சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் பக்கவாதமும் தடுப்பு முறைகளும்

Published On 2024-04-17 10:06 GMT   |   Update On 2024-04-17 10:06 GMT
  • எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்களும், குளிர்ச்சி மிகுந்த காய்கறிகளும், உணவுகளும் கபத்தை அதிகரிக்கும்.
  • ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்க பூண்டு, மஞ்சள், இலவங்கப்பட்டை, சீரகம், சுக்கு, வெந்தயம் ஆகிய கடைச்சரக்குகள் உதவும்.

முதுமையில் அதிகம் பாதுகாக்க வேண்டிய உடல் உறுப்புகளில் இதயத்திற்கு அடுத்தாற் போல் முக்கியத்துவம் பிடிப்பது மூளை தான். ஏனெனில் உலக அளவில் மாரடைப்புக்கு அடுத்தாற்போல், அதிக இறப்புகளை ஏற்படுத்தும் இரண்டாவது நோய்நிலையாக இருப்பது 'பக்கவாதம்' எனும் நோய் நிலை. பக்கவாதம் எனும் உடலை முடமாக்கும் நோய்நிலையானது, முதுமையில் பிறருக்கு கூடுதல் சுமை தருகிறோம் என்று மனதிற்கும் பாரத்தை உண்டாக்கி விடுகிறது.

உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட ஒன்றரை கோடி மக்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்படுவதாகவும், அதில் ஆண்டுக்கு 50 லட்சம் பேர் இறப்பதாகவும், 50 லட்சம் பேர் முழுமையாக முடங்கிப் போவதாகவும் புள்ளி விவரங்கள் கூறுவது முதுமைக்கு அதிர்ச்சித்தருவதாக உள்ளன. மொத்தத்தில் 65 வயதைக் கடக்கும் 75 முதல் 89 சதவீதம் பேருக்கு பக்கவாதம் ஏற்படுவதாக உள்ளது. ஆகவே முதுமையில் இந்நோயைத் தடுக்க முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

பக்கவாதம் உண்டாக நமது உடலின் இராச உறுப்பான மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் பாதிப்புகளே முக்கிய காரணமாக உள்ளன. ரத்தக்குழாய் பாதிப்பால் மூளைக்கு செல்லும் ஆக்சிஜன் (பிராண காற்று) அளவு குறைவதால் மூளையின் நரம்பு செல்கள் பாதிப்படைந்து பக்கவாதத்தை ஏற்படுத்துகிறது.

அத்தகைய ரத்தக்குழாய் பாதிப்புக்கு முதுமையில் உண்டாகும் பல்வேறு நோய் நிலைகள் முக்கிய காரணமாக உள்ளன. சர்க்கரை நோய், அதிக ரத்த அழுத்தம், ரத்தத்தில் காணும் அதிக அளவு கொழுப்பு ஆகிய முக்கிய காரணிகளாக உள்ளன. பக்கவாதம் நோய் உண்டாவதில் வயதும், பாலினமும், மரபியல் காரணிகளும் தடுக்க முடியாத காரணிகளாக உள்ளன. மாறாக குடிப்பழக்கம், புகைபிடித்தல் ஆகிய பழக்கவழக்கங்கள் ஆகியன மாற்ற முடிந்த காரணிகளாக உள்ளன.

நரம்பு மண்டலத்தின் ஆதாரமாக திகழும் மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பு பக்கவாதம் என்பதால், இந்நோயில் ஒருபக்க கை மற்றும் கால் செயலிழப்பு ஏற்பட்டு நடக்க முடியாமல் முதுமையை வருத்தும். அத்துடன் அன்றாட செயல்பாடுகளை செய்யவிடாமல் கடினப்படுத்தும்.

சிலருக்கு அத்துடன் நடுக்கம், வாய் பேச்சு குழறல், மலச்சிக்கல், தலைசுற்றல், மயக்கம், வாய் அல்லது முகம் கோணல், ஞாபகம் குன்றுதல் ஆகிய பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி முதுமை மீது வெறுப்பையே உண்டாக்கும். தனது வேலைகளை தானே செய்ய முடியாதபடி, அடுத்தவர்களை நம்பி இருக்க வேண்டிய சூழலை உண்டாக்கி வருத்தும்.

முதுமையில் கிட்டத்தட்ட 85 சதவீதம் பேருக்கு பக்கவாதம் உண்டாக முக்கிய காரணமாக இருப்பது ரத்த ஓட்டக்குறைவு (Ischemia) தான். இந்த ரத்த ஓட்டக்குறைவுக்கு மூளைக்கு செல்லும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்பு முக்கிய காரணமாக உள்ளது. சிலருக்கு அதிக ரத்த அழுத்தம் காரணமாக மூளை ரத்தக்குழாயில் ரத்தக்கசிவு உண்டாகி பக்கவாதம் உண்டாகும். மேலும் மூளை சவ்வில் உண்டாகும் சாதாரண கட்டிகளும், புற்றுக்கட்டிகளும் கூட பக்கவாதம் உண்டாக்கக்கூடியது. ஆகவே பக்கவாதம் உண்டானால் மருத்துவரை அணுகி அதன் காரணம் அறிந்து சிகிச்சை மேற்கொள்வது நல்லது. சித்த மருத்துவம் கூறும் ஏழு உடல் தாதுக்களில் ஆறாவதாக உள்ள மூளை தாதுவிற்கு போதுமான சத்துக்கள் கிடைக்காமல் போவது பக்கவாதம் உண்டாக ஆதாரமாக உள்ளது.

