சிறப்புக் கட்டுரைகள்

முதுமையில் கை நடுக்கமும், தீர்வுகளும்...

Published On 2024-03-27 09:21 GMT   |   Update On 2024-03-27 09:21 GMT
  • அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்து முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தருவதாக உள்ளது.
  • பார்கின்சன் நோயாளிகளை அதிகம் வாட்டுவது மலச்சிக்கல் தான்.

உடல் செல்கள் தேய்மானம் அடைந்த நிலை தான் முதுமை. எப்படி மூட்டுக்கள் தேய்மானம் அடைந்து பல்வேறு உடல் உபாதைகளை உண்டாக்குகிறதோ, அதைப்போல நரம்பு செல்களும் தேய்மானம் அடையக்கூடும். அத்தகைய நரம்பு செல்கள் தேய்மானம் அடைந்து உருவாகும் நோய்நிலைகளில் முக்கிய இடத்தைப் பிடிப்பது நடுக்கம் சார்ந்த நோய்நிலைகள் தான்.

வயது முதுமையில் நடுக்கம் என்பது அதிகம் பேருக்கு காணப்படும் ஒன்றாக உள்ளது. கையில் தண்ணீரை கூட எடுத்து குடிக்க முடியாமல், ஏன்? கையில் எடுக்கும் உணவைக் கூட வாய்க்கு கொண்டு செல்ல முடியாமல், கை உதறி உதறி நடுக்கத்தால் அவதிப்படும் முதியவர்களுக்கு நடுக்குவாதம் பெரும் சவால்.

இத்தகைய நடுக்கத்திற்கு பல்வேறு நோய்நிலைகள் காரணமாக உள்ளன. குடிப்பழக்கத்தால் உண்டாகும் சிறுமூளை பாதிப்பை தொடர்ந்து உண்டாகும் நடுக்கம் பலருக்கு முதுமையில் உண்டாகக்கூடும். அதிகமாகும் தைராய்டு ஹார்மோன் செயல்பாடு காரணமாகவும், நாட்பட எடுக்கும் சில வகை மருந்துகளினாலும் முதுமையில் சிலருக்கு கைகளில் நடுக்கம் வருவதுண்டு. நடுக்கத்திற்கு காரணமாகும் நோய்நிலையை மருத்துவர் ஆலோசனைப்படி கணித்து மருத்துவம் மேற்கொள்வது நல்லது.

இருப்பினும் இயற்கையாக நரம்பு செல்களின் பாதிப்பால் உண்டாகும் பார்கின்சன் நோய்நிலை முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. 60 வயதைக் கடக்கும் 100 பேரில் ஒருவருக்கு இந்த பார்கின்சன்ஸ் எனும் நரம்பு தேய்மான நிலை காணப்படுவது தற்காலத்தில் இயல்பாகிவிட்டது. இந்த நோய்நிலை நாளுக்கு நாள் அதிகரிப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கின்றது. இதற்கு காற்று மாசுபடுதலும், உணவில் பூச்சிக்கொல்லி மருந்துகளும், வேதிப்பொருட்களும் கலத்தல் ஆகியன முக்கிய காரணமாக உள்ளதாக கூறுவது கவனிக்கத்தக்கது.

நமது மூளையின் நடுப்பகுதியில் சுரக்கும் 'டோபமைன்' எனும் ஹார்மோன் சுரப்பு முதுமையில் படிப்படியாக குறைவதால் பார்கின்சன் உண்டாவதாக உள்ளது. இதனால் கைகளில் நடுக்கம், பேச்சு தடுமாற்றம், வாயில் நீர் ஊறல், கை கால்களில் தசைகள் விறைப்புத்தன்மை, சற்றே குனிந்தவாறு நடப்பது, நடப்பதில் சிரமம், மனநிலை பாதிப்புகள், மூக்கு மணம் அறியாமை ஆகிய பல்வேறு குறிகுணங்களை உண்டாக்கி அன்றாட வாழ்வியல் பணிகளை கூட செய்யவிடாமல் தடுக்கும் நோய்நிலையாக உள்ளது. பார்கின்சன் நோயில் கடினமான சூழல் என்னவெனில் ஓய்வு நேரத்தில் இருக்கும்போது கூட கைகளில் நடுக்கம் ஏற்படுவது தான்.

