null
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்!
- இளம்பெண்கள் மன்னனைத் தங்கள் அண்ணனாகக் கருதி மகிழ்ந்தார்கள்...
- ஒருநாள் அந்த அரண்மனைக்கு யாசகம் வேண்டி ஒரு பார்வையற்றவர் வந்தார்.
கானகத்தில் கடும் தவம் மேற்கொண்டு வாழ்ந்து வந்தார் அந்த முற்றும் துறந்த முனிவர். யாரிடமும் எந்தப் பேச்சும் கிடையாது. கண்ணை மூடியது மூடியபடித்தான் இருப்பார். இறைத் தியானத்தைத் தவிர வேறு எந்தச் சிந்தனையும் கிடையாது.
ஆனால் உடல் என்றால் பசிக்குமே? உடலுக்கு அவ்வப்போது ஏதாவது தீனி போட்டாக வேண்டுமே? இந்தப் பாழும் உடலை ஓரளவேனும் நன்றாக வைத்துக்கொண்டால்தானே தொடர்ந்து தவத்தில் ஈடுபட முடியும்?
தன் பசியைத் தீர்த்துக்கொள்ள அந்த முனிவர் விந்தையான ஒரு வழியை மேற்கொண்டார். பசிக்காகத்தான் சாப்பிட வேண்டுமே தவிர ருசிக்காகச் சாப்பிடக்கூடாது என்பதில் அவர் கடும் உறுதியோடு இருந்தார்.
எனவே ஒருநாளைக்கு ஒரே ஒருமுறை கண்ணை மூடியவாறே எப்போதேனும் தன் கையை நீட்டுவார். அந்த நேரம் அந்தக் கையில் எது வந்து விழுகிறேதா அதைச் சாப்பிடுவார்.
அவ்வளவுதான். அன்றைய ஆகாரம் அத்தோடு சரி. மறுபடியும் மறுநாள்தான் கையை நீட்டுவார்.
அவரது இந்தப் பழக்கம் அந்தக் கானகத்தைக் கடக்கும் வழிப்போக்கர்களுக்குத் தெரிந்திருந்தது. அவர்கள் அவருக்கு உணவு தருவதைத் தங்கள் பாக்கியமாகக் கருதினார்கள். அதன் மூலம் தங்களுக்குப் பெரும் புண்ணியம் வந்துசேரும் என மனப்பூர்வமாக அவர்கள் நம்பினார்கள்.
எனவே அவரைக் கடந்து செல்பவர்கள் அவர் அருகே நின்று, அவர் கையை நீட்டுவாரா என ஆவலோடு காத்திருப்பதுண்டு. கனிகள், இனிப்புகள் போன்றவற்றைத் தயாராக வைத்திருந்து அவர் கையை நீட்டும்போது அதில் தாங்கள் கொண்டுவந்த தின்பண்டத்தை வைத்து அவரை அவர்கள் தரையில் விழுந்து வணங்குவது உண்டு.
முனிவர் தனக்குத் தரப்படும் மரியாதையைப் பற்றியோ உணவைப் பற்றியோ எதையும் லட்சியம் செய்ய மாட்டார். தனக்கு உணவிடுபவர்கள் யார் என்றோ அது என்ன உணவு என்றோ எதையும் ஆராய மாட்டார். அவ்வளவு ஏன்? கண்திறந்தே பார்க்க மாட்டார்.
தன் கையில் வந்து விழுவதை வாயில் போட்டுக் கொள்வதோடு சரி. மறுபடியும் வழக்கம்போல் தவத்தில் ஆழ்ந்துவிடுவார் அவர்...
ஒருநாள் ஒரு மன்னன் அந்தக் கானகத்தின் வழியே குதிரையில் போனான். அவனுக்கு இந்த முனிவர் பற்றிய சங்கதி எதுவும் தெரியாது.
திருப்பூர் கிருஷ்ணன்
யாரோ தவம் செய்கிறாரே என எண்ணியவாறு குதிரையை விட்டுக் கீழே இறங்கினான். அவரை நோக்கி வந்தான்.
என்ன ஆச்சரியம்! அப்போது பார்த்து அந்த முனிவர் கையை நீட்டினார்!
கண்ணை மூடிக்கொண்டே கையை நீட்டுகிறாரே இந்த ஆள்? என்ன வேண்டும் இவருக்கு? கண்ணைத் திறந்து பார்த்தால் என்ன? வாயைத் திறந்து கேட்டால்தான் என்ன? அகம்பாவம் பிடித்த ஆளாய் இருப்பாரோ?
யோசித்த மன்னன், இவருக்கு ஒரு பாடம் கற்பிப்போம் என எண்ணி நகைத்தவாறே கொஞ்சம் குதிரைச் சாணியை அவரது நீட்டிய கையில் வைத்துவிட்டு, குதிரையில் ஏறித் தன் நாட்டு அரண்மனைக்குப் போனான்.
