சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் நாட்பட்ட சிறுநீரக நோயும், தீர்வுகளும்

Published On 2024-02-21 15:55 IST   |   Update On 2024-02-21 15:55:00 IST
  • உடல் எடை குறைதல், தசை வலி, உடல் வலி, வாந்தி, பசியின்மை, வாய்க்குமட்டல் ஆகியன சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன.
  • ‘உப்பில்லா பண்டம் குப்பையிலே’ என்பது பழமொழி. ஆனால் உப்பில்லா பண்டங்கள் சிறுநீரக நோய்க்கு ‘குட் பை’ சொல்ல உதவும்.

ஊருக்கு ஊர் அதிகமாகிக் கொண்டே செல்லும் டயாலிசிஸ் மருத்துவமனைகள் முதுமைக்கு வரம் என்ற போதிலும், அது முதுமையில் ஒருவித அச்சத்தை தருவதாக உள்ளது. ஏனெனில் முதுமையில் ஆயுட் காலத்தைக் குறைப்பதாக இருப்பவை சிறுநீரகம் சார்ந்த நோய்களும் தான்.

50 வயதைக் கடக்கும் போதே சிறுநீரகத்தின் அடிப்படை அலகுகளான நெப்ரான்கள் சுருங்க துவங்குகின்றன. மேலும் முதுமையில் சிறுநீரகத்தில் ஏற்படும் உடல்கூறு மாறுபாடுகளும், செயல்பாடு மாறுபாடுகளும் இயல்பாகவே சிறுநீரக செயலிழப்புக்கு வழிவகுக்கின்றன.

இது ஒருபுறமிருக்க, முதுமையில் அதிகம் பயன்படுத்தும் வலி நிவாரணி மாத்திரைகளும், முதுமைக்கு சவாலான நீரிழிவு நோயும், ரத்த அழுத்தமும், சிறுநீரக பாதிப்பை அதிகம் பேருக்கு உண்டாக்குவதாக உள்ளன. அத்தகைய சிறுநீரக பாதிப்பானது முதுமையின் நலத்திற்கு கூடுதல் சவாலாக உள்ளது. புற்றுநோயைப் போல நம் உடலில் உண்டாகும் நாட்பட்ட அழற்சியும், அதற்கு காரணமாகும் பல்வேறு வேதிக்காரணிகளும் சிறுநீரக நோய்களை உருவாக்க காரணமாக உள்ளன.

உடல் எடை குறைதல், தசை வலி, உடல் வலி, வாந்தி, பசியின்மை, வாய்க்குமட்டல் ஆகியன சிறுநீரக பாதிப்பின் முக்கிய அறிகுறிகளாக உள்ளன. அத்துடன் நாட்பட்ட நிலையில் கால் வீக்கம், சிறுநீர் சரிவர இறங்காமை ஆகிய குறிகுணங்கள் இருப்பின் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம்.

முதுமையில் சிறுநீரகம் மீது கூடுதல் அக்கறை செலுத்தாவிடில் சிறுநீரக செயலிழப்பு உண்டாகி, இதயத்தையும் பாதித்து ஆயுளைக் குறைக்க வல்லது. ஆகவே இதயம் காக்க விரும்பும் முதியோர்கள் சிறுநீரகத்தையும் காத்துக்கொள்வது அவசியம்.

"மிகினும் குறையினும் நோய் செய்யும் - வளி முதலான எண்ணிய மூன்று" என்று வள்ளுவம் குறிப்பிடுவது சித்த மருத்துவத் தத்துவத்தின் அடிப்படையே. உடலில் இயல்புக்கு மாறாக காணும் வாதம், பித்தம், கபம் இவையே நோய்களுக்கு முதல் காரணம் என்று திருக்குறளும் கூறுகிறது.