அதற்கு முக்கிய காரணமாக இருப்பது அடிப்படைக் கூறான கபவாத பாதிப்பு தான். மாரடைப்பை உண்டாக்கும் இந்த கபவாதமே பக்கவாதம் உண்டாக்கவும் துணை புரிவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. இருப்பினும் ஒரு சிலருக்கு உண்டாகும் மூளை ரத்தக் கசிவு என்பது பித்தவாத பாதிப்பின் நோய்நிலையாக உள்ளது. ஆகவே பாதிக்கப்பட்ட குற்றம் அறிந்து. உணவும், மருந்தும் பின்பற்றுவது நோய்நிலையில் இருந்து மீண்டு வர பேருதவி புரியும். முதுமையில் பக்கவாதம் உண்டாக காரணமாகும் கபவாதம் நீக்கும் மருந்துகளை நாடுவது நோய் நிலையில் நற்பலன் தரும்.

சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், இலவங்காதி சூரணம், தசமூல குடிநீர், அரத்தைக் குடிநீர், சிற்றாமுட்டி மடக்கு தைலம் ஆகிய மருந்துகளுடன் பற்ப, செந்தூர, மெழுகு போன்ற சித்த மருந்துகளை மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நற்பலனைத் தரும். பிரமி, வல்லாரை சேர்ந்த பிரமி நெய், வல்லாரை நெய் ஆகிய மூலிகைகளும் பலன் தருவதாக உள்ளன. அத்துடன் வாத நாராயண தைலம், வாதகேசரி தைலம், நொச்சி தைலம், சிற்றாமுட்டி தைலம் ஆகிய வாதம் போக்கும் தைலங்களை வெளித்தடவ பயன்படுத்தலாம்.

நோயின் துவக்க நிலையில் அவசர சிகிச்சையாக நவீன மருத்துவம் மேற்கொண்டு பிறகு சித்த மருத்துவத்தை மேற்கொள்வதும் நோய் நிலையில் நல்ல முன்னேற்றம் உண்டாக்க வழிவகை செய்யும். மலச்சிக்கல் இருப்பின் வாதத்தை சீர் செய்யும் மூலக்குடோரி தைலம் எனும் மருந்தை பயன்படுத்தலாம். அல்லது எளிமையாக ஆமணக்கு எண்ணெய் இரவில் பாலில் அல்லது வெந்நீரில் கலந்து எடுத்துக்கொள்ளலாம்.

அதே போல் வருமுன் காக்கும் விதமாக, கபவாதம் தடுக்கும் மூலிகை மருந்துகளை நாடுவது நோய் வராமல் தடுக்க உதவும். கபவாதத்தைக் குறைக்கும் வெப்பத்தை அதிகரிக்கும் மருந்துகள் பக்கவாதத்திற்கு காரணமாகும் குருதி தடையை நீக்கி மூளை செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். 

முதுமையில் ரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த வேண்டியது மிக மிக அவசியம். ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதனை செய்து கொள்வது நல்லது. உப்பு அதிகமான உணவு ரத்த அழுத்தம் கூட்டும் முதல் எதிரி. உப்பு குறைவான பண்டங்கள் ரத்த அழுத்தம் கட்டுப்படுத்தும் சிறந்த உணவுகள். அத்துடன் டேஷ் டயட் (DASH DIET) எனும் ரத்த அழுத்தத்திற்கான உணவு முறையை பழகுவது நல்லது. ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லை எனில் உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை செய்வது பக்கவாதம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறை.

கபவாதமே நோய்நிலைக்கு முக்கிய காரணமாக அமைவதால் கபம் அதிகரிக்கும் உணவு வகைகளை தவிர்ப்பது பக்கவாதம் நோயில் நன்மை பயக்கும். எண்ணெய் தோய்ந்த பதார்த்தங்களும், குளிர்ச்சி மிகுந்த காய்கறிகளும், உணவுகளும் கபத்தை அதிகரிக்கும். ஆகவே அத்தகைய உணவுகளை தவிர்ப்பது நல்லது. மாறாக கருப்பு உளுந்து கஞ்சி செய்து கொடுப்பது நரம்புகளுக்கு வன்மை தரும்.

