சிறப்புக் கட்டுரைகள்

வெறும் காகிதத்தை ஆயுதமாக மாற்றியவர் பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார்

Published On 2024-04-18 10:26 GMT   |   Update On 2024-04-18 10:26 GMT
  • ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் அவரிடம் எனக்குப் பிடித்தது பணிவுடைமை என்கிற ஒரு பெருங்குணம்தான்.
  • நமது இந்திய அரசு 2008-ம் ஆண்டு அவருக்கு ‘பத்மஸ்ரீ’ விருது வழங்கி, அவருடைய வெற்றிக் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லைப் பதித்தது.

மனித இயல்புகளில் இரண்டு வகை உண்டு. முதல் வகை எதையும் கொடுக்க விரும்பாதவர்கள். இப்படிப்பட்டவர்கள் 'இது வேண்டுமா?' என்று கேட்பார்கள். இரண்டாவது வகையினர் எதையும் கொடுக்க விரும்புபவர்கள். இவர்கள் 'இது போதுமா?' என்று கேட்பார்கள். இதில் டாக்டர் பா. சிவந்தி ஆதித்தன் அவர்கள் இரண்டாவது வகை.

அவருடைய ஈகைக் குணத்தையும், தர்ம சிந்தனையையும் பலரும் சொல்லிக் கேட்டு வியந்து போயிருக்கிறேன். தந்தை சி.பா.ஆதித்தனார் அய்யா அவர்கள் தடம் பதித்த வழியில் தவறாமல் நடந்து 'தினத்தந்தி' நாளிதழை தமிழர்களின் சுவாச மூச்சாக மாற்றியவர். எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் நிதானமாகச் செயல்பட்டு பத்திரிகை தர்மத்தைக் காத்தவர்.

ஆங்கிலத்தில் ஒரு பொன்மொழி உண்டு. 'திறமை இருந்தால் ஒரு தடவை வெல்லலாம். பொறுமை இருந்தால் ஒவ்வொரு தடவையும் வெல்லலாம்.'

இந்தப் பொன்மொழி சிவந்தி ஆதித்தன் அவர்களுக்கு மிகவும் பொருத்தமான ஒன்றாக அமைந்துவிட்டது. ஏனென்றால் அவர் பத்திரிகைத் துறையில் மட்டுமே வெற்றி பெற்றுவிடவில்லை. அதையும் கடந்து கல்வி, விளையாட்டு, தொழில், சமுதாயப் பணி, ஆன்மிகம் என்று பல்வேறு துறைகளையும் தொட்டு வெற்றிக் கனிகளைப் பறித்தவர். இந்தியத் துணைக் கண்டத்தில் பெரும் சாதனையாளராகப் போற்றப்பட்டவர்.

இவை எல்லாவற்றைக் காட்டிலும் நான் கேள்விப்பட்ட ஒரு தகவல் வியப்பை அளிப்பதாக உள்ளது. அவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப்படிப்பு படித்துக் கொண்டிருந்தபோது என்.சி.சி. என்று சொல்லப்படும் தேசிய மாணவர் படைக்குத் தலைவராக இருந்தார். அதற்குப் பிறகு சென்னையில் உள்ள ஒட்டுமொத்தக் கல்லூரிகளின் தேசிய மாணவர் படைகளுக்கும் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பதுதான் அந்தத் தகவல்.

