சிறப்புக் கட்டுரைகள்

வாரிசு இல்லாத சொத்து

Published On 2022-06-14 17:41 IST   |   Update On 2022-06-14 17:41:00 IST
  • திருமணமே நடக்காதவர்களுக்கு வாரிசுகள் இருக்கும் வாய்ப்பு கிடையாது.
  • வாரிசு இல்லாத சொத்துக்கள் பற்றிய பலவிதமான சந்தேகங்கள் நடைமுறையில் உள்ளது.

திருமணத்தடையும் குழந்தைப் பேரின்மையும் மிகுதியாகிவிட்ட இந்த நூற்றாண்டில் மனித குலம் தனது தலைமுறையை, வாரிசுகளை உருவாக்குவது கேள்விக்குறியாகி வருகிறது. இனி சினிமாக்களில் காட்டுவது போல் பந்தம், பாசம் உணர்வுகளுக்கு கட்டுப்படாத குளோனிங் குழந்தைகள் பிறக்கும் உலகிற்கு வந்துவிடுமோ என்ற அச்சம் தோன்றுகிறது. காலம் உலகத்தை எப்படி இயக்குகிறதோ அதன்படி வாழ வேண்டியது மனிதர்களின் நிர்பந்தம்.

வாரிசு இல்லாத சொத்து என்பதை இரண்டு வகைகளாக பிரிக்கலாம். அதன்படி திருமணமான தம்பதிகளுக்கு குழந்தை பிறக்காத காரணம். திருமணமே நடக்காதவர்களுக்கு வாரிசுகள் இருக்கும் வாய்ப்பு கிடையாது.

பொதுவாக பல குடும்பங்களில் உறவுகளிடம் நிலவும் பொதுவான பிரச்சினை சொத்து அல்லது பணம் தொடர்பான சர்ச்சைகள். அதுவும் வாரிசுகள் இல்லாத ஒருவருக்கு சொத்து இருந்தால் அதை யார், எப்படி பங்கிட்டு கொள்வது என்ற கருத்து வேறுபாடு அதிகமாக ஏற்படுகிறது. ஒவ்வொரு குடும்பத்திலும் ஏதாவது ஒருவருக்கு வாரிசு இல்லாத நிலை உருவாகிவிடுகிறது. வாரிசு இல்லாத சொத்துக்கள் பற்றிய பலவிதமான சந்தேகங்கள் நடைமுறையில் உள்ளது. அதாவது மிகச் சிலருக்கு மட்டும் பயன் தரும் வாரிசு இல்லாத சொத்து ஏன் பலருக்கு பயன்படுவதில்லை?வாரிசு இல்லாதவர்களின் சொத்தை பயன்படுத்தலாமா?போன்றவற்றை காணலாம்.

வசதி இருப்பவர், இல்லாதவர் என்று எந்த வித பாகுபாடுமின்றி அதிர்ஷ்டத்தை விரும்பாதவர்களே இல்லை எனலாம். அதிர்ஷ்டத்தை எல்லோரும் விரும்பலாம். ஆனால் அதிர்ஷ்டம் எல்லோரையும் விரும்புவதில்லை என்பதுதான் நிதர்சனமான உண்மை.

உழைக்காமல் கிடைக்கும் அனைத்தும் அதிர்ஷ்டத்தில் அடங்கும். அனைவரும் விரும்பும் அதிர்ஷ்டம் பணமாகவோ பொருளாகவோ இருக்கலாம். ஜாதகம் பார்க்க வருபவர்களில் பலர் அதிர்ஷ்டப் பணம் அல்லது சொத்தை எதிர்பார்க்கிறார்கள். வெகு சிலர் புதையல் பற்றி பேசுவார்கள்.

ஜனன கோட்சார ரீதியாக அல்லது தசா புக்தி ரீதியாக ஒருவருக்கு எட்டாமிடம் இயங்கும் போது அதிர்ஷ்டம் பற்றிய சிந்தனை மிகைப்படுத்தலாக இருப்பதால் உழைக்கும் எண்ணம் குறையும். அதிர்ஷ்டத்தை துரத்த ஆரம்பிப்பார்கள். எட்டாமிடத்திற்கு புதன், ராகு சம்பந்தம் இருப்பவர்களுக்கும் உயில் சொத்தின் மேல் ஆர்வம் அதிகரிக்கும்.

வாரிசு இல்லாதவர்களுடைய உடமைகளே பிறரைச் சென்று அடையும். வாரிசு இல்லாத ஒருவர் தன் சுயவிருப்பத்தினால் தனது சொத்து சுகங்களை உயில் மூலம் தான் விரும்பும் நபருக்கு மாற்றித் தரலாம் அல்லது நிர்பந்தத்தால் எழுதிக் கொடுக்கலாம் அல்லது ஏமாற்றி எழுதி வாங்கலாம்.ஜனன கால ஜாதகத்தில் 3,5,8 பாவகங்கள் சம்பந்தம் பெறுபவர்களுக்கு மட்டுமே பிள்ளையில்லாச் சொத்து கிடைக்கும்.

