சிறப்புக் கட்டுரைகள்

பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி


சகோதரத்துவம் வளர்க்கும் ஜாதக பலன்கள்

Published On 2022-08-09 14:44 IST   |   Update On 2022-08-09 14:44:00 IST
  • இந்தியர்களின் சமுதாய கட்டமைப்பே கூட்டுக் குடும்பமாக வாழ்வது தான்.
  • கலியுகத்தில் உடன் பிறப்புகள் பெற்றோரின் அன்புக்காகவும், சகோதர பாசத்திற்காகவும் ஏங்குவது குறைவு.

இந்தியர்களின் சமுதாய கட்டமைப்பே கூட்டுக் குடும்பமாக வாழ்வது தான். சமீப காலத்தில் கூட்டுக் குடும்பத்தை பார்ப்பதே மிகவும் அரிதாகி விட்டது.

தாய், தந்தை மற்றும் உடன் பிறந்தவர்களுடன் கூட்டுக் குடும்பமாக வாழா விட்டாலும் பரவாயில்லை, எல்லோருடனும் ஒற்றுமையாக, அன்பாக வாழ்ந்தால் கூட போதும் என்ற நிலைக்கு சமுதாயம் உந்தப்பட்டுள்ளது. இன்றைய பொருளாதார சூழலில் ஒரு குழந்தையின் தேவையை நிறைவு செய்வதே கடினமாக உள்ளதால் ஒன்றே ஒளிமயம் என்ற முடிவில் வாழும் பெற்றோர்கள் பலர் உள்ளனர். கஷ்டமோ நஷ்டமோ உடன் பிறப்பு இல்லாத குழந்தைகள் அவசர உதவிக்கு பிறரை எதிர்பார்த்து வாழ வேண்டும் என்பதால் சகோதரம் வேண்டும் என்று நினைக்கும் பெற்றோர்களும் இருக்கிறார்கள்.

வெகு சில பெற்றோர்கள் தங்கள் வயோதிகத்தில் தங்களை ஏதாவது ஒரு பிள்ளையாவது பராமரிக்கும் என்ற ஆர்வத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தையை பெற்றுக் கொள்கிறார்கள். ஜோதிடம் பார்க்க வருபவர்களில் பலர் சகோதர, சகோதரிகள் கருத்து ஒற்றுமையுடன் இருப்பார்களா? என்று உடன் பிறப்பைப் பற்றிய ஒரு கேள்வியை கேட்காமல் எழுந்து போவதே கிடையாது. பல பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் ராமர், லட்சுமணனாகவும், பாசமலர் அண்ணன், தங்கையாகவும் வாழ்வதையே விரும்புகிறார்கள். உடன் பிறந்தவர்களால் யாருக்கு ஒத்துழைப்பு கிடைக்கும்? யாருக்கு உபத்திரம் உண்டாகும் என்பதை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.

ஜோதிட ரீதியாக ஒருவரின் சுய ஜாதகத்தில் லக்னத்திலிருந்து 3-ம் இடத்தின் மூலம் இளைய சகோதர, சகோதரி பற்றியும் 11-ம் இடத்தின் மூலம் மூத்த சகோதர, சகோதரி பற்றியும் அறிய முடியும். சகோதர பலம் ஒற்றுமையை தீர்மானம் செய்வதில் 3,11-ம் பாவகத்துடன் செவ்வாய் கிரகமே பெரும் பங்கு வகிக்கிறது.

ஒருவரின் ஜாதகத்தில் செவ்வாயின் நிலையே இந்த பிறவியில் உடன் பிறந்தவர்களின் நிலை, கருத்து ஒற்றுமை, உடன் பிறந்தவர்கள் மூலம் அனுபவிக்க இருக்கும் இன்ப, துன்பங்களை தெளிவுபடுத்தும். செவ்வாயே ரத்தக் காரகன், பூமிக்காரகன். உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட மண் ஆசை, பொன் ஆசை, பணம் இந்த மூன்றுமே பிரதானமான காரணம்.