அத்தகைய மூன்று குற்றங்களில் கபம் மற்றும் வாதம் கூட்டணியின் பாதிப்பே முதுமையில் பல்வேறு நோய்நிலைகளுக்கு காரணம். அந்த வகையில் சிறுநீரகத்தைப் பாதிக்கும் 'கப வாதம்' சிறுநீரகத்தில் தேய்மானத்தை உண்டாக்கி நாட்பட்ட சிறுநீரக நோய்களுக்கு காரணமாகிறது.

சித்த மருத்துவ மூலிகைகளான மூக்கிரட்டை, நெருஞ்சில், சீந்தில், தண்ணீர்விட்டான் கிழங்கு, நிலவேம்பு, நீர்முள்ளி, திராட்சை விதை, பூனைமீசை, சிறுபீளை போன்றவைகளும், மஞ்சள், கருஞ்சீரகம் போன்ற அஞ்சறைப்பெட்டி சரக்குகளும், திரிபலை சூரணமும் சிறுநீரக பாதிப்பின் ஆரம்ப நிலையில் பலன் தருவதாக உள்ளன. சிறுநீரைப் பெருக்கும் சிலாசத்து, நண்டுக்கல் போன்ற பல தாது கலப்புள்ள மருந்துகளும் சிறுநீரக பாதிப்பு நிலையில் பலன் தருவதாக உள்ளன.

மேற்கூறிய மூலிகை மற்றும் மருந்துகளை நோய் நிலை அறிந்து மருத்துவர் ஆலோசனைப்படி எடுத்துக்கொள்வது நல்லது. சிறுநீரக பாதிப்பின் இறுதி நிலையில் டயாலிசிஸ் போன்ற பிற சிகிச்சை முறைகளை மேற்கொள்ளும் போதும் இவற்றை பயன்படுத்துவது கூடுதல் நன்மை பயக்கும்.

ஆரம்ப கட்ட சிறுநீரக செயலிழப்பில் நவீன ஆய்வுகள் கையில் எடுக்கும் மருத்துவ ஆயுதம் ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருட்களைத் தான். ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருட்கள் சிறுநீரகத்தின் செயல்திறனைக் கூட்டுவதாக ஆய்வுகளும் உறுதி செய்கின்றன. எளிமையாக அஞ்சறைப்பெட்டியில் உள்ள மஞ்சளும், கடைச்சரக்கான கருஞ்சீரகமும் அதிக ஆன்டி ஆக்சிடன்ட் தன்மை கொண்டு சிறுநீரகத்தை காக்க உதவுவதாக உள்ளன.

நஞ்சில்லா மஞ்சளை ஒரு தேக்கரண்டி அளவுக்கு பாலில் சேர்த்து எடுத்துக்கொள்வதும், கருஞ்சீரகத்தை பொடித்து தேக்கரண்டி அளவு அல்லது கருஞ்சீரக தைலத்தை எடுத்துக்கொள்வதும் அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட் சத்துக்களை உடலுக்கு தந்து, சிறுநீரக செல்களுக்கு புத்துணர்வு தரும்.

மூக்கிரட்டை எனும் கீரை நாம் மறந்துபோன ஒன்றாகிவிட்டது. இதனை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் மூக்கிரட்டை கீரையின் வேரை சூப் செய்து குடித்து வருவதும் உடலில் தங்கிய நீரினை வெளியேற்றி வீக்கங்களைக் குறைத்து சிறுநீரகத்தை காக்க உதவும். அல்லது மூக்கிரட்டை சூரணத்தை எடுத்துக்கொள்வதும் நல்லது. அதில் உள்ள 'புனர்னவின்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ குணத்திற்கு காரணம் என்கின்றன நவீன ஆய்வுகள்.

'பூனைமீசை' எனும் தாவரம் தற்காலத்தில் சிறுநீரக செயலிழப்பு நிலைக்கு அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்த பூனைமீசை மூலிகையின் இலையை தேநீராக்கி எடுத்துக்கொள்வது சிறுநீரக பாதிப்பில் நற்பலன் தரும். அதில் உள்ள அதிகப்படியான ஆன்டி ஆக்சிடன்ட் வேதிப்பொருட்கள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளன.

