சிறப்புக் கட்டுரைகள்
null

முதுமையில் புற்றுநோயை வெல்லும் உணவுகள்

Published On 2024-02-14 14:19 IST   |   Update On 2024-02-14 14:22:00 IST
  • நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மரபணுவில் பிழை ஏற்படாமல் தடுக்கும்.
  • இயற்கை நிறமிகளை இயற்கையிலே தன்னகத்தே அதிகம் கொண்டவை பழங்கள் தான்

அறுபது வயதைக் கடக்கும் முதியவர்கள் அனைவரும் புற்றுநோய் சார்ந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டியது அவசியம். அதற்கு புற்றுநோயினை தடுக்கும் உணவுகளையும், புற்றுநோயினை வெல்லும் உணவுகளையும் நாடுவது இன்றியமையாதது.

சமீபத்திய ஆய்வுகள் அதிர்ச்சிகரமான பல தகவல்களைத் தெரிவிக்கின்றன. அதன்படி ஒவ்வொரு உடலிலும் புற்றுநோய்க்கான செல்கள், விதைகளாக உறங்கி கொண்டிருப்பதாகவும், அந்த விதை வளர்ச்சி பெற்று புற்றுநோய் எனும் கொடிய நோயாக மாறுவது உணவு, சூழல் இவற்றைப் பொறுத்து அமைவதாக உள்ளது எனவும் தெரிவிக்கின்றன.

புற்றுநோய் என்பது உடலில் உள்ள மரபணுவில் உண்டாகும் பிழைகளால் உருவாகும் நோய். மரபு சார்ந்து வரும் புற்றுநோய் ஒருபுறம் இருக்க, உணவு மற்றும் பல்வேறு வேதிப்பொருட்கள், வேதிக்காரணிகள் மூலமாக உண்டாகும் நாட்பட்ட பாதிப்பானது, பின்னாளில் மரபணுவில் பிழையையும், பாதிப்பையும் உண்டாக்கி புற்றுநோய்க்கு அடித்தளமிடுவதாக உள்ளது.

ரத்தத்தில் மாறி மாறி காணும் சர்க்கரை அளவு நாட்பட்ட அழற்சிகளை உடலில் உண்டாக்கி புற்றுநோய்க்கான வழியை உண்டாக்குவதாக நவீன அறிவியல் கூறுகிறது. அத்தகைய அழற்சியை உண்டாக்கும் உணவுகள் என்று நவீன அறிவியல் பட்டியலிடும் உணவுப் பொருட்களில் முக்கிய இடத்தைப் பிடிப்பது இனிப்பு சார்ந்த உணவுகளும், இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கும் உணவுகளும் தான். ஆகவே இரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்பாடோடு வைத்துக்கொள்வது புற்றுநோயை தடுப்பதிலும், வெல்வதிலும் பெரும்பயன் அளிக்கும்.

உலகம் முழுக்க புற்றுநோய் சார்ந்த ஆய்வுகள் பல்வேறு கோணங்களில் நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கின்றன. அதில் புற்றுநோய்க்கும் உடல் பருமனுக்கