சிறப்புக் கட்டுரைகள்

கமலி ஸ்ரீபால்


மருத்துவம் அறிவோம்: மனமகிழ்ச்சி நோயை விரட்டும்

Published On 2022-07-18 17:33 IST   |   Update On 2022-07-18 17:33:00 IST
  • நம் அன்றாட வாழ்க்கையில் நம் வீட்டிலேயே நம் குடும்ப உறுப்பினர்கள் இடையே பல வித்தியாச குணங்களைப் பார்க்கின்றோம்.
  • சிலர் எதற்கும் சிரித்தபடி இருப்பர். சிலர் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென இருப்பர்.

நம் அன்றாட வாழ்க்கையில் நம் வீட்டிலேயே நம் குடும்ப உறுப்பினர்கள் இடையே பல வித்தியாச குணங்களைப் பார்க்கின்றோம். சிலர் எதற்கும் சிரித்தபடி இருப்பர். சிலர் எதற்கெடுத்தாலும் சிடுசிடுவென இருப்பர். சிலர் சின்ன வார்த்தைக்கு வெள்ளமாய் அழுவர். ஒரு சங்கடமான நிகழ்வினை சிலர் எந்தவித பாதிப்பும் இன்றி ஒன்றுமே நடக்காதது போல் நடந்து கொள்வர். சிலரோ கவலையில் மூழ்கியே விடுவர்.

இன்றைய ஆய்வு கூறுவது வருடத்திற்கு வருடம் மன உளைச்சலால் தாக்கப்படுபவர்கள் கூடிக் கொண்டே வருகின்றனர். ஏன் இந்த வித்தியாசம்? ரிச்சர்ட் டேவிட்சன் என்ற நரம்பியல் விஞ்ஞானி பல ஆய்வுகளை மேற்கொண்டார். அதில் அவர் சில கருத்துக்களைக் கூறியுள்ளார்.

பலர் மன உளைச்சலோடும், மகிழ்ச்சி இன்றி இருப்பதற்கும் மிக முக்கியமான காரணமாக கூறுவது, "நாம் செய்யும் எந்த ஒரு வேலையிலும், செயலிலும், படிப்பிலும் நாம் முழு கவனத்தினை செலுத்துவதில்லை. இது மன நிறைவு இன்மையை உண்டாக்குகின்றது. இதுவே மன உளைச்சல், மனச் சோர்வு, தேவையற்ற கவலை இவற்றிக்கு காரணம்" என்கின்றார்.

'சரி' ஏன் நாம் முழு கவனத்தையும் ஒரு செயலில் செலுத்துவதில்லை. காரணம் மனம் ஒரே நேரத்தில் பல இடங்களில் அலை பாய்கின்றது. 'Wandering mind is unhappy mind" என்பார்கள். அலைபாயும் மனம் மகிழ்ச்சியற்ற மனம் என்பது இதன் பொருள்.

ஒரு சொல்லில், வேலையில் கவனம் செலுத்த முடியாதது ஒரு குறைபாடுதான். இது இன்றைய குழந்தைகளிடம் அதிகம் காணப்படுகின்றது. மேலும் இன்றைய இளைய சமுதாயம் இத்தகைய குறைபாடுகள் கூடும் பொழுது, "தற்கொலை" முயற்சி வரை செல்கின்றனர்.

பெண்களிடம் கூட இத்தகைய பாதிப்புகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர். "தனிமை" என்பது நல்ல மன உறுதி, மன நலம், ஆன்ம பலம் பெற்றவர்களுக்கு வரப்பிரசாதம் ஆகின்றது. மற்றவர்களுக்கு தனிமை மிகப்பெரிய பிரச்சினை ஆகிறது. இவர்களின் பாதிப்பினால் ஏற்படும் இறப்பு உடல் பருமன் காரணத்தினால் ஏற்படும் இறப்பினை விட சில மடங்குகள் கூடுதலாக இருக்கின்றதாம். அதிலும் 12-17 வயது வரை உள்ளோருக்கு இந்த கவனச் சிதறல், தனிமை இவை அரகள் வாழ்வில் மிகப்பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி விடுகின்றது என்கிறார்.

