சிறப்புக் கட்டுரைகள்

பிரசன்ன ஜோதிடர் ஆனந்தி


யாருக்கு எந்தக் கல்வி வெற்றி தரும்

Published On 2022-06-28 09:31 GMT   |   Update On 2022-06-28 09:31 GMT
  • ஒரு குழந்தை, எந்தத் துறையில் ஆர்வமாக உள்ளதோ, அது சார்ந்த துறையில் அவர்கள் பயணிக்க உதவுவதே நல்லது.
  • என் குழந்தை என்ன படிப்பான்? டாக்டரா? என்ஜினீயரா? ஆடிட்டரா? ஐ.ஏ.எஸ்? ஐ.பி.எஸ் ஆ? அரசு அதிகாரியா? போன்ற பல்வேறு கனவுகளை பெற்றோர்கள் சுமந்து வருகிறார்கள்.

கல்விச் செல்வமே, ஒருவருக்கு மிகச் சிறந்த செல்வம் என்பதில் மாற்று கருத்து இல்லை. சில குழந்தைகளுடைய பெற்றோர்கள் நல்ல கல்வி பயின்று உயர்ந்த உத்தியோகம், பதவியில் இருப்பார்கள். ஆனால் குழந்தைகள் பெற்றோருக்கு எதிர் மறையாக இருப்பார்கள். சில பெற்றோர்களுக்கு அடிப்படை கல்வி ஞானம் கூட இருக்காது. ஆனால் பிள்ளைகள் படிப்பில் படு சுட்டியாக, கெட்டியாக இருப்பார்கள்.

குழந்தையின் கல்வி ஞானத்திற்கும் தாய், தந்தையின் கல்வி ஞானத்திற்கும் சம்பந்தம் இருக்காது. அதே போல் எந்த படிப்பு அறிவும் இல்லாத பலர் பன்னாட்டு வணிகத்தில் ஈடுபட்டு சாதனையாளர் பட்டியலில் இடம் பெறுவார்கள். ஆங்கில பள்ளிக் கூடத்தில் படித்தவர்களுக்கு கூட முழுமையாக ஆங்கிலம் பேசவோ, எழுதவோ தெரியாது. அரசாங்க பள்ளியில் பள்ளிப் படிப்பைக் கூட முடிக்காத பலர் இலக்கணப் பிழை இல்லாமல் தெளிவாக ஆங்கிலம் எழுதுவார்கள், பேசுவார்கள். இது போன்ற அனைத்திற்கும் ஒருவரின் ஜாதகத்தில் உள்ள புத ஆதித்ய யோகம் மட்டுமே காரணம்.

எந்த ஜாதகமாக இருந்தாலும் படிப்பில் சாதிக்க கல்விகாரகன்,புத்திக்காரகன், புதன் பகவானின் அனுகிரகம் மிக அவசியம். புதன் நல்ல நிலையில் அமைந்தால் மட்டுமே படித்ததை புத்தியில் நிறுத்தி தேவைப்படும் நேரத்தில் சரியாக பயன்படுத்த முடியும். அத்துடன் சுய ஜாதக ரீதியாக 5-ம் பாவகம் எனும் புத்திஸ்தானமும் மனோகாரகன் மற்றும் உடல் காரகனாகிய சந்திரன் மற்றும் ஒழுக்கத்துடன் கல்வியைப் போதித்து, படிப்பில் ஆர்வத்தை ஏற்படுத்தும் கிரகம் குரு வலுப்பெற வேண்டும்.

ஜாதகத்தில் லக்னம் கேந்திரம் மற்றும் திரிகோணம் வலிமை பெற்றவர்கள் படித்து பட்டங்களும் பதக்கங்களுமாக குவிப்பார்கள். கல்விக்கான காரக கிரகம் புதன் தன்னுடைய பயண பாதையில் சுப கிரகங்களை தொடும்போது சிறப்பான கல்வியை கற்க முடியும். அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் இவற்றை தொடும்போது கல்வியில் தடையும் கொடுக்கிறது. சில குழந்தைகள் இளம் வயதில் சரியாக படிக்காமல் மத்திம வயதில் சிறப்பாக படித்து நல்ல மார்க் எடுப்பார்கள். மத்திம வயதில் இயங்கும் தசா புத்திகள் கிரகம் சுபவலிமை பெற்றதாக இருக்கும். சில குழந்தைகள் இளம் வயதில் நன்றாக படித்து மத்திம வயதில் கவனக் குறைவு அடைவார்கள்.

