அமெரிக்கர்கள் மத்தியில் நிலவும் பேய் நம்பிக்கை
- ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாட்களில் ஹேலோவீன் தினமாகக் கொண்டாடப்பட்டது.
- குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிர மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம்.
மூட நம்பிக்கைகள் என்பது நினைவிற்கு எட்டாத காலந்தொட்டே, மனிதர்களின் வாழ்வில் ஒரு பகுதியாகவே இருந்து வந்து கொண்டிருக்கிறது. இது மனிதனின் சக்திக்குக் கட்டுப்படாத, புரிந்து கொள்ள இயலாத ஒரு வகை இனம் புரியாத அச்சத்தின் பிரதிபலிப்பே. என்றாலும் இதற்கு நவநாகரிகத்தின் உச்சத்தில் இருக்கும் அமெரிக்கா, ஐரோப்பா போன்ற மேலை நாடுகளும் விதி விலக்கல்ல. அந்த அச்சத்தின் உச்சம் தான் இவர்கள் கொண்டாடும் 'ஹேலோவீன்' தினம்.
ஹேலோவீன் என்ற அனைத்து ஆன்மாக்களின் தினம் அமெரிக்காவில் மிகவும் பரவலாகக் கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று. மரணம் அடைந்தவர்களின் ஆன்மாக்கள் நிறைவேறாத ஆசைகளுடன் அலைந்து கொண்டிருந்தால் அவை பேயாக மனிதர்களைத் தாக்கும் என்ற மூடநம்பிக்கை, எல்லா நாடுகளிலும் எல்லா மனிதர்களிடையேயும் இருந்துவருகிறது.
நாம் ஆலயங்களில் ஒவ்வொரு ஆண்டும் திருவிழா கொண்டாடுவது போலவும், மயானக்கொள்ளை பூசை செய்வது போலவும் அமெரிக்கர்கள் பேய்களுக்கு என்று ஆண்டுதோறும் அக்டோபர் 31-ம் நாள் ஹேலோவீன் திருவிழாவைக் கொண்டாடுகிறார்கள். அமெரிக்கா, பிரிட்டன், கனடா, அயர்லாந்து உள்ளிட்ட அனைத்து வளர்ந்த நாடுகளும் இதனைக் கொண்டாடி வருகின்றன.
முதன்முதலில் அயர்லாந்தில், அகால மரணமடைந்த புனிதத் துறவிகளின் நினைவாக இந்நாள் ரோமன் கத்தோலிக்கர்களால் பிப்ரவரி 21, மே 13 ஆகிய நாட்களில் ஹேலோவீன் தினமாகக் கொண்டாடப்பட்டது. பின்னர் அமெரிக்காவில் குடியேறிய ஐரோப்பியர்களால் அக்டோபர் 31-ந்தேதியில் கொண்டாடப்பட்டு வருகிறது.
நிறைவேறாத ஆசைகளுடன் அலையும் ஆவிகளை மகிழ்விப்பதால் தங்களுக்கு எந்த விதமான தீங்கும் நேராது என்பது மேற்கத்தியர்களின் அதீத நம்பிக்கை. ஆரம்பத்தில் உருளைக் கிழங்கை வெட்டி, அதன் உள்ளே மெழுகுவத்தியை ஏற்றி வைத்து மந்திரிப்பதன் மூலம் பேய்களை விரட்ட முடியும் என்று நம்பியவர்கள், தற்போது பெரிய பரங்கிக் காய்களை வெட்டி, அவற்றை அச்சமூட்டும் வகையில் அலங்கரித்து வீட்டு வாசலில் வைப்பதன் மூலம் பேய்களை அண்ட விடாமல் தடுக்கலாம் என்று நம்புகின்றனர்.
ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலம் முடிந்து, பனிக்காலம் தொடங்கும் சமயம் ஒவ்வொரு வீட்டின் முன்பும் பூசனிக்காயை திகிலூட்டும் வகையில் அலங்காரம் செய்து வெளியே வைக்கிறார்கள். ஹேலோவீன் திருவிழாவால் மூட நம்பிக்கைகள், மக்கள் மரபு வழி நம்பிக்கைகள், புராணங்கள், சகுனங்கள் போன்றவற்றை நம்புபவர்களுக்கு மேலும் பலம் சேர்க்கிறது. இதன் பின்னணியில் பல வேடிக்கையான நம்பிக்கைகளும் வழக்கத்தில் உள்ளன.
ஹேலோவீன் தினத்தன்று, பாரந்தூக்கியால் மேலே ஏற்றப்பட்ட, எரியும் மெழுகுவர்த்தி கெட்ட ஆவிகளின், பேய்களின் ஊளையிடல்களைத் தவிர்க்கச் செய்கிறதாகவும் நம்புகிறார்கள். இந்த தினத்தில் ஒரு மெழுகுவர்த்தி திடீரென காற்றினாலோ, அல்லது மூச்சுக் காற்றினாலோ அணைந்து விட்டால் இறந்து போனவரின் ஆன்மா தங்களை அழைப்பதாகவும் நம்புகிறார்கள்.
அன்றைய தினத்தில் எப்பொழுதும் புதிய மெழுகுவர்த்தி மட்டுமே ஏற்றுவார்கள். அந்த குறிப்பிட்ட மெழுகுவர்த்தியை அந்த நாளைத் தவிர மற்ற வேறு எந்த நாட்களிலும் ஏற்றக் கூடாதாம். அப்படிச் செய்தால் கெட்ட சகுனங்களும், கட்டுப்படுத்த முடியாத வேறு ஏதாவது சம்பவங்களும் நிகழக் கூடும் என்றும் நம்புகிறார்கள்.