சி.பா.ஆதித்தனார் அவர்கள் அடித்தட்டு மக்களும், ஓரளவு மட்டுமே படித்த எளிமையான மக்களும் பத்திரிகை படிக்கும் பழக்கத்தை மேற்கொள்ள வேண்டும் என்கிற எண்ணத்தில் 1942-ம் வருடம் தினத்தந்தி நாளிதழைத் தொடங்கினார். அப்போது சிவந்தி ஆதித்தன் அவர்கள் கல்வி பயிலும் பருவத்தில், ஒரு மாணவனாக இருந்தார். தான் ஒரு பத்திரிகை அதிபரின் மகன் என்கிற உயர்ந்த இடத்தில் இருந்தாலும், அதைப் பொருட்படுத்தாமல் அவர் பள்ளியிலிருந்து திரும்பியதும் பத்திரிகை அலுவலகம் சென்று அன்றைய தினம் வெளியாக இருக்கும் செய்திகளைப் படித்து, பிழைத்திருத்தம் செய்து அந்தச் செய்திகளை எல்லோரும் விரும்பிப் படிக்கும்படி செய்வார். மேலும், பணியாட்கள் வேலைக்கு வராத நாட்களில் அவரே செய்தித்தாள்களை நேர்த்தியாய் அடுக்கி, பார்சல் கட்டி, ரெயில் நிலையத்திற்குச் சென்று அனுப்பி வைத்ததும் உண்டு. தன்னுடைய தந்தையாரைப் போலவே தொழிலை ஆழமாக நேசித்த காரணத்தினால்தான் பல்வேறு வெற்றிகளின் உச்சிகளை அவரால் தொட முடிந்தது.

தன்னுடைய 23-வது வயதில், அதாவது 1959-ம் வருடம் 'தினத்தந்தி'யின் நிர்வாகப் பொறுப்பை அவர் ஏற்றுக்கொண்டபோது, சென்னை, மதுரை, திருச்சி பதிப்புகள் மட்டுமே வந்து கொண்டிருந்தன. அதற்குப் பிறகு அவருடைய நிர்வாகத் திறமையின் காரணமாக, 'தினத்தந்தி' பிரமிக்கத்தக்க வளர்ச்சியடைந்து மும்பை, பெங்களூரு, கோவை உட்பட 15 நகரங்களில் விஸ்வரூபம் எடுத்தது. நாளிதழ்களின் விற்பனையில் ஒரு புரட்சியை உண்டாக்கிய சாதனைக்குச் சொந்தக்காரர் ஆனார்.

இத்தனை புகழுக்கும் காரணம் அவர் தன்னுடைய உழைப்பில் காட்டிய வாய்மை, நேர்மை, தூய்மை என்று ஒரு பட்டியலே போடலாம். ஆனால் ஒரு எழுத்தாளன் என்கிற முறையில் அவரிடம் எனக்குப் பிடித்தது பணிவுடைமை என்கிற ஒரு பெருங்குணம்தான்.

நான் முதன்முதலில் அவரைச் சந்தித்தது 20-9-1987 அன்று சென்னையில் நடைபெற்ற 'ராணி' வார இதழின் வெள்ளி விழா ஆண்டின் மேடையில்தான். 'ராணி' வார இதழில் என்னுடைய தொடர்கதைகள் அதிகமாக வெளிவந்த காரணத்தால் என்னை மேடையில் அமர வைத்து வெள்ளித் தட்டு பரிசாக வழங்கிப் பாராட்டினார். பாராட்டியதோடு நின்றிருந்தால் அது வெறும் ஒரு மரியாதைக்குரிய நிகழ்வாகவே போயிருக்கும். ஆனால், சிவந்தி ஆதித்தன் அவர்கள் அப்படிச் செய்யவில்லை.

அந்த நிகழ்ச்சியில் எனக்குப் பொன்னாடை அணிவித்து, பரிசு ஒப்படைத்தார், தமிழ்நாட்டின் முதன்மைச் செயலாளராக இருந்த வர பத்மநாபன் ஆவார். அவரிடம் சிவந்தி ஆதித்தன் அவர்கள் இப்படிச் சொன்னார்:

"இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கிற எழுத்தாளர்களில் ராஜேஷ்குமார்தான் நம்பர் ஒன். இவர் தொடர்கதை எழுதாத பத்திரிகையே இங்கு இல்லை. 'தினத்தந்தி'யிலும், 'ராணி'யிலும் நிறைய எழுதிக் கொண்டிருக்கிறார் என்பதால் இவரும் எங்கள் பத்திரிகைக் குடும்பத்தில் ஒருவர். நாளைய வெற்றி எழுத்தாளர்" என்றார்.

