்ணதாசன். அழுதோம், அழுவோம் அது வல்லாது

தொழுவதற்க கினிமேல் தூயவனில்லை

எதிர்காலத்தே இருளே சூழ்ந்தது

எந்த வேங்கை இனி எமை வெல்லுமோ...?

எந்த நெருப்பில் எம்முயிர் வீழுமோ...?

கேள்வியை நான்தான் கேட்கின்றேன்

பதிலைச் சொல்ல பண்டிதர் இல்லை

என்று அடுத்த கவிதையிலும் தனது வேதனையை வெளிப்படுத்தி சோகமுருகிறார் கண்ணதாசன்.

ஒரு மனிதனுடைய பெருமை, அவனது இறப்பிலேதான் தெரிய வரும் என்று சொல்வார்கள். ஒரு மாபெரும் தலைவனின் பெருமையும் அப்படித்தானே... அதுவும் உலகமே போற்றிய ஒப்பற்ற தலைவர் என்றால் அந்த மரியாதை என்பது சொல்லில் அடங்காதது என்கிறார் கண்ணதாசன்.

விருந்துகள் விழாக்கள் என்றும்

விடுதலைத் திருநாள் என்றும்

பறந்து நீ பார்த்த கூட்டம்

பலப்பல... ஆனால் ஐயா...!

இறந்து நீ கிடந்த போது

எழில்முகம் காண வந்து

கரைந்தோர் கூட்டம் தன்னைக்

காணநின் கண்கள் இல்லை...

மாதர்கள் வடித்த கண்ணீர்

மழையெனப் பொழிந்ததையா

தூதர்கள் வடித்த கண்ணீர்

துளியெல்லாம் வெள்ளம் ஐயா...

பாதைதோறும் உடலைப் பார்த்து

படைபோல நின்ற கூட்டம்

வேதனையாலே நெஞ்சம்

வெடித்திட அழுததையா...

ஆனந்த பவனம் இன்று

ஆனந்தம் இழந்த தையா..

தானந்த மாளிகைக்குள்ளே

தலைநிமிர்ந் திருந்த நாளை

நானின்று நினைக்கும்போது

நரம்பெலாம் சோர்ந்த தையா..

தேன்நின்ற கமலப் பூவே

திரும்ப அந்நாள் வாராதோ...?

என்று எளிமையான சொற்களில் எல்லோரும் புரிந்து கொள்ளும் வகையில் இரக்கம் நிறைந்த இரங்கலைத் தெரிவிக்கிறார் கண்ணதாசன்.

கண்ணதாசன் எழுதுகிற ஒவ்வொரு கவிதையிலும் ஒவ்வொரு சொல்லும் பொருள் பொதிந்ததாகவே இருக்கும். பொருளில்லாச் சொற்களை இட்டு நிரப்புவதற்காக ஒரு போதும் எழுத மாட்டார். ஆனால் உணர்ச்சி வெள்ளம் கரைபுரண்டு வரும் போது.... இலக்கண வரம்பையும், இலக்கிய மரபையும் பார்க்க மாட்டார்.

காவியமல்ல... கண்ணீர் ஓவியம்

கப்பல் தலைவனின் ஒப்பிலா வாழ்வை

பாவியலாக்கும் பக்தனின் முயற்சி

அவனோர் தெய்வம்! அதற்கும் மேலவன்

சிறப்பினைக் கூறத் திறன் எனக்கில்லை.

அவனைப் பற்றி ஆயிரம் கவிதை

எழுதி எழுதிநான் எழுத்தை நேசித்தேன்.

இலக்கண வரம்போ... இலக்கிய மரபோ

எதையும் பார்த்துநான் எழுதவே இல்லை

தோன்றிய தனைத்தும் சொன்னேன்... மன்னன்

ஊன்றிய நெஞ்சை உலகினில் விரித்தேன்...