மறுநாள் அந்த மன்னன் அரண்மனைக்கு அவனைத் தேடிவந்தார் இன்னொரு முனிவர். அவர் முக்காலமும் அறிந்த மெய்ஞ்ஞானி. மன்னனை உற்றுப் பார்த்தார்:
`மன்னா! நேற்று கானகத்தில் தவத்தில் ஆழ்ந்திருந்த ஒரு முனிவர் கையில் குதிரைச் சாணியை வைத்தீர்களா?` என வினவினார்.
மன்னன் வெலவெலத்துப் போனான்.
`அப்போது நானும் அந்த முனிவரும் மட்டும்தானே அங்கிருந்தோம்? வேறு யாருமே அங்கில்லையே? நடந்ததை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?` என அச்சத்தோடு வினவினான்.
வந்த முனிவர் கடகடவென நகைத்தார்.
`மன்னனே! நான் நடந்தது நடப்பது நடக்கப் போவது என அனைத்தும் அறிவேன். நீ மாபெரும் தவசிரேஷ்டரை அவர் கையில் குதிரைச் சாணத்தைக் கொடுத்து அவமதித்திருக்கிறாய்.
ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே சாப்பிடுபவர் அந்த முனிவர். நீட்டிய கையில் எது விழுகிறதோ அதைச் சாப்பிடுவார். அது என்னவென்று கூடக் கண்விழித்துப் பார்க்க மாட்டார்.
நீ அவர் கையில் வைத்த குதிரைச் சாணத்தை அப்படியே வாயில் போட்டு விழுங்கி விட்டார். நீ செய்த பாவம் அந்தச் சாணம். அது நரகத்தில் மலைபோல் வளர்ந்து குவிந்துள்ளது.
தவ சிரேஷ்டரை அவமதித்த நீ, காலமாகி நரகத்திற்குத்தான் போவாய். அங்கே அத்தனை சாணமும் உன் வாயில் திணிக்கப்படும். நீ அதன் அருவருப்பைப் பொறுத்துக்கொண்டு அதைச் சாப்பிட்டே ஆக வேண்டியிருக்கும். அதுவே உனக்கான தண்டனை!`
பெருந்திகைப்பில் ஆழ்ந்த மன்னன், சடாரென்று, வந்த முனிவரின் கால்களில் விழுந்தான். இந்தப் பாவத்தில் இருந்து தப்பிக்க தான் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் எனக் கண்ணீர் விட்டவாறே வினவினான்:
`தான தர்மங்கள் செய். கொஞ்சம் கொஞ்சமாக உன் பாவம் குறைய வாய்ப்பிருக்கிறது. தவறை உணர்ந்துவிட்ட நீ, மனப்பூர்வமாக இறைவனிடம் மன்னிப்புக் கேள். சான்றோர்களை அவமதிப்பது மாபெரும் பாவம் என்பதை இனியாவது உணர்ந்துகொள்!
இனியாகிலும் சான்றோர்களுக்கு மரியாதை கொடுத்துப் பழகு!`
இப்படிச் சொன்ன முனிவர் வேறேதும் பேசாமல் தன்வழியே சென்றுவிட்டார்...
பெரும் கவலையில் ஆழ்ந்த மன்னன் அன்றுதொட்டு நிறைய தானதர்மங்கள் செய்யத் தொடங்கினான். முக்கியமாக திருமணமாகாத இளம்பெண்களை அரண்மனைக்கு வரவழைத்து அவர்கள் திருமணச் செலவுக்குப் பணம் நகை போன்றவற்றைத் தானமாக அளித்தான். அவர்களிடம் எந்தப் பாவமும் செய்யாமல் வாழவேண்டும் என அன்போடு அறிவுறுத்தி அனுப்பினான்.
அந்த இளம்பெண்கள் மன்னனைத் தங்கள் அண்ணனாகக் கருதி மகிழ்ந்தார்கள்...
ஆனால் ஊர்வாய் சும்மாவா இருக்கும்? மன்னன் எதன் பொருட்டு தானம் செய்கிறான் என்பதையோ அவன் நோக்கம் உன்னதமானது என்பதையோ மக்களில் பலர் அறியவில்லை. அதை அறியும் அக்கறையும் அவர்களுக்கு இல்லை.
`திருமண வயதில் இருக்கும் இளம்பெண்களை அரண்மனைக்கு அழைத்து நகையும் பணமும் கொடுக்கிறான் என்றால் பலனை எதிர்பார்க்காமலா கொடுப்பான்? மன்னன் ஒழுக்கம் கெட்டு நடக்கிறான்!` என்று சிலர் பேசத் தொடங்கினார்கள். இந்த வம்புப் பேச்சு சுற்றுவட்டாரத்தில் மெல்ல மெல்லப் பரவத் தொடங்கியது...
