சித்தர்களின் சாகாக் கலை... நாடி சுத்தி பிராணாயாமம்
- பிராணன் என்றால் உயிர், அயமா என்றால் முறைபடுத்துதல், அதாவது உயிரை முறைபடுத்தும் ஒரு அற்புதமான கலை என்று பொருள்.
- சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.
உலகின் பெரும் பகுதி அறியாமை என்னும் இருளிள் மூழ்கி தூக்கத்தில் இருந்தபோது, பாரத திருநாடு ஆன்ம ஒளியில் விழித்து எழுந்து, அதன் தவ புதல்வர்களாகிய ரிஷிகள், இருளை கடந்து, "பொன்னிறத்தில் ஒளிரும் மாபெரும் இறைவனை கண்டு கொண்டேன். அதை அறிவால் அறிவதால் மட்டுமே மரணத்தை வெல்ல முடியும். வேறு வழி இல்லை. அழியாத அந்த அமர தத்துவத்தின் குழந்தைகளே கேளுங்கள்" என்று இந்த பூமியில் வாழ்வோரையும், பிற உலகத்தினரையும் அறை கூவல் விடுத்து அழைத்தனர். இவ்வாறு உலகை புனித மயம் ஆக்கியபடி வாழ்ந்த ரிஷிகள் கண்ட உண்மை தான் வேதங்கள்.
இந்த வேதம் என்பது யாராலும் எழுதப்பட்டது அல்ல. என்றென்றும் நிலவுகின்ற உண்மையின் தொகுப்பே வேதம். இந்த வேதம் ரிக், யஜுர், சாமம், அதர்வனம் என்று நான்கு வகைகளையும் மேலும் ஒவ்வொன்றும் மூன்று உட்பிரிவுகளையும் கொண்டது.
சம்ஹிதை என்பது பல்வேறு தேவர்களிடம் பிரார்த்தனை.
பிராம்மனம் என்பது யாகம்.
ஆரண்யகம் என்பது உண்மையை பற்றிய ஆராய்ச்சி.
உபநிடதம் என்பது, மனிதன் ஆறாவது அறிவை பயன்படுத்தி அறுதி உண்மையை ஆராயவும், மனிதரின் மனத்தால் அந்த எல்லையை தொடவும் உதவுகிறது.
எனவே இந்த அக உலகை அறிவதற்கு யோகம் என்ற பயிற்சியே மிகவும் முக்கியமானதாக விளங்குகிறது.
கி.மு. 800-ல் இருந்து 500-ம் ஆண்டு வரை தோன்றிய உபநிடதங்கள், யோகம் என்பது மனிதரை உலக துன்பங்களில் இருந்து மீட்டு, பரவசம் அடையும் ஆன்மீக வாழ்வை அடைய செய்யும் என கூறுகிறது.
இதற்கு மனிதர்கள் அக உலகிய பாராயணம் செய்து, தனக்குள் உள்ள தெய்வ நிலையை உணர்வதற்கும், வாழும் காலத்திலேயே இந்த ஜீவன் ஐக்கிய பிரம்ம முக்தி நிலை பெறுவதற்கும் மகான்களால் வடிவமைக்கப்பட்ட ஒரு அற்புதமான கலை தான் சித்தர்களின் சாகா கலை என்றும் சர கலை என்றும், நாடி சுத்தி பிராணாயாமம் என்றும் அழைக்கப்படுகிறது.
இப்பொழுது இந்த நாடி சுத்தி பிராணாயாமம் என்றால் என்ன? என்று பார்ப்போம்.
பிராணாயமம் என்றால் பிராணன் + அயமா. பிராணன் என்றால் உயிர், அயமா என்றால் முறைபடுத்துதல், அதாவது உயிரை முறைபடுத்தும் ஒரு அற்புதமான கலை என்று பொருள்.
அடுத்ததாக இந்த பிராணாயாமம் பயிற்சியை, நான் ஏன் செய்ய வேண்டும்? என்கின்ற கேள்வி எழுகிறது. அதாவது, உடலிலே பிராண சக்தியை அதிகரித்து உடலின் உள் உறுப்புகளை சரியான முறையில் இயக்கி, உயிரை நீண்ட ஆயுளாக மாற்றி, வாழும் காலம் முழுவதும் இன்பமாக வாழ்வதற்கு இந்த நாடி சுத்தி பிராணாயாமம் மிகவும் அவசியம்.
