சிறப்புக் கட்டுரைகள்

மகளிர் மருத்துவம்- அடிப்படை பாலியல் உறவுகளே குழந்தையின்மைக்கு காரணமாகலாமா?

Published On 2025-03-19 13:12 IST   |   Update On 2025-03-19 13:12:00 IST
  • தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.
  • குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது என்பார்கள்.

குழந்தையின்மையில் சில பிரச்சனைகள் கேட்கும்போதே அப்படியா என்று ஆச்சரியத்தை ஏற்படுத்தும். பாலியல் உறவுகளால் கூட குழந்தையின்மை ஏற்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது ரொம்ப ஆச்சரியமாக இருக்கும். குழந்தை பாக்கியம் கிடைப்பதற்கு அடிப்படையே பாலியல் உறவு தான். ஆனால் பாலியல் உறவு என்பதே குழந்தையின்மைக்கு காரணமானால் எப்படி குழந்தைபேறு பெற முடியும்? இதில் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். பாலியல் உறவுகள் அடிப்படையில் சரியாக இருந்தால்தான் குழந்தை பேறு உருவாகும்.

பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணம்:

குழந்தையின்மைக்கு பல்வேறு காரணங்கள் இருந்தாலும், குழந்தைபேறு சிகிச்சை பெற வரும் தம்பதியினர் எதிர்நோக்கும் பாலியல் பிரச்சனைகளும் குழந்தையின்மைக்கான ஒரு காரணமாகும். இதுதான் ரொம்ப பெரிய பிரச்சனையாகும். பல நேரங்களில் குழந்தைப்பேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பதே தம்பதியினரிடம் ஒரு பெரிய கேள்விக்குறியாக அமைகிறது.

இன்றைக்கும் உலக அளவில் எடுக்கப்பட்ட பல ஆய்வுகள் சொன்ன ஒரு விஷயம், ரொம்ப வருந்தத்தக்க முக்கியமான தகவலை தருகிறது. குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினர் பலருடைய பாலியல் உறவுகளை வரையறுத்து இந்த ஆய்வுகள் செய்யப்பட்டன.

இதில் குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட பெண்களை எடுத்துக்கொண்டால் கிட்டத்தட்ட 58 முதல் 98 சதவீத பெண்களுக்கு இந்த பாலியல் பிரச்சனைகள் ஏற்படுகிறது. குழந்தைபேறு என்று வரும்போது பாலியல் உறவு என்பது ஒரு பெரிய பிரச்சனையாக கருதப்படுகிறது. குழந்தைக்காக தாம்பத்திய உறவு கொள்வது என்பது, பெரிய அளவில் மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது என்று இந்த ஆய்வில் சொல்லப்பட்டுள்ளது.

அதேபோல் ஆண்களை எடுத்துக் கொண்டால் 46 முதல் 58 சதவீத ஆண்களுக்கு குழந்தைபேறு என்று வரும்போது அவர்களின் தாம்பத்திய உறவுகளில் பிரச்சனைகள் ஏற்படுகிறது. இதனால் பாலியல் செயலிழப்பு என்கிற ஒரு முக்கியமான பிரச்சனையை அவர்கள் சந்திக்கிறார்கள். அதாவது குழந்தைபேறு என்று வரும்போது தாம்பத்திய உறவு பிரச்சனைகள் ஆண்களை அதிகமாக பாதிக்கிறது.

குழந்தைபேறுக்கு அடிப்படையான விஷயமே கணவன், மனைவி இடையேயான தாம்பத்திய உறவு தான். இந்த தாம்பத்திய உறவில் பிரச்சனை என்றால் எப்படி குழந்தை பேறு பெறமுடியும்? இது ஒரு முக்கியமான விஷயம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீத பெண்களுக்கும், 58 சதவீதம் ஆண்களுக்கும் பாலியல் பிரச்சனைகள் இருப்பது மிகப்பெரிய அளவாகும்.

8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு:

ஒரு தம்பதியினர் எந்த தடையும் இல்லாமல் 8 முதல் 10 மாதங்கள் தொடர்ந்து தாம்பத்திய உறவு கொள்ளும் போதுதான் குழந்தைபேறு பெற முடியும் என்பது பல ஆய்வுகளில் சொல்லப்பட்ட விஷயமாகும். அப்படி இருக்கும்போது பாலியல் உறவில் ஈடுபடுவதிலேயே பிரச்சனை இருந்தால் குழந்தைபேறு பெறுவது எப்படி சாத்தியமாகும்? இது ஒவ்வொரு தம்பதியினரும் புரிந்து கொள்ள வேண்டிய விஷயம்.



