சிறப்புக் கட்டுரைகள்

பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி


மணவாழ்க்கையை மகிழ்ச்சியாக்கும் திருமணப் பொருத்தம்

Published On 2022-07-05 11:50 GMT   |   Update On 2022-07-05 11:50 GMT
  • மனிதனின் வாழ்நாள் லட்சியமான சொத்து எல்லோருக்கும் கிடைப்பதில்லை.
  • இன்னாருக்கு இன்னார் என்று பிரபஞ்சம் விதித்த விதியின் படி தான் திருமணம் நடக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

திருமணம் செய்வதற்கு முன்பு வது, வரனின் ஜாதகத்திற்கு பொருத்தம் பார்க்கும் வழக்கம் இந்து மதத்தை சார்ந்தவர்களிடம் காணப்படுகிறது.

திருமணத்திற்கு வரன் பார்க்கும் பெற்றோர்கள் குடும்பம், வயது, படிப்பு, அழகு, வசதி ஆகியவற்றுடன் ஜோதிடத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் ஜாதகமும் பார்ப்பார்கள். ஜாதகம் பொருந்தவில்லை என்றால் திருமணம் செய்யமாட்டார்கள். அதுவும் பெற்றோர்களால் நிச்சயிக்கப்படும் திருமணங்களில் பொருத்தம் பார்த்துதான் திருமணம் செய்வார்கள். இன்னாருக்கு இன்னார் என்று நிச்சயித்த விதிப்படி தான் திருமண வாழ்க்கை அமையும். அப்படி இருக்க திருமணப் பொருத்தம் ஏன் பார்க்க வேண்டும் என்பது சில சமூக ஆர்வலர்களின் கேள்வியாக உள்ளது.

திருமணம் என்பது இரு உடல் மட்டும் அல்ல, இரு மனங்கள் இரண்டறக் கலப்பதாகும். கணவன்-மனைவி உறவு என்பது ஆயிரம் காலத்துப் பயிர். ஒருவருக்கு நல்ல வாழ்க்கை துணை கிடைத்தால் திருமண வாழ்க்கை இனிமையாகும். அதே நேரம் பொருத்தம் இல்லாத வாழ்க்கைத் துணை அமைந்தால் வாழ்க்கையே நரகமாகும். ஒரு பெண்ணின் பெற்றோர்கள் ஒரு மாப்பிள்ளையின் படிப்பு, உத்தியோகம், சொத்து, சுகம் பற்றி எளிதாகஅறிந்து கொள்ள முடியும். ஆனால் அவன் பண்புள்ளவனா? அன்புள்ளவனா? தன் பெண்னை கண் கலங்காமல் வைத்துக் காப்பாற்றத் தகுதியள்ளவனா என்பதை பழகிப் பார்த்தால் தான் அறிய முடியும். இதை அவர்களுக்கு தெளிவாக தெரிவிப்பதுதான் ஜனன ஜாதகம். திருமணம் நல்ல முறையில் சிறந்து விளங்க ஜாதகப்பொருத்தம் எவ்வாறு உதவுகிறது. அதை ஜாதகத்தின் மூலம் எப்படி அறிவது என பார்க்கலாம்.

திருமணம்

இன்னாருக்கு இன்னார் என்று பிரபஞ்சம் விதித்த விதியின் படி தான் திருமணம் நடக்கும் என்பது நிதர்சனமான உண்மை.

ஒருவருக்கு அழகான, படித்த, வசதியான, நல்ல உத்தியோகத்தில் உள்ள பெண்ணை வாழ்கைத் துணையாக தேர்வு செய்யும் ஆர்வம் இருக்கலாம். 2,7,10 சம்பந்தம் இருந்தால் சம்பாதிக்கும் மனைவி அமைவார். 7-ம் அதிபதி தனம் ஸ்தானத்து சம்பந்தம் பெறாத ஒருவருக்கு மனைவி மூலம் பொருள் கிடைக்காது. விதியில் இல்லாத அமைப்பு உள்ள வரனைத் தேடி காலம், நேரம், பொருள் விரயமாகும். இந்த இடத்தில் ஜோதிடம் உங்களுக்கு உறுதுணையாக நின்று விதி வழி வாழ்க்கையை அமைக்க உதவுகிறது.