இந்த பயிற்சியை பற்றி நாம் தெரிந்து கொள்வதற்கு முன் நம்முடைய ஆயுட்காலம் என்ன? என்பதை தெரிந்து கொள்ள வேண்டும். பொதுவாக இறைவனால் படைக்கப்பட்ட உயிரினங்கள் ஒவ்வொன்றுக்கும் ஆயுட்காலம் என்ற ஒன்று உண்டு. அந்த வகையில் நம்முடைய ஆயுட்காலம் என்பது 120 ஆண்டுகள்.
சரி, இந்த 120 ஆண்டுகள் ஆயுட்காலம் என்பது எவ்வாறு கணக்கிடப்படுகிறது என்பதை நாம் தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும். இது நம் உள் இழுக்கும், மற்றும் வெளிவிடும் மூச்சு காற்றின் அடிப்படையில் தான் கணக்கு இடப்படுகிறது. அந்த கணக்கு என்னவென்று பார்ப்போம்.
அதாவது ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் எனவும், 1 மணி நேரத்திற்கு 900 மூச்சுகள் எனவும், 24 மணி நேரத்திற்கு 21600 மூச்சுகள் எனவும், ஒரு வருடத்திற்கு 78,84,000 மூச்சுகள் எனவும், 120 ஆண்டுகளுக்கு 94,60,80,000 மூச்சுகள் எனவும் கணக்கிடப்படுகிறது.
இதை நாம் கேட்பதற்கே இவ்வளவு ஆச்சர்யமாக இருக்கிறது என்றால் இதை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டுஇந்த மூச்சை நாம், சரியான முறையில் பயன்படுத்தும் போது நம் தினசரி வாழ்க்கை எவ்வளவு இன்பமாக மாறும்.. மேலும் நாம் வாழும் காலம் முழுவதும் எப்படி இன்பமாக வாழ முடியும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.
இந்த கலையைதான் சித்தர்கள் சரகலை என்று அழைத்தார்கள். சரம் என்றால், நீண்ட அல்லது தொடர்ச்சி என்று பொருள். அதாவது நமது ஆயுளை நீண்ட காலம் மாற்றுவதற்கு சரகலை என்று பெயர். இதை திருமூலர் தனது பாடலிலே
ஏற்றி இறக்கி இருகாலும் பூறிக்கும்
காற்றை அளக்கும் கணக்கறிவாரில்லை
காற்றை அளக்கும் கணக்கறி வார்க்கு
கூற்றை உதைக்கும் குறியதுவாமே
என்று கூறுகிறார். இந்த பாடலின் பொருள் என்னவென்றால் நம் மூச்சை உள்முச்சு, வெளிமூச்சாக விடும்போது, இடகலை மற்றும் பிங்கலை நாடிகளின் ஓட்டத்தை சமன் செய்யும்போது, உயிரின் நேரடி தொடர்பான சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்துவிடும். அந்த சுமுமுனை நாடி இயங்க ஆரம்பித்து விட்டால் அல்லது நாம் இயக்கி விட்டால் நம் மூச்சுனுடைய எண்ணிக்கை, ஒரு நிமிடத்திற்கு 15க்கும் கீழ் இறங்கி விடும். இதை தான் கணக்கை அறிவிப்பவர்கள் இல்லை என்றும், எல்லோரும் எப்போழுதும் உணர்ச்சி வயப்பட்ட நிலையிலேயே வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள் என்றும் கூறுகிறார். ஆனால் அந்த பிராணாயாமம் பயிற்சியை அந்த சுமுமுனை நாடியை இயக்கும் கணக்குடன் செய்தால் எமனையும் நாம் வெல்லாம் என்று இந்த சரகலையின் ரகசியத்தை குறிப்பிடுகிறார்.