சித்த மருத்துவ தத்துவத்தின்படி, இடுப்பு கீழுள்ள பகுதி வாதத்தின் இருப்பிடமாகவும், இடுப்புக்கும் கழுத்துக்கும் இடையிலான பகுதி பித்தமாகவும், கழுத்துக்கு மேல் உள்ள தலைப்பகுதி கபத்தின் இருப்பிடமாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆக மூளை மற்றும் மத்திய நரம்பு மண்டலப் பகுதிகள் கபத்தின் இருப்பிடமாகும், முதுமையில் மூளை மற்றும் நரம்பு மண்டல தேய்மானம் என்பது கபத்தின் இடத்தை வாதம் பாதிப்பதால் உண்டாவதாக உள்ளது. அதாவது கபத்தின் இருப்பிடத்தில் ஹார்மோன் சுரப்பு எனும் வாதத்தின் செயல்பாடு தடைபடுவதாக சித்த மருத்துவம் கூறுகின்றது. எனவே வாதத்தின் செயல்பாட்டை சீர் செய்ய வேண்டுவது அவசியமாக உள்ளது. 

கருஞ்சீரகம்

சித்த மருத்துவ மூலிகைகளான அமுக்கரா கிழங்கு, பூனைக்காலி, பிரமி, குங்குமப்பூ, மஞ்சள், கருஞ்சீரகம், சிற்றாமுட்டி ஆகிய மூலிகைகள் பார்கின்சன் நோய்நிலையில் பலன் தருவதோடு, நரம்பு மண்டல தேய்மானத்தைத் தடுக்கவும் உதவுவதாக உள்ளன. மூலிகை மருந்துகள் மட்டுமின்றி சித்த மருத்துவத்தின் பெருமருந்துகள் பலவும் நரம்பு மண்டல தேய்மானத்தை சீர் செய்து பார்கின்சன் நோயில் பலன் தருவதாக உள்ளது சிறப்பு.

சித்த மருத்துவத்தில் பார்கின்சன் நோய்நிலையில் அதிகம் பயன்படுத்தப்படும் சித்த மருத்துவ மூலிகை பூனைக்காலி விதை தான். 1978 ஆம் ஆண்டிலேயே இந்த விதை பார்கின்சன் நோயில் ஆராய்ச்சிக்கு உட்படுத்தப்பட்டது. காரணம் பார்கின்சன் நோய்நிலைக்கு காரணமாகும் 'டோபமைன்' ஹார்மோனின் இயற்கை ஆதாரமாக விளங்குவது பூனைக்காலி என்பது சிறப்பு. ஆக நோயின் ஆரம்ப கட்டத்திலே ஒரு தேக்கரண்டி அளவு சூரணத்தை நெய்யில் கலந்து எடுத்துக்கொண்டு வருவது நோய்நிலையில் முன்னேற்றம் கிடைக்க உதவும்.

பூனைக்காலி விதைகளின் சாரத்தை உட்கொண்ட எலிகளின் மூளையில் டோபமைன் ஹார்மோன் சுரப்பு கணிசமாக உயர்ந்துள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. அதைப் போல, மஞ்சளில் உள்ள 'குர்குமின்' வேதிப்பொருளும், மரமஞ்சளில் உள்ள 'பெர்பெரின்' வேதிப்பொருளும் பார்கின்சன் நோய்நிலையில் பலன் அளிப்பதாக எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன.