ஒருநாள் அந்த அரண்மனைக்கு யாசகம் வேண்டி ஒரு பார்வையற்றவர் வந்தார். அவரைக் கைப்பிடித்து ஜாக்கிரதையாக அழைத்து வந்தாள் அவரது மனைவி.
பரம ஏழைகளான அவர்கள் மன்னனை நாடி வந்தால் தங்களுக்குக் கொஞ்சம் செல்வம் கிடைக்கும் என நம்பி வந்தார்கள். அந்தப் பார்வையற்றவர் தன் மனைவியிடம் நாம் எங்கு வந்திருக்கிறோம் என வினவினார்.
அவர் மனைவி, மன்னன் அரண்மனைக்கு வந்திருக்கிறோம் எனத் தெரிவித்தாள். மன்னனைப் பற்றிய வதந்திகள் பார்வையற்றவரை ஏற்கனவே வந்தடைந்திருந்தன.
`எந்த மன்னன்? இளம்பெண்களுக்கு நகையும் பணமும் கொடுத்து ஆசைகாட்டி அவர்களைச் சீரழிக்கிறானே, அந்த மன்னனா? அவனிடமா நாம் தானம் பெறப் போகிறோம்?` எனக் கேட்டார் அவர்!
பார்வையற்ற தன் கணவருக்குப் பணிவிடை செய்யும் கற்புக்கரசியான அவர் மனைவி சடாரென அவர் வாயைத் தன் கரத்தால் இறுகப் பொத்தினாள். பின் பேசலானாள்:
`என்ன பேச்சுப் பேசுகிறீர்கள் நாதா? இப்படித் தாங்கள் பேசலாமா?`
`ஏன் நான் கேள்விப்பட்டதைத் தானே சொன்னேன்? அதிலென்ன தவறு?`
`கேள்விப்பட்டது உண்மையாய் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லையே? அவதூறு பேசுபவர்கள் அதற்கான தண்டனையை அனுபவிப்பார்கள். அதே அவதூறைப் பேசி அந்தப் பாவத்தில் நாமும் பங்கு கொள்ள வேண்டுமா?
என் கற்பின் திறத்தால் நான் உண்மை என்னவென்று அறிந்து கொண்டேன். இந்த மன்னர் மிக நல்லவர். தான் அகங்காரத்தோடு நடந்து கொண்டது தவறு என்பதை அவர் மனப்பூர்வமாக உணர்ந்துவிட்டார். அவர் தான தர்மத்தால் தன் பாவங்களைப் போக்கிக் கொள்ள விரும்புகிறார்.
அவருக்காக நரகத்தில் குவிந்த குதிரைச் சாணம் மெல்ல மெல்ல அளவு குறைந்து வருகிறது. அவரது நல்ல நோக்கத்தைத் தவறாக விமர்சித்தவர்கள் அவர் பாவத்தில் பங்கு போட்டுக் கொண்டுவிட்டார்கள். சாணி கொஞ்சம் கொஞ்சமாக அவர்கள் பக்கம் போய்விட்டது.
மன்னர் பாவத்தில் இருந்து முற்றிலுமாக விடுதலையாவதற்கு இன்னும் ஒரே ஒரு கவளம் குதிரைச் சாணி மட்டும்தான் பாக்கியிருந்தது. இப்போது நீங்கள் மன்னரைப் பற்றி அவதூறு பேசியதால் அந்தப் பாவம் உங்களை வந்து சேர்ந்துவிட்டது.
எனவே மன்னருக்கான அந்தக் குதிரைச் சாணியும் மறைந்துவிட்டது. இப்போது மன்னர் பாவமற்றவர் ஆகிவிட்டார்.
நாதா! திருந்தி வாழ முயற்சி செய்யும் நல்லவர் ஒருவரைப் பற்றி அவதூறு பேசுவது பாவங்களில் எல்லாம் பெரும் பாவம் என்பதை நீங்கள் அறியமாட்டீர்களா?
இப்போது நீங்கள் அவதூறு பேசியதால் அடுத்த பிறவியிலும் நீங்கள் பார்வையற்றவராய்த் தான் பிறப்பீர்கள்! அதை எண்ணித்தான் நான் வருந்துகிறேன்!`
தன் மனைவியின் பேச்சைக் கேட்டு `தான் மட்டுமல்ல பார்வையற்றவர், திருந்த முயற்சி செய்யும் நல்லவர் குறித்து அவதூறு பேசும் அத்தனை பேரும் பார்வையற்றவர்கள்தான்` என்பதை அவர் உள்மனம் புரிந்துகொண்டது.
யார் எப்படிப் போனால் நமக்கென்ன? திருந்த முயலும் நல்லவரைப் பற்றித் தேவையில்லாமல் வம்பு பேசினோமே? தான் செய்த பாவத்தை எண்ணி அந்தப் பார்வையற்றவர் விழிகளில் இருந்து கண்ணீர் பெருகியது.
தொடர்புக்கு:
thiruppurkrishnan@gmail.com