சிறப்புக் கட்டுரைகள்

அருளாட்சி செய்யும் மகான்கள்!

Published On 2024-04-11 09:35 GMT   |   Update On 2024-04-11 09:35 GMT
  • மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது.
  • ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது.

சித்த புருஷர்களாகிய மகான்கள் சித்தி அடையும் விதங்கள் பலவகைப்பட்டவை. அவர்கள் உடலை விட்டு மறைந்தாலும் உலகை விட்டு மறைவதில்லை. தங்களை வழிபடும் அடியவர்களுக்கு அருளை வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

மகான்களை தியானிப்பதன் மூலம் நம் சித்தம் சுத்தமாகிறது. மனத்துக்கண் மாசில்லாத நிலை தோன்றுகிறது. அதனால் மனத்தில் சாந்தியும் வாழ்வில் நிம்மதியும் ஏற்படுகின்றன.

கடவுளை வழிபடுவதை விட கடவுளின் அடியவர்களை வழிபடுவதன் மூலம் கூடுதலாகவும் விரைவாகவும் அருளைப் பெறமுடியும் என்கிறார் கிருபானந்த வாரியார் சுவாமிகள்.

நேரடியாக சூரிய ஒளி தலையைத் தாக்குகிறது. ஆனால் தலைக்கு அதிகப் பாதுகாப்பு தேவைப்படுவதில்லை. நாம் பொறுத்துக் கொண்டு வெயிலில் நடக்கிறோம்.

ஆனால் சாலையில் சூரிய ஒளி பட்டுச் சாலை சூடாகி அந்த வெயிலைப் பிரதிபலிக்கிறது. தலையில் தொப்பி இல்லாமலே நடக்க முடிந்த நாம் காலில் செருப்பில்லாமல் நடக்க முடியாது தடுமாறுகிறோம்.

நேரடி சூரிய ஒளி கடவுளைப் போல. சாலையில் பட்டு வெளிப்படும் சூரிய ஒளி அடியவர்களைப் போல. எனவே அடியவர்களால் வெளிப்படும் அருளுக்கு வலிமை அதிகம் என்பது வாரியார் சுவாமிகளின் விளக்கம்.

அருளை வாரி வழங்கும் மகான்கள் பல விதங்களில் உடலை உகுத்துப் பரிபூரணம் அடைகிறார்கள். அவர்களின் சமாதிகள் பாரத தேசமெங்கும் பல இடங்களில் இருக்கின்றன.

அறுபத்து மூன்று நாயன்மார்களில் ஒருவரான நந்தனார், தில்லைக்குச் சென்றார். தில்லை மூவாயிரவரான அந்தணர் கனவிலும் நந்தனார் கனவிலும் சிவபெருமான் தோன்றினார். நந்தனார் அக்கினிப் பிரவேசம் செய்துவிட்டுத் தன்னை தரிசிக்க வேண்டும் எனக் கட்டளையிட்டார் சிவபெருமான்.

அவ்விதமே தில்லை மூவாயிரவரைத் தீ மூட்டச் சொல்லி நந்தனார் அந்தத் தீயில் மூழ்கி எழுந்தார். பின் கடவுள் இட்ட கட்டளைப்படி நடராஜர் சன்னதிக்குச் சென்று அவரைத் தரிசித்துப் பரவச நிலையில் மூழ்கி நடராஜருடனேயே ஐக்கியமாகி விட்டார் என்ற செய்தியைச் சொல்கிறது சேக்கிழார் எழுதிய பெரிய புராணம்.

திருப்பாவை என்ற உன்னதமான பக்திப் பாசுரத்தை எழுதிய ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் ரங்கநாதரையே மணப்பேன் என உறுதி பூண்டிருந்தாள். அவள் திருவரங்கத்திற்கு அழைத்துவரப்பட்டாள். பக்தியின் உச்ச நிலையில் இருந்த அவள், ரங்கநாத விக்கிரகத்துடன் கலந்து மறைந்தாள் என்கிறது புனிதமே வடிவான ஆண்டாளின் தூய திருச்சரிதம்.

இந்து முஸ்லீம் ஒற்றுமைக்காகப் பாடுபட்ட மகான் கபீர்தாசர் சித்தி அடைந்தபோது, அவரின் இந்து அடியவர்களும் முகம்மதிய அடியவர்களும் அவர் உடலை வைத்துக்கொண்டு சண்டையிட்டுக் கொண்டார்கள். அவர் உடலை இந்து முறைப்படி எரிப்பதா, முகமதிய முறைப்படி மண்ணில் புதைப்பதா என்பதே சண்டைக்கான காரணம்.

இதைச் சற்றுநேரம் பார்த்துக் கொண்டிருந்த அந்தச் சடலம் திடீரென எழுந்து நின்றதாம். உங்கள் ஒற்றுமைக்காகத் தானே பாடுபட்டேன்? என் உடலை வைத்துக்கொண்டு சண்டை போடுகிறீர்களே? வெட்கமாக இல்லையா? எனக் கேட்டுவிட்டு அந்தச் சடலம் மீண்டும் போர்வையைப் போர்த்திக்கொண்டு படுத்துவிட்டதாம்.

