சிறப்புக் கட்டுரைகள்

குரு தோஷமா? அதிகாலை வழிபாடு போதும்!

Published On 2024-04-02 10:19 GMT   |   Update On 2024-04-02 10:19 GMT
  • பொதுவாக மஞ்சள் நிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் குரு பகவான் அருள் இருக்கும் என்பார்கள்.
  • ஜாதகத்தில் குரு பகவான் பகை தரும் கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் குங்கும அர்ச்சனை சிறந்தது.

குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்வார்கள். ஒருவரது ஜாதகத்தில் குரு பகவான் நல்ல இடத்தில் சிறப்பான அம்சத்தில் அமர்ந்து இருந்தால் அவரால் கிடைக்கும் நன்மைகள் அளவிட முடியாத அளவுக்கு இருக்கும். எனவே குரு பகவானின் நகர்வுகள் ஒவ்வொருவருக்கும் மிக மிக முக்கியமானதாகும்.

குரு பகவான், பிரம்மாவின் மகன்களில் ஒருவரான ஆங்கீரச முனிவருக்கும், வசுதாதேவிக்கும் பிறந்த குழந்தைகளில் ஒருவர் ஆவார். 7-வது குழந்தையாக குரு பகவான் பிறந்ததாக புராணங்களில் குறிப்புகள் உள்ளன. குருவுக்கு 2 மனைவிகள். ஒருவர் பெயர் தாரை. மற்றொருவர் பெயர் சங்கினி.

இவருக்கு பரத்வாஜர், எமகண்டன், கசன் என்று 3 மகன்கள் பிறந்தனர். சூரியனும், சந்திரனும் இவருக்கு நட்புக்குரியவர்கள். புதனும், சுக்கிரனும் ஆகாதவர்கள் என்று ஜோதிட நூல்களில் கூறப்பட்டுள்ளது.

பொதுவாக ஜோதிடத்தில் குருவை புத்திரகாரகன் என்று சொல்வார்கள். குரு நன்றாக அமைந்து இருந்தால் நல்ல குழந்தைகள் பிறப்பார்கள் என்பது எழுதப்படாத விதியாகும். குழந்தைகளால் அந்த குடும்பத்துக்கே மேன்மை உண்டாகும்.

இது மட்டுமல்ல குரு பார்வை சிறப்பாக இருந்தால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்து இருக்கும். புகழ், பொருள் சேர்க்கை, நல்ல வீடு, சொகுசான வாகனம், ஒத்துழைக்கும் உறவினர்கள், நம்பிக்கை தரும் நண்பர்கள் ஆகியவற்றையும் குருதான் ஒவ்வொருவருக்கும் தருகிறார். ஆன்மீகத்தில் ஈடுபாட்டை தருவதும் குருபகவான்தான்.

ஒருவரது ஜாதகத்தில் ஜென்ம ராசியில் இருந்து 1, 2, 5, 7, 11 ஆகிய இடங்களுக்கு குரு வந்தால் மிகுந்த நன்மை கிடைக்கும். அதே சமயத்தில் குரு ஒரு ஜாதகத்தில் கெட்டுபோய் இருந்தால் அல்லது நீச்சம் பெற்று இருந்தால் சோதனை மேல் சோதனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். குறிப்பாக குரு சரியில்லாத ஜாதகக்காரர்கள் தனி நபர் ஒழுக்கத்தில் சிறப்பாக இருக்க மாட்டார்கள்.

அது மட்டுமல்ல குடும்பத்தில் பெற்றோர்கள், உறவினர்கள் யார் பேச்சையும் கேட்க மாட்டார்கள். அறிவுரை கேட்பதை கவுரவ குறைச்சலாக நினைப்பார்கள். இதனால் குரு சரியாக இல்லாத ஜாதகக்காரர்கள் எப்போதும் தங்கள் உறவினர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு முகத்தை உம்மென்றே வைத்துக் கொண்டிருப்பார்கள்.

குரு மிக கடுமையாக கெடுதல் கொடுக்கும் இடங்களில் அமைந்திருந்தால் அந்த ஜாதகக்காரர் தெய்வ நிந்தனை செய்ய தயங்க மாட்டார் என்று ஜோதிடர்கள் சொல்வது உண்டு. குரு பெயர்ச்சிகளில் ஒருவருக்கு சரியில்லாத இடம் அமைந்து விட்டால் அவர் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் அதலபாதாளத்துக்கு வந்து விடுவார்.

இத்தகைய பிரச்சனைகளில் இருந்து விடுபட வேண்டும் என்றால் குரு பகவானை வணங்கி அவரை மகிழ்ச்சிப்படுத்தி சரணாகதி அடைவதை தவிர வேறு வழியில்லை. எனவே குரு தோஷத்தில் இருந்து விடுபட அவசியம் அவரவர் தன்மை, இடம் மற்றும் வசதி வாய்ப்புகளுக்கு ஏற்ப பரிகாரம் செய்தே தீர வேண்டும்.

குரு பகவானுக்கு உகந்த வியாழக்கிழமைகளில் பரிகாரம் செய்வது நல்லது. வியாழக்கிழமை குரு ஓரையில் (காலை 6 மணி முதல் 7 மணி வரை, இரவு 8 மணி முதல் 9 மணி வரை) வீட்டில் வடகிழக்கு திசையில் குருவுக்குரிய கோலம் போட்டு அதில் மலர்கள் வைத்து அதன் மீது குரு எந்திரத்தை வைத்து பூஜிக்கலாம். அந்த சமயத்தில் 108 முறை குரு காயத்ரி சொன்னால் எவ்வளவு பெரிய குரு தோஷமாக இருந்தாலும் விலகி சென்று விடும். அது மட்டுமின்றி சுப பலன்களையும் தருவதாக அமையும்.

