டாக்டர் சவுந்தரராஜன்
அறிவோம் சிறுநீரகம்: அறுவை சிகிச்சைக்கு பின் கவனிப்பு அவசியம்- டாக்டர் சவுந்தரராஜன்- 20
- சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் கவனிப்பதும்.
- நான் என்னுடைய நோயாளிகள் அனைவரிடமும் எனது மொபைல் எண்ணை கொடுத்துவிடுவேன்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தவறாமல் மருத்துவர் எழுதி கொடுக்கும் மருந்து மாத்திரைகளை சாப்பிட வேண்டும் என்று தெரிவித்து இருந்தேன்.
மருந்து மட்டுமல்ல உணவு விசயத்திலும் கட்டுப்பாடு முக்கியம். இல்லாவிட்டால் பொருத்தப்பட்ட புது சிறுநீரகத்துக்கு ஆபத்தாகிவிடும்.
ஆபரேசன் செய்வதற்கு முன்பு பலவிதமான கட்டுப்பாடுகளை சொல்லி இருப்போம். தண்ணீர் ஒரு நாளைக்கு இவ்வளவுதான் குடிக்க வேண்டும். எதை எதையெல்லாம் சாப்பிடக்கூடாது என்றெல்லாம் பலவிதமான கட்டுப்பாடுகள் சொல்லி இருப்போம். ஆனால் புது சிறுநீரகம் பொருத்தப்பட்ட பிறகு இவையெல்லாமே தலைகீழாகிவிடும்.
தண்ணீர் நிறையவே குடிக்க வேண்டும் என்போம். ஸ்டீராய்டு மருந்துகள் சாப்பிடுவதால் பசி அதிகமாக இருக்கும். எனவே நன்றாக சாப்பிடலாம் என்போம்.
ஆபரேசன் முடிந்த பிறகு உடல் பருமானாகும். எனவே சாப்பாடு விசயத்தில் கட்டுப்பாடு மிக முக்கியம். எல்லாவற்றையும் சாப்பிடலாம். ஆனால் அளவோடு சாப்பிட வேண்டும். உணவில் உப்பின் அளவை மிகவும் குறைத்துக்கொள்ள வேண்டும். கொழுப்பு சத்தை அதிகரிக்க கூடிய உணவு வகைகளை தடுப்பது நல்லது. இனிப்பு, எண்ணை பலகாரங்கள், பொரித்த உணவுகளை சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது.
பொதுவாகவே சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களில் 80 சதவீதம் பேருக்கு உடல் பருமன் வருவதுண்டு. உடல் பருமன் ஏற்பட்டாலே பின் விளைவுகளும் தொடர்ந்து வரும். சர்க்கரை வியாதி வரும். ரத்த அழுத்தம் வரும்.
எலும்புகள் வலிக்கும். மூட்டுவலி அதிகமாக இருக்கும். அதனால் மூட்டு ஆபரேசன் செய்யக்கூடிய சூழ்நிலை வரலாம். பொதுவாக டயாலிசிஸ் செய்து கொண்டிருக்கும் போது எதையும் சாப்பிட முடியாதபடி கட்டுப்பாடு இருந்ததால் ஆபரேசனுக்கு பிறகு எல்லாவற்றையும் சாப்பிட ஆசை வரும். அசைவ உணவு பிரியர்கள் பிரியாணியை ஒரு பிடி பிடித்து விடலாம்.
சிக்கன், மட்டன் இனி மனம் போல் சாப்பிடலாம் என்று நினைக்கலாம். அசைவ உணவு சாப்பிடுவதில் தவறு இல்லை. ஆனால் அவற்றை அளவோடு சாப்பிட வேண்டும். காய்கறிகளை அதிகளவு எடுத்துக்கொண்டால் நல்லது.
இணை நோய் இருப்பவர்கள் அந்த நோய்களை, அதாவது அதற்கான வைத்தியத்தை தவறாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அதாவது சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம், கொலஸ்ட்ரால் உள்ளவர்கள் முறையாக பரிசோதனைகளை மேற்கொண்டு அதற்கான மருந்து, மாத்திரைகளை தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
கால்சியமும், வைட்டமின் 'டி'யும் அதிக அளவில் தேவைப்படும். அதற்காக கீரை வகைகளை உணவில் அதிக அளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். நான் ஆபரேசன் செய்தவர்களுக்கு உணவு, மருந்து தொடர்பாக டைரி எழுத சொல்லிக் கொடுப்பேன். அதாவது தினமும் காலையில் என்ன சாப்பிட்டோம். என்ன மாத்திரை சாப்பிட்டோம். வேறு என்னவெல்லாம் சாப்பிட்டோம். அதேபோல் மதியம், இரவு ஒவ்வொரு நேரமும் தவறாமல் டைரி எழுத சொல்லுவேன்.