சற்றுநேரம் காத்திருந்த அடியவர்கள் பின்னர் போர்வையைத் திறந்து பார்த்தார்கள். அங்கே சடலமெதுவும் இல்லை. பதிலாக ரோஜாக் குவியல்தான் இருந்ததாம்.

அந்த ரோஜாக் குவியலில் பாதி எரிக்கப்பட்டதாகவும் பாதி புதைக்கப்பட்டதாகவும் சொல்கிறது கபீர்தாசரின் கதை!

ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் தொண்டையில் புற்றுநோய் ஏற்பட்டுப் பின்னர் சித்தி அடைந்தார். அவர் சித்தி அடைந்த நேரத்தில் அவர் மனைவியான தூய அன்னை சாரதா தேவி அவர் அருகில் இல்லை.

பரமஹம்சர் சித்தி அடைந்த விவரம், சாரதா தேவியிடம் உடனே தெரிவிக்கப்பட்டது. ஓடோடி வந்தார் சாரதா தேவி. பரமஹம்சரின் உடலைப் பார்த்து காளீ இனி நீ எங்கு போவாய் எனக் கதறினார் என்கிறது பரமஹம்சரின் திருச்சரிதம்.

பரமஹம்சரின் உடலையே கோவிலாகக் கொண்டு காளியின் அருட்சக்தி அதில் குடியிருந்தது என்ற உண்மையை சாரதாதேவி உணர்ந்திருந்தார் என்பதே இதன் விளக்கம்.

ஜீவ சமாதி என்பது உயிரை உடலுக்குள்ளேயே நிலைபெறச் செய்து அதன் இயக்கத்தை நிறுத்தி விடுவது. ஜீவ சமாதி அடையும் சித்தர்கள் தாமே விரும்பித் தம் செயல்பாடுகளை நிறுத்திக் கொள்வார்கள்.

மகான் ராகவேந்திரர் குழிக்குள் இறங்கி தியானத்தில் அமர்ந்து தம்மை சமாதி செய்விக்கச் சொல்லி விட்டார். இன்றும் மந்திராலயத்தில் உள்ள சமாதியில் அவர் உயிரோடும் உணர்வோடும் இருப்பதாக ராகவேந்திரர் அடியவர்கள் நம்புகிறார்கள்.

சுதந்திரப் போராட்ட காலத்தில் வரிவசூல் செய்யும் அதிகாரியாக இயங்கிய தாமஸ் மன்றோவுக்கு ராகவேந்திரர் நேரில் தோன்றிக் காட்சி தந்தார் என்ற செய்தியை மன்றோ பதிவு செய்திருக்கிறார்.

திருச்சி கரூர் அருகே நெரூரில் காவிரிக் கரையில் அமைந்துள்ள சதாசிவப் பிரம்மேந்திரர் சமாதி ஜீவ சமாதிதான். தமிழகத்திலும் பாரதத்தின் பல இடங்களிலும் இப்படிப்பட்ட ஜீவசமாதிகள் பல உள்ளன.

ஒரு யோகியின் சுயசரிதை என்ற புகழ்பெற்ற தன்வரலாற்றுப் புத்தகத்தை எழுதிய பரமஹம்ச யோகானந்தர், தான் உடலை உகுப்பதாகச் சொல்லிவிட்டே ஏராளமான அடியவர்கள் முன்னிலையில் அமர்ந்த நிலையில் அமரராகி விட்டார்.

அவர் தன் உடலை விட்டு விலகும்போது அவர் முன்னிலையில் சுமார் எழுநூறு பேர் அமர்ந்திருந்தார்கள். அமெரிக்காவில் போஸ்டன் நகரில்தான் அவர் மகாசமாதி அடைந்தார்.

தான் உடலை விட்டுவிடப் போவதாக அவர் அறிவித்திருந்ததால் விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் அந்த அதிசயத்தைக் காண அங்கே வந்து கூடியிருந்தார்கள். வந்தவர்களிடம் சிறிதுநேரம் உரையாடினார் யோகானந்தர். பின்னர் இப்போது என் உடலை விடப் போகிறேன் என அறிவித்தார். பத்மாசனத்தில் அமர்ந்து தியானம் செய்தவாறே உடலை நீத்தார். இந்த நிகழ்வைக் கண்டு மருத்துவர்கள் ஆச்சரியத்தில் ஆழ்ந்தார்கள்.

பரமஹம்ச யோகானந்தரின் குருவான மகான் யுக்தேஸ்வர கிரியும் தான் உடலைத் துறக்கப் போவதை முன்கூட்டியே அறிவித்து அதன் பின்னரே உடலைத் துறந்தார். அதுமட்டுமல்ல, தாம் உடலைத் துறந்த மறுநாளே தன் சீடரான பரமஹம்ச யோகானந்தருக்கு தன் உடலோடு காட்சி கொடுத்தார். 