மனவளக்கலை பேராசிரியர்கள் கி. சௌமித்ரன், பொன்னி சௌமித்ரன்
இந்த நாடி சுத்தி பிராணாயாமம் பயிற்சியை முறைப்படுத்தி இந்த உலகில் வாழும் மக்களுக்கு ஒரு அற்புதமான பொக்கிஷத்தை கொடுத்தவர் யோகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் பதஞ்சலி முனிவர் ஆவார். அவர் தான் இந்த யோகத்தை முறைப்படுத்தி அதை எட்டு அங்கங்களாக பிரித்து அதற்கு அஷ்டாங்க யோகம் என்று பெயர் சூட்டினார். அந்த அஷ்டாங்க யோகம் என்றால் என்ன? என்பதை பற்றி பார்ப்போம்.
1. இயமம், 2. நியமம் 3. ஆசனம் 4.பிராணாயாமம் 5. பிராத்தியாகாரா 6. தாரணா 7. நியானம் 8. சமாதி என்ற எட்டு நிலைகள் ஆகும்.
இயமம் என்பது அகிம்சை சத்தியம் திருடாமை பிரம்மச்சரியம், இரக்க குணம், ஜபம் பொறுமை, உறுதி, சுத்தம் போன்ற அடிப்படை விஷயங்களை நாம் கடைபிடித்துக்க வேண்டும்.
நியமம் என்பது உடல் நலம் காத்தல், நல்லொழுக்கம், எளிய உணவு உண்ணுதல் வாதம், பித்தம், கபத்தை அதிகப்படுத்தும் உணவுகளை கைவிடுதல், இறைவனை பற்றிய சிந்தனை, ஈகை குணம், தத்துவங்களை கேட்டறிதல் போன்றவை.
ஆசனம் என்பது நம்முடைய உடல் மனம் உயிரை இணைத்து வாழ்வை இனிமையாக வைத்தல் என்பது பொருள்.
பிராணாயாமம் என்பது நமது உயிரை முறைப்படுத்தும் பயிற்சி.
பிரத்தியாகாரா என்பது நமது புலன்கள் வழியாக புற உலகோடு தொடர்பு கொண்டு வெளியே அலையும் மனதை நமக்குள்ளாக உள்முகமாக திருப்புவது ஆகும்.
தாரணா என்பது உள்முகமாக திரும்பிய மனதை, மறுபடியும் வெளியே அலைய விடாமல், ஒரு குறிப்பிட்ட வழியில் நிறுத்தி, முதுகு தண்டு வழியாக மனதை செலுத்தி தன் உடல் உட்பட, இந்த பிரபஞ்சம் யாவும் சூன்யமாக பாவித்து கண் விழித்தும் பார்க்காமல், காது இருந்தும் கேட்காமல் இருக்கும் நிலை தான் தாரணா. இதுவே ஒரு வகையில் நமது ஆயுள் முடியாமல் வளர செய்யும் வழி யாகும்.
தியானம் என்பது மனதின் அலைசுழல் வேகத்தை குறைத்து அதிலேயே உயிரோடு இணைந்து ஒடுங்கி நின்று நமக்குள்ளேயே தன்னை அறிவதும், இறைவனை உணர்வதும் ஆகும். நமது மனதின் அலை சுழல் வேகத்தை நான்கு நிலைகளில் பிரிக்கலாம்.
பீட்டா நிலை அலை - 14-40 cps- உணர்சி வயப்பட்ட நிலை
ஆல்பா அலை - 8-13 cps
தீட்டா அலை - 4-7 cps
டெல்டா அலை 1-3 cps
சமாதி என்பது எண்ணங்கள் அற்ற நிலையில் மனம் ஒடுங்கி உயிர் ஓட்டம் மட்டும் இயங்கி கொண்டு இறை நிலையோடு கலந்த நிலையாகும்.
எனவே நமக்கு பிராணாயாமமும், தியானமும் சித்தி பெற வேண்டும் . இந்த தியானத்திற்கு ஒரு கணக்கை யோகத்தின் தந்தை பதஞ்சலி முனிவர் எவ்வாறு குறிப்பிடுகிறார் என்று பார்ப்போம்.
