சிறப்புக் கட்டுரைகள்

ஆன்மிக அமுதம்- முக்கனியில் ஒரு கனி

Published On 2022-06-30 09:25 GMT   |   Update On 2022-06-30 09:25 GMT
  • விசேஷ மாங்கனியைத் தங்கள் பிள்ளைகளான பிள்ளையார், முருகன் இருவரில் யாருக்குத் தருவது எனச் சிவனும் பார்வதியும் யோசித்தார்கள்.
  • சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் மாமரம் தான்.

நம் ஆன்மிகத்தில் மாமரத்திற்குப் பல வகைகளில் பங்குண்டு. பண்டிகை தினங்களில் இல்லங்களை அலங்கரிப்பது மாவிலைத் தோரணம்தான். பூரண கும்பத்தில் கும்பத்தின் மேலே மாவிலைக் கொத்துகள்தான் செருகப்படுகின்றன. மந்திரம் ஜபித்த நீரை மாவிலைகள் மூலம்தான் அடியவர்கள் மேல் தெளிக்கிறார்கள்.

* பிள்ளையார் சிவபெருமானிடமிருந்து மாங்கனியைப் பெற்ற கதை எல்லோருக்கும் தெரிந்த கதை. கலகக்காரரான நாரதர் கையில் ஒரு மாங்கனியோடு கயிலாயம் வந்தார். அந்தக் கனியை வெட்டாமல் உண்பதே சிறப்பு எனக் கூறி சிவன் கையில் தந்தார்.

அந்த விசேஷ மாங்கனியைத் தங்கள் பிள்ளைகளான பிள்ளையார், முருகன் இருவரில் யாருக்குத் தருவது எனச் சிவனும் பார்வதியும் யோசித்தார்கள். அதன்பொருட்டு ஒரு போட்டி வைத்தார்கள். உலகை முதலில் சுற்றி வருபவர்க்கே கனி என அறிவித்தார்கள்.

முருகன் மயில் வாகனத்தில் ஏறி உலகைச் சுற்றிவரப் புறப்பட்டார். விநாயகர் யோசித்தார். விநாயகரின் வாகனம் எலி. அந்த வாகனத்தில் உலகைச் சுற்றிவிட்டு விரைந்து திரும்பி வருவது சாத்தியமில்லை.

தாய் தந்தையர் உலகிற்குச் சமானம் எனக்கூறிய அவர், பெற்றோரை வலம்வந்தார். அவ்வகையில் தாமே உலகத்தை முதலில் சுற்றியதாகக் கூறி, போட்டியில் வென்று பழத்தைப் பெற்றுக் கொண்டார்.

உண்மையிலேயே மயிலில் ஏறி அவசர அவசரமாக உலகைச் சுற்றிவந்த முருகன் ஏமாற்றமடைந்தான்.

இதனால் விளைந்த கோபமே முருகனைக் கயிலாயம் விட்டுப் பழனியில் குடியேறச் செய்தது என்றும் பின்னர் அன்னை பார்வதியால் முருகன் சமாதானம் அடைந்தான் என்றும் சிவபுராணம் தெரிவிக்கிறது.

* சிவபெருமானின் பஞ்சபூதத் தலங்களில் மண் தலமாக விளங்குவது காஞ்சிபுரத்தில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயம். இந்த ஆலயத்தின் தல விருட்சம் மாமரம் தான்.

அன்னை காமாட்சி சிவனை மணம் செய்ய வேண்டி ஒரு மாமரத்தின் அடியில் மண்ணால் சிவலிங்கம் பிடித்து வழிபட்டுத் தவம் செய்தாள். அந்த மாமரத்தின் அடியிலேயே சிவன் காட்சி தந்து காமாட்சி தேவியை மணம் புரிந்துகொண்டார்.

அந்த இடம் காஞ்சியில் உள்ள ஏகாம்பரநாதர் ஆலயம் உள்ள இடமே. அன்னை எந்த மாமரத்தின் அடியில் அமர்ந்து தவம் செய்தாளோ அந்த மாமரமே வழிவழியாக இப்போதும் உள்ளது என்பது நம்பிக்கை.

இப்போதுள்ள மாமரத்திற்கு சுமார் 3500 ஆண்டு வயதிருக்கும் என்கிறார்கள். எனவேதான் இந்த ஆலயத்தின் தலவிருட்சம் மாமரமாக வழிபடப்படுகிறது.

* புனிதவதி என்ற பெண்மணி நாயன்மார்களில் ஒருவரான காரைக்கால் அம்மையாராக மலர்ந்த வரலாறு சேக்கிழார் எழுதிய பெரிய புராணத்தில் விரிவாகச் சொல்லப்பட்டுள்ளது. அந்தப் புராணத்தில் மாங்கனி ஒரு முக்கிய இடம் பெறுகிறது.

காரைக்காலைச் சேர்ந்த தனதத்தன்-தர்மவதி தம்பதியருக்கு மகளாகப் பிறந்தவள் புனிதவதி. சிறுவயதிலிருந்தே சிவபக்தி நிறைந்தவள். அவளை மணம் புரிந்துகொண்டான் பரமதத்தன் என்ற வணிகன்.