நெருஞ்சி முள், மூக்கிரட்டை, சிறுபீளை, நீர்முள்ளி இவற்றை சேர்த்து கசாயமாக்கி குடிப்பது வீக்கங்களைக் குறைப்பதில், ஆரம்ப சிறுநீரக நோய்நிலையில் பலன் தரும். தொடர்ந்து ஆறு மாத காலம் திராட்சை விதையினை கொண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், நாட்பட்ட சிறுநீரக நோயில் பலன் கிடைப்பதாக ஆய்வு முடிவுகள் கூறுகின்றன. திராட்சை விதையானது 'ரெஸ்வெரட்ரால்' எனும் சிறப்புமிக்க ஆன்டி-ஆக்சிடன்ட் வேதிப்பொருளைக் கொண்டுள்ளது. இதயத்தையும் காக்க வல்லது. ஆன்டி ஆக்சிடன்ட் நிறைந்த திரிபலை சூரணம் எனும் எளிய சித்த மருந்தை இரவில் ஒரு தேக்கரண்டி அளவு எடுத்துக்கொள்வது முதுமையில் சிறுநீரகம் காக்கும் எளிய வழிமுறை.

மாறி வரும் கால சூழ்நிலையில் சிறுநீரகத்தின் வடிகட்டும் திறன் இயல்பாகவே குறைந்து விட்டதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவிக்கின்றது. அதாவது இயல்பான அளவான 90-யைக் காட்டிலும் குறைந்து விட்டதாக தெரிவிப்பது வருத்தத்திற்குரியது. ஆகவே ரத்தத்தில் உள்ள யூரியா, கிரியாட்டினின் மற்றும் சிறுநீரில் வெளியேறும் புரதம், ரத்த அழுத்தம் ஆகிய பரிசோதனை முடிவுகளைக் கொண்டு சிகிச்சையை நாடுவது அவசியம்.

உணவுக் கட்டுப்பாடு சிறுநீரக நோய்களுக்கும் மிக அவசியம். ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்நிலையில் மத்திய தரைக்கடல் பகுதி உணவும், டேஷ் உணவும் (DASH-Dietary approaches to stop Hypertension) நோயினை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுக்க உதவும்.

'உப்பில்லா பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. ஆனால் உப்பில்லா பண்டங்கள் சிறுநீரக நோய்க்கு 'குட் பை' சொல்ல உதவும். முதுமையில் சிறுநீரக நோயில் அதிகமாகும் ரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் கொண்டு வர உப்பினை தவிர்ப்பது நல்லது. 

ஏனெனில் உப்பு சேர்ப்பது சிறுநீரகத்தின் செயலுக்கு கூடுதல் பாரம் கொடுப்பது போன்றது. சோடியம் உப்பு சேர்ந்த உணவுகளை குறைவாக எடுப்பது சிறுநீரகத்தின் மீதான பாரத்தைக் குறைக்கும். மேலும் இது ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவும். எனவே முதுமையில் முடிந்த வரை சோடியம் உப்பினைக் குறைப்பது நல்லது.

ஆரம்ப கட்ட சிறுநீரக நோய்நிலையில் அசைவ உணவுகளைத் தவிர்ப்பதும், பழங்கள் மற்றும் நார்ச்சத்துள்ள காய்கறிகளையும், நஞ்சில்லா இயற்கை உணவுகளை நாடுவதும் நோயினை இறுதி கட்டத்திற்கு கொண்டு செல்லாமல் தடுக்க உதவும். நாட்பட்ட சிறுநீரக நோயாளிகள் தினசரி 27 கிராம் அளவுக்கு நார்ச்சத்தினை உட்கொள்ள ரத்தத்தில் உள்ள யூரியா மற்றும் கிரியாட்டினின் அளவைக் குறைக்க உதவும் என்கிறது சமீபத்திய ஆய்வு முடிவு.