அமுக்கரா சூரணம் எனும் சித்த மருந்து முதுமையில் பல்வேறு நோய்நிலைகளில் பலன் தருவதாக உள்ளது குறிப்பிடத்தக்கது. பார்கின்சன் நோய்நிலையில் அமுக்கரா சூரணத்துடன், பூனைக்காலி சூரணம் சேர்த்து கொடுக்க நோய்நிலையில் நல்ல பலன் கிடைக்கும். இவ்விரண்டு மூலிகைகளும் நரம்பு மண்டலம் சார்ந்த நோய்நிலைகளில் சிறப்பான நன்மைகளைத் தரும்.

குங்குமப்பூ நரம்பு மண்டலத்தைக் காக்கும் மகத்துவம் உடையது. விலையுயர்ந்த அஞ்சறைப்பெட்டி சரக்கான குங்குமப்பூ நரம்பு செல்கள் தேய்மானத்தை சீர் செய்யக்கூடியது. இதனை அவ்வப்போது பாலில் காய்ச்சி எடுத்துக்கொள்வது மிகப்பெரும் நன்மை தரும். அல்லது சித்த மருந்தான குங்குமப்பூ மாத்திரை எடுத்துக்கொள்வதும் நல்லது. குங்குமப்பூ மற்றும் பிற தாது சரக்குகள் சேர்ந்த மகா ஏலாதி குளிகை என்ற மருந்தும் நற்பலன் தரும். குங்குமப்பூவில் உள்ள 'குரோசின்' எனும் வேதிப்பொருள் அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாகின்றது.

அதிசய மூலிகையான கருஞ்சீரகம் பார்கின்சன் நோயை வரவிடாமல் தடுக்க கூடியதாக எலிகளில் நடந்த சோதனை முடிவுகள் தெரிவிக்கின்றன. கருஞ்சீரகத்தில் உள்ள 'தைமோகுயினோன்' அதன் மருத்துவ தன்மைக்கு காரணமாக உள்ளது. முதுமையில் தினசரி ஒன்று முதல் இரண்டு கிராம் வரை கருஞ்சீரகத்தை பொடித்து எடுத்துக்கொள்ள பல்வேறு நோய்நிலைகளிலும் பலனைத் தரக்கூடும். முதுமைக்கு கிடைத்த மற்றுமொரு வரம் இந்த கருஞ்சீரகம்.

முதுமையில் பார்கின்சன் நோய்நிலையில் கை கால்களில் உண்டாகும் விறைப்புத்தன்மை என்பது பார்ப்பதற்கே அச்சத்தையும், வருத்தத்தையும் தரக்கூடியது. இந்நிலையில் உள் மருந்துகளோடு, வெளிப்புற மருந்துகளான தைல மருந்துகளையும் பூசி வருவது கைகளின் விறைப்புத்தன்மை குறைய வழி வகை செய்யும். 

மருத்துவர் சோ.தில்லைவாணன்

இந்நிலையில் உளுந்து தைலம், அஸ்வகந்தா தைலம், பிரமி தைலம் ஆகியவற்றை மேலுக்கு பூசி வர பலன் கிடைக்கும். 'சிற்றாமுட்டி மடக்கு தைலம்' எனும் சித்த மருந்தை உள்மருந்தாக பயன்படுத்துவதும், சிற்றாமுட்டி தைலத்தை வெளி மருந்தாக தடவி வருதலும் நடுக்கம் நோயில் குறிகுணம் குறைக்க உதவும். பிரமி கீரையைக் கொண்டு செய்யப்படும் 'பிரமி நெய்' எனும் சித்த மருந்தும் உள்மருந்தாக எடுத்துக்கொள்ள பலனைத் தரும்.

பார்கின்சன் நோயாளிகளை அதிகம் வாட்டுவது மலச்சிக்கல் தான். இது வாதக் குற்றத்தின் பாதிப்பை குறிக்கிறது. இந்நிலையில் மலச்சிக்கலைப் போக்க கடுக்காய் சூரணம், நிலாவாரை சூரணம், திரிபலை சூரணம் ஆகிய மருந்துகளில் ஒன்றை இரவில் எடுத்துக்கொள்வது மலச்சிக்கல் நீங்கி, வாதம் குறைக்க உதவும்.

