கட்டழகு தரும் பத்ம புஜங்காசனம்- 137
- இளம் வயதிலேயே ஆண்கள், பெண்கள் கற்றுக் கொண்டால் மிக இளமையான உடல், நல்ல மனம் கிடைக்கும்.
- செரிமானம் நன்கு நடக்கும். குடல் சுத்தமாகின்றது. சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினைகள் வராது.
மனித உடல் இயற்கை (இறைவன்) அளித்த வரப்பிரசாதமாகும். மனித உடலை எப்படி இறைவன் சிருஷ்டித்துள்ளார் பாருங்கள். 72000 நாடி நரம்புகள். பலவகையான எலும்புகள். ரத்த நாளங்கள், பல வகையான சுரப்பிகள், உள்ளே பலவகையான தொழில்கள் நடைபெறுகின்றது. ஜீரண மண்டலம், சுவாச மண்டலம், ரத்த ஓட்ட மண்டலம், கழிவுகளை பிரித்து வெளியேற்றும் சிறுநீரக மண்டலம். இத்தனையும் வெளியில் தெரியாதவாறு தோலினால் மறைக்கப்பட்டுள்ளது. எங்கும் ஒரு தையல் கூட இல்லை, அழகாக உடல் முழுவதும் தோலால் மறைக்கப்பட்டுள்ளது.
இவ்வளவு அற்புதமாக நமது மனித உடல் படைக்கப்பட்டுள்ளது. இதனை இயக்க மனமும், புத்தியும் நம்மிடம் உள்ளது. மனதால் வாழ்ந்தால் வீழ்ச்சி, புத்தியால் வாழ்ந்தால் எழுச்சி. ஆம் மனம் இந்த உடலை பாதுகாக்கும்படி நமக்கு கட்டளையிடாது. கண்டதை கண்ட நேரத்தில் உண்ண சொல்லும், உடலைப் பேணுவதில் அக்கறை காட்டாது. உடலின் மகிமையை உணராது.
ஆனால் புத்தியை பயன்படுத்தி இந்த உடலின் மகிமையை உணர்ந்து நம் உடலை, உள் உறுப்புக்களை, வெளி தசைகளை அழகாக, மிடுக்காக, இளமையுடன் நாம்தான் வைத்துக் கொள்ள வேண்டும். அதுதான் யோகக்கலை ஆகும்.
மனிதனின் தோள்பட்டையும், இருதய பகுதியும், வயிற்று தசைகளும், அழகாக, அளவோடு, திடமாக இருந்தால் தான் நன்றாக இருக்கும், இதில் முக்கிய கவனம் என்னவென்றால் இருதயம், நுரையீரல் உள்ளுறுப்புகள் நன்றாக இருந்தால் தான் அதன் வெளிதோற்றத் தசைகள், புஜங்கம் நன்றாக இருக்கும்.
அதே போல் வயிற்றின் உள் உறுப்புக்களான சிறுகுடல், பெருங்குடல், கணையம், சிறுநீரகம், அட்ரீனல் சுரப்பி நன்றாக இயங்கினால்தான் வயிற்று வெளித்தசைகள் கட்டுக்கோப்பாக இருக்கும்.
இதற்கு பத்ம புஜங்காசனம் சிறந்தது. இதனை இளம் வயதிலேயே ஆண்கள், பெண்கள் கற்றுக் கொண்டால் மிக இளமையான உடல், நல்ல மனம் கிடைக்கும்.
இந்த யோகாசனத்தை முதுகுத்தண்டு பிரச்சினை உள்ளவர்கள், முதுகில் அறுவை சிகிச்சை செய்தவர்கள், ரத்த அழுத்தம் உள்ளவர்கள், இதய பலவீனம் உள்ளவர்கள் செய்ய வேண்டாம். மற்றவர்கள் பொறுமையாக முயற்சி செய்யவும்.
விரிப்பில் முதலில் கிழக்கு திசை அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும்.
முதலில் பத்மாசனம் போடவும். (இடது காலை வலது தொடையிலும், வலது காலை இடது தொடையிலும் போட்டு அமரவும்.)
இப்பொழுது பத்மாசனத்திலேயே இருந்து மெதுவாக அவசரப்படாமல் குப்புறபடுக்கவும். (படத்தை பார்க்கவும். ஸ்டெப் 1 , ஸ்டெப் 2 )
இரு கைகளையும் இருதய பக்கத்தில் வைத்து மூச்சை இழுத்துக்கொண்டே மெதுவாக தலையையும், கைகளையும் உயர்த்தி மேலே பார்க்கவும். அந்நிலையில் மூச்சடக்கி ஒரு பத்து வினாடிகள் இருக்கவும். பின் மெதுவாக மூச்சை வெளிவிட்டு தரையில் நெற்றியை வைக்கவும்.