ஒருசமயம் பரமதத்தன் கடையில் இருந்தபோது ஒரு வியாபாரி அவனிடம் இரு மாங்கனிகளைக் கொண்டுவந்து கொடுத்தான். மதிய உணவின்போது உண்ணும் பொருட்டாக, அவ்விரு கனிகளையும் ஒரு வேலையாள் மூலம் தன் வீட்டுக்குக் கொடுத்துவிட்டான் பரமதத்தன்.

பரமதத்தன் இல்லத்திற்குச் சிவனடியார் ஒருவர் உணவு வேண்டி வந்தார். என்ன சங்கடம் இது! அன்னம் மட்டும்தான் தயாராகி இருக்கிறதே அன்றி மதிய உணவு இன்னும் முழுமையாகத் தயாராகவில்லையே?

ஆனாலும் சிவனடியாரைப் பசியோடு திருப்பி அனுப்ப சிவபக்தையான புனிதவதிக்கு மனம் ஒப்பவில்லை.

புனிதவதியார் சிவனடியாருக்கு தயிர் கலந்த அன்னம் படைத்து, கணவர் அனுப்பிய மாங்கனிகளில் ஒன்றையும் தந்து உபசரித்தார். பசியாறி விடைபெற்றுச் சென்றார் சிவனடியார்.

மதிய உணவிற்கு வீட்டுக்கு வந்தான் பரமதத்தன். அவனுக்கு உணவிடும்போது, எஞ்சியிருந்த இன்னொரு மாங்கனியைப் புனிதவதி இலையில் பரிமாற அதை உண்டான். அது சுவையாக இருக்கவே மற்றொரு மாங்கனியையும் உண்ண விரும்பி அதையும் எடுத்துவரப் பணித்தான்.

இன்னொரு கனியைச் சிவனடியாருக்குக் கொடுத்துவிட்டேன் என்று எப்படிச் சொல்வது? கணவர் இன்னொரு கனியையும் உண்ண விரும்பும்போது அவர் விருப்பத்தை நிறைவேற்றாமல் இருக்கலாமா?

சமையலறைக்குச் சென்ற புனிதவதி, தன் இஷ்ட தெய்வமான சிவபெருமானை மனமுருகப் பிரார்த்தித்துக் கையேந்தினாள். என்ன ஆச்சரியம்! அவள் கரத்தில் காற்றிலிருந்து தானாகவே ஒரு கனி தோன்றியது.

தன்னைக் காத்தருளிய இறைவனுக்கு மனத்தளவில் நன்றி தெரிவித்த புனிதவதி இறைவன் கொடுத்த கனியைப் பரமதத்தனுக்குப் படைத்தாள்.

அந்தக் கனி இந்த மண்ணுலகில் விளைந்த கனி அல்லவே? கயிலாயத்தில் விளைந்த கனி அல்லவா? எனவே அதன் சுவை தேவாமிர்தமாய் இருந்தது.

அதன் இனிமையைச் சுவைத்த பரமதத்தன் வியப்போடு `எங்கிருந்து வந்தது இந்தக் கனி?` எனக் கேட்டான். புனிதவதி அது இறைவன் அருளிய கனி என உண்மையைச் சொன்னாள்.

நம்பாத பரமதத்தன், `அப்படியானால் சிவனருளால் மீண்டும் ஒரு கனியை வரவழைக்க முடியுமா?` எனக் கேட்டான். `சிவன் சித்தம் அதுவானால் வரும்` என்ற புனிதவதி காற்றில் கைநீட்ட, அந்தரத்திலிருந்து ஒரு கனி அவள் கரத்தில் திடீரென்று தோன்றியது.

அந்த அதிசயத்தைக் கண்ட பரமதத்தன் மிரண்டே போனான். புனிதவதி சராசரி மானிடப் பெண் அல்ல, தெய்வீகப் பெண் என்ற உண்மையை உணர்ந்து கொண்டான்.

அவளுக்குத் தான் தகுதியானவன் அல்ல என அவளை விட்டு அவன் நீங்கியதும் பின் வேறொருத்தியை மணந்து அவள் மூலம் பிறந்த குழந்தைக்குப் புனிதவதியின் பெயரையே வைத்ததும் புனிதவதி பேயுருவை வேண்டிப் பெற்றதும் எனக் காரைக்கால் அம்மையாரின் திருச்சரிதம் பெரிய புராணத்தில் தொடர்கிறது.

திருப்பூர் கிருஷ்ணன்

காரைக்கால் அம்மையாரின் பக்தியைப் போற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் காரைக்கால் சோமநாதர் கோவில் சார்பாக காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறுகிறது.

ஆனிமாதம் பவுர்ணமியன்று இவ்விழா விமரிசையாக நடைபெறும். உற்சவ மூர்த்தியான சோமநாதர் தேரிலேறி வீதிஉலா வருவார். அப்போது பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் விதமாக வீட்டு மாடிகளில் நின்றுகொண்டு இறைவன் மீது மாங்கனிகளை இறைத்துத் தங்களின் நேர்த்திக் கடனைச் செலுத்துவார்கள்.

