சிறப்புக் கட்டுரைகள்

நலம் பெற தினமும் நடங்கள்!

Published On 2024-04-12 10:59 GMT   |   Update On 2024-04-12 10:59 GMT
  • நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி நாளும் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும்.
  • ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய மூச்சைக் கவனித்து, மனத்தளவில் ‘நான் நலமுடன் இருக்கிறேன்’ என்று எண்ணிக்கொண்டே நடப்பது இன்னும் சிறப்பு.

நம் உடல் 24 மணி நேரமும் நம்மைப் பாதுகாத்துக் கொண்டிருக்கிறது. நம் இதயம் இடைவிடாமல் துடிக்கிறது. நம்முடைய மூளை அணுஅணுவாய் நம்மைக் கண்காணித்துக் கொண்டே இருக்கிறது. நம்மில் எத்தணைப் பேர் நம் உடலின் மீது கவனம் வைக்கின்றோம். நோய் வந்த பிறகு மருத்துவமனைக்கு நடையாய் நடக்கின்றோமே தவிர, அது வருவதற்கு முன்னர் நாம் என்ன செய்து கொள்ள வேண்டும் என்பதைச் சிந்திப்பதே இல்லை.

ஒருவரின் முழுமையான நலன், காலை முதல் இரவு வரை அவர் என்ன செய்கிறார்? எவ்வளவு நேரம் தூங்குகிறார்? தனது உணர்வுகளை எப்படி வெளிப்படுத்துகிறார்? உள்ளத்தை எப்படி வைத்துள்ளார்? என்ன வகையான உணவு எடுத்துக் கொள்கிறார்? எவ்வளவு நேரம் உடற்பயிற்சி செய்கிறார்? என்பதைப் பொறுத்துத்தான் உள்ளது. எனவே நோய்களில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள உடற்பயிற்சி நாளும் செய்ய வேண்டும் என்ற உறுதிமொழியை அனைவரும் எடுக்க வேண்டும்.


என்னிடம் வரும் அனைத்து நோயாளிகளுக்கும் அவர்களின் நோயின் தன்மைக்கு ஏற்றவாறு 15 நிமிட உடற்பயிற்சி சொல்லிக்கொடுப்பது, எனது மருத்துவத்தின் ஒரு பகுதியாகவே வைத்துள்ளேன். அவர்கள் அடுத்த முறை வரும்போது உடற்பயிற்சி செய்தீர்களா? மாத்திரைகளைச் சரியான படி எடுத்துக்கொண்டீர்களா? எனக் கேட்டால், மாத்திரை எடுத்துக்கிட்டேன், ஆனால் பயிற்சி செய்ய நேரம் இல்லை என்று கூறுவார்கள். அவர்களிடமே தொலைக்காட்சி எவ்வளவு நேரம் பார்ப்பீர்கள்? என்று கேட்டால் 2 மணிநேரம் பார்ப்பேன் என்று கூறுவார்கள். 10 சதவீதத்துக்கும் குறைவானவர்களே நாளும் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டுள்ளனர்.

நடைப்பயிற்சி செய்யும்முறை

நடைப்பயிற்சி செய்வதற்கான நேரம், காலை 5 - மணியிலிருந்து 6 மணிக்குள் நடைப்பயிற்சி செய்வது நல்லது (இயன்றவரை). குளிர்காலங்களில் 6 மணிக்குப் பிறகு கூடச் செய்யலாம், சிலருக்குக் காலையில் குழந்தைகளைக் கிளப்புவது, அலுவலக வேலைகள் என்று இருந்தால், இரவு உணவுக்கு முன் ஒரு 6- மணியிலிருந்து 7- மணிக்குள் நடைப்பயிற்சியை முடித்துவிட்டு, வியர்வை அடங்கியவுடன் குளித்துவிட்டு இரவு உணவு அருந்துவது நல்லது. நமக்கு உகந்த நேரங்களில், நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் இந்த நடைப்பயிற்சி செய்வதைப் பழக்கமாக்கிக் கொள்வது நல்லது.

நடைப்பயிற்சியின் கால அளவு, தினமும் குறைந்தது 40 நிமிடங்கள் நடைப்பயிற்சி செய்யப் பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சியோடு சேர்ந்து, யோகா, மூச்சுப் பயிற்சி, தியானம் ஆகியவற்றைச் செய்பவர்களுக்கு, 30 நிமிடங்களே போதுமானது. வாரத்தில் அனைத்து நாட்களும் உடற்பயிற்சி செய்வது நல்லது, இருப்பினும் 5 நாட்களாவது கண்டிப்பாகச் செய்ய வேண்டும்.


நடைப்பயிற்சியின் வேகம் 1 மணி நேரத்திற்குக் குறைந்தது 6 கிமீ வேகத்தில் இருப்பது நல்லது. வயதானவர்கள் தம் உடல் தகுதிக்கு ஏற்றவாறு வேகத்தைக் குறைத்துக் கொள்ளலாம். நடைப்பயிற்சிக்குத் தகுந்தபடி உடையணிய வேண்டும். அப்போதுதான் வேகமாக நடக்க முடியும். நல்ல காலணிகளை அணிய வேண்டும். தரமற்ற காலணிகள் அணிந்து நடக்கும்போது நடைப்பயிற்சியின் வேகம் குறையும்.