இன்றைக்கும் குழந்தைபேறுக்காக, அதாவது ஒரு குழந்தை வேண்டும் என்று நினைத்து பாலியல் உறவு கொள்ளும் போது தம்பதியினரிடையே பலவிதமான மன அழுத்தம் ஏற்படுகிறது. இதை என்னிடம் சிகிச்சைக்கு வரும் தம்பதிகள் சொல்வதுண்டு. 'டாக்டர், எங்களுக்கு திருமணமாகி 4 வருடம் ஆகிறது. முதல் 2 வருடங்கள் குழந்தை வேண்டாம் என்று முடிவு செய்தோம். அப்போதெல்லாம் நாங்கள் தாம்பத்திய உறவின் போது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தோம். ஆனால் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ அப்போது தாம்பத்திய உறவில் எங்களுக்கு பிரச்சனை வந்துவிட்டது' என்பார்கள்.

'குழந்தை பாக்கியம் வேண்டும் என்ற நோக்கத்தில் உறவு கொள்ளும் போது என்னோட கணவருக்கு விறைப்புத்தன்மை குறைவாகி விடுகிறது. எங்களால் நேரத்துக்கு நேரம் தாம்பத்திய உறவு கொள்ள முடியவில்லை. சரியாக டாக்டர் சொல்கிற நேரத்திலோ அல்லது, கூகுளில் சொல்லப்படும் 14-வது நாளிலோ, சினைப்பையில் இருந்து முட்டை வெளிவரும் அண்டவிடுப்பு தினத்திலோ எங்களால் தாம்பத்தியம் கொள்ள முடியவில்லை என்று சொல்கின்ற தம்பதியினரின் எண்ணிக்கை அதிகம். இன்றைக்கும் குழந்தையின்மை சிகிச்சை முறைகளில் முக்கியமான ஒன்றாக நான் கருத்துகிற விஷயமே அவர்களுடைய தாம்பத்திய உறவு முறைகளை சீர்படுத்துவது தான். தம்பதிகள் முதலில் சிகிச்சை பெற வரும்போது அவர்களுடைய பாலியல் உறவு பற்றிய வரலாற்றை கேட்டால் அனைத்து நோயாளிகளும் வெளிப்படையாக சொல்கிற விஷயம், 'டாக்டர் நாங்கள் எப்போது குழந்தை வேண்டும் என்று திட்டமிட்டோமோ, அதற்காக எப்போது சிகிச்சைக்கு வந்தோமோ, அப்போதில் இருந்தே எங்களின் பாலியல் உறவு செயல்பாடு ரொம்ப பாதிக்கப்பட்டு விட்டது' என்பார்கள்.

பாலியல் உறவுகளில் உள்ள 5 முக்கியமான விஷயங்கள்:

இன்றைக்கும் குழந்தைபேறு என்று வரும்போது தம்பதிகளின் பாலியல் உறவுகளில் உள்ள செயல்பாடுகளை எடுத்தால் பலருக்கும் அவர்களுடைய விருப்பம், லூப்ரிகேஷன், உறவு கொள்ளுதல் உள்ளிட்ட எல்லாவிதமான விஷயங்களும் பாதிக்கப்படுகிறது. பாலியல் உறவுகளை பொருத்தவரை விருப்பம், தூண்டுதல், உச்சகட்டம், திருப்தி மற்றும் அதனுடைய வலி ஆகிய 5 முக்கியமான விஷயங்கள் இருக்கிறது. இவை ஆய்வுகளில் சொல்லப்படுகிற விஷயம்.

நல்ல முறையில் தாம்பத்திய உறவு நடைபெறும் போது கண்டிப்பாக குழந்தைபேறு வரும் என்று நாம் நினைக்கிற நிலையில், தாம்பத்திய உறவு என்கிற அடிப்படையே பிரச்சனையாகும் போது குழந்தைபேறு கேள்விக்குறியாகி விடுகிறது.

எங்களுடைய மையத்தில் எடுத்த ஒரு ஆய்வில், 'கிட்டத்தட்ட 28 முதல் 35 சதவீத தம்பதியினருக்கு வரும் பிரச்சனை என்னவென்றால், குழந்தைபேறு விஷயத்துக்காக தாம்பத்திய உறவு கொள்ளும் போது, லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் உலர்வு தன்மை ஏற்படுகிறது' என்கிறார்கள்.