இத்தகையவர்களுக்கு 2-ம் பாவகம் சுபவலிமையாகவும் 4-ம் பாவகம் வலிமை குன்றியும் இருக்கும்.

ஒருவரின் கல்வியை தீர்மானம் செய்வதில் புதன் 4,5 பாவகத்தின் பங்கு மிக முக்கியமானது. ஜனன ஜாதகத்தில் புதன், ராகு அல்லது புதன், சனி இணைவு, சம்பந்தம் இருந்தாலோ சிறு வயதிலேயே ராகு தசை, சுக்கிர தசை நடந்தாலோ படிப்பில் மந்த தன்மையை உருவாக்கும். 4, 5-ம் பாவக அதிபதி அல்லது 4,5-ம் பாவகத்தில் நீச, அஸ்தமன, வக்கிர கிரகங்கள் இருந்தாலோ இளம் பருவத்திலேயே படிப்பில் தடை ஏற்படும்.அசுப கிரகங்களை தொடும் போது அந்த காரகத்துவ சம்பந்தப்பட்ட படிப்பை தேர்ந்து எடுத்துப் படிக்கும் போது தடையை தருவதில்லை. உதாரணமாக புதன் கேதுவை தொட்டால் கேதுவின் காரகத்துவம் தொடர்பான ஜோதிடம், ஆன்மீகம் சட்டம் தொடர்பான படிப்பை எடுத்துப் படிக்கும் போது அந்த படிப்பில் தடை ஏற்படாது. அதாவது ஜாதகத்தின் குறையை தனக்கு சாதகமாக மாற்ற முயலும் போது ஜாதகர் அடையும் வெற்றி அளப்பரியது.

புதன் ஒரு ஜாதகத்தில் வலுவான நிலையில் இருந்து, குரு பார்வையில் இருக்கும் பட்சத்தில் நிச்சயமாக நன்றாக படிக்க முடியும்.

புதன், சனியின் தொடர்பை பெற்றால் படிக்கும் ஆர்வத்தை குறைக்கும். பகை கிரகமான செவ்வாயுடன் புதன் இணைந்து, சனியின் பார்வையைப் பெற்றால் கல்வியில் தடை உண்டாகும். ஜாதகத்தில் புதன் ஓரளவு வலுவான அமைப்பில் இருந்து சந்திரன் மற்றும் ஐந்தாம் பாவக அதிபதி, வலு குறைந்த நிலையில் இருக்கும்பொழுது, படித்தவுடன் மறந்து விடும் அல்லது அவர்களது படிப்பு மிகவும் பின் தங்கியே இருக்கும். இது கற்ற கல்வியை நடைமுறை வாழ்க்கையில் பயன்படுத்த முடியாத அமைப்பாகும். மேலும் படிக்கும் வயதில் சுபயோக தசாபுத்திகள் இல்லாவிட்டாலும் கல்வி தடைபடும் அல்லது படிப்பு வாசனையே இல்லாமல் போய்விடும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு பள்ளிகளில் பொது தேர்வு நடந்து முடிவுகள் கடந்த வாரம் வெளியிடப்பட்ட நிலையில் எந்த படிப்பை தேர்வு செய்வது என்ற குழப்பம் பெற்றோர்களையும் மாணவர்களையும் சங்கடத்தில் ஆழ்த்தியுள்ளது. ஒவ்வொரு பெற்றோருக்கும் தன் குழந்தை எந்த வகையான படிப்பு படித்து பிற்காலத்தில் எந்த துறையில் செயல்பட வேண்டும் என்ற சிந்தனையில் இருக்கிறார்கள்.