என்று என் மனம் போன போக்கில், எனது எழுது கோல் சென்ற திசையில் என்னவெலாம் தோன்றியதோ அதையெலாம் எழுதினேன் என்கிறார் கண்ணதாசன்.

"ஆய்ந்தவிந் தடங்கிய அறிவின் ஊற்று

பாய்ந்தெதிர் வெல்லும் பகைவர் கூற்று

ஓய்வொழி வின்றி உருளும் சக்கரம்

காய்த்துக் கனிந்த கருணைக் கனிமரம்"

"மலர்களில் ரோஜா, மலைகளில் இமயம்

அமைதி வானத்தின் அருட்பொழி நிலவு

கூனற் குரங்குகள் குரலில் விழா

ஞானத் தலைவன், நாநயச் செல்வன்

தனக்கென வாழாப் பிறர்க்குறியாளன்

பிறப்பில் இவன்போல் பிறந்தவரில்லை

சிறப்பில் இவன்போற் சிறந்தவரில்லை

இறப்பிலும் இவன்போற் இறந்தவரில்லை- என்று நேருவின் ஆற்றலையும், குணவியல்புகளையும் அளந்து காட்டுகிறார் கண்ணததாசன்.

"என்றோ... எங்கோ... எப்பொழுதோ... ஓர்

அற்புத மனிதன் அவதரிக்கின்றான்

அறுவடை யானபின் அளக்கும் நெல்போல்

மாண்டபின் தானவன் மகிமை தோன்றும்.."

என்றும்..

"எங்கள் தலைவா! இனிய கரும்பின்

சாறெனக் காக்கி சக்கையில் வாழ்ந்த

திங்களே...! தெய்வத் திருவின் நிழலே

தேவான் தோட்டத்து திராட்சை கொடியெனப்

பாவம் நீக்கி... பழியில் இருந்து

தேசம் காத்த தெளிநீர்ச் சுனையே..."

என்றும் 15.11.1964-ம் ஆண்டு, சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற நேரு பிறந்த நாள் கவியரங்கில் நேருவைச் சிறப்பித்துப் பாடி எல்லோரின் பாராட்டையும் பெற்றார் கண்ணதாசன்.

"தனியே எனக்கோர் இடம் வேண்டும்-தலை

சாயும் மட்டும் நான் அழவேண்டும்

வானகம் போய்வர வழிவேண்டும்-எங்கள்

மன்னனை நான்பார்த்து வரவேண்டும்

பறக்கும் பறவைக் கூட்டங்களே-எங்கள்

பண்டித நேருவைக் காண்பீரோ... இங்கு

துடிக்கும் கோடி உள்ளங்களை-அந்த

தூயவனிடம் கொண்டு சேர்ப்பீரோ..."

என்று தன் உள்ளக் கிடக்கையினை கவிதையாக்கி, நம் உள்ளங்களில் நேருவை நிலைநிறுத்துகிறார் கண்ணதாசன். இப்படிப் பட்ட மாபெரும் தலைவர் நமது வாரிசுகள் வழியே ஒருநாள் நம் கண்முன்னே தோன்றினால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும்? என்று சிந்திக்கிறார்.

என்றோ ஓர்நாள் இன்னொரு நேரு

பிறப்பான், அதுநம் பிள்ளைகள் நாளில்

நடந்தால் "இறைக்கு" நன்றி சொல்லுவோம்

அழுத கண்ணீர் ஆறுமுன்னாலே

எழுத வார்த்தை இதற்கு மேல் இல்லை- என்று கண்ணீர் மல்க கவிதையை முடிக்கிறார் கண்ணதாசன். தான் உளமாற நேசித்த ஒரு தலைவனுக்கு இப்படி ஓர் கவிதாஞ்சலியை எந்த ஒரு கவிஞரும் செய்ததாக இதுவரை வரலாறில்லை.

அடுத்த வாரம் சந்திப்போம்.

Tags:    

Similar News