வாரிசு இல்லாதவர்களுக்கு தத்துப்பிள்ளை இல்லாத பட்சத்தில் அவர்கள் உயில் எழுதிய நபரை முழுச் சொத்தும் சேரும்.

ஆனால் இறுதி காரியம் செய்யும் நபருக்கு சொத்தை பயன்படுத்தும் முழு உரிமையும் உண்டு. அதனால் வாரிசு இல்லாதவர்களுக்கு சொத்து இருந்தால் இறுதி காரியம் செய்யும் நபருக்கு சொத்தில் பங்கு தர வேண்டும் என்பதால் சிலர் பங்காளிவாரிசுகளை இறுதி காரியம் செய்ய விடுவதில்லை.

இறுதி காரியம் செய்த நபர் பொருளாதார நெருக்கடி உள்ள நபராக நெருங்கிய ரத்த பந்த உறவாக இருந்தால் இறந்தவர்களின் சொத்தில் சிறு பங்கை உற்றார் உறவினர்கள் அவருக்கு தர முன்வர வேண்டும். அவ்வாறு செய்யும் போது வாரிசு இல்லாதவர்களின் உயில் சொத்து உயில் நபருக்கு நூறு மடங்கு பலன் தரும். தவறும் பட்சத்தில் இறுதி காரியம் செய்த நபரின் சாபத்தால் வாரிசு இல்லாதவர்களின் சொத்து பயன்படாது. இறந்தவர்களின் ஆன்மா தனது இறுதி காரியத்திற்கு பிறகு தன்னால் ஏற்பட்ட தவறால் அந்த சொத்தை உயில் நபரை பயன்படுத்த விடாது.

அடிப்படை தேவைக்கே திணறியவர்களுக்கு இறுதிச் சடங்கு செய்தவர்களின் வாழ்க்கையில் கிடுகிடுவென பெரிய முன்னேற்றம் உண்டாகும்.

உயில் சொத்து பெற்ற நபரின் வாழ்க்கை அதள பாதாளத்திற்குச் செல்லும். இது அனுபவ நடைமுறையில் பல குடும்பங்களில் நடக்கும் பிரச்சினை. இதுதான் வாரிசு இல்லாத சொத்தின் பின்னணியில் உள்ள முதல் பிரச்சினை.

இரண்டாவதாக வாரிசு இல்லாத தம்பதிகள் இருவரும் மனம் உகந்து சொத்தை தானம் செய்யும் போது அந்த சொத்தை பெற்றவருக்கு பல மடங்கு உயர்வு உண்டு. வலுகட்டாயமாக எழுதி வாங்கினால் அல்லது சொத்திற்காக துன்புறுத்தினால் அல்லது கொலை செய்தால் சொத்தை அனுபவிப்பவர்களின் தலைமுறையினர் மீள முடியாத கடன், வறுமை, வாரிசின்மை போன்ற பல்வேறு சிக்கல்களை சந்திக்கிறார்கள்.

மூன்றாவதாக வாரிசு இல்லாத தம்பதிகளில் ஆணின் பூர்வீகச் சொத்துக்கள் ஆணின் ரத்த பந்த உறவுகளுக்கே செல்ல வேண்டும்.

பெண்ணின் பூர்வீகச் சொத்துக்கள் பெண்ணின் ரத்த பந்த உறவுகளைச் சார வேண்டும். இதில் மாறுபாடு ஏற்பட்டால் வாரிசு இல்லாதவர்களின் சொத்து யாருக்கும் பயன்படாது.

நான்காவதாக வாரிசு இல்லாதவர்கனின் சொத்து அநீதியாக சம்பாதிக்கப்பட்ட சொத்தாக இருந்தாலும் உயில் நபருக்கு பயன்படாது. ஐந்தாவதாக வாரிசு இல்லாமல் இறந்தவர்களுக்கு வருடாந்திர திதி, அமாவாசை வழிபாடு போன்றவற்றை உயில் மூலம் சொத்தை பெற்றவர்கள் முறையாக கடைபிடிக்காவிட்டால் வாரிசு இல்லாதவர்களின் சொத்தால் இன்னல் உண்டாகும்.

வாரிசு இல்லாதவர்களின் சொத்தை பயன்படுத்தலாமா?