பாண்டிச்சேரியில் மகான் ஸ்ரீஅரவிந்தர் சித்தி அடைந்தபோது அவர் உடலைச் சுற்றி ஒரு பொன்னொளி பரவியிருந்தது. ஏராளமான அடியவர்கள் அந்தப் பொன்னொளியை தரிசிக்கும் பேறு பெற்றார்கள். நூற்றுப் பதினோரு மணிநேரம் அந்தப் பொன்னொளி அவர் உடலைச் சூழ்ந்திருந்தது.

அவர் இதயத்துடிப்பு நின்று அவர் சித்தி அடைந்து விட்டாலும் அவர் உடலில் காலமானதற்கான வேறு எந்தப்புற அறிகுறியும் தென்படவில்லை. இந்த அதிசயத்தை வியந்து மருத்துவர்கள் பதிவு செய்திருக்கிறார்கள்.

பாண்டிச்சேரி ஸ்ரீஅன்னை ஸ்ரீஅரவிந்தர் உடலின் அருகே அமர்ந்து அரவிந்தரின் உடலை சமாதி செய்விப்பதற்கான உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.

அந்தப் பொன்னொளி மெல்ல மெல்ல விலகி, அரவிந்தர் ஸ்ரீஅன்னையின் மனத்தில் தோன்றி தன் உடலை சமாதி செய்விக்கலாம் என உத்தரவளித்த பின்னரே அவர் உடல் சமாதி செய்விக்கப்பட்டது.

ரமண மகரிஷியும் ராமகிருஷ்ண பரமஹம்சரைப் போலவே புற்றுநோயால் பாதிக்கப்பட்டுத்தான் சித்தி அடைந்தார். அவர் உயிரை உகுத்த அதே கணத்தில் ஒரு வால் நட்சத்திரம் விண்ணில் தோன்றி மேலே சென்று மறைந்தது.

இந்த சம்பவத்தை கல்கி கிருஷ்ணமூர்த்தி ஒரு கட்டுரையில் பதிவு செய்துள்ளார். பிரபல நடனமணி பத்மா சுப்பிரமணியம் தான் சிறுமியாக இருந்தபோது அந்த வால் நட்சத்திரம் தோன்றி விண்ணில் சென்றதைப் பார்த்ததாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

சென்னை அருகே திருவொற்றியூரில் பட்டினத்தார் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தார். சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடுவார்கள். அவர் சிரித்துக்கொண்டே வேறோர் இடத்தில் இருந்து வெளிப்படுவார்.

வியப்படைந்த சிறுவர்கள் மறுபடி அவரைக் கூடையால் மூடுவார்கள். மீண்டும் அவர் வேறோர் இடத்தில் இருந்து தோன்றுவார். இந்த விந்தையான விளையாட்டு கொஞ்ச நேரம் நடந்தது. இறுதியில் ஒருமுறை சிறுவர்கள் அவரைக் கூடையால் மூடியபோது அவர் எங்கிருந்தும் வெளிப்படவில்லை. காத்திருந்த சிறுவர்கள் பிறகு மெல்லக் கூடையைத் திறந்து பார்த்தார்கள்.

அங்கும் அவர் இல்லை. ஆனால் உள்ளே புதிதாய் ஒரு சிவலிங்கம் முளைத்திருந்தது. அவர் சித்தி அடைந்து சிவலிங்கமாக மாறியிருந்தார். திருவொற்றியூரில் உள்ள பட்டினத்தார் சமாதிக் கோயில் அப்படி அமைந்ததுதான்.

மகான் ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் சித்தி அடைந்த விதம் ஆச்சரியகரமானது. பூட்டிய அறையின் உள்ளே தியானத்தில் அமர்ந்து, பஞ்ச பூதங்களால் ஆன தன் உடலைப் பஞ்ச பூதங்களிலேயே பிரித்துக் கரைத்து ஜோதியில் கலந்துவிட்டார் அவர். பின்னர் அறையைத் திறந்து பார்த்தபோது அவர் இருந்ததற்கான எந்தச் சுவடுமே அந்த அறையில் காணப்படவில்லை.

 

மகான்கள் பல விதங்களில் சித்தி அடைகிறார்கள். அவர்களின் பொன்னுடல் மறைந்தாலும் அருளுடல் மறைவதில்லை. அடியவர்கள் வேண்டும் போதெல்லாம் அருளை வாரி வாரி வழங்குகிறார்கள் அவர்கள்.

மகான்களைப் பிரார்த்திப்பதன் மூலமும் மகான்கள் காட்டிய வழியில் நடப்பதன் மூலமும் நாம் நம் வாழ்வில் மேலான நிலையை அடைய முடியும். சாந்தியும் நிம்மதியும் கொண்ட மனநிலையை அடைவதற்கு மகான்களைப் பிரார்த்திப்பதே சிறந்த வழி.

தொடர்புக்கு,

thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News