60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு வாழ்க்கையில் பொறுப்பு, தேவை இல்லாத பொழுது அந்த வாழ்வு வலு இழந்து விடுகின்றதாம். இவர்களின் இறப்பு கூட இரு மடங்கு வேகமாக வந்து விடுகின்றதாம். (இது அநேகமாக வெளிநாடுகளுக்கு பொருந்தும். நம்ம ஊரில் இறக்கும் வரை மனிதனுக்கு கூடுதல் சுமைதான். இது பொதுக் கருத்து) நாம் அதிகமாக சோகம், படபடப்பு இவற்றிலேயே இருக்கின்றோம். கருணை, பண்பு, அன்பு இவற்றினை கடுகளவு கூட நினைக்காதவர்களும் கூட இவ்வுலகில் இருக்கின்றனர். ஆக நாம் அழிவுப்பூர்வமானவை களை அதிகம் நினைத்தே நம் வாழ்வினை அழித்துக் கொள்கின்றோம். உடல் நலம் உள்ள நலத்தோடு, அதிக தொடர்பு உடையது என்று இதில் நன்கு புரிந்து கொள்ள முடியும்.

இதனை சரி செய்ய நமக்கு விழிப்புணர்வு தேவை. என்ன விழிப்புணர்வு. அழிவுப்பூர்வமானவை நம்முள் நுழையாமல் இருக்கும் விழிப்புணர்வு நமக்குத் தேவை. அன்போடு பிறருடன் பழக நட்புடன் பழகும் விழிப்புணர்வு தேவை. இதற்கு நம் மூளைக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். எப்போதும் நம்பிக்கையின்மை, தன்னையே நம்பாது இருத்தல் இப்படி வித விதமான அழிவுப்பூர்வங்களில் பயன்படுத்திய நம் மனதினை மாற்ற முடியுமா? மூளை மாறுமா? மாறும் என்கிறார் இந்த விஞ்ஞானி. அதற்கு அவர் ஒரு உதாரணமும் கூறியுள்ளார்.

பண்டைய ஆதி கால மனிதன் பல் தேய்க்கும் பழக்கம் உடையவனே அல்ல. காலப் போக்கில் அதுவே பழகி விட்டதல்லவா? அது போல தினமும் ஆக்கப்பூர்வமான சிந்தனைகள், கருணை, இரக்கம் இதனை அன்றாடம் வாழ்நாள் முழுவதும் பழக வேண்டும் என்கிறார். உங்கள் மனதில் தினமும் உங்களுக்குப் பிடித்தவர்களை நீங்கள் நினைத்து அவர்களை "May You be happy" என்று வாழ்த்த வேண்டும். முதலில் நமக்குப் பிடித்தவர்களை நினைத்து நீங்கள் மகிழ்வாக இருக்க வேண்டும். நீங்கள் நலமாக இருக்க வேண்டும் என்பது போல் 30 நிமிடங்கள் வரை கூட நினைக்கலாம். இது தொடரும் பொழுது நண்பர்கள், உலக நன்மை என முழு கவனம் செலுத்தலாம். இது ஒருவரை மிக மகிழ்வாக வைக்கும் என்கிறார்.

இது போன்று மற்றொரு ஆய்விலும் கூறப்படும் முக்கிய செய்தி என்ன தெரியுமா? ஜங்க் புட் எனப்படும் உணவு இன்று உலகம் முழுவதிலும் அநேக இணைய சமுதாயத்தினரை "பூதம்" போல் பிடித்து உள்ளது. இதனை தமிழாக்கமாக குப்பை உணவு என்கின்றனர். இந்த உணவு பழக்கம் ஒருவரின் வாழ்வின் தரத்தனை பண்புகளை எடுத்து விடும் என்று கூறுகின்றனர்.

இளைய சமுதாயம் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.

கர்மா என்ற வார்த்தை நம்மிடையே பழக்கத்தில் சர்வ சாதாரணமாக பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. ஏதேனும் கஷ்டத்தால் ஒருவர் அவதிப்பட்டால் 'என் கர்மா. நான் அனுபவிக்கின்றேன்' என்பார். இதன் உட்பொருளாக கூறப்படுவது நல்லதோ, கெட்டதோ எதனை நீ கொடுக்கின்றாயோ அதனையே நீ திரும்பப்பெறுவாய் என்பதுதான்.

பிறவிகளில் நம்பிக்கை கொண்டவர்களுக்கு கடந்த பிறவியின் பயனே இம்முறை வாழ்வாக அமைகின்றது என்பர். நம்புகின்றோமோ, நம்பவில்லையோ முன்னோர்கள் 12 பிரிவுகளாக இந்த கர்மாவினை பிரித்துள்ளனர். இந்த பிரிவுகளின் முறைப்படி நடந்து நாம் நல்ல கர்மாக்களை சேர்த்துக் கொள்ளலாம் என்கின்றனர்.