ஆன்டி-ஆக்சிடன்ட் தன்மையைக் கொண்ட மூலிகைகள் ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்கி, உறுப்பு பாதிப்புகளைத் தடுப்பதோடு, பாதிக்கப்பட்ட நரம்பு செல்களை புதுப்பிக்க உதவும். தாவர வகை உணவுப்பொருட்களில் அதிகப்படியான ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் உள்ளன. இந்த ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சுற்றோட்டத்தில் உள்ள கொழுப்புப் பொருட்கள் ரத்தக்குழாய் சுவர்களை பாதிக்காமல் தடுப்பதாக உள்ளன. இதன் மூலம் ரத்தக்குழாய் அடைப்பு தடுக்கப்படுவதாக உள்ளது.

அசைவ உணவுகளை விட கிட்டத்தட்ட 64 மடங்கு அதிக ஆன்டி-ஆக்சிடன்ட் சத்துக்கள் தாவர உணவுகளில் இருப்பது சிறப்பு. ஆகவே முதுமையில் தாவர உணவிற்கு முக்கியத்துவம் தருவது நல்லது. எளிமையாக உணவில் அரை தேக்கரண்டி இலவங்கப்பட்டையை சேர்ப்பது, அதன் ஆன்டி ஆக்சிடன்ட் அளவை ஆறு மடங்கு அதிகரிப்பதாகவும், அதே போல் ஒரு சிட்டிகை கிராம்பு பொடியினை சேர்ப்பது கிட்டத்தட்ட 8 மடங்கு ஆன்டி ஆக்சிடன்ட் அளவை அதிகரிக்க உதவும் என்கின்றன அறிவியல் நூல்கள். எனவே அஞ்சறைப்பெட்டியை மருந்தாய் பயன்படுத்த துவங்கினால் முதுமையில் ஆரோக்கியம் கைக்கு கிட்டும்.

மேலும் ரத்தக்குழாய் அடைப்பினைப் போக்க பூண்டு, மஞ்சள், இலவங்கப்பட்டை, சீரகம், சுக்கு, வெந்தயம் ஆகிய கடைச்சரக்குகள் உதவும். அதே போல் கடுக்காய், மருதம்பட்டை, கரிசாலை, கருவேப்பிலை ஆகிய எளிய மூலிகைகள் கபத்தை நீக்கி ரத்தக்குழாயில் உருவான 'திராம்பஸ்' எனும் ரத்தக்கட்டியைக் கரைக்கும் வல்லமை உடையதாக பல்வேறு ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

பக்கவாதம் தடுக்கும் உணவுகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது நார்ச்சத்துக்கள் தான். தினசரி நான்கு வகை காய்கறி பதார்த்தங்களை உணவோடு சேர்த்துக்கொள்ள நம் முன்னோர்கள் வலியுறுத்தியது இதற்கு தான் என்பது தற்போதைய ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

நார்ச்சத்துள்ள உணவுகள் சர்க்கரை நோயை, உடல் பருமனை குறைக்க உதவும் என்பதோடு ரத்த அழுத்தத்தையும் குறைத்து பக்கவாதம் வராமல் தடுக்க உதவும். தினசரி உணவில் 25 கிராம் அளவுக்கு கரையும் நார்சத்துக்களும், 50 கிராம் அளவுக்கு கரையாத நார்சத்துக்களும் சேர்ப்பது பக்கவாதம் வராமல் தடுக்கும் எளிய வழிமுறையாக ஆய்வு முடிவுகள் தெரிவிப்பது சிறப்புமிக்கது. உணவே மருந்து என்பதற்கு இது மாபெரும் சான்று.

நல்ல தூக்கம், முதுமையில் ஓய்வுக்கு அவசியம் என்பதோடு பக்கவாதம் வராமல் தடுக்கும் என்கின்றன ஆய்வுகள். தினசரி ஆறு மணி நேரம் அல்லது அதற்கு குறைவாகவும், 9 மணி நேரம் அல்லது அதற்கு அதிகமாகவும் தூங்கும் முதியவர்களுக்கு பக்கவாதம் உண்டாகும் வாய்ப்புள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

 

மருத்துவர் சோ.தில்லைவாணன்

ஆகவே முதுமையில் மன அழுத்தம் போக்கி குறைந்தது 7 மணி நேரம் தூங்கினால் பக்கவாதம் வராமல் தடுக்க முடியும். நோய் தடுக்கும் சிறந்த மருந்து நல்ல தூக்கம் என்பது அறியக்கிடக்கின்றது.

பக்கவாதம் வந்த பிறகு மீண்டு வர ஒருங்கிணைந்த மருத்துவம் அவசியமாகிறது. சித்த மருந்துகளோடு வெளிப்புற சிகிச்சை முறைகளான வர்மம், தொக்கணம் சிகிச்சை முறைகளும், தியானமும், யோகாசனப் பயிற்சிகளும், நடைபயிற்சியும் நல்ல பலன் தரக்கூடும். அத்துடன் பக்கவாதம் வராமல் தடுக்கும் உணவு, வாழ்வியல் முறைகளை பின்பற்றி வாழ்வது முதுமையின் ஆரோக்கியத்தை வழிநடத்தும்.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

8056040768

Tags:    

Similar News