இப்படி அவர் சொல்லவும் பத்மநாபன் அவர்கள் என்னைக் கட்டிப் பிடித்துக்கொண்டு, "இனிமேல் உங்களுக்கு எவ்வளவு பெரிய விருது கிடைச்சாலும்... சிவந்தி சார் சொன்ன பாராட்டுக்கு இணையாகாது. அவர் ஒரு எழுத்தாளரை இப்படிப் பாராட்டுகிறார் என்றால்... அந்த எழுத்தாளர் தன்னுடைய வாழ்நாளில் மிகப்பெரிய சாதனையை நிகழ்த்தப் போகிறார் என்று அர்த்தம். உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

சிவந்தி ஆதித்தன் அவர்கள் சொன்னதை அரசு தலைமைச் செயலாளர் பத்மநாபன் வழிமொழிந்த அந்த வாழ்த்து, அதற்குப் பிறகு வந்த நாட்களில் பலிக்க ஆரம்பித்தது.

1987-ம் ஆண்டு வரை நூற்றுக்கும் குறைவான நாவல்களை மட்டுமே எழுதியிருந்த நான், அடுத்த 11-வது ஆண்டின் முடிவில் அதாவது 1998-ம் வருடம் 'குமுதம்' வார இதழில் ஆயிரமாவது நாவலை ஒரு தொடர்கதையாக எழுதிக்கொண்டு இருந்தேன். அதைத் தொடர்ந்து இந்த 2024-ம் ஆண்டு வரை 1,500 நாவல்களுக்கும் மேல் எழுதிவிட்டேன். இதனை ஒரு சாதனையாக ஏற்றுக்கொண்ட 'இண்டியன் புக் ரிக்கார்ட்ஸ்' (IBR) அமைப்பு எனக்கு விருது கொடுத்து பெருமைப்படுத்தியது.

நான் இப்படியொரு சாதனையை நிகழ்த்துவேன் என்று 1987-ம் வருடமே கணித்தவர் டாக்டர் சிவந்தி ஆதித்தன் அவர்கள். அவரிடம் இறையருள் பரிபூரணமாக இருந்த காரணத்தினால்தான் அவர் நினைத்ததெல்லாம் நடந்தது. தொட்டதெல்லாம் துலங்கியது. பட்டங்களும், விருதுகளும், உயர் பதவிகளும் அவரைத் தேடி வந்து தழுவிக் கொண்டன.

அவருடைய தந்தை ஆதித்தனார், திருச்செந்தூரில் நிறுவிய ஒரு கல்லூரியை பல்கலைக்கழக அந்தஸ்த்துக்கு கொண்டு சென்று கல்வியாளர்களின் புருவங்களை உயர வைத்தார். அது மட்டுமல்ல... தமிழ்நாட்டில் இருந்த அத்தனை பல்கலைக்கழகங்களிலும் செனட் உறுப்பினராகவும், சென்னை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினராகவும் இருந்து அந்தப் பதவிகளுக்கு அழகும் பெருமையும் சேர்ந்தார். பல்கலைக்கழகங்கள் போட்டி போட்டுக்கொண்டு 'டாக்டர்' பட்டங்களை அவருக்கு அளித்து தங்களைக் கவுரவப்படுத்திக் கொண்டன. எல்லாவற்றுக்கும் மேலாக, சென்னை மாநகர ஷெரீப் ஆக இரண்டு முறை நியமிக்கப்பட்டார். மிகச் சிறந்த கல்வியாளராக இருந்துகொண்டே, விளையாட்டுத் துறையிலும், ஈடுபாடு கொண்டு, உலக அரங்கில் இந்திய நாட்டின் திறமையை மற்ற நாடுகளுக்கு உணர வைத்தவர். இதன் காரணமாகவே அகில இந்திய கராத்தே பெடரேஷன் அமைப்பின் தலைவராகவும், இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் வாழ்நாள் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டு தமிழக மக்களின் உள்ளங்களில் பெருமைமித உணர்வை ஏற்படுத்தினார்.

எல்லாவற்றுக்கும் மேலாக இலக்கியம் மற்றும் கல்வித் துறையில் அவர் செய்த மகத்தான பணிகளைப் பாராட்டி, நமது இந்திய அரசு 2008-ம் ஆண்டு அவருக்கு 'பத்மஸ்ரீ' விருது வழங்கி, அவருடைய வெற்றிக் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லைப் பதித்தது.