மனிதர்களாய் பிறந்த அனைவருக்கும் அவரவர் பொருள் மீது பற்று இருப்பது இயல்பு. அதுவும் வீடு, நிலம், தோட்டம், வாகனம், நகை போன்ற அசையும், அசையாச் சொத்துக்கள் மீது ஈர்ப்பு மிகுதியாகவே இருக்கும். அதனால் அவர்களின் ஆயுட்காலத்திற்கு பின் இது போன்ற உடமைகளை அவர்களுடைய வாரிசுகளுக்கு பகிர்ந்து கொடுப்பார்கள். ஆனால் குழந்தை இல்லாதவர்களுக்கு ஆழ் மனதில் தங்களது சொத்து சுகங்களை அனுபவிக்க வாரிசுகள் இல்லை என்ற மனத்தாங்கள் இருந்து கொண்டே இருக்கும். அதனால் அவர்கள் தங்களது ஆயுள் காலத்தில் தங்களது உடமைகளை பிறருக்கு எளிதில் வழங்க முன் வருவதில்லை. வெகு சிலர் நல்லெண்ணத்துடன் தங்கள் கடைசி காலத்திற்குள் தங்கள் சொத்துக்கள் யாரைச் சென்று அடையும் என்று உயில் எழுதிவிடுவார்கள். பொதுவாக சொத்துக்கள் மேல் அதிகம் பற்று உள்ளவர்களின் ஆன்மா எளிதில் உடலை விட்டு பிரிவதில்லை. சிலரின் ஆன்மா உடலை விட்டு வெளியேற முடியாமல் மரணப்படுக்கையில் அவஸ்தையை அனுபவிக்க இதுவே மூல காரணமாகும். அல்லது சிலருக்கு நிறைவேறாத ஆசையால் உயிர் பிரிய மிகவும் சிரமப்படுகிறது. மேலும் அவர்கள் இறந்த பிறகும் அவர்களின் ஆன்மா அந்த சொத்துக்கள் உள்ள இடத்தில் தான் வாழும். தாங்கள் உபயோகித்த பொருட்களை அவர்களுக்கு பிடிக்காதவர்கள் பயன்படுத்தினால் அவர்களுக்கு மன வேதனையால் அவர்களை சபிப்பார்கள். இதிலிருந்து புரிந்து கொள்வது என்னவென்றால் விருப்பம் இல்லாத ஒருவரின் பொருளை பயன்படுத்துபவர்களுக்கு அவஸ்தையை தருகிறது.

இன்னும் சில குடும்பங்களில் 3 தலை முறைக்கு மேல் விற்கவோ அனுபவிக்கவோ முடியாத வாரிசு இல்லாத சொத்துக்கள் இருக்கும் அல்லது அதன் மீது யார் உரிமை கொண்டாடுவது என்ற பிரச்சினையில் வழக்கு நடக்கும்.

பல குடும்பங்களில் 2,3 தலைமுறையாக வாரிசு இல்லாத சொத்தை உருட்டி கொண்டு இருப்பார்கள். 4 வது தலைமுறையில் திடீரென அந்த சொத்து தொடர்பாக ஒரு நல்ல முடிவு வரும். இது எப்படி சாத்தியமாகியது என்று ஆய்வு செய்து பார்த்தால் வாரிசு இல்லாமல் இறந்தவருக்கும் சொத்து பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வந்தவருக்கும்

உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை என எதாவது ஒரு ஒற்றுமை நிச்சயம் பார்க்க முடியும். முன் ஜென்மம், நிகழ் ஜென்மத்திற்கும் உள்ள உருவ ஒற்றுமை, பெயர் ஒற்றுமை ஆகியவை இருக்கும் விதமாக பல திரைப்படங்கள் வந்து கொண்டு இருப்பதே இதற்கு சாட்சி.

பல குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களே திரைப்படங்களாக சித்தரிக்கப்படுகின்றன. அதனால் தான் நமது முன்னோர்கள் குடும்பத்தில் வாழ்ந்து மறைந்த பெரியவர்களின் பெயர்களை தம் வாரிசுகளுக்கு வைத்து மகிழ்ந்திருக்கிறார்கள். இது போன்ற வாரிசு இல்லாதவர்களின் சொத்து பங்குக்கு பங்காளிகள் பல வருடங்களாக அன்னம், தண்ணீர் புழங்காமல் நல்லது கெட்டதில் கலந்து கொள்ளாமல் இருந்திருக்கிறார்கள். இதை நமது தாத்தா, பாட்டிகள் ஒவ்வொரு குடும்பத்திலும் நடந்த வாரிசு இல்லாத சொத்துக்கள் மூலம் ஏற்பட்ட பிரச்சினைகள் பற்றி பேசுவதை நாம் கேள்வி பட்டு இருப்போம். நம்பிக்கை உள்ளவர்களுக்கு மறுபிறவி. ராகு என்பது பாட்டன் முப்பாட்டன். ஜோதிடத்திலும் மறுபிறப்பிலும் நம்பிக்கை உள்ள யாரும் இந்த கருத்தை மறுக்க முடியாது. இதை பல குடும்பத்தினர் உணர்ந்தும் இருப்பர். கலியுகத்திற்கு ஏற்ப பலன் சொல்ல வேண்டுமானால் பெரும் பணத்தை அனுபவிக்கும் பாக்கியம் பெற்ற குழந்தை உருவாக கால பகவான் எடுத்துக் கொண்ட கால அளவு.