கர்மா என்பது நாம் என்ன செய்கின்றோமோ அதுவே திரும்ப வருவது என்று பொருள் கொண்டது. எந்த சக்தியினை நாம் வெளிக்கொண்டு வருகின்றோமோ அந்த சக்தியே திரும்ப வருகின்றது என்கின்றனர். இப்படி திரும்ப வருவது எந்த வகையிலும் வாழ்வின் எந்த காலத்திலும் வரும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

பசின் (Bacine) என்ற ஆன்மீகவாதி (இதனை ஆன்ம பல பயிற்சிகள் என்ற பொருள் இங்கு கொள்ளலாம்). குறிப்பிடும் பொழுது கர்மா சக்தி என்பது உண்மையானதே. பிரபஞ்சத்தில் புரிந்து கொள்ள முடியாத ஒரு சக்தி வியாபித்து இருக்கின்றது. மூன்று வகையான கர்மாக்களை குறிப்பிட்டு உள்ளனர்.

* ப்ராரப்த கர்மா- இந்த வாழ்வில் நாம் சேர்த்துள்ளது.

* சஞ்சித கர்மா - முற்பிறவிகளின் கூட்டு.

* ஆகாமிய கர்மா - அவ்வப்போது நாம் எடுக்கும் முடிவுகள், செயல்கள் மூலமாக ஏற்படுவது.

பொதுவில் சில வார்த்தைகள் நம் வழக்கத்தில், பேச்சில் உள்ளது. 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்'. 'வாள் எடுத்தவன் வாளால் வீழ்வான்'. இவைகளை சற்று கூர்ந்து கவனித்தால் கர்மாவினைப் பற்றி எளிதாக புரிந்து கொள்ளலாம். பசின் அவர்கள் கூறுவது நல்ல கர்மா என்பது தேவையானவர்களுக்கு உதவுவது, அன்போடு இருப்பது, மக்களிடம் அன்பு செலுத்துவது போன்றவை ஆகும்.

சிந்தனை, சொல், செயல் இவற்றினால் பிறருக்கு தீங்கு செய்யாது இருப்பது ஆகியவை ஆகும். இவற்றில் பல நல்ல விஷயங்கள் வாழ்வில் உங்களைத் தேடி ஓடி வந்து விடும். இதனையே பிரபஞ்ச ரகசியம், விதி என்கின்றனர். நீங்கள் இப்பொழுது ஒன்று நினைக்கலாம். இதெல்லாம் நம் முன்னோர்கள் சொல்லாததா?

இவையெல்லாம் நம் ஞானிகள் என்றோ கூறி சென்று விட்டார்கள். இதில் புதிதாய் என்ன இருக்கின்றது? எனலாம். இதனை இன்று உலகின் பல இடங்களில் ஆய்வு செய்து கூறும் பொழுது ரிவிஷன் போல் நாமும் இதனை நன்கு மீண்டும் படித்துப் பார்க்கலாம் அல்லவா?

இங்கே எழுதப்பட்டுள்ள பலரின் ஆய்வுகளும், கருத்துகளும் நாம் அறிந்து கொள்வதற்கே. நம்புவதும், நம்பாததும் அவரவர் விருப்பத்தை பொறுத்ததே...

*முதல் பிரிவினைப் பற்றி சுருக்கமாக கூற வேண்டும் என்றால் 'வினை விதைத்தவன் வினை அறுப்பான்' என்று கூறலாம். மனதில் அன்பு, கருணை இவைகளை விதைத்தால் நாம் பெறுவதும் அன்பு, கருணையுமே ஆகும் என்பதாகும்.

*நல்ல செயல்கள் என்பது மாஜிக் போல் உருவாகாது. நாம் முயற்சி செய்தே நல்லவற்றினை நடத்த வேண்டும். ஆக இந்த திறன் நம்மிடத்தில் உள்ளதால் கடைசி மூச்சு வரை நல்லவற்றை மட்டுமே முயற்சிக்க வேண்டும்.

* எத்தனை உயர்வுகளைப் பெற்றாலும் பணிவு வேண்டும்.

* நம் வெளி வாழ்க்கை வளரலாம். ஏற்ற தாழ்வுகளைப் பெறலாம். நம் உள் வளர்ச்சி நொடிக்கு நொடி வளர வேண்டும். ஆன்மா உயர வேண்டும்.

* நமக்கென்று ஒரு பொறுப்பு இருக்கின்றது. சமுதாயத்தில் நாம் காட்டும் அடக்கம் நமக்கும், சமுதாயத்திற்கும் உயர்வு அளிக்கும். ஆடம்பரம், ஜம்பம், வரட்டு கவுரவம் இவை நம் அகராதியிலேயே இருக்கக்கூடாது.

* சிலர் ஒரே நேரத்தில் பல வேலைகளை செய்பவர்களாக இருப்பார்கள். ஆனால் அப்படி செய்வது சக்தியினை, செயலின் வேகத்தினைக் குறைக்கும். ஒன்றில் முழுமையாக கவனம் செலுத்துவது சிறந்தது. இரண்டு குதிரை மேல் சவாரி என்பது கடினமே.

