சிறப்புக் கட்டுரைகள்
null

மனிதனை இயக்கும் மூன்றுவித கர்மா

Published On 2024-04-06 10:29 GMT   |   Update On 2024-04-06 10:31 GMT
  • மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம்.
  • மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்அன்பார்ந்த வாசகர்களே, கடந்த வாரம், கர்மாவை பற்றி பார்த்தோம். இந்த கர்மா என்பது இரண்டு வகைகளாக கூறப்படுகிறது. ஒன்று கர்ம பரிபாலனம் மற்றொன்று கர்ம பரிவர்தனம் ஆகும். கர்ம பரிபாலனம் என்பது என் விதிப்படி வருகின்ற விளைவுகளை நானே அனுபவிப்பது ஆகும். ஏனென்றால் நானே அனுபவித்து விட்டால் அதன் தாக்குதல்கள் குறைந்து தான் இருக்கும். கர்ம பரிவர்தனம் என்பது, என் கர்மாவை நான் அனுபவிப்பதற்கு விருப்பம் இல்லாமல், இறைவனிடம் வாக்குவாதம் செய்வது. அல்லது கர்மாவை அனுபவிக்கும் முன்பாகவே நமது ஆயுள் முடிந்துவிட்டால் அந்த கர்மாவை நம் அடுத்த தலைமுறைகளுக்கு பரிவர்தனம் என்கின்ற மாற்றம் செய்வது ஆகும்.

இதை தான், இன்றைய விஞ்ஞானம் செய்கிறது. நேற்று வரை ஒருவர் நன்றாக இருக்கிறார். திடீரென்று உடல் நலம் சரியில்லாமல் மயக்கம் போட்டு விழுகிறார். உடனே மருத்துவமனைக்கு சென்று அவரை பரிசோதனை செய்யும்போது உடலில் நோய் இருப்பது கண்டு பிடிக்கப்படுகிறது. நேற்று வரை நன்றாக, ஆரோக்கியமாக இருந்த உடல் செல்கள், திடீரென்று மாறி எப்படி நோய் ஏற்படுத்துகிறது. இந்த உடல் செல்களுக்கு இப்படி மாற சொல்லி எங்கிருந்து உத்தரவு வருகிறது என்பதை விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்கிறது. இதை தான் யோகத்திலே கர்மா என்று சொல்கிறோம். இந்த கர்மாவை 3 பிரிவுகளாக பிரிக்கலாம்.

1. சஞ்சித கர்மா - என்பது முன்னோர்கள் மூலமாக தலைமுறை பதிவுகளாக வருவது ஆகும். இது ஒரு தலைமுறையை விட்டு பிறகு அடுத்த தலைமுறையை கூட தாக்கும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் அழுத்தம் பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. பொதுவாக மருத்துவர்கள், நமக்கு ஏதாவது ஒரு பிரச்சனை என்றால், குடும்பத்தில் வேறு யாருக்காவது இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.

2. பிராப்த கர்மா - என்பது நமது நினைவு தெரிந்த நாளில் இருந்து (நமது 3 வயது முதல்) இந்த நிமிடம் வரை, நம் வாழ்வில், நாம் சொல்கின்ற செய்கின்ற செயல்கள் மூலமாக பதிவுகளை சேர்த்துகொண்டு அதன்மூலமாக வரும் விளைவுகளை அனுபவிப்பது ஆகும். இதை தான் இன்றைய விஞ்ஞானம் எழுச்சி பெற்ற ஜீன்கள் என்று கூறுகிறது. உதாரணத்திற்கு ஒரு உணவே என் செயல் மூலமாக அதிகமாக உட்கொள்ளும்போது, அதன் விளைவாக உடனே ஒரு உபாதை உடலுக்கு ஏற்பதுவது ஆகும்.

3. ஆகாமிய கர்மா - என்பது முன்னோர்கள் நல்வினை + தீவினை, நம் வாழ்நாளில் நாம் செய்த நல்வினை + தீவினை இரண்டையும் கூட்டி வரும் விளைவு தான் இன்று நாம் வாழ்கின்ற வாழ்க்கை ஆகும். எனவே தான் நம் முன்னோர்கள் செய்த கர்ம வினை பதிவுகளை கழித்து, நாம் தினமும் செய்கின்ற செயல்களிலே தவறு எதுவும் செய்யாமல், விழிப்பு நிலையில் இருந்தால், நாம், புதியதாக எந்த பதிவுகளையும் சேர்த்துக்கொள்ள மாட்டோம். இந்த நிலையிலே, நாம் இருக்கின்ற பதிவுகளை கழித்து, வாழும் காலத்திலேயே முக்தி நிலை வாழ்க்கை வாழ்தலே சாகாகலை ஆகும்.

