சிறப்புக் கட்டுரைகள்

கண்ணதாசனின் நெஞ்சில் எழுந்த தத்துவ அலைகள்: முனைவர் கவிஞர் இரவிபாரதி- 30

Published On 2022-06-25 08:41 GMT   |   Update On 2022-06-25 08:41 GMT
  • ரத்தம் இருக்கும் வரைதான் மனிதனுக்கு மதிப்பு... பால் சுரக்கும் வரைக்கும் தான் பசு மாட்டிற்கு மதிப்பு இதை நன்கு சிந்தித்து மனிதன் செயல்பட வேண்டுமென்கிறார் கண்ணதாசன்.
  • நண்பனைத் தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார். கூடாநட்பு கேடாய் முடிவதற்கு வாய்ப்பிருக்கிறது.

கண்ணதாசனின் வாழ்க்கையில், இன்பங்களும் துன்பங்களும் மாறி மாறியே வந்துள்ளன. அவரது வாழ்க்கை வரலாற்றினை உற்று நோக்கும்போது துன்பங்களும் துயரங்களும்தான் அவரை அதிகமாகத் துரத்தி இருக்கின்றன.

கவிஞர் கவலைக் கடலுக்குள்ளே மூழ்கி மூழ்கி எழுந்து வெளியே வந்திருக்கிறார். விரக்தி வந்து அவரை விரட்டிய போதெல்லாம் அவர் சோர்ந்து விடவில்லை. அப்படிப்பட்ட நேரங்களில்தான் மனித வாழ்க்கையின் நிலைமையைப் பற்றி அதிகமாகச் சிந்தித்திருக்கிறார். தத்துவக் கவிதைகளை சரம் சரமாய்க் கோர்த்திருக்கிறார்.

இறைவன் கொடுத்த மனித உடம்பை சரியாகக் கட்டிக் காக்காமல் விட்டு விட்டோமோ என்ற கவலை கவிஞரின் நெஞ்சிலே உருவாகி விட்டதை அவரது கவிதை வெளிப்படுத்துகிறது. நமக்கு கிடைத்த இந்த அனுபவம் மற்றவர்களுக்கு நல்ல பாடமாகி அவர்களுக்காகவாவது நல்வழி காட்டட்டுமே என்ற நினைப்பில் இந்தக் கவிதைகளை எழுதியிருப்பார் என்றே எண்ணத் தோன்றுகிறது.

தேங்காய்குள்ளே நீரும், பருப்பும் இருக்கும் வரைக்கும் தான், தேங்காய்க்கு மதிப்பு. அது கூடாகிப் போய் விட்டால் அதைத் தேடுவார் எவருமில்லை. அது போலத்தான் மனித வாழ்வும், உடம்பு கூடாகி.. அது சுடுகாடு போவதற்கு தயாராகி விட்டால் அதற்குப் பின்னர் வீடு, மனை, வாசல் பற்றி நினைத்து எந்தப் பலனும் ஏற்படப்போவதில்லை.

உடலிலே ரத்தம் வற்றி விட்ட பிறகு கன்னியர்களை நினைத்து ஆசைப்படுவதிலே என்ன பயன்? அதே போல பசு மாட்டிலே பால் வற்றி விட்டால் அதை அதற்கப்புறம் யார் மதிப்பார்கள். எனவே ரத்தம் இருக்கும் வரைதான் மனிதனுக்கு மதிப்பு... பால் சுரக்கும் வரைக்கும் தான் பசு மாட்டிற்கு மதிப்பு இதை நன்கு சிந்தித்து மனிதன் செயல்பட வேண்டுமென்கிறார் கண்ணதாசன்.

ஒரு தலையாகி உள்ளொரு

காய் இல்லாமல்

கூடாகிப் போனவர்பால் கொடுப்பதற்கு

என்ன உண்டு...?

காடுவசமாகிக் கட்டையிலே

போன பின்னர்

வீடு, மனை, வாசல் வேண்டுதற்கு

என்ன உண்டு....?

செம்பாகச் செங்குருதி தீர்ந்தழிந்து

போன பின்னர்

அம்பான கன்னியர்பால் ஆசை வைத்து

என்ன பயன்...?

கொம்பொடு பாற் பசுக்கள்

குதித்து விளையாடினும்

தம்பாலும் வற்றிவிடின் தாரணியில்

யார் மதிப்பார்?

"நெஞ்சொடு புலம்பல்" என்ற தலைப்பிலே கவிஞர் எழுதிய இந்தக் கவிதையைப் படிக்கும் பொழுது "ஞானம்" என்ற தலைப்பிலே... ஏற்கனவே அவர் எழுதிய கவிதை என் நினைவுக்கு வருகிறது.