குழந்தைப் பேறு

சிலருக்கு திருமணம் முடிந்தவுடன் குழந்தை பிறக்கும் , சிலருக்கு சிறிது காலம் கடந்த பிறகு புத்திர பிராப்தம் கிடைக்கும். பலருக்கு இயற்கையாக குழந்தை உருவாகும். சிலருக்கு மருத்துவ உதவிக்குப் பிறகு கரு தங்கும்.

விதிப்படி புத்திர பாக்கியம் உருவாகும் காலத்தை கணித்துக் கொடுப்பது தான் ஜோதிடம்.

சொத்து

தற்காலத்தில் சொத்து, சுகத்துடன் உள்ள வரனை தேர்வு செய்வதையே அனைவரும் விரும்புகிறார்கள். அசையும், அசையாச் சொத்துக்கள் இல்லாத இடத்தில் யாரும் பெண் எடுக்கவும் கொடுக்கவும் விரும்புவதில்லை.

மனிதனின் வாழ்நாள் லட்சியமான சொத்து எல்லோருக்கும் கிடைப்பதில்லை. சிலர் பிறக்கும் போதே சொத்துடன் பிறக்கலாம். சிலர் பிறந்த பிறகு பெற்றோர் சொத்து சேர்க்கலாம். சிலருக்கு சுய உழைப்பில் சொத்து உருவாகலாம். சிலரின் சொத்து தலை முறைக்கும் நிலைத்து நிற்கும். சிலரின் சொத்துக்கள் குறிப்பிட்ட காலத்தில் கைவிட்டுப் போகும். அந்த கால கட்டத்தில் மனைவி அல்லது பிள்ளைகளின் பெயரில் சொத்தை மாற்றி எழுதினால் இழப்பைத் தவிர்க்கலாம். இக்கட்டான சூழ்நிலையில் கரையைக் கடக்கும் கலங்கரை விளக்கமாக இருப்பது தான் ஜோதிடம்.

தொழில்

சிலர் நல்ல உத்தியோக வரனை எதிர்பார்கலாம். சிலர் சுய தொழில் வரனை விரும்பலாம்.

சிலரின் விதிப்படி சொந்த தொழில் சிறப்பாக இருக்கும். சிலருக்கு குலத்தொழில் அமையும், சிலருக்கு அடிமைத் தொழில் தான் நன்றாக இருக்கும், சிலருக்கு அரசு உத்தியோகம் அல்லது தனியார் வேலை என ஒருவரின் வாழ்வாதாரத்தில் பல்வேறு வகை உள்ளது. சொந்த தொழில் அமைப்பு இல்லாத ஒருவர் தொழிலால் கடன் படலாம் அல்லது தொழில் வளராது. இது போன்ற காலகட்டத்தில் வரப்போகும் வாழ்க்கைத் துணையின் வாழ்வாதாரம் சுய தொழிலா?

அடிமைத் தொழிலா என்பதை விதிப்படி உணர்த்துவதே ஜோதிடம்.

நோய், கடன்

இவை இரண்டும் இரட்டைப் பிறவிகள். சிலருக்கு ஒரு சில குறுகிய காலம் மட்டும் கடன் இருக்கும். சிலருக்கு வாழ்நாள் முழுவதும் தொடரும். சிலருக்கு கடனை நினைத்து பயந்து நோய் வரும். ஒருவருக்கு எதிர்காலத்தில் வரக்கூடிய ஒரு நோயை துல்லியமாக ஜோதிடத்தில் கணக்கிட முடியும். ஒருவரின் ஜாதகப்படி கடன் உருவாகும் காலம், அடைபடும் காலம், நோய் உருவாகும் காலம், நோயில் இருந்து விடுபடும் காலம்,நோய்க்கு எந்த முறை சிகிச்சையை தேர்வு செய்வது இது போன்ற பல்வேறு விஷயங்களை அறிவுறுத்தி விதியை சுமூகமாக கடக்க உதவி செய்வது ஜோதிடம். தம்பதிகள் எதிர்காலத்தில் நோய், கடனால் பாதிக்கப்படுவார்களா என்பதை அவசியம் திருமணத்திற்கு முன்பு தெரிந்து கொள்ள வேண்டும். பல குடும்பங்களை பிரிக்கும் நோய், கடன் பற்றிய தெளிவு நல்லது.