என் குழந்தை என்ன படிப்பான்? டாக்டரா? என்ஜினீயரா? ஆடிட்டரா? ஐ.ஏ.எஸ்? ஐ.பி.எஸ் ஆ? அரசு அதிகாரியா? போன்ற பல்வேறு கனவுகளை பெற்றோர்கள் சுமந்து வருகிறார்கள். அத்துடன் எந்த படிப்பை தேர்வு செய்து படித்தால் குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என்ற மனக் குழப்பமும் நிறைந்து இருக்கிறது. சில பெற்றோர்கள் குழந்தைகளின் விருப்ப கல்வியை தேர்வு செய்து படிக்க உதவுகிறார்கள். ஒரு சில பெற்றோர்கள் தங்கள் படிக்க நினைத்து நிறைவேறாத ஆசையை தாங்கள் பிள்ளைகளிடம் புகுத்தி படிக்க வைக்க விரும்புகிறார்கள். குழந்தைகளின் விருப்பமோ, பெற்றோர்களின் விருப்பமோ கல்லூரிப் படிப்பை தேர்ந்தெடுக்கும் நிலையில் அவர்களின் ஜனன ஜாதகத்தில் ஜீவனத்தை குறிப்பிடும் 10-ம் பாவகத்தை முதன்மை படுத்தி கல்வியை தேர்வு செய்வது சிறப்பு. ஒருவன் தான் எவ்வளவு கல்வி கற்றாலும் அதனை செயல் வடிவில் தக்க வைத்துக் கொள்ள வேண்டும். அப்போதுதான் அவன் கற்ற கல்வியின் பயன் அவனுக்கு கிடைக்கும். இல்லாவிடில் அவன் கற்ற கல்வியால் பயன் இல்லாமல் போய்விடும்.10ம் வகுப்பில் தேர்ச்சியான மாணவர்கள் தேர்வு செய்யும் பாடத்திட்டம் கல்லூரி படிப்பு முடியும் வரை மாணவர் எந்த துறைசார்ந்த கல்வியில் தன்னை ஈடுபடுத்தப் போகிறார் என்பதை தெரிவிக்கும். +2 முடித்து கல்லூரிக்குள் நுழைய இருக்கும் மாணவர்கள் தேர்வு செய்யும் பட்டப் படிப்பு அவர்களின் வாழ்நாள் முழுவதும் ஜீவனத்தை பெற்றுத் தரக்கூடிய வாழ்வாதாரத்தை உயர்த்தக்கூடிய இருப்பது அவசியம். 12 ராசியினருக்குமான கல்வி பற்றி பார்க்கலாம்.

மேஷம்

ராணுவம், காவல்துறை, தீயணைப்பு துறை, வனத்துறை, மலை சார்ந்த காவல்துறை, ஆயுதப் பயிற்சி, விளையாட்டுத் துறை, விவசாயம், புவியியல், அறுவை சிகிச்சை மருத்துவம், இன்ஜினியங், பல் மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம் சார்ந்த படிப்புகள் பயிலலாம்.

ரிஷபம்

பேசன் டெக்னாலஜி அழகுக் கலை, டெக்ஸ்டைல் டெக்னாலஜி, சித்திர வேலை, இசைக் கருவிகள் வாசித்தல், உணவு சம்பந்தபட்ட துறை, வங்கி, கருவூலம், கால்நடை துறை சம்பந்தமான கல்வி பயிலலாம்.

மிதுனம்

கணிதம் சார்ந்த அனைத்தும், ஆடிட்டிங், நூலாசிரியர், பேராசிரியர், ஆசிரியர், அறிவு சார்ந்த ஆய்வாளர்கள், பத்திரிக்கை துறை, மார்க்கெட்டிங், புள்ளியல், நில அளவை, பத்திரப்பதிவு துறை, வணிகவியல், நூலகத்துறை, தகவல் தொடர்பு துறை, ஓவியம், பெயிண்டிங், ஜோதிடம் போன்ற படிப்புகளை படிக்கலாம்.

கடகம்

விவசாயம், மருத்துவம், கடல், கப்பல் சார்ந்த படிப்புகள், போக்குவரத்து, கல்வித்துறை, கலை, இலக்கியம், மொழி சார்ந்த படிப்புகள் பயன் தரும்.

சிம்மம்

பொறியியல், இதயம், கண் சார்ந்த அறுவை சிகிச்சை மருத்துவம், சித்த மருத்துவம், சமூகவியல், நிர்வாகம் தொடர்பான கல்வி, மருத்துவம் தொடர்பான படிப்புகள், அரசியல், வனம் காடு இயற்கை தொடர்பான கல்விகள், பி.பி.எம்., பி.பி.ஏ., எம்.பி.ஏ., ஐ.ஏ.எஸ். போன்ற நிர்வாகம் தொடர்பான கல்வி கற்கலாம்.

கன்னி

கல்வித் துறை, வணிகவியல், கணக்கியல், கணக்காளர், தணிக்கையாளர், நிர்வாக மேலாளர் போன்றவை சார்ந்த படிப்பு படிக்கலாம்.

துலாம்

வங்கிப்பணி, நீதித்துறை, நிதித்துறை, பொருளாதாரம், திரைப்படம், தொலைக்காட்சி, இயல், இசை, நாடகம், நடிப்பு, அழகு கலை, ஆடை, ஆபரணம், நெசவு சார்ந்த கல்விகள் பயிலலாம்.