ஆண்டுதோறும் மாங்கனித் திருவிழாவைக் காண பக்தர்கள் கூட்டம் கூட்டமாக வருவது ஒரு கண்கொள்ளாக் காட்சி.

மகான் புத்தர் வெள்ளை நிறமுடைய மாமரம் ஒன்றை உருவாக்கினார் என்றும் புத்தரின் வழிவந்தவர்கள் அந்த மாமரத்தை வழிபட்டார்கள் என்றும் ஒரு தகவல் உண்டு.

* சங்க கால மன்னர்களுக்குக் காவல் மரம் என ஒரு மரம் உண்டு. அந்த மரத்தை வெட்டுவது, அதன் காய் அல்லது பழங்களை உண்பது போன்றவை மாபெரும் குற்றங்களாகக் கருதப்பட்டன. அவ்விதக் குற்றங்களுக்குக் கடும் தண்டனையும் விதிக்கப்பட்டது.

நன்னன் என்ற சிற்றரசன் ஒருவனுக்கு மாமரம் ஒன்று காவல் மரமாக இருந்தது. அதிலிருந்து ஒரு மாங்காய் ஆற்று நீரில் விழுந்து மிதந்து சென்றது. நதியில் நீராடச் சென்ற பெண் ஒருத்தி அது காவல் மரத்தின் மாங்காய் என்றறியாமல் அதைத் தின்றாள்.

நன்னனின் வேலையாட்கள் ஓடோடிச் சென்று மன்னன் நன்னனிடம் நடந்த விவரம் கூறினர். சீற்றமடைந்த நன்னன் காவல் மரத்தில் விளைந்த மாங்காயைத் தின்ற பெண்ணுக்கு மரண தண்டனை விதித்தான்.

அவள் தந்தை பதறினார். எடைக்கு எடை பொன்னால் செய்யப்பட்ட பாவையையும் எண்பத்தோரு யானைகளையும் நன்னனுக்கு அளிப்பதாகவும் மகளின் தண்டனையை ரத்து செய்யுமாறும் கதறி வேண்டினார்.

ஆனால் மன்னன் மனம் இளகவில்லை அப்பெண்ணைக் கொலை செய்யும் தண்டனையை உறுதி செய்தான்.

ஓர் எளிய மாங்காயை அது காவல்மரத்தின் காய் என்று தெரியாமல் உண்ட குற்றத்திற்காக ஒரு பெண்ணைக் கொலை செய்வது எப்படி நியாயமாகும்?

பெண் கொலை செய்த நன்னன் என்ற மாறாப் பழி அந்த மன்னனுக்கு ஏற்பட்டது. பரணர் எழுதிய குறுந்தொகைப் பாடலில் `பெண்கொலை செய்த நன்னன் போல` என இச்செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. பெருந்தலைச் சாத்தனார் பாடிய புறநானூற்றுப் பாடலிலும் இதே செய்தி வருகிறது.

மாம்பழம் இந்திய தேசத்திற்கே உரிய பழம். வேதங்களிலேயே மாம்பழங்கள் பற்றிய குறிப்புகள் உள்ளன. மகாகவி காளிதாசர் தம் படைப்புகளில் மாங்கனி பற்றிப் பேசியிருக்கிறார். மாவீரரான அலெக்சாண்டர் மாம்பழத்தின் சுவையைப் புகழ்ந்துள்ளார். சீன யாத்ரீகரான யுவான்சுவாங் தன் குறிப்புகளில் மாம்பழத்தின் சுவையை வியந்துள்ளார்.

* மா, பலா, வாழை என்ற மூன்று கனிகளும் முக்கனிகள் என்று சிறப்பித்துப் போற்றப்படுகின்றன. பண்டைய தமிழகத்தில் சேர நாட்டில் பலாவும், சோழ நாட்டில் வாழையும், பாண்டிய நாட்டில் மாங்கனியும் அதிகம் விளைந்தன. அந்த மூன்று நாட்டுக் கனிகளே இணைத்து முக்கனி என்று புகழப்பட்டன.

முக்கனிகளை வரிசைப்படுத்தும்போதும் மாங்கனிக்குத் தான் முதலிடம் கொடுக்கப்படுகிறது. தமிழகத்தில் சேலத்தில் விளையும் மாம்பழம் தனிச்சுவையுடையது. அதனால்தான் இவ்வாண்டு நூற்றாண்டு காணும் குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பாவின் புகழ்பெற்ற பாடல், `மாம்பழமாம் மாம்பழம் மல்கோவா மாம்பழம் சேலத்து மாம்பழம் தித்திக்கும் மாம்பழம்` எனச் சேலத்து மாம்பழத்தைப் புகழ்ந்து பேசுகிறது.

நமது இந்திய தேசத்தின் தேசியப் பறவை மயில். தேசிய மரம் ஆலமரம். அதுபோலவே தேசியக்கனி என்ற பெருமையை மாம்பழம் அடைந்துள்ளது. மாங்கனி தேசியக்கனி மட்டுமல்ல, நம் தேசத்தின் ஆன்மிகக் கனியும் கூட.

தொடர்புக்கு:-

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News