ஏனெனில் அடுத்த முறை பரிசோதனைக்கு வரும் போது அந்த டைரியை பார்த்தே எதை அதிகமாக சாப்பிட்டுள்ளார். எதனால் இந்த பிரச்சினை வந்தது என்பதை எங்களால் எளிதில் பார்த்துக்கொள்ள முடியும்.
தண்ணீர், காற்று, உணவு சாப்பிட பயன்படுத்தும் பாத்திரங்கள் எல்லாவற்றிலுமே கவனமாக இருக்க வேண்டும். சுகாதாரமான தண்ணீரையே பயன்படுத்த வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து குடிப்பது நல்லது. பிரிட்ஜுக்குள் வைத்த பொருட்களை எடுத்து சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
சாப்பிடும் தட்டுக்களையும் வெந்நீரில் கழுவி எடுத்து அதன்பிறகு அதில் உணவை வைத்து சாப்பிட வேண்டும். ஏனெனில் பாக்ட்டீரியாக்கள், கிருமிகள் இருந்திருக்கலாம். அவை உடலுக்குள் போவதற்கு வாய்ப்பு வரும். எனவேதான் இதில் கவனமாக இருக்க வேண்டும். அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் தங்கள் மருத்துவருடன் தொடர்பிலேயே இருக்க வேண்டும். உடலில் ஏதாவது புதிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை தொடர்பு கொண்டு தெரிவிக்க வேண்டும்.
மற்ற நோயாளிகளுக்கும், இவர்களுக்கும் மிகுந்த வேறுபாடு உண்டு. இவர்களை பொறுத்தவரை உயர் ரக கார்களை வைத்து பராமரிப்பது போன்றதுதான். உயர்ரக கார்களை குறிப்பிட்ட மெக்கானிக்தான் தொடர்ந்து கவனிப்பார்.
அப்படியானால்தான் அவருக்கு அந்த காரில் எங்கு, என்ன பிரச்சினை என்பதை எளிதில் கண்டுபிடிக்க முடியும். அதேபோலத்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களை சம்மந்தப்பட்ட மருத்துவர்கள் கவனிப்பதும்.
நான் என்னுடைய நோயாளிகள் அனைவரிடமும் எனது மொபைல் எண்ணை கொடுத்துவிடுவேன். எங்கு இருந்தாலும் சரி, எப்போது வேண்டுமானாலும் சரி என்னை தொடர்பு கொண்டு ஆலோசனை பெறுவார்கள்.
சிறுநீரக அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களின் தொடர் சிகிச்சைக்கு விலை உயர்ந்த மருந்துகள் இலவசமாக அரசாங்கமே கொடுப்பதற்கு நானும் ஒரு காரணமாக இருந்தேன் என்பதை ஏற்கனவே தெரிவித்து இருந்தேன். அதுமட்டுமல்ல அதே பிரச்சினையால் எனது வேலைக்கும் பிரச்சினை வந்தது.
அதாவது எம்.ஜி.ஆர். ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட அந்த இலவச மருந்துகள் ஒரு கட்டத்தில் முறைகேடாக விற்கப்படுவது தெரிந்ததும் அந்த மருந்துகள் வழங்கப்படுவதை ரத்து செய்து விட்டது அரசு. இந்த நிலையில் சென்னையில் முதல் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையை கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் நான் மேற்கொண்டேன்.
அது தொடர்பாக பத்திரிக்கையில் பேட்டிக்கொடுத்தேன். அப்போது இந்த மருந்து எந்த அளவுக்கு சாதாரண மக்களுக்கு பயனுள்ளதாக இருந்தது. இப்போது அது ரத்து செய்யப்பட்டதால் சாதாரண மக்களுக்கு எவ்வளவு கஷ்டம் என்பதையும் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் அதுவே எனக்கு பிரச்சினையாகும் என்று நான் நினைக்க வில்லை.