பின் மெதுவாக கைகளை ஊன்றி எழுந்து பத்மாசனத்திலேயே அமரவும்.
பின் பத்மாசனத்திலிருந்து சாதாரணமாக அமரவும்.
தோள்கள், மார்பு, வயிறு, இடை முதலியவற்றில் தசைகளும் கட்டுக் கோப்பாக இருக்கும். அதனைச் சார்ந்த உள் உறுப்புகளும் வளமாக இயங்கச் செய்யும், இந்த ஆசனம் செய்தால் மார்பக புற்று நோய் நிச்சயம் வராது.
தாய்மார்கள் தயவு செய்து உங்கள் வீட்டில் உள்ள பெண் குழந்தைகளை இளம் வயதிலியேயே இந்த ஆசனத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தி தினமும் காலை, மாலையில செய்ய சொல்லுங்கள். வளர்ந்து வரும் காலங்களில் அவர்களுக்கு மார்பக புற்று நோய் வராது. திருமணம் ஆன பிறகும், குழந்தை பிறந்த பிறகும், மார்பக கட்டிகள் வராது. மேலும் இளமையாகவே இருப்பார்கள்.
பத்மாசனத்தில் அடி வயிறு அமுக்கப்படுவதால் அதிக வயிற்று தசை குறையும், இடை பெருக்காது. மாதவிடாய் பிரச்சினைகள் வராது.
செரிமானம் நன்கு நடக்கும். குடல் சுத்தமாகின்றது. சிறுநீரகம் சம்மந்தமான பிரச்சினைகள் வராது.
தொடை தசைகள் பெரிதாக இருப்பது பெண்களின் அழகு தோற்றத்தை பாதிக்கும். இந்த ஆசனம் செய்வதால் தொடைப் பகுதியில் உள்ள அதிக தசைகள் எளிதாக எந்த ஒரு பக்க விளைவும் இல்லாமல் குறைந்து அழகான தோற்றத்துடனும், இளமையுடனும் திகழலாம்.
மூட்டுக்கள் பலம் பெரும். மூட்டு வலி வராது. பெண்கள் திருமணத்திற்கு முன்பே இந்த ஆசனம் செய்தால் திருமணமானவுடன் சுகப்பிரசவம் உண்டாகும்.
முகம், கன்னம் தசைகள் பளபளப்பாகவும், சுருக்கம் இல்லாமலும் இருக்கும்.
சிலருக்கு தோள்பட்டை சமமாக இல்லாமல் சற்று இறங்கியிருக்கும். அதனை இவ்வாசனம் செய்தால் சரி செய்துவிடும்.
நுரையீரல் நன்கு இயங்கும். சளி பிடித்தல், ஜலதோஷம் நீங்கும்.
மனம் எப்பொழுதும் சாந்தமாக இருக்கும். மூளைப்பகுதியில் உள்ள அதிக உஷ்ணம் வெளியேறுகின்றது. பிட்யூட்டரி, பினியல் சுரப்பிகள் சரியாக சுரக்கும். மன அமைதியை கொடுப்பதால் ரத்த அழுத்தம் வராது.
குரல் வளம் நன்றாக இருக்கும். தைராய்டு, பாரா தைராய்டு சுரப்பிகளை சிறப்பாக இயங்கச் செய்யும். அதனால் உடலில் உள்ள அதிக எடை எந்த ஒரு பக்க விளைவுகளின்றி குறையும்.
இவ்வளவு பலன்கள் இந்த ஆசனத்தில் மறைந்துள்ளது.
நுரையீரல், நன்றாக இயங்கவும், முதுகு, புஜங்கம் சதைக் கட்டுப்பாடுடன் அழகாகத் திகழவும் ஐஸ் கிரீம் உண்பதை தவிருங்கள். மிகவும் குளிர்ந்த பானங்கள், புளித்த தயிர் உண்பதை குறைத்துக் கொள்ளுங்கள். அன்றாட உணவில் அதிகம் புளிப்பு சேர்க்காமல் புளிக்கு பதிலாக தக்காளி பழம் சேர்த்து உண்ணுங்கள். புலால் உண்பதைத் தவிர்த்து இயற்கை பச்சை காய்கறிகள், கீரை உண்பது மிகவும் நலம்.
ரோஜாப்பூவுடன் கற்கண்டு சேர்த்து பிசைந்து தேன் கலந்து 5 நாட்கள் வெயிலில் வைத்து கிடைக்கும் குல்கந்தை காலை, மாலை ஒரு சிறிய ஸ்பூன் அளவு உண்டு வாருங்கள், நுரையீரல் பலம் பெரும். உடல் வெளித் தசைகள் மார்பு தசைகள் தோள்பட்டை தசைகள் மிகவும் பொலிவுடன் இருக்கும்.