விருச்சிகம்

பொறியியல், கனிமம், சுரங்கம், சுங்க சாவடி, விவசாயம், மின்னனுவியல், கெமிக்கல், பயோ கெமிஸ்ட்ரி, பரிசோதனை செய்யும் லேப் பற்றிய படிப்பு, இயந்திரங்கள் தொடர்பான படிப்புகள், ரேடியாலஜி, ஸ்கேனிங் தொடர்பான படிப்புகள், தகவல் தொழில்நுட்பம் ஆய்வு மையம் சார்ந்த கல்விகள் படிக்கலாம்.

தனுசு

சட்டம், நிதித்துறை, நீதித் துறை, கல்வித்துறை, ஆசிரியர், பொருளாதாரம், அறிவியல் சார்ந்த அனைத்து துறை படிப்புகளையும் படிக்கலாம்.

மகரம்

விவசாயம், இரும்பு, கட்டிடக்கலை, சுரங்கம், கனிமம், டைப் ரைட்டிங், வக்கீல், சட்டம், மெக்கானிக், சார்ந்த கல்விகள், பிட்டர் பாலிடெக்னிக் ஐ.டி.ஐ., மூலிகை செடி, நிலக்கரி, பாரம்பரியத்தைப் பற்றி படிப்பது சார்ந்த படிப்புகள் படிக்கலாம்.

கும்பம்

எலக்ட்ரிக்கல் என்ஜினியர், ஆர்க்யாலஜி, வரலாறு, புவியியல் சார்ந்த கல்விகள் அனைத்தும் பாதுகாப்பு எரிபொருள் சார்ந்த படிப்புகள் பயன் தரும்.

மீனம்

வக்கீல், நீதிபதி, புரோக்கர், புரோகிதர், குரு குல கல்வி, மத போதகர், வங்கி பணி, ஆச்சாரியர்கள் போன்ற கல்வி கற்கலாம். உயிரியல், குழந்தைகள் தொடர்பான கல்வி மைக்ரோபயாலஜி, பொருளாதார நிபுணர், ஆன்மீகம் சம்பந்தப்பட்ட படிப்புகள் படிக்கலாம்.

மேலே கூறப்பட்ட அனைத்து படிப்புகளும் சுய ஜாதகரீதியாக புதன், புதனுடன் இணைந்த கிரகங்கள் 5-ம் இடம் மற்றும் தசா புக்திக்கு ஏற்ப மாறுபடும் வாய்ப்பு உள்ளது. கல்வியின் சிறப்பு பற்றி கூறும்போது கல்வி கற்றவன் எந்த இடத்திற்கு சென்றாலும் எல்லோராலும் மதிக்கப் படுகின்றான். கல்வி கற்றவனுக்கு தனது ஊரும் நாடும் மட்டும் அல்லாமல் உலகமே ரத்தின கம்பளம் விரித்து அங்கீகாரம் தருகிறது. சிலருக்கு படிப்பு, தொழில் கல்வியாக அமைந்து, வாழ்க்கையில் படித்த துறையிலேயே, பணி செய்யக்கூடிய அமைப்பை கொடுக்கும். சிலர் டாக்டர், இன்ஜினியர் போன்ற புரபஷனல் கோர்ஸ் படித்து அரசியல், பொது சேவை என அழைவார்கள். சிலர் பத்தாவது படித்துவிட்டு பத்து பேருக்கு வேலை கொடுப்பார்கள்.

படிப்பு என்பது அறிவை வளர்க்க மட்டும்தான். அதனால் ஒரு குழந்தை, எந்தத் துறையில் ஆர்வமாக உள்ளதோ, அது சார்ந்த துறையில் அவர்கள் பயணிக்க உதவுவதே நல்லது.

ஒரு ஜாதகத்தில் பத்தாம் அதிபதியின் நிலையை கொண்டும், பத்தாம் இடத்தில் உள்ள கிரகத்தின் நிலையை பொருத்தும், ஆறாம் இடத்தின் வலுவிற்கும் ஏற்ற தொழில் கல்வியை தேர்வு செய்வது சிறப்பு கல்வியில் தடை இருப்பவர்கள் தினசரி விநாயகரையும், சரஸ்வதி தேவியையும் வழிபட்டு வந்தால் கல்வியில் உண்டாகும் தடங்கல்கள் கண்டிப்பாக நீங்கும்.

Tags:    

Similar News