இந்த பிரச்சினை அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அவர்களின் கவனத்துக்கு சென்றிருக்கிறது. அப்போது சுகாதாரத்துறை செயலாளராக இருந்த இன்பசாகரன் அவர்கள் இந்த பேட்டிக்கொடுத்த மருத்துவரை உடனே அழைத்து வாருங்கள் என்று சொல்ல, நான் அவரை சந்திக்க சென்றிருந்தேன். என்னை பார்த்ததும் கடும் கோபத்தில் ஏன் இப்படி அரசாங்கத்தை விமர்சித்து பேட்டி கொடுத்தாய்? உன்னை, நீ செய்த வேலைக்கு சஸ்பெண்டு செய்வதுதான் இப்போதைக்கு ஒரே வழி என்றார்.
என்னால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. கடுமையான கோபத்தில் இருந்த அவர், நீ யார்? என்ன என்று எல்லா விவரங்களையும் கேட்ட போது, நான் குமரி அனந்தனின் மருமகன் என்றதும், ஓ...ஓ... அந்த தைரியத்தில்தான் போ... போ... என்று விரட்டி விட்டார். நல்ல நேரம் சஸ்பெண்டு ஆகாமல் தப்பினேன்.
முக்கியமாக ஒரு விசயத்தை புரிந்து கொள்ள வேண்டும். சராசரியாக தினமும் 3 முதல்4 மணி நேர இடைவெளியில் சிறுநீர் கழிக்க வேண்டி வரும். இந்த நேரம் தாண்டிவிட்டால் சிறுநீரை அடக்கி வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம்.
சிறுநீர் என்பது உடல் வெளியேற்றும் தேவையற்ற நீர். உடலின் வெப்பநிலையை சீராக வைத்துக்கொள்ள உடல் நடத்தும் செயல்.
நமது சிறுநீர் பை 1.5 முதல்2 கப் நீரைதான் தேக்கி வைக்கும். அதிகபட்சமாக தேக்கும் போதுதான் சிறுநீர் வெளியேற்ற அவசரப்படுத்தும்.
சிறுநீர் அதிக நேரம் தேங்கி இருந்தால் அதிக பாக்டீரியாக்கள் வளர்ந்து சிறுநீர் தொற்றை உண்டாக்கும். அது மட்டுமல்ல சிறுநீர் பையில் கால்சியம் சேர்ந்து கல் உருவாகும் ஆபத்தும் உண்டு.
சிலர் இரவில் எழுந்தால் தூக்கம் தடைபடும் என்றும், வேலை இருந்தால் அடக்கி வைப்பதும் உண்டு. இவ்வாறு நீண்ட நேரம் தள்ளிப்போடுவதை தவிர்க்க வேண்டும். அதிகபட்சம் 15 நிமிடங்கள் அதற்குமேல்அடக்கி வைக்க முயற்சிக்க கூடாது.
காய்ச்சல் வந்தால் மாரடைப்பை விட ஆபத்து
பொதுவாக ஒருவருக்கு திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டால் மாரடைப்பு வந்திருக்குமோ என்ற சந்தேகம் வரும். உண்மையாக மாரடைப்பு வந்திருக்க கூடும். அது உயிருக்கு கூட சில நேரங்களில் ஆபத்தாக முடிந்தும் விடும். அதேபோலத்தான் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்களுக்கு காய்ச்சல் வருவதும். இதுவும் மாரடைப்பை போல் ஆபத்தானதுதான். ஏனெனில் உடலுக்குள் ஏதோ ஒரு பாதிப்பு ஏற்பட்டிருப்பதன் வெளிப்பாடுதான் காய்ச்சலாக தெரியும். எனவே காய்ச்சல் வந்தால் அது ஆபத்துக்கான அறிகுறி என்பதை புரிந்து கொள்ள வேண்டும். ஏதோ சாதாரண காய்ச்சலாகத்தான் இருக்கும். கடையில் ஒரு மாத்திரையை வாங்கி போட்டால் சரியாகிவிடும் என்ற தவறான எண்ணங்களை கைவிட வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். அவருக்குத்தான் உடலில் என்ன மாற்றம் ஏற்பட்டுள்ளது என்பதை கண்டுபிடிக்க தெரியும். அதற்கேற்ற வகையில் உடனே சிகிச்சை செய்து காப்பாற்றவும் முடியும்.