உலர்வு தன்மையுடன் இருந்தால் ஏதாவது லூப்ரி கேஷன் பயன்படுத்துவார்கள். லூப்ரிகேஷன் பயன்படுத்தினால் ஆணின் உயிரணுக்கள் அதனுடைய உயிரோட்டத்தை இழந்துவிடும். ஏனென்றால் லூப்ரிகேஷன் உயிரணுக்களின் வாழ்க்கையை பாதிக்கும். அதனால் உயிரணுக்கள் இறந்து போகும் அல்லது உயிரணுக்களின் செயல்பாடு குறைந்துவிடும்.

எனவே இந்த பிரச்சனைகள் தான் ஆண்கள், பெண்கள் இருவரும் தம்பதியினராக அதிகம் எதிர்நோக்குகிற விஷயம். அவர்கள் தங்களுக்கு ஒரு குழந்தை வேண்டும் என்ற எண்ணத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபடும் போது மன அழுத்தம் அதிகமாகிறது. இதனால் லூப்ரிகேஷன் வருவதில்லை. இதனால் அவர்கள் பிரச்சனைகளை சந்திக்கிறார்கள்.


டாக்டர் ஜெயராணி காமராஜ், குழந்தையின்மை சிகிச்சை நிபுணர், செல்: 72999 74701

எனவே பாலியல் பிரச்சனைகள் கண்டிப்பாக குழந்தையின்மையை உருவாக்கலாம். குழந்தையின்மையால் பாதிக்கப்பட்ட தம்பதியினருக்கு சிகிச்சை முறைகள் எடுக்கும் போது கண்டிப்பாக மேற்கண்ட பிரச்சனைகளையும் எதிர்நோக்கலாம். எனவே பாலியல் செயலிழப்பு என்பது, குழந்தையின்மையினால் வரலாம். பாலியல் உறவு பிரச்சனைகளால் குழந்தையின்மை ஏற்படலாம்.

விருப்பத்தின் பேரிலேயே தாம்பத்திய உறவில் ஈடுபட வேண்டும்:

இந்த வகையில் தம்பதியினரின் அடிப்படையிலான பாலியல் பிரச்சனைகள் என்ன என்பதை முழுமையாக பரிசோதிக்க வேண்டும். பெண், ஆண் இருவரும் சிகிச்சை பெற வரும்போது முறையாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த பிரச்சனை ஏன் வருகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப வழிகளை யோசிக்க வேண்டும்.

சிகிச்சைக்கு வரும் பெண்ணுக்கு மருத்துவர் ஸ்கேன் செய்து பார்த்து, இன்றைக்கு அண்டவிடுப்பு ஆகியிருக்கிறது என்று அவர்களிடம் தெரிவித்தால், அடுத்த நாளே அவர்கள் மீண்டும் வந்து மருத்துவர்களிடம் நிற்பார்கள். 'டாக்டர் நாங்கள் நேற்று தாம்பத்திய உறவே வைக்கவில்லை, எங்களுக்கு குழந்தை பாக்கியம் வருமா?' என்பார்கள்.

எனவே தம்பதியினர் முக்கியமாக புரிந்து கொள்ள வேண்டிய விஷயம், தாம்பத்திய உறவு என்பது இயற்கையாக கணவன், மனைவி இருவரின் விருப்பத்தின் பேரில் நடக்க வேண்டிய விஷயம். அப்படித்தான் அதில் ஈடுபட வேண்டும். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் கண்டிப்பாக உறவு கொள்வது என்பது இயலாத காரியம்.

ஆண்களை பொருத்தவரைக்கும் பாலியல் உறவின் போது மன அழுத்தம் இருக்கக்கூடாது. தாம்பதிய உறவுக்கான சூழ்நிலைகள் சீராக இருக்க வேண்டும். குழந்தைபேறு என்பதை மனதில் இலக்காக வைத்து பாலியல் உறவில் ஈடுபட்டாலே பிரச்சனைகள் வரும். இந்த பாலியல் உறவு பிரச்சனைகள் இருக்கிற தம்பதியினரை முறையாக முழுமையாக பரிசோதிக்க வேண்டும். அவர்களுக்கு பாலியல் உறவில் என்னென்ன குறைபாடுகள் இருக்கிறதோ அதை சீர் செய்ய வேண்டும். பாலியல் உறவு பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட தம்பதிகளுக்கான சிகிச்சைகள் என்னென்ன என்பதை அடுத்த வாரம் பார்ப்போம்.

Tags:    

Similar News