* சுயநலம் இன்றி இருத்தல் அவசியம்.

* கடும் முயற்சியும், வேலையும் கண்டிப்பாக உரிய பரிசினை அளிக்கும்.

இப்படி முன்னோர் வகுத்துள்ள நியதிகளை கடை பிடித்தால் நமது தீய கர்மாக்கள் அகலும். வாழ்வு மேம்படும். கர்மா என்ற கருத்தே வேண்டாம் என்றாலும் அனைவருக்கும் மேற்கூறிய வாழ்க்கை முறைகள் பொருந்தும்.

சில நேரங்களில் பெற்றோர்கள் பிள்ளைகளைப் பார்த்து 'ஏன் என் உயிரை வாங்குகின்றாய்?' என்று கோவித்துக் கொள்வதுண்டு. உண்மையில் நம் பழக்கங்களில் சில நம் உயிரை வாங்கிக் கொண்டு இருக்கின்றன என்பதனை நாம் உணருவதில்லை.

* சிலருக்கு நகம் கடிப்பது என்பது அன்றாட பழக்கங்களில் ஒன்றாகும். இது மிக மோசமான உடல் நலம் பாதிக்கும் நாகரீகமற்ற செயல் எனலாம். சிலர் கை விரல்களில் முன் பகுதியே சற்று குறைந்து புண்ணாக இருக்கும். இதனை இவர்கள் நிறுத்த முடியாததன் ஒரு காரணம் நகம் மீண்டும் வளர்ந்து விடும். ஆனால் நகம் கடிக்க கடிக்க அவர்கள் கிருமியையும் வாயில் நன்கு மெல்கின்றனர். நாம் எத்தனை சுத்தமாக கைகளை வைத்தாலும் கை விரல்களின் வழியாக எளிதில் கிருமிகள் உள்ளே செல்ல முடியும் என்பதனை நன்கு அறிவோம். இவர்கள் பல கிருமிகளின் தாக்குதல்களுடனும், கை விரல்களில் பாதிப்புடனும், பற்கள் பாதிக்கப்பட்டும் இருப்பர்.

* நாம் அனைவரும் நன்கு பல் தேய்த்து விடுகின்றோம். ஆனால் பிளாஸ் என்ற முறைப்படி பற்களின் இடையில் சுத்தம் செய்ய மறுக்கின்றோம். பற்களை தேய்க்கும் பொழுது பல் முன்னும் பின்னும் நன்கு சுத்தம் ஆகின்றது. ஆனால் பற்களுக்கு இடையல் பல கிருமிகள் நன்கு வாழும். பல், ஈறு இவைகளின் பாதிப்பிற்கு இவையே காரணம் ஆகின்றது. ஆகவே பிளாஸ் செய்வதனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

* பலருக்கு காலையில் காபி இல்லாமல் பொழுதே விடியாது. பொதுவில் வெறும் வயிற்றில் காபி என்பதே தவறு. காபீன் சில நன்மைகளை செய்யும் என்றாலும் அடிக்கடி அன்றாடம் இதனை எடுத்துக் கொள்ளும் பொழுது முறையற்ற இருதய துடிப்பு, ரத்த கொதிப்பு என பல பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. அதிக கால்சியம் சத்து சிறு நீரில் வெளியேறும். எலும்பின் அடர்த்தி குறையும். நடுக்கு வாதம் பாதிப்பு கூட ஏற்படலாம்.

* இன்று பலரும் தனக்குத்தானே வைத்தியம் செய்து கொள்கின்றனர். அதில் முக்கியமான ஒன்று அடிக்கடி வலி நிவாரண மாத்திரைகளை எடுத்துக்கொள்வது ஆகும். எந்த ஒரு வலிக்கும் அவர்களே வலி மாத்திரைகளை முடிவு செய்வர். இது பத்தாது மற்றவர்களுக்கும் சிபாரிசு செய்வர். இவ்வாறு அடிக்கடி செய்வது இருதயத்தினை பாதிக்கும். ரத்த அழுத்த மாறுபாட்டினை ஏற்படுத்தும். குடல் புண், குடலில் ரத்த கசிவு ஏற்படுத்தும்.

இப்படி மேலும் சிலவற்றினை பின் வரும் கட்டுரையில் அறியலாம். ஆனால் அமைதியாய் கொஞ்சம் கொஞ்சமாய் உயிரை குடிக்கும் சில பழக்கங்களில் இருந்து நாம் விடுபடுவோமாக.

Tags:    

Similar News