வியாழக்கிழமைகளில் வீட்டில் குருவுக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து நெய் தீபம் ஏற்றி வழிபடலாம். ஆலயத்துக்கு சென்று வழிபட வேண்டும் என்று விரும்புபவர்கள் வியாழக்கிழமைகளில் குரு பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் செய்ய வைத்து மஞ்சள் ஆடை கொடுத்து வழிபடலாம். (சென்னை பாடியில் திருவல்லிதாயம் என்றழைக்கப்படும் திருவல்லீஸ்வரர் ஆலயத்தில் குருபகவான் தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார்).

வியாழக்கிழமைகளில் வசதி வாய்ப்பு இருப்பவர்கள் தானம் செய்வது நல்லது. பெண்கள் அன்று விரதம் இருப்பது குரு பகவான் அருளை அதிகமாக பெற்று தரும். குரு பகவானுக்கு பிடித்த மஞ்சள் ஆடை அணிந்தாலும் தோஷத்தை குறைக்க முடியும் என்கிறார்கள்.

வியாழனுக்குரிய உலோகமாக தங்கம் கருதப்படுகிறது. அதை பூஜையில் வைத்தும் வழிபடலாம். ஒருவரது வீட்டில் வடகிழக்கு எனப்படும் ஈசான்ய திசையே குருபகவானுக்குரிய திசையாக கருதப்படுகிறது. எனவே உங்கள் வீட்டில் ஈசான்ய இடத்தில் எப்போதும் மங்களகரமாக இருக்கும் வகையில் பார்த்துக்கொண்டால் குரு பாதிப்பு வராது. மங்கள காரியங்கள் செய்யும்போது அந்த இடத்தில் தொடங்கினால் 100 சதவீத வெற்றி கிடைக்கும்.

சிலர் ஆலயங்களுக்கு சென்று பரிகாரம் செய்ய வேண்டும் என்று விரும்புவார்கள். அவர்கள் சென்னை பாடி திருவல்லிதாயம், திருச்செந்தூர் ஆகிய தலங்களுக்கு சென்று வழிபடலாம்.

குரு பார்வை இருந்தால்தான் திருமணம் கை கூடும், குழந்தை பாக்கியம் உண்டாகும், செல்வம் சேரும், நல்ல பதவி கிடைக்கும். என்றெல்லாம் ஜோதிடர்கள் சொல்வதை கேட்டு இருப்பீர்கள். இந்த பலன்கள் பெற வேண்டுமானால் குரு பகவான் ஆதிக்கம் நிறைந்த கோவில்களுக்கு சென்று வழிபட்டு வரவேண்டும்.

கும்பகோணம் அருகில் உள்ள ஆலங்குடி கோவிலுக்கு சென்று வழிபடலாம். சென்னை போரூரில் உள்ள ராமநாதீஸ்வரர் கோவிலுக்கு சென்று வழிபடலாம். திருச்செந்தூர் ஆலயத்தை 3 தடவை வலம் வந்து வணங்கினால் எவ்வளவு பெரிய குரு தோஷமாக இருந்தாலும் நீங்கும் என்பது ஐதீகம். 

யாக பூஜைகளில் நம்பிக்கை இருப்பவர்கள் குருபகவானுக்கு உகந்த யாகங்களை செய்யலாம். அல்லது யாக பூஜைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுக்கலாம். யாகத்தில் பங்கேற்ற பிறகு ஏழை-எளியவர்களுக்கு மஞ்சள் நிறத்தில் உடைகள் கொடுத்து வஸ்திர தானம் செய்யலாம்.

பொதுவாக மஞ்சள் நிற பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதில் குரு பகவான் அருள் இருக்கும் என்பார்கள். குரு தோஷம் உடையவர்கள் மஞ்சள் நிற பொருட்களை எந்த அளவுக்கு தானம் செய்கிறார்களோ அந்த அளவுக்கு பலன் உண்டாகும்.

ஓம் குருவே நமக என்ற மூல மந்திரத்தை எப்போது எல்லாம் உச்சரிக்க முடிகிறதோ அப்போது எல்லாம் சொல்லி வருவது நல்லது. குறிப்பாக அதிகாலையில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த மூல மந்திரத்தை உச்சரிப்பது மிக மிக நல்லது.

குரு தோஷம் நீங்குவதோடு குரு பகவானின் பரிபூரணமான ஆசியை பெற வேண்டும் என்று விரும்புபவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் செய்யலாம். அதை உச்சரிக்க முடியாதவர்கள் விஷ்ணு சகஸ்ரநாம பாராயணத்தை கேட்கலாம். இது மேன்மையான பலனை தரும் சக்தி கொண்டது.

ஜாதகத்தில் குரு பகவான் பகை தரும் கிரக சேர்க்கைகளுடன் இருந்தால் குங்கும அர்ச்சனை சிறந்தது. பெண்கள் மோதிர விரலால் குங்குமத்தை நெற்றியில் பொட்டாக வைத்துக் கொண்டால் குரு தோஷத்தில் இருந்து தப்பிக்கலாம். வாழை மரத்தை வழிபடுவதும் குரு தோஷத்தில் இருந்து விடுபட உதவும்.

வீட்டிலோ, ஆலயத்திலோ பெரிய அளவில் பணம் செலவழித்து பரிகாரங்கள் செய்ய இயலாது என்ற நிலையில் இருப்பவர்கள் கவலைப்பட தேவையில்லை. அதிகாலை எழுந்து நீராடி விட்டு பூஜை அறையில் தீபம் ஏற்றி விஷ்ணுவையும், மகாலட்சுமியையும் மனதார வழிபடுங்கள் போதும். தோஷங்கள் விலகி விடும்.

Tags:    

Similar News