இந்த கலியுகத்தில் உடன் பிறப்புகள் பெற்றோரின் அன்புக்காகவும், சகோதர பாசத்திற்காகவும் ஏங்குவது குறைவு. வயதான பெற்றோரை பராமரிப்பதற்காகவும் அவர்களின் உடமைகளுக்கு உரிமை கொண்டாடுவதற்கும் சண்டையிடும் உடன் பிறப்புகளே அதிகம். உப ஜெய ஸ்தானங்களான 3, 11-ம் பாவகங்கள் வலிமை பெற்ற சகோதரர்கள் ஒரு பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கி தங்களுக்கு என்று தனி முத்திரை படைத்து வருகிறார்கள். அத்துடன் 3,11-ம் இடத்தில் நிற்கும் கிரகம், செவ்வாய் சுப பலம் பெற்றிருந்தால் சகோதரர்கள் தம் வாழ்வில் நடக்கும் எத்தகைய சம்பவங்களையும் மிகவும் சர்வ சாதாரணமாக எதிர் கொள்வார்கள். திறமையான அணுகு முறையுடைய பெருமைக்குரிய சாமர்த்தியசாலியாக திகழ்கிறார்கள். அதே போல் 3, 11-ல் லக்ன ரீதியான சுப கிரகங்கள் ஆட்சி, உச்சம் பெற்றாலும் ஜாதகருக்கு இளைய சகோதரரின் ஆதரவும், உதவியும், அன்பும், பாசமும் கிடைக்கும். சகோதரர்களும் நல்ல வாழ்க்கை வாழ்வார்கள். ஜாதகத்தில் லக்ன அதிபதி 2, 3-ம் அதிபதி ஒருவருக்கொருவர் தொடர்பு பெற்று குரு அல்லது சுபர் பார்வையை பெற இளைய சகோதரர்களால் உதவி கிடைக்கும்.

ஜனன ஜாதகத்தில் லக்னம் இரண்டு, பதினொன்றாம் அதிபதி குரு பலம் பெற்றால் மூத்த சகோதரர் உதவி கிடைக்கும்.

3, 11-ம் இடத்தில் நீசம், பகை பெற்ற கிரகம் இருக்க, 3, 11 இடத்து அதிபதி 6,8,12-ல் மறைய 3, 11-ம் அதிபதியுடன் லக்ன ரீதியான அசுப கிரகங்கள் இணைய சகோதர இழப்பு, சகோதரர்கள் ஒற்றுமை குறைவு, சகோதர பகை, போன்றவை ஏற்படும். அதே நேரத்தில் செவ்வாய், மூன்று, பதினொன்றாம் பாவகத்தில் இந்த அமைப்போடு இருந்தால், வேண்டாவெறுப்பாக உதவி செய்யும் நிலையில் இருப்பார்கள். 3 , 11-ம் அதிபதி 6, 8-ல் மறைந்து லக்ன அவயோக நட்சத்திரம் பெற்று ,சனி,ராகுவின் தொடர்பில் இருந்து, செவ்வாயும் வலு குறைந்தால் சகோதர, சகோதரிகளின் உதவிகள் கிடைக்காது.

முன்வினைக் கர்மாவின் தொடர்ச்சியே இப்பிறவி. லக்னத்திற்கு 6,8,12-ல் மறையும் செவ்வாய்யின் முன் ஜென்ம தொடர்ச்சியே இப்பிறவி. மிகத் தெளிவாக கூற வேண்டும் என்றால் சென்ற பிறவியில் பூமி தொடர்பாக உடன் பிறந்தவர்களின் பங்கை ஏமாற்றியவர்கள். இந்த பிறவியில் அந்த சொத்து தொடர்பான கணக்கை நேர் செய்ய எடுத்த பிறப்பாகும். ஜனன ஜாதகத்தில் 3,5,9,11-ம் பாவகத்தோடு செவ்வாய், சனி சம்பந்தம் இருந்தால் பூர்வீகச் சொப் பிரிப்பதில் பங்காளிகள், உடன் பிறந்தவர்களிடம் கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