அன்றைய இரவில் விளக்கை கைகளில் ஏந்திக் கொண்டு நீரூற்று இருக்கும் இடத்திற்குச் செல்லும் பெண்கள் தங்களுடைய எதிர்காலக் கணவனை நிழல் உருவில் காண முடியும் என்றும் நம்புகிறார்கள். நடு இரவில் ஒரு புதிய செந்நிற மெழுகுவர்த்தி ஏற்றி சூரிய உதயம் வரை அது அணையாமல் இருந்தால் யோகமாகுமாம்.
தொன்று தொட்டு வரும் வழக்கமாக, ஹேலோவீன் தினத்தன்று, சொக்கப்பனை போன்ற பெருந்தீ வளர்த்து, அதைச் சுற்றி வெவ்வேறு குடும்பத்தைச் சார்ந்த பலர் நின்று கொண்டு, அந்தத் தீ அணைந்து சாம்பலானவுடன் அவரவர் நிற்கும் அந்த இடத்தின் அருகில் கூழாங்கற்களை அந்த சாம்பலுக்குள் புதைத்து வைப்பார்கள். அடுத்த நாள் அந்தக் கல் இடம் மாறியோ அல்லது அதற்கு ஊறுபாடு உண்டாகியிருந்தாலோ, அந்தக் கல்லுக்குச் சொந்தக்காரர்கள் 12 மாதத்திற்குள் இறந்து விடுவார்கள் என்பதற்கான அறிகுறியாகக் கருதுகிறார்கள்.
வவ்வால் வீட்டை மூன்று முறை வலம் வந்தால் அதுவும் இறப்பிற்கான தீய சகுனமாம். இந்த தினத்தில் பிறப்பவர்கள் ஆவிகளைப் பார்க்கவும், அதனுடன் பேசக்கூடியவர்களாகவும் இருப்பார்களாம்.
அன்று சிலந்திப் பூச்சியைப் பார்த்தால் அது இறந்து போன, தங்களை அதிகமாக நேசித்துக் கொண்டிருந்த ஒருவரின் ஆவி தன்னை கவனித்துக் கொண்டிருப்பதாக அர்த்தமாம். இப்படி நம்ப முடியாத ஆதாரமற்ற பல தகவல்களைச் சொல்கின்றனர்.
நம்மூர் பூனை சகுனம் கூட அமெரிக்கர்களும் நம்புகிறார்கள். கருப்பு பூனை, சூனியக்காரியுடன் சம்பந்தப்பட்டதால், அந்த சூனியக்காரியேக்கூட பூனை வடிவில் வரக்கூடுமாம். இறந்தவர்களின் ஆவிகூட பூனையிடம் தங்கியிருக்குமாம். பூனை குறுக்கே போனால் திரும்பிப் போய்விட வேண்டுமாம், இல்லாவிட்டால் தீயவை நடக்குமாம்.
ஹேலோவீன் தினத்தில் குழந்தைகள் மாறு வேடங்கள் அணிந்து கொண்டு, குறிப்பாக சூனியக்காரி, பேய், கார்ட்டூன் கதாப்பாத்திரங்கள் இப்படி ஏதாவது உடை அணிந்து கொண்டு, வீடு வீடாகச் சென்று , டிரிக் ஆர் டிரீட் என்று ஒரு கூடையுடன் சென்று கேட்பார்கள். வீட்டில் உள்ளவர்கள் விதவிதமான சாக்லேட்களை அந்தக் குழந்தைகளுக்குக் கொடுத்தனுப்புவார்கள்.
ஹாலோவீன் உடை அணிந்து கேளிக்கைகளில் ஈடுபடுவது, பூசணிக்காய்கள் அல்லது டர்னிப்களை ஜாக்-ஓ-லாந்தர்களாக செதுக்குதல், நெருப்பு கொளுத்துதல், பேய் பிடித்த இடங்களுக்குச் செல்வது ஆகியவை இக்கொண்டாட்டங்களில் அடங்கும். அச்சமூட்டும் கதைகளைச் சொல்வதும், திகில் அல்லது ஹாலோவீன் பின்னணியிலான திரைப்படங்களைப் பார்ப்பது, இறந்தவர்களின் கல்லறைகளில் மெழுகு வர்த்திகளை ஏற்றுவது உட்பட அனைத்தும் நடக்கும். மதச்சார்பற்ற கொண்டாட்டமானாலும் சிலர் அன்று இறைச்சி உண்ணாமல் ஆப்பிள், உருளைக்கிழங்கு அப்பங்கள், கேக்குகள் போன்ற சில சைவ உணவுகளை மட்டுமே உண்கிறார்கள்.
காலம் செல்லச்செல்ல இந்த ஹாலோவீன் தினம் தொழில்நுட்ப உதவிகளுடன் மேலும் அதிபயங்கரமான கற்பனை வடிவங்களால் அச்சமூட்டும் வழக்கமும் துவங்கி மேலும் திகிலுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் 16 மாநிலங்களில் ஹேலோவீன் அருங்காட்சியகங்கள் உள்ளன. அங்குள்ள உருவங்கள் இந்த நாளில் வீதிகளில் உலா வரத் தொடங்கிவிடும். இரவு முழுக்க விதவிதமான பேய்களின் அலங்கார அணிவகுப்புகள் காண்பவரை மிரளச் செய்வதோடு, சிலர் பேய்களின் முகமூடியை அணிந்து கொண்டு சாலையெங்கும் திரிந்து பீதியைக் கிளப்புவார்கள். திடீரென்று வீடுகளுக்குள் நுழைந்து, 'ஹேப்பி ஹேலோவீன் டே' என்று குரல் எழுப்புவார்கள். அச்சமூட்டும் உருவங்களுடன் குழந்தை களுக்கு இனிப்புகளை வழங்கியும் மகிழ்வார்கள்.
-பவளசங்கரி