தத்ர ப்ரத்ய்யைக தானத் தியானம் - பதஞ்சலி யோக சூத்திரம் விழதி பாதம் 3.2
12 வினாடிகள் ஒரு குறிப்பிட்ட பொருளால் மனம் நின்றால் ஒரு தாரணையில் வெற்றி பெறலாம்.
12 தாரணைகள் (12x12=144 வினாடிகள்) மனம் அலையாமல் நீடித்தால் ஒரு தியானத்தில் வெற்றி பெறலாம்.
12 தியானங்கள், அதாவது 29 நிமிடங்கள் மனம் ஒடுங்கி நின்றால், ஒரு சமாதி ஆகும். சமாதி என்பது நாம் உயிரோடு இருக்கும்போது, தியானத்தில் ஆதிக்கு சமமான நிலையில் எண்ணம் அற்ற நிலைக்கு சென்று மீண்டும் சகஜமான வாழ்க்கைக்கு திரும்புவது ஆகும்.
இதுவரை நாம் அஷ்டாங்க யோகத்தை பற்றி பார்த்தோம். இப்போது மீண்டும் பிராணாயாமத்திற்கு வருவோம்.
நமது மூச்சினை, வலது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சுக்கு பிங்கலை அல்லது சூரியநாடி அல்லது தந்தை நாடி அல்லது பித்ரு நாடி என்று கூறுவர்.
இடது நாசியின் வழியாக உள்ளே வெளியே செல்லும் மூச்சினை இடகலை அல்லது சந்திர நாடி அல்லது தாய் நாடி அல்லது மாத்ரு நாடி என்று கூறுவர்.
இந்த இடகலையும், பிங்கலையும் சமன்பட்டு சுழுமுனை நாடி வழியாக செல்லும் மூச்சுக்கு அருள் நாடி அல்லது குரு நாடி என்று கூறுவர்.
இந்த பிராணாயாமம் பயிற்சியில் நாம் குரு நாடியை இயக்கும்போது நமக்கு மூச்சின் எண்ணிக்கை குறைந்து நமது ஆயுள் கூடுகிறது.
சித்தர்கள் இந்த மூச்சின் அளவுகளை பற்றி குறிப்பிடுவது மிகப் பிரம்மிப்பாக உள்ளது.
வலது நாசியில் வெளி செல்லும் முச்சு (சூர்ய கலை) அளவு 8 அங்குலமும், இடது நாசியில் வெளிசெல்லும் மூச்சு அளவு 12 அங்குலமும் வெளியேறுவதால், சந்திர கலை என்கின்ற இடது நாசி வழியாக 4 அங்குலம் மூச்சு நமக்கு ஒவ்வொரு தடவை மூச்சை வெளிவிடும் போதும் வீணாகிறது என்று ஆராய்ச்சி செய்து கூறி இருக்கிறார்கள்.
மேலும் நாம் உணவு உண்ணும்போது 4 அங்குலம் மூச்சும், நடக்கும்போது 24 அங்குலம் மூச்சும், ஓடும்போது 42 அங்குலம் மூச்சும், தாம்பத்திய உறவின்போது 50 முதல் 60 அங்குலம் மூச்சும் செலவாகிறது என்று கண்டு பிடித்தார்கள்.
எனவே ஆறு அறிவு படைத்த மனிதர்கள் தனது ஆயுள் காலத்தை நீட்டிக்க செய்வதற்கு அவர்களுடைய உடலில் உள்ள தத்துவங்களை ஆராய்ந்து அதில் அளவு முறை மீறாமலும், சிலவற்றை தவிர்த்தும், வந்தால் நமது ஆயுள் வரிவடையும் என்பதை சித்தர்கள் கண்டு பிடித்தார்கள்.
அந்த தத்துவங்களை நமது உடலிலே 96 தத்துவங்களாக பிரித்தார்கள். அதில் 59 ஸ்தூல தத்துவங்களாகவும், 35 சூக்கும தத்துவங்களாகவும் 1 அதி சூக்கும தத்துவமாகவும் பிரிந்தார்கள். இந்த 96 தத்துவங்களை பற்றி அடுத்து பார்ப்போம்.