சொத்துப் பங்கீட்டில் ஏற்படும் மனக்கசப்பு பல குடும்பங்களில் உறவுகளை பாரா முகமாக மாற்றுகிறது. சில குடும்பங்களில் அடிதடி சண்டை கூட நடக்கிறது. சிலர் கோபத்தில் பூர்வீகத்தை உதறி வேறு ஊரில், நாட்டில், மாநிலத்தில் குடியேறுகிறார்கள். சிலர் உள்ளூரில் இருந்தாலும் பேசிக் கொள்ளாமல் இருக்கிறார்கள். சிலர் தனக்கு கிடைக்காதது யாருக்கும் கிடைக்கக் கூடாது என்ற தீய எண்ணத்தால் யாரும் பயன்படுத்த முடியாத வகையில் அசுப சக்திகளான மாந்தரீகம், செய்வினை போன்றவற்றை நாடுகிறார்கள். சொத்துப் பிரச்சினை சிறிது சிறிதாக அதிகரித்து குல தெய்வ வழிபாட்டில், முன்னோர்கள் வழிபாட்டில் முறையின்மையை ஏற்படச் செய்கின்றது. குடும்ப உறுப்பினர்கள் இணைந்து முறையாக குல வழக்க பூஜை செய்வது தடைபடுகிறது. இது போன்ற செயல்கள் முன்னோர்கள் மற்றும் குல தெய்வத்தின் நல்லாசிகளை குறைக்கிறது.செவ்வாயும்காரகோ, பாவக நாஸ்தியும் 3, 11-ல் செவ்வாய் நிற்பது காரகோ பாவக நாஸ்த்தி. 3-ல் செவ்வாய்யில் இளைய சகோதரத்தாலும் 11-ல் செவ்வாய் என்பது மூத்த சகோதரத்தால் ஏற்படும் கருத்து வேற்றுமையை கூறும்.

3, 11 செவ்வாய் இருக்கும் சகோதரர்களே பெற்றோரின் உடமைகளை பங்கிட கோர்ட் வாசல் ஏறவும், ஒருவருக்கு ஒருவர் மாந்திரீகம் செய்தல், இடு மருந்து கொடுத்தல் போன்றவற்றில் காலம் கடத்தி தாமும் அனுபவிக்காமல், உடன் பிறந்தவர்களையும் அனுபவிக்க விடாமல் மூன்று தலைமுறை சொத்தை வைத்து வேடிக்கை பார்ப்பவர்கள் கோடான கோடிகள். செவ்வாய்க்கு ராகு, கேது சனி சம்பந்தம் இருந்தால் உடன் பிறப்புகள் ஜென்ம பகையாளியாகவும் மாறுகிறார்கள்.

ரத்த சம்பந்தம் உள்ள உறவுகள் முரன்பாட்டால் பிரிந்து நின்றாலும், ஒருவருக்கு ஏதேனும் துன்பம் என்றால் அந்த உறவுமுறையால் அவர் உள்ளமும் உடலும் தானறியாமலே கலங்கும். இதைத் தான் நமது முன்னோர்கள் தான் ஆடா விட்டாலும் தன் தசை ஆடும்" என்று கூறி வைத்தார்கள்.

ஜனன ஜாதகத்தில் லக்னாதிபதி பலம் பெறுவதுடன் லக்னாதிபதி 3, 11-ம் அதிபதியுடன் செவ்வாயும் சுப பலம் பெற்று இயற்கை பாவிகள் தொடர்பு இல்லாமல் இருக்கும் ஜாதகருக்கு சகோதரரின் ஆதரவு உண்டு. 3 ,11-ம் இடத்தில் ஒரு கிரகம் ஆட்சி, உச்சமாக இருந்து அந்த வீட்டதிபதியும் கேந்திர திரிகோணங்களில் அமைந்து செவ்வாயும் பலம் பெற்று சுபத்தன்மை பெற்றவர்களுக்கு காரிய வெற்றியும், சகாயங்களும்,தைரியமும், நல்ல வேலை ஆட்களும் கிடைக்க பெற்று சகோதர ஒற்றுமையோடு ,நல்ல ஆயுள் பலத்தோடு நல்ல வாழ்க்கையை ஜாதகர் வாழ்வார்.