இலக்கியம், கல்வி, விளையாட்டுத் துறைகளில் கவனம் செலுத்தியவரின் பார்வை ஆன்மிகத்தின் மீதும் விழுந்தது. அதன் காரணமாக தமிழ்நாட்டில் ஏராளமான ஆலயத் திருப்பணிகள் உயிர்ப்புக்கு வந்து, லட்சக்கணக்கான பக்தர்களின் மனங்களைக் குளிர வைத்தது.

 

1987-ம் வருடம் 'ராணி' வார இதழின் வெள்ளி விழா நிகழ்ச்சியில் அவரைச் சந்தித்த நான், அதற்குப் பிறகு 13-வருடங்கள் கழித்து 2000-மாவது வருடம் 'ராணி முத்து' நாவலின் வெள்ளி விழாவின்போது மீண்டும் சந்தித்தேன். விழா மேடையில் எழுத்தாளர் சுஜாதா, கவிஞர் வைரமுத்து அருகில் எனக்கு இருக்கை போடப்பட்டு இருந்தாலும், மேடையின் மையத்தில் அமர்ந்திருந்த சிவந்தி ஆதித்தன் அவர்கள் இரண்டு முறை என்னருகே வந்து பேசிவிட்டுச் சென்றார்.

முதல்முறை நலம் விசாரித்தார். இரண்டாவது முறை என்னிடம் பேச வந்தபோது சிரித்துக்கொண்டே இப்படிச் சொன்னார்:

"ராஜேஷ்குமார்... 'ராணி முத்து' மாத நாவல் இந்த 2000-மாவது வருடம் வெள்ளி விழா கொண்டாடுகிறது. இதுவரை 299 நாவல்கள் வெளிவந்துள்ளன. அடுத்த மாதம் வர இருப்பது 300-வது நாவல். இந்த 300-வது நாவலை நீங்கள்தான் எழுத வேண்டும். விழா முடிந்து போகும்போது 'ராணி' இதழின் ஆசிரியர் அ.மா.சாமி அவர்களிடம் நாவலுக்குரிய தலைப்பைச் சொல்லிவிடுங்கள் ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள். இது 300-வது நாவல். சிறப்பாக இருக்க வேண்டும்" என்றார்.

நான் திகைப்போடு மெல்ல குரலை இழுத்தேன்.

"சார்... என்னைவிட புகழ்பெற்ற எழுத்தாளர்களெல்லாம் இருக்கும்போது எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்திருக்கிறீர்கள். கண்டிப்பாக 300-வது நாவல் சிறப்பானதொரு படைப்பாக அமையும்" என்றேன்.

உடனே அவர், "அது தெரிந்துதானே உங்களை எழுதச் சொல்றேன்" என்றவாறு என் தோளைத் தட்டிக் கொடுத்துவிட்டுச் சென்றார்.

விழா நல்லபடியாய் நடந்து முடிந்ததும் 'ராணி' வார இதழின் ஆசிரியர் அ.மா.சாமி அவர்கள் புன்னகையோடு என்னை நெருங்கினார்.

"என்ன ராஜேஷ்குமார்... 'ராணி முத்து'வின் 300-வது நாவல் பற்றி அய்யா உங்ககிட்ட சொல்லியிருப்பாருன்னு நினைக்கிறேன்" என்றார்.

"ஆமாம்... சொன்னார்! என் மேல் ரொம்பவும் நம்பிக்கை வெச்சிருக்கார். எப்படி நன்றி சொல்றதுன்னே தெரியலை" என்றேன்.

"அய்யாவோட சாய்ஸ் எப்பவுமே சரியாத்தான் இருக்கும். நாவலுக்கான தலைப்பைச் சொல்றீங்களா...? இந்த வார 'ராணி' புத்தகத்தில் விளம்பரம் செய்ய வசதியாய் இருக்கும். தலைப்பு கொஞ்சம் புதுமையாய் இருக்கட்டும்" என்று அவர் சொன்னதும், நான் கூறிய தலைப்பு இதுதான்: "ராணி 2000".