பார்கின்சன் நோயில் வாதம் மற்றும் கபத்தை அதிகரிக்கும் உணவுமுறைகளை தவிர்ப்பது நல்லது. குளிர்ச்சியான பொருட்கள் பொதுவாகவே வாதத்தையும், கபத்தையும் கூட்டும் என்பதால், அவற்றை எடுத்துக்கொள்ளும் போது குறிகுணங்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. எனவே அத்தகைய உணவுப்பொருட்களைத் தவிர்ப்பது நல்லது.

சமீப காலத்தில் குடல் வாழ் கிருமிகளுக்கும், நரம்பு மண்டலத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக பல்வேறு அறிவியல் ஆய்வுகள் கூறுகின்றன. அதன்படி உண்ணும் உணவில் இருந்து உற்பத்தியாகும் நச்சுக்கள் குடல் கிருமிகளை பாதிப்பதன் மூலம் பார்கின்சன், ஞாபக மறதி ஆகிய நோய்நிலைகள் உண்டாகும் வாய்ப்பு அதிகம் உள்ளதாக அறிவியல் கூறுகின்றது.

ஆகவே நடுக்க வாத நோய்களைத் தடுக்க, குடல் சுத்தம் அவசியம். இதற்காகவே சித்த மருத்துவம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறை பேதி மருந்து எடுத்துக்கொள்ள வலியுறுத்துகின்றது. இன்றைய நவீன வாழ்வியலில் கண்டதை உண்டு உடம்பினை கெடுக்கும் அனைத்து தரப்பினரும் பேதி மருந்து எடுத்துக்கொள்வது பார்கின்சன் போன்ற நோய்நிலைகள் வராமல் தடுக்க உதவும்.

அதே போல் மன அழுத்தத்திற்கும் பார்கின்சன் நோய்நிலைக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதாக ஆய்வறிக்கைகள் தெரிவிக்கின்றன. அதன்படி மன அழுத்தம் அதிகரிக்கும்போது பார்கின்சன் நோய்நிலையின் குறிகுணங்களான கை நடுக்கம், தூக்கமின்மை, மலச்சிக்கல், நினைவாற்றல் குறைவு, தசைகள் வலுவிழந்த நிலை, ஆகிய குறிகுணங்கள் அதிகரிப்பதாக உள்ளன. ஆகவே மன அழுத்தம் நீங்க தியானம் மற்றும் யோகாசனப் பயிற்சி மேற்கொள்வது குறிகுணங்கள் குறைக்க உதவும். முதுமைக்கு நன்மை பயக்கும்.

முதுமையில் இறப்பும், இயலாமையும் பார்கின்சன் நிலையில் அதிகரித்துக்கொண்டே செல்வது வருத்தம் தரும் ஒன்று. நவீன மருத்துவத்தில் பரிந்துரைக்கும் லீவோ-டோபா / கார்பி-டோபா ஆகிய மருந்துகளை எடுத்துக்கொள்ளும் முதியவர்களும் அத்துடன் சித்த மருத்துவ மூலிகை மருந்துகளை ஒருங்கிணைந்த மருத்துவமாக எடுத்துக் கொள்வது இயலாமையைப் போக்க உதவும்.

'இரண்டு கை தட்டினால் தான் ஓசை பிறக்கும்' என்பதைப் போல நவீன மருத்துவ அறிவியலையும், பாரம்பரிய மருத்துவ அறிவையும் இணைத்து பயன்படுத்தத் துவங்குவது முதுமையில் வலிமையான ஆரோக்கியம் பிறப்பதற்கு வழிவகை செய்யும்.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

80560 40768

Tags:    

Similar News