எனவே உயில் எழுதாத வாரிசு சொத்து எளிதாக யாருக்கும் பயன் தருவதில்லை. உளவியல் ரீதியாக அந்த சொத்துக்களை அனுபவிப்பவர்களின் வாரிசுகள் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறார்கள். வெகு சிலருக்கு மட்டுமே இது போன்ற சொத்துக்கள் பயன்படும்.

ஜனன கால ஜாதகத்தில் அஷ்டம, பாதக ஸ்தானத்திற்கு புதன், சனி+ ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் வாரிசில்லா சொத்து அல்லது உயில் சொத்தை தவிர்த்தல் நலம் அல்லது ஆதரவற்ற முதியவர்கள் இல்லம், குழந்தைகள் காப்பகத்திற்கு,தொண்டு நிறுவனங்களுக்கு தானம் தருதல் புண்ணிய பலனை அதிகப்படுத்தும். உழைக்காத பணம் ஒரு ரூபாயாக இருந்தால் கூட பலமடங்காக இழக்க நேரும். ஜனன கால ஜாதகத்தில் 5,8-ம் பாவகத்திற்கு புதன்,சனி + ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்களுக்கு அதிர்ஷ்ட பணம், உயில் சொத்து, வாரிசில்லா சொத்து பயன்தரும். அதை பயன்படுத்துபவர்கள் தங்கள் வாழ்நாள் முழுவதும் சொத்தின் உரிமையாளர்களுக்கு நீத்தார் கடன் செய்து கொண்டே இருக்க வேண்டும்.

பிரச்சினையும் சரியாக வேண்டும். ஓரளவு நன்றாக வாழவேண்டும். இது தான் அனைவரின் ஆசைகள். சராசரி மனிதனின் வாழ்வை ஆன்மீகத்தின் துணை கொண்டு வெல்ல முடியுமா என்றால் நிச்சயம் வெல்ல முடியும்.இதை நிறைவேற்றி தருவது பிரபஞ்சத்தின் கடமை. ஆழ்ந்த நம்பிக்கையுடன் ஆத்ம சுத்தியுடன் பரிகாரங்களை கடைபிடித்தால் பிரபஞ்சத்திடமிருந்து நல்ல செய்திகள் தேடி வரும். வாழ்க்கை வசந்தமாகும் கடந்து போன வினாடியோடு நம் வாழ்க்கை முடியாமல் இன்று, இந்த நிமிடம், இந்த நொடி நாம் உயிரோடு இருப்பது நமக்குள் இருக்கும் இறையருள் என்பதை உணர வேண்டும். இதை விட இறைவன் நமக்கு எதைக் கொடுக்க முடியும். ஒவ்வொரு வினாடியும் நம்மை உயிரோடு இருக்கச் செய்யும் இறைவனுக்கு நாம் நன்றி சொல்வதற்காகவே கோடிப் பிறவிகள் எடுக்க வேண்டும். அதை விடுத்து காசு, காமம், சொத்து போன்ற விதிப்பயன் மீறிய லவுகீக ஆசைகள் வாழ்வை நரகமாக்குவதுடன் சந்ததியினரை பாதிக்கும்.ஒவ்வொரு பாவத்திற்கும் ஒவ்வொருவிதமான பரிகாரங்கள் செய்ய வேண்டும். அதே சமயம் திரும்பவும் அதே பாவங்களை செய்யாமல் இருக்க வேண்டும். அதனால் பாவம் செய்து பின் பரிகாரம் தேடி அலைவதைவிட மனப்பூர்வமான இறை காரியங்களில் ஈடுபட்டு பிறவிக் கடனிலிருந்து மீள முயல வேண்டும்.

எனவே இறைவன் எனக்கு இதைக் கொடுக்கவில்லை அதைக் கொடுக்கவில்லை என்று புலம்புவதை தவிர்தது அவர் கொடுத்த அழியாத உயிரைக் கொண்டு நன்மை செய்து நம் ஆன்மாவை புனிதப்படுத்த வேண்டும்.தூய பக்தி, நேர்மையான வாழ்வு, மனமார்ந்த தெய்வீக சேவை, சரணாகதி இவற்றால் மட்டுமே நிம்மதியாக வாழமுடியும்.

Tags:    

Similar News