இந்த கிரக அமைப்பு இருக்கும் சகோதரர்கள் தங்களுக்குள் பகைமை இருந்தாலும் குடும்ப பிரச்சினை வெளியே தெரியாதவாறு கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். நல்ல, கெட்ட நிகழ்வுகளை குடும்பத்துடன் ஒன்றாக இணைந்து நடத்துகிறார்கள். ஜாதகனுக்கு சகாய ஸ்தானாதிபதி பலம் பெற்று தசையை நடத்தும் போது சகோதரர்களுக்கு நன்மையும், ஜாதகருக்கு சகோதரர்களால் நன்மையும் கிடைக்கும். தைரியத்தோடு, ஆற்றலும், மன வலிமையும் பெறுவார்கள்.

3, 11-ம் இடத்தில் ராகு/கேதுக்கள் நிற்கும் சகோதரர்கள் மன வருத்தத்தில் பிரிந்தால் தங்கள் இல்லங்களில் நடை பெறும் சுப, துக்க நிகழ்வுகளுக்கு உடன்பிறப்புகளை அழைப்பதில்லை. அழைத்தாலும் பங்கேற்பதில்லை. இது போன்ற பல்வேறு நடை முறைகளில் உடன் பிறப்புகளின் பிரச்சினையை தங்களுக்கு சாதகமாக்கி மாந்திரீகம், தாந்திரீகம் என்ற பெயரில் உறவுகளை ஒட்ட வைக்க முடியும் என்ற ஏமாற்று வேலையில் இறங்கி பணத்தை இழக்கிறார்கள்.

தான் ஆடவில்லை என்றாலும் தன் தசை ஆடும் என்ற பழமொழியில் உள்ள உண்மை சகோதரர்களின் இல்லங்களில் நடக்கும் சுக, துக்கங்களில் பங்கு பெற முடியாத போதே உணர முடியும். உடன் பிறப்பு இருந்தும் பயன் இல்லாமல் தனித்து விடப்படும் போது ஏற்படும் வலியானது அதை அனுபவிப்பவர்களுக்கு மட்டுமே புரியும். பெற்ற பிள்ளைகளுக்காக, மனைவிக்காக, சொத்திற்காக உடன் பிறந்தவர்களை பகைத்தவர்கள் கடைசி காலத்தில் மனம் வெதும்புகிறார்கள். காலம் கடந்த ஞானம் பயனற்றது.

திருமணத்தடையும் குழந்தைப் பேரின்மையும் மிகுதியாகிவிட்டமையால் மனித குலம் தனது தலைமுறையை, வாரிசுகளை உருவாக்குவது கேள்விக்குறியாகி வருகிறது.

அதனால் இனி வரும் தலை முறையினருக்கு உறவுகளுடன் கருத்து வேறுபாடு வரும் வாய்ப்பும் இல்லை. ரத்த பந்த உறவுகள் என்பது அடுத்த தலைமுறைக்கு கிடைக்காத பாக்கியம். தற்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே பிரபஞ்சம் வழங்கிக் கொண்டிருக்கும் அற்புத கொடை.பிறப்பும் இறப்பும் நிச்சயமற்ற உலகில் வாழும் நாட்களில் விட்டுக் கொடுத்து வாழப்பழகினால் உறவுகளால் இன்பம் மட்டுமே நீடிக்கும். உடன் பிறந்தவர்களிடம் வேற்றுமையுணர்வுடன் வாழ்ந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலை ரத்த பந்த உணர்வை பிரதிபலிக்கும். உடல் அசையா விட்டாலும் உணர்வு அசைந்தே தீரும்.

இளைய உடன் பிறந்த சகோதரத்துடன் நல் உறவு ஏற்பட செவ்வாய்கிழமை பழநி மலை முருகனை வழி படவும். மூத்த சகோதரத்தின் அன்பை பெற விரும்புபவர்கள் செவ்வாய் கிழமை திருவண்ணாமலை அண்ணாமலை யாரை வழிபட்டு பயன்பெறவும்.

Tags:    

Similar News