கோட்சாரம்

ஒருவருக்கு ஏழரைச் சனி காலத்தில் ராசிக்கு 12-ல் சனி வரும் போது விரயச் சனி நடக்கும்.

அவரவரின் தசா புத்தி ரீதியாக திருமணம், வீடு, வாசல் என சுப விரயம் உண்டாகலாம். அல்லது தொழில் நட்டம், வைத்தியம் என அசுபமாக விரையமாகலாம்.

அதை முழு சுப விரயமாக மாற்றுவதும், அசுப விரயமாக மாற்றுவதும் அவரவர் தனிப்பட்ட வினைப்பயனே. ஏழரை சனி ஆரம்பிப்பதற்கு முன்பே சனி லாபஸ்தானத்தை கடக்கும் முன்பு கோட்சார சனி பாதிக்காது என்றால் இயல்பான வாழ்க்கை வாழலாம். பாதிப்பு இருக்கும் என்ற நிலை இருந்தால் சொத்தோ, பணமோ மறைமுகமாக இருக்க வேண்டும் அதாவது மனைவி பிள்ளைகள் பெயரில் இருக்க வேண்டும். கடுமையான கால கட்டத்தில், இந்த மாதிரி வினைப்பயனை ஓரளவு மாற்றி விட்டால், தீய பலனின் தாக்கத்திலிருந்து ஓரளவு தப்பித்துக் கொள்ளலாம். அதே போல் ராகு/கேது, குரு போன்ற வருட கிரகங்களின் பெயர்ச்சி திருமண காலத்தில் அல்லது திருமணம் நடந்த குறுகிய காலத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாமல் இருக்கும்.

தசா ரீதியான பொருத்தம்

மானிட வாழ்வில் நன்மை, தீமைகளை தீர்மானிப்பதில் தசா- புத்தியின் பங்கு அளப்பரியது.

ஒருவர் ஜாதகத்தில் உள்ள நன்மை தீமைகளை கிரகங்களின் தசா காலங்களில் மட்டுமே அனுபவிப்பார்கள். இருவர் ஜாதகத்திலும் நன்மை தரும் தசா ஒருசேர வருவது போலும் தீமை தரும் தசா வரும் காலங்களில் ஒருவருக்கு வரும் தீமை மற்றவரின் தசாவால் சரிசெய்யக் கூடியதாக இருக்க வேண்டும்.

அத்துடன் ஒரே கிரகத்தின் தசா இல்லாமல் இருப்பதுடன் இருவருக்கும் ஒரே தசா இருந்தால் 3 வருட இடைவெளி இருக்கும் படி அமைக்க வேண்டும். தசாநாதர், சாரநாதர் பகை கிரகமாக இல்லாமல் இருப்பது தம்பதியரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தும்.

ஒவ்வொருவரும் அவருடைய சுய ஜாதகத்தை அந்தந்த காலகட்டத்திற்கு ஆராய்ந்து விதியோடு ஒன்றி வாழப் பழகினால் வாழ்வில் பெரும் துன்பம் நிகழாது. இது போன்று பல்வேறு பிரச்சினைகளை வரப்போகும் சுப, அசுபத்தை ஜோதிடம் மூலம் உணர முடியும்.

ஒருவருக்கு விதிக்கப்பட்டதை ஜாதகரைத் தவிர யாராலும் மாற்ற முடியாது. அதை அனுபவித்து தான் ஆக வேண்டும். ஆனால் அதை எப்படி அனுபவிக்க வேண்டும் என்பதையும் இறைவன் அவரவர் கையில் தான் கொடுத்துள்ளார்.

அதுதான் ஆறாம் அறிவு எனும் திருமணப் பொருத்தம்.