நடைப்பயிற்சியின் போது யாரிடமும் பேசாமல் நம் உடல் மீது கவனம் வைத்து நடப்பது நன்று. நண்பர்களுடன் நடப்பதற்குத் தனிநேரமும், தனியாக நடப்பதற்குக் குறைந்தது 15 நிமிடங்களும் ஒதுக்குவது நம் உடலுக்கு நன்மைப் பயக்கும். நேராகப்பார்த்து, கைகளை நன்றாக வீசி, ஒவ்வொரு நிமிடமும் நம்முடைய மூச்சைக் கவனித்து, மனத்தளவில் 'நான் நலமுடன் இருக்கிறேன்' என்று எண்ணிக்கொண்டே நடப்பது இன்னும் சிறப்பு.

நான் மகிழ்ச்சியுடன் இருக்க இந்த நடைப்பயிற்சியைச் செய்கிறேன், இதனால் என் உடலும் உள்ளமும் நலன் பெறுகின்றன என்பதை உணர்ந்து நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். நடைப்பயிற்சிக்கு முன் நன்கு தண்ணீர் பருகிவிட்டுத் தொடங்க வேண்டும். நடைப்பயிற்சி செய்யும்போது 500மிலி வரை தண்ணீர் எடுத்து க்கொள்ளலாம். வியர்வையில் அதிகப்படியான தண்ணீர்ச் சத்து வெளியேறுவதால், நடைப்பயிற்சிக்கு முன் தண்ணீர் எடுத்து க்கொள்வது நல்லது. நடைப்பயிற்சி முடிந்தபின், வியர்வை அடங்கியவுடன் குளிக்க வேண்டும். வியர்வையுடன் குளிப்பது நல்லதல்ல. நடைப்பயிற்சியின் முடிவில் தேநீர் அல்லது மற்ற உணவுப் பண்டங்களை உண்ணுவதைத் தவிர்க்க வேண்டும்.

நடைப்பயிற்சியின் நன்மைகள்

உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கிறது. உடலின் இறுக்கத்தைக் குறைக்கிறது. எலும்பு மற்றும் மூட்டுகளின் வலிமையை அதிகரிக்கச்செய்கிறது. காலிலுள்ள தசைகளை வலுப்பெறச்செய்கிறது. ரத்தச் சர்க்கரையைக் கட்டுக்குள் வைக்க உதவுகிறது. ரத்த அழுத்தத்தைச் சரியான அளவில் வைக்க உதவுகிறது

பெண்களுக்கு வரும் மார்பகம் மற்றும் கருப்பைவாய்ப் புற்றுநோயைத் தடுக்கிறது. மாரடைப்பைத் தடுக்கிறது. பக்கவாத நோய் வராமல் தடுக்கிறது. நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்கிறது. ஒருவரை மகிழ்ச்சியாக வைக்க உதவுகிறது.

ஒருவரின் தன்னம்பிக்கையை வளர்க்கிறது. மனச்சோர்வை விரட்டுகிறது. மூளையில் மகிழ்ச்சிக்கான வேதியியல் பொருளான செரடோனின், ஓபியாய்டு, எண்டார்பின் ஆகியவை சுரப்பதால், நாள் முழுவதும் நாம் மகிழ்ச்சியாக இருக்க உதவுகிறது. நாம் மகிழ்ச்சியாக இருக்கும்போது நம் நோய் எதிர்ப்பாற்றல் அதிகரிக்கும்.


நடைப்பயிற்சி, நிணநீர் நாளங்களின் வழியாக உடலின் கழிவுகளை அகற்ற உதவுகின்றது. எனவே நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் நம்முடலுக்கு வருகிறது. இதனால் தொற்று நோய்களில் இருந்து பாதுகாப்புக் கிடைக்கிறது.

இப்படி நடைப்பயிற்சி மேற்கொள்வதால் வாழ்வியல் முறை மாற்றங்களால் ஏற்படும் நோய்கள் மட்டுமல்லாமல், தொற்று நோய்களும் வெகுவாகக் குறைகின்றன என்று ஆராய்ச்சிகளின் முடிவுகள் எடுத்துரைக்கின்றன. இன்றைய இயந்திரமயமாக்கபட்ட வாழ்வில், நடைப்பயிற்சி மிகவும் நன்று என்பதை உணர்ந்து 24 மணிநேரத்தில் நாளும் 1 மணி நேரமாவது நமக்காகப் பயன்படுத்தினோமேயானால் நம் உடலானது மீதமுள்ள 23 மணி நேரங்களும் நம்மைப் பாதுகாக்கும். எனவே நலமாக வாழ நடைப்பயிற்சி மேற்கொள்வோம்.

மரு.அ.வேணி MD., DM(Neuro) 75980-01010, 80564-01010.

Tags:    

Similar News