மனம் என்றால் இதம் என்று பொருள். மனம் இதமாக இருப்பவரே மனிதர் என்கிறோம், ஆனால் நாம் இதமாக இல்லை. இதற்கு காரணம் நம்முடைய வினை பதிவுகளே. எனவே மனதை அறிய முற்பட வேண்டும். இதற்கு நாடி சுத்தி பிராணாயாமமும், தியானமும் உதவி செய்யும்.

மனதின் சுபாவம் எப்போதும் சுகத்தை நாடும். அப்படி சுகமாக இருக்கும்போது மனம் ஆனது அதன் எஜமானராகிய ஆத்மாவோடு தொடர்பில் இருக்கும். ஆனால் புலன்கள் புற உலகோடு தொடர்பு கொள்ள நம்மை வெளியே இழுக்கும். அதற்கு இடம் கொடுக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மனம் ஒன்றாக இருந்தாலும் அது மூன்று நிலைகளில் நம்மை இயக்கும்.

முதலாவது சவுக்கிய சுகம். இது உடல் சார்ந்தது. இன்று நன்றாக இருக்கும், நாளை நன்றாக இருக்காது. நம் உடலிலே ஒவ்வொறு நொடியும் இரசாயனம் மாற்றம் ஏற்பட்டு கொண்டு இருக்குகிறது. எனவே சவுக்கிய சுகம் என்பது மாறிக்கொண்டே இருக்கும், இது நிரந்தரமான சுகம் இல்லை.

இரண்டாவதாக சந்தோஷ சுகம் ஆகும். இது இந்த நிமிடம் மனம் சந்தோசமாக இருக்கும். அடுத்த நிமிடமே கவலையாக மாறி விடுகிறது. இதுவும் நிரந்தரம் அல்ல.

மூன்றவதுவாக ஆனந்த சுகம். இது ஆத்மா சார்ந்தது. இது அழிவு இல்லாதது. நிரந்தரம் ஆனது. இதற்கு எதன் மீதும் பற்று இல்லை. என்றும் ஆனந்தமாக இருக்கும். இதனை அடைய நம் மனமானது, உடல் சுகம், மனம் சுகம் கடந்து ஆனந்த சுகத்தை பிடிக்க வேண்டும். இதற்கு மூச்சினுடைய எண்ணிக்கையை குறைக்க வேண்டும். அதற்கு சாதாரணமாகவே, நாம் மூச்சை உள் இழுக்கும் போதும் சரி, வெளியிடும் போதும் சரி நம் உடல் தகுதிக்கு முடிந்த அளவில் அதிக நேரம் எடுத்து கொள்ள வேண்டும்.

இந்த நிலையில் மனம் இருக்கும்போது நாம் எல்லோரிடமும் அன்பாக இருப்போம். இதை தான் வேதத்திலே "மனம் பிரீதிகரம் சொர்க்கம்" என்று குறிப்பிட்டுள்ளது. அதாவது எப்போதும் உன் மனம் இதமாக இருக்கும் நிலை தான் சொர்கம். மனம் துன்பப்படும்போது அது நரகம் ஆகும்.

எனவே மனம் இதமாக இருக்க உடல் மனதை கடக்க வேண்டும். இதற்கு உடல் தகுதி மிகவும் அவசியம். உடல் தகுதி இல்லை என்றால், தியானதில் மனதிற்கு உடல் ஒத்துழைப்பு கொடுக்காது. எனவே முதலில் உடல் தகுதியை வளர்த்து கொள்ள நமக்கு உடற்பயிற்சி மிகவும் அவசியம் ஆகிறது.

எப்போது உடல் பலம் மேம்படுகிறதோ, மனதின் இருப்பிடத்திற்கு செல்லும் தகுதி நமக்கு கிடைக்கும். இதற்கு வேதாத்திரி மகரிஷி அவர்களின் எளியமுறை குண்டலினி யோக உடற்பயிற்சி நமக்கு மிகவும் உதவி புரியும். ஏனென்றால் மகரிஷி அவர்களால் உருவாக்கப்பட்ட உடற்பயிற்சியே ஒரு தவம் ஆகும். 