பொன்னி நதி அவ்வளவு போல

ரத்தம் போன பின்னர்

கன்னியரை ஏசுதடி உள்ளம். இது

கால் இடறி யானை விழும் பள்ளம்

முத்தமென்றும் மோகமென்றும்

சத்தமிட்டு சத்தமிட்டு

புத்தி கெட்டுப் போனதொரு காலம்-இன்று

ரத்தமற்றுப் போனபின்பு ஞானம்....

ஆடும் வரை ஆடி உடல்

ஆடுகின்ற காலம் வந்து

தேடுதடி தேவனவன் வீட்டை-அவன்

தேடவில்லை இன்னும் எந்தன் ஏட்டை

என்று அன்று கண்ணதாசன் எழுதிய பொருத்தமான இந்தக் கவிதைகள் நெஞ்சில் வந்து அலைபோதுகின்றன. கண்ணதாசனுடைய கவிதை ஒன்றுக்கு உதாரணம் சொல்வதற்கு ஏதாவது இன்னொரு கவிதையைத் தேடினால் அதற்கும் கவிஞருடைய கவிதையே வந்து கை கொடுக்கிறது. அவருடைய ஆற்றலை, திறனை என்னென்று சொல்வது?

ஒரு காரியத்தைச் செய்வதற்கு முன்பாக, பலமுறை சிந்திக்க வேண்டும் என்கிறார் கண்ணதாசன். கையிலே இருக்கிற பொழுது அள்ளி அள்ளி இறைத்து விட்டு, சல்லிக்காசு கூட கையிலே இல்லாத போது... "இப்படி எல்லாம் போச்சே... என்னென்னமோ ஆச்சே என்று புலம்புவதில் என்ன பலன் கிடைக்கப்போகிறது. போனது போனதுதான்.

இந்தக் காலத்து பல இளைஞர்கள் பருவக் கவர்ச்சியில்தான் வீழ்ந்து கிடக்கிறார்கள். ஒரு பெண்ணின் கழுத்தில் தாலி கட்டுவது என்பது சம்பிரதாயமுமல்ல. அது ஒரு சடங்குமல்ல. அது அந்த மணமக்களுடைய எதிர்காலம் மட்டுமல்ல? அது ஒரு குடும்பத்தினுடைய எதிர்காலமும் கூட. இந்தப் பெண் நமக்குச் சரியான மனைவியாக அமைவாளா? குடும்பத்தில் எல்லோருடைய உறவுகளையும் உணர்ந்து மதிப்புக் கொடுத்து, அறிந்தும், புரிந்தும் நடந்து கொள்வாளா? என்று சிந்திக்க வேண்டும். கட்டும்போது கவனமாக இல்லையென்றால் கட்டையிலே போகிற காலம் வரை கஷ்டம்தான். என்கிறார் கண்ணதாசன்.

அதே போல நண்பனைத் தேர்வு செய்வதிலும் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என எச்சரிக்கிறார். கூடாநட்பு கேடாய் முடிவதற்கு வாய்ப்பிருக்கிறது. "நண்பனிடம் தோற்று விட்டேன் பாசத்தாலே" என்று ஒரு பாட்டையும் திரைப்படத்திலே எழுதியும் இருக்கிறார் கண்ணதாசன்.

திருக்குறளில் வள்ளுவரும் "நட்பாராய்தல்" என்ற அதிகாரத்திலே "ஆய்ந்(து) கொள்ளாத்தான் கேண்மை கடைமுறை தான்சாம் துயரம் தரும்" என்கிறார். அதாவது ஒருவனிடம் நட்புரிமை கொள்ளுங்கால் அவனியல்பை எண்ணி ஆய்ந்து அறிந்து நட்புக்கொள்ள வேண்டும். அவ்வாறு ஆயந்தறியாது கொண்ட நட்பு, நாம் சாகும்வரை நமக்கு துன்பத்தினைத் தந்து கொண்டே இருக்கும் என்பது கருத்து. இதே கருத்தைத்தான் நமது கவியரசரும் சொல்லுகிறார்.

ஆனமுதல் அத்தனையும் அணுஅணுவாய்த்

தீர்ந்த பின்னர்

போனகதை எண்ணிப் புலம்புவதில்

என்ன சுகம்?

கட்டையிலே தாலியை நீ

கழுத்தறிந்து கட்டாமல்

கட்டையிலே போகும்வரை

கதறுவதில் என்ன பயன்?

கூடையிலே நண்பரை நீ

குறிப்பறிந்து கூடாமல்

கூடையிலே வார்த்தையள்ளிக்

கொட்டுவதில் என்ன சுகம்...?

ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கும்போது பார்த்துப் பார்த்து எடுத்து வைக்க வேண்டும். அப்படி வைக்காவிடில் நீ ஏற்கனவே எடுத்து வைத்த ஒவ்வொரு காலடிக்கும் பின்னாளில் கலங்க நேரிடும் என எச்சரிக்கின்றார்.

காலடியை வைக்கையிலே

கணக்கறிந்து வைக்காமல்

காலடிக்கு ஓர்முறைநீ கலங்குவதில்

என்ன சுகம்..?

ஆதாரமானதெல்லாம்

அனைத்துறவு கொள்ளாமல்

சேதார ஐந்தொகையைத்

தீட்டுவதில் என்ன சுகம்..?

எது தேவையோ அதைச் சேர்த்து வைப்பதை விட்டுவிட்டு தேவையில்லாவற்றுக்கெல்லாம் செலவழித்து விட்டு ஐந்தொகை போட்டு வரவு, செலவு கணக்கு பார்ப்பதில் எந்த பயனும் கிடைக்கப் போவதில்லை என்கிறார்.

கைக் கோலைத் தூக்கி

கடலில் எறிந்து விட்டு

வைக்கோலைத் தூக்கி

வாள் என்றால் என்ன பொருள்..?

வள்ளுவனார் சொன்ன

வார்த்தைகளில் வாழாமல்

எள்ளுவதோர் வாழ்வினை

ஏற்பதிலே என்ன பயன்..?

என்று கேள்வி மேல் கேள்வி கேட்டு சிந்தித்து வாழவும், நல்வழியில் செயல்படவும் கற்றுக்கொள் மனிதனே என்று ஒவ்வொருவருக்கும் வேண்டுகோள் விடுக்கிறார் கண்ணதாசன்.

நமக்கு நல்ல அழகான தேகம் கிடைத்து விட்டது. என்ற நினைப்பிலே இருந்து விட அந்த தேகத்தை உனக்கு தந்த அந்த கண்ணனின் சீரடியை வணங்கித் துதித்து நன்றி செலுத்துவது தான் உனது கடமை...

கண்ணனவன் செம்பொற்

கழலடியைக் காணாமல்

கண்ணெனவே நீபெற்ற

காயத்தால் என்ன பயன்...?

என்று கேட்கிறது அந்த கவிதை.

காயமே இது பொய்யடா... வெறும்

காற்றடைத்த பையடா

மாயவனும் குயவன் செய்த மட்பாண்ட ஓடடா என்ற சித்தர் பாட்டு கண்ணதாசன் மனதிலே ஆழமாய்ப் பதிந்து விட்டது. எனவே தான் அதன் ஒவ்வொருவரியின் தாக்கத்தையும் அவரது கவிதை வரிகளிலே காணமுடிகிறது.

போனதெல்லாம் போகப்

புதுவாழ்வு வாழ்வதென

ஆனவரை எண்ணி

அகமகிழ்வாய் சிறுமனமே...

நாளைப் பொழுதில் நாமிருப்ப

துண்மை இல்லை...

வேளைக்கு வேளை

விளையாடு சிறுமனமே...

செத்தாருக் கழுதாரும், ஒரு நாளில்

சாவார் என அறிந்து

அத்தா என அவனை அடைவாய்

சிறுமனமே...

கட்டைக்கு வாய்த்த கருமங்கள்

அத்தனையும்

இட்டபடி செய்தால் இடராய் சிறுமனமே... என்று செத்தவர்களுக்காக அழுபவர்களும், நாளை சாகப் போகிறவர்களே... எனவே இருக்கும் வரை புதுவாழ்வு காணவேண்டும் என்ற ஆசைகளோடும், கனவுகளோடும், உனக்கு இறைவன் இட்ட கருமங்கள்படி வாழ்ந்தால் எந்த இடர்பாடும் உனக்கில்லை என்கிறார் கண்ணதாசன்.

பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா என்றார் நாவுக்கரசன். கண்ணதாசனோ... இறைவனை அத்தா என்று அடையாளப்படுத்துகிறார். அவனை அடைவது ஒன்றுதான் உனக்கு ஆறுதல் தரும் அருமருந்து சிறுமனமே என்று கண்ணதாசன் மனித வாழ்வின் மகத்துவத்தைச் சொல்லி நம்மை நெறிப்படுத்துகிறார்.

இதுபோல் கவிஞரின் தத்துவ கவிதைகள் இன்று எவ்வளவோ இருக்கிறது. வாய்ப்பு வரும் போது ஒவ்வொன்றையும் வரிசையாக காண்போம்.

அடுத்த வாரம் சந்திப்போம்.

கவிஞர் இரவிபாரதி, 94440 60717

Tags:    

Similar News