அ.மா.சாமி அவர்கள் திகைத்தார். நான் பேச்சைத் தொடர்ந்தேன்.

"சார்... இது 2000-மாவது வருடம். 'ராணி முத்து' இதழ் இந்த ஆண்டில் வெள்ளி விழாவைக் கொண்டாடறதால 'ராணி 2000' என்று தலைப்பு வைக்கிறேன். இந்தத் தலைப்புக்கு ஏற்ற மாதிரி புதுமையான கதையாகவும் இருக்கும். இந்தக் கதையில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் ராணி" என விளக்கம் கொடுத்தேன்.

"அருமை. நாவல் எப்போது கிடைக்கும்?" எனக் கேட்டார்.

"பத்து நாளைக்குள்ளே எழுதி அனுப்பிடறேன்" என உறுதி அளித்தேன்.

சொன்னபடியே அனுப்பி வைத்தேன். நாவல் வெளிவந்து பெரிய வரவேற்பு பெற்றது. இன்றைக்கு நான் எல்லோருக்கும் தெரிந்த ஒரு எழுத்தாளனாக இருப்பதற்குக் காரணம் அன்றைய காலக்கட்டத்தில் எனக்கு எழுத வாய்ப்பளித்த பத்திரிகையாளர்கள்தான் என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால், பல பத்திரிகைகளை நடத்தி வந்த சிவந்தி ஆதித்தன் அவர்கள் இன்னும் ஒருபடி மேலே போய், என்மீது தனிப்பட்ட கவனம் செலுத்தியதும் என் வெற்றிக்கு ஒரு காரணம் என்று நினைக்கிறேன்.

'ராணி'யில் மட்டும் 25-க்கும் மேற்பட்ட தொடர்கதைகளையும், 'ராணி முத்து'வில் 50-க்கும் மேற்பட்ட நாவல்களையும் எழுதியிருக்கிறேன். ஆரம்பக் காலத்தில் இந்தத் தொடர்கதைகளும், நாவல்களும்தான் என்னை வாசகர்களுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டின. என் தொடர்கதைகளுக்கான விளம்பரம் 'தினத்தந்தி' நாளிதழில் கால் பக்க அளவுக்கு வண்ணமயமாக வெளிவந்து வெகுவாகப் பிரபலப்படுத்தியது.

சிவந்தி ஆதித்தன் அவர்கள் என்னை மட்டுமல்ல... மற்ற எழுத்தாளர்களையும் நல்ல முறையில் கவுரவித்துப் பாராட்டுவார். மேடையில் அமர வைத்து, அவர்களைப் பேச வைத்து அழகு பார்ப்பார்.

ஒரு துறையில் புகழ்பெற்ற ஒரு மனிதர் எல்லாத்துறையில் இருப்பவர்களையும் கவர முடியாது. ஆனால் சிவந்தி ஆதித்தன் அவர்கள் எல்லோரையும் ஈர்க்கும்படியாக நற்பண்புகள் கொண்டவர். 'தினத்தந்தி' இதழை எங்கே யார் பார்த்தாலும் சரி, அவருடைய புன்னகை பூத்த முகம் ஒவ்வொரு தமிழனின் நெஞ்சத் திரையிலும் நிழலாடும்.

அவர் எளிமையின் வடிவமாக இருந்தாலும் புகழில் எவரெஸ்ட் சிகரம். வெறும் காகிதத்தை ஆயுதமாக மாற்றியவர். இறையருளுக்குப் பாத்திரமானவர். காயாமொழி என்னும் விளைநிலத்தில் விளைந்த கனிமரம் அவர்.

இதுபோன்று எப்படிப் பாராட்டினாலும் அதற்குப் பொருந்திப் போகின்ற உயர்ந்த மனிதர் சிவந்தி ஆதித்தன் அவர்கள்.

அவர் மறையவில்லை. என்றென்றும் நம் நெஞ்சங்களில் உறைகிறார் என்பதே உண்மையிலும் உண்மை.

- பிரபல எழுத்தாளர் ராஜேஷ்குமார்

9789093356

Tags:    

Similar News