மனவளக்கலை பேராசிரியர்கள் சி.சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன், போன்: 9444234348

இந்த மனம் ஆனது உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது பிராண ஓட்டம் ஒழுங்கு பெறுகிறது. ஏனெனில் சித்தர்கள் சொல்வது என்னவென்றால், மனம் உதிக்கின்ற இடமும், பிராணன் பிறக்கின்ற இடமும் ஒன்றே ஆகும். எனவே எண்ணங்கள் உதிக்கின்ற இடத்திலே நிற்கும் போது, பிராணன் சீரடைந்து, மூச்சினுடைய எண்ணிக்கை முறைபடுத்தபடுகிறது. இந்த நிலையில் நம்முடைய, ஒரு நிமிடத்துக்கு 15 மூச்சு என்கின்ற கணக்கு மாறுபட்டு, எண்ணிக்கை குறைகிறது. எப்போது எண்ணிக்கை குறைகிறதோ ஆயுள் அதிகரிக்கிறது. இதன் மூலம், மனதில் இருந்து உதிக்கின்ற எண்ணங்களின் எண்ணிக்கையும் குறைகிறது. இதனால் நமக்கு அமைதி நிலை ஏற்படுகிறது. எந்த செயலையும் விளைவு அறிந்து விழிப்பு நிலையோடு, நிதானமாக எதிர்கொண்டு, அதன் விளைவுகளை ஆராய்ந்து பார்க்கும் தன்மை நமக்கு ஏற்படும். இதன் மூலமாக நம் வாழ்க்கை புனிதம் அடைகிறது. இந்த நிலையில் வாழும் மனிதர்கள் / மகான்களை தான் "பிரம்ம பூதோ மஹாயோகி" என்கிறோம். அதாவது சர்வத்திலும் இருப்பது இறைவனே என்கின்ற தத்துவதை உணர்ந்துக்கொண்டு வாழ்பவர்கள் ஆவார்கள்.

இந்த நிலைக்கு நம் எல்லோராலும் வர முடியும். அதற்கு பூர்வ ஜென்ம புண்ணியம் அமைய வேண்டும். அதே நேரம், குருவின் உடைய உதவி இல்லாமல் இதை நம்மால் செய்ய முடியாது. எனவே குருவை நாம் கெட்டியாக பிடித்து கொள்ள வேண்டும். குருவை பிடிப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளது. மர்க்கட நீதி, மார்ஜார நீதி என்று இரண்டு வழிகள் உள்ளது. இதில் ஏதாவது ஒன்றை நாம் பிடித்து கொள்ள வேண்டும்.

மர்க்கட நீதி குரு தத்துவம் என்பது உதாரணத்திற்கு தாய் குரங்கு, குட்டி குரங்கை பிடித்து கொள்ளாது. குட்டி தான் தாயின் வயிற்று பகுதியில் அமர்ந்து தாயை பிடித்து கொண்டு இருக்கும். இதனை கண்டு கொள்ளாமல், அது கிளைக்கு கிளை தாவி கொண்டு இருக்கும். ஒரு சில நேரம் அந்த கிளையில் அடிபட்டு குட்டி குரங்கு தாய் குரங்கோடு பிடித்து இருக்கின்ற பிடியை விட்டு விடும். உடனே கீழே விழும். தாய் குரங்கு இதை கொஞ்சம் கூட கண்டு கொள்ளாது. ஆனால் குட்டி குரங்கு உடனே ஓடி சென்று மறுபடியும் தாயை கட்டிப் பிடித்து கொள்ளும்.

குட்டி குரங்கை ஒரு கிளை தடுத்து எப்படி தாயிடம் இருந்து விலக்கியதோ, அதுபோல நம்மையும் நம் கர்ம வினை பதிவாகிய கிளைகள் போல, ஒரு குருவை பிடித்தும் கூட தொடர்பை துண்டிக்க வைக்கும். நாம் விழிப்பு நிலையோடு இருந்து எத்தனை தடைகள் வந்தாலும் குருவை குரங்கு பிடி போல பிடித்து கொள்ள வேண்டும்.

மார்ஜார நீதி குரு தத்துவம் என்பது, உதாரணத்திற்க்கு பூனையானது, குட்டி போட்டவுடன் அந்த குட்டி பூனைகளை விட்டுவிட்டு தாய் பூனை சென்றுவிடும். இந்த குட்டி பூனைகள் உடனே தாயை நினைத்து அழுது கொண்டே சப்தம் போட்டு கொண்டு இருக்கும். ஒரு நிலையில் இந்த புலம்பலை தாய் பூனை பொறுத்து கொள்ளாமல், குட்டிகளை தன் வாயால் லாவகமாக பற்றி தூக்கிச் செல்லும். இது போல நாமும், வாழ்வில் எத்தனை துன்பங்கள் வந்தாலும், குருவின் கொள்கைகள் மீது ஆழ்ந்த ஈடுபாடும், குருவின் மீது அசைக்க முடியாத நம்பிக்கையும் வைத்து நம் செயல்களை தொடர்ந்து செய்ய வேண்டும். அப்போது நமக்கு எந்த துன்பங்கள் வந்தாலும் குரு நம்மை காப்பாற்றுவார்.

எனவே ஒரு குருவை பிடித்து அதன்படி பயிற்சிகள் மேற்கொண்டால் என்ன நிகழும் என்கின்ற ஆராய்ச்சியை தொடர்வோம். 

Tags:    

Similar News