உளவியல் ரீதியாக கடந்த நூற்றாண்டு வரை பெண்களுக்கு எந்தவிதமான சுதந்திரமும் இருக்கவில்லை. பெண்ணானவள் முழுக்க முழுக்க ஆண்மகனையே சார்ந்து வாழும் சூழ்நிலை இருந்தது. ஒரு ஆண் தன் மனைவியை உதறித் தள்ளி விட்டுவேறு பெண்ணை சேர்த்துக் கொள்ளும் வழக்கம் சர்வசாதாரணமாக இருந்து வந்தது. இதனால் பெண்ணின் வாழ்க்கைக்கு எந்த வித உத்தரவாதமும் பாதுகாப்பும் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகளை கைபிடிப்பவன் தன் மகளுடன் எல்லா விதத்திலும் இணக்கமுடன் நடந்து கொள்வானா? தன் பெண்ணுக்கு உறுதுணையாக இருப்பானா? எந்த சூழ்நிலையிலும் தன் மகளை கைவிடாமல் இருப்பானா? தன் மகளின் விருப்பங்களை பூர்த்தி செய்வானா? என்பது போன்ற வினாக்களுக்கு விடைகாண வழிமுறைகளை தேடினார்கள்அதற்கென நம் முன்னோர்கள் கண்ட வழிமுறைகள் தான் பொருத்தம் பார்க்கும் முறையாகும். மேலும் பொருத்தம் பார்க்கும் முறையை ஆராய்ந்து பார்த்தால் இது தெளிவாக விளங்கும். அதில் பெண் நட்சத்திரத்திற்கு ஆண் நட்சத்திரம் பொருந்துமா? என்று தான் பார்க்கப்படுகிறது ஆண் நட்சத்திரத்திற்கு பெண் நட்சத்திரம் பொருந்துமா? என்று பார்க்கப்படுவதில்லை. அதாவது இந்த பெண்ணுக்கு இந்த ஆண் பொருத்தமானவரா என்றுதான் பார்க்கப்படுகிறது இந்த ஆணுக்கு இந்தப் பெண் பொருத்தமானவரா என்று பார்ப்பதில்லை.

அறம், பொருள், இன்பம் இவற்றின் வாயிலாக பேரின்ப நிலையை அடைவது தான் மனித வாழ்வின் நோக்கம். மனித வாழ்வின் நோக்கத்தை எட்டிப் பிடிப்பதற்காக திருமணம் செய்யப்படுகிறது. மனிதனைத் தவிர பிற உயிரினங்களின் வாழ்வில் எந்த குறிக்கோளும் இல்லை. மனிதர்கள் மட்டுமே பிறவிப் பயனை அடைய விரும்புகிறார்கள். மன நிறைவான திருமண வாழ்வே மனிதனை பிறவிப் பயனை அடையச் செய்கிறது. ஜோதிடரிடம் பொருத்தம் பார்க்க வருபவர்கள் திருமணத்திற்கு பிறகு வளர்ச்சி எப்படி இருக்கும் என்ற கேள்வியை கேட்காமல் போவதில்லை. திருமணத்திற்கு பிறகு ஏற்படும் வளர்ச்சி மன நிறைவான சுவையுடைய திருமண வாழ்வை தரும். இன்னாருக்கு இன்னார் என்ற தீர்ப்பு கர்ம கணக்குப்படி எழுதி வைத்து இருந்தால் கூட தவறான திருமணப் பொருத்தம் பலரின் வாழ்வை கேள்விக்குறி ஆக்கியுள்ளது.எந்த வினையையும் பரிகாரம் செய்தால் தீர்த்து விடலாம் என்பது பலரின் நம்பிக்கை. திருமணத்தைப் பொறுத்த வரை ஒரு ஜாதகத்தில் உள்ள குறையை சரி செய்யக் கூடிய மற்றொரு ஜாதகத்தை இணைப்பதே தகுந்த பரிகாரமாகும்.

திருமணத்தின் மூலம் புதிய உறவால் தனக்கு நன்மை ஏற்படுவதையே அனைவரும் விரும்புவர் என்பதால் முறையான திருமண பொருத்தமே சரியில்லாத ஜாதகத்தை சரி செய்ய பிரபஞ்சம் வழங்கிய கொடை , பரிகாரம். எத்தனை கோவிலுக்கு சென்றாலும் தீர்க்க முடியாத பிரச்சினையை முறையான திருமணப் பொருத்தம் சரி செய்யும்.

Tags:    

Similar News