கூடவே கட்டுப்படாமல் இருக்கும் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் கொண்டு வருவதும் சிறுநீரகம் காக்க வழிவகை செய்யும். நெல்லியும், மாதுளையும் நீரிழிவு நோயால் உண்டாகும் சிறுநீரக பாதிப்பை தடுக்க உதவுவதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் கூறுவது பழங்களின் மருத்துவத் தன்மைக்கு சான்றுகள்.

இறைச்சியை அதிக வெப்பநிலைக்கு சூடாக்கும்போது உண்டாகும், ஏ.ஜி.ஈ. (AGE) எனும் வேதிப்பொருட்கள் சிறுநீரக செல்களை சிதைப்பதாகவும், அழிப்பதாகவும் உள்ளதை அறிவியல் ஆய்வுகள் உறுதி செய்கின்றன. அதே சமயம் சிறுநீரக வடிகட்டும் திறன் 30க்கும் கீழ் உள்ளவர்களில் ஒன்றரை வருடம் நடந்த ஆய்வில் சைவ புரதங்களை எடுத்துக்கொண்டதில் சிறுநீரக மாற்றுக்கு தேவை குறைந்துள்ளதாகவும் ஆய்வுகள் கூறுவது சிறப்பு. ஆகவே முதுமையில் சிறுநீரகம் காக்க அசைவ புரதங்களைத் தவிர்த்து சைவ புரதங்களை நாடுவது நல்லது. 

அதே போல் தேநீர், காபிக்கு பதிலாக கிரீன் டீ அருந்தலாம். பச்சை கிரீன் டீயில் உள்ள அதிகப்படியான 'பாலிபீனால்கள்' உடல் பருமனால் உண்டாகும் நாட்பட்ட அழற்சியைத் தடுத்து, சிறுநீரக பாதிப்பை தடுப்பதாக எலிகளில் நடத்திய சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

நாட்பட்ட சிறுநீரக நோயானது அதிக ரத்த அழுத்தம், ரத்த சோகை ஆகிய நோய்நிலைகளை துணை நோய்களாக கொண்டு வந்து முதுமையை வாட்டி எடுக்கும். இவ்வாறாக முதுமை மன மகிழ்ச்சியான, ஆரோக்கியத்தின் இருப்பிடமாக இல்லாமல், நோய்களின் கூடாரமாக மாறிவிடும். இருப்பினும் சரியான வழிகாட்டு முறைகளையும், நஞ்சில்லா உணவு முறைகளையும் பின்பற்றுவது சிறுநீரகத்தைக் காத்து ஆயுளைக் கூட்டும்.

சிறுநீரக நோயின் இறுதி கட்ட நிலையில் டயாலிசிஸ் தேவையா? அல்லது சிறுநீரக மாற்று சிகிச்சை தேவையா? என்பதை உறுதி செய்ய மருத்துவர் ஆலோசனையை பின்பற்றுவது அவசியம். மேலும் சிறுநீரக பாதிப்பு உள்ள நிலையில் இரும்பு சத்து மாத்திரைகளுடன், கால்சியம் மற்றும் வைட்டமின்- டி3 மாத்திரைகளை சேர்த்து எடுப்பது மிக மிக அவசியம். 

மருத்துவர் சோ.தில்லைவாணன்

உடலை ஆரோக்கியப்படுத்த வேண்டிய உணவு நஞ்சாகி போனதன் விளைவு, அதிகமாகும் சிறுநீரக நோய்களுக்கு ஒரு முக்கிய காரணம். எனவே மாற்றுமருத்துவமாய் மாறிப்போன நமது மரபு மருத்துவம், அதைச் சார்ந்த மரபு உணவும், மற்றும் மரபு வாழ்வியல் நெறிமுறைகளும் சிறுநீரக நலம் காக்க அவசியமானவை.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News