செம்பருத்தி பூவை குடிநீரில் சேர்த்து காய்ச்சி அதில் பாலும், சர்க்கரையும் சேர்த்து காலை, மாலை அருந்தவும்.
பப்பாளி பழம், அடிக்கடி உணவில் சேர்க்கவும். வெள்ளரிக்காய், ஆரஞ்சு பழரசம் உணவில் சேர்க்கவும்.
பொதுவாக மன அழுத்தம், கோபம், டென்ஷன், பொறாமை, கவலை இருந்தால் தோல் பளபளப்பின்றி இளமையோடு இருக்கமுடியாது. இந்த ஆசனம் செய்வதால் மனதில் நாளாக நாளாக அமைதி வரும், மன அழுத்தம் நீங்கும். கவலை நீங்கும். மகிழ்ச்சி பிறக்கும். நமது பண்புகளை மாற்ற வல்லது யோகாசனமே, அதன் மூலம் தான் உங்கள் தோல் தசை பளபளப்பாகின்றது. இது தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது.
பயிற்சி செய்யுங்கள். அகமும், புறமும், ஆனந்தமாக அமைதியாக வைத்து உடல், மனம் இளமையோடு ஆரோக்கியமாக வாழுங்கள்.
பல் கூச்சம் வருகின்றது. ஈறு வீக்கம் ஏற்படுகின்றது. பற்களில் ரத்தம் வருகின்றது. பல் வலி ஏற்படுகின்றது. இதற்கு யோகா முத்திரையில் தீர்வு கூறுங்கள்.
பதில்: மனித உடலில் எல்லா உறுப்புகளும் முக்கியமானதுதான். அதில் பற்கள் மிக முக்கியமானது. பற்களுக்கும் தலை நரம்பு மண்டல்களுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. பற்கள் வலி வருவதற்கும், ஈறுகளில் ரத்தம் வருவதற்கும் காரணம், நமது உணவு முறை, பழக்க வழக்கம். முடிந்த வரை பழம், கீரை, காய்கறிகள் மட்டும் உணவில் உண்ணுங்கள். மாமிசம் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. காலை / இரவு வேப்பங்குச்சி வைத்து பல் துலக்குங்கள்.
விரிப்பில் நிமிர்ந்து அமருங்கள். முதுகெலும்பு நேராக இருக்கட்டும். கண்களை மூடி இயல்பாக நடக்கும் மூச்சை கூர்ந்து கவனிக்கவும் பத்து வினாடிகள். பின் மோதிர விரலால் பெருவிரல் நுனியை தொடவும். மற்ற விரல்கள் தரையை நோக்கி இருக்கட்டும்.
இரண்டு நிமிடங்கள் செய்யவும். காலை / மதியம் / மாலை சாப்பிடுமுன் பயிற்சி செய்யவும்.
பின் எல்லா கைவிரல் நுனிகளில் ஒரு அழுத்தம் கொடுக்கவும். ஒவ்வொரு கைவிரல் நுனியிலும் ஐந்து முறை (பெருவிரல் ஆள்காட்டி விரலை குவித்து அதன் மையத்தில் கைவிரலை வைத்து அழுத்தம் கொடுக்கவும்)
பிரிதிவி முத்திரை ஒரு நாளில் இரண்டு நிமிடம் ஐந்து முறைகள் செய்யவும்.
15 நாட்களுக்கு ஒரு முறை வேப்ப இலை கொழுந்து காலையில் சாப்பிடவும். வெந்நீர் அதில் உப்பு போட்டு சுடவைத்து ஆறியவுடன், இளஞ் சூட்டில் வாயில் ஊற்றி கொப்பளிக்கவும். இரவு படுக்குமுன் இதனை செய்யவும்.
கிராம்பு ஒன்று வாயில் ஒதுக்கி அதன் சாறு பற்களில் படும்படி செய்யவும்.
கரும்பு 15 நாட்களுக்கு ஒரு முறை ஒரு அரை துண்டு பற்களில் மென்று சாப்பிடவும்.
சுத்தமான நல்ல எண்ணெய் வாரம் ஒருமுறை வாயில் ஒரு கரண்டி ஊற்றி நன்கு கொப்பளிக்கவும். இதனை கடைபிடியுங்கள் பற்கள் ஈறுகள் சிறப்பாக இயங்கும்.
பெ.கிருஷ்ணன்பாலாஜி, M.A.(Yoga)
63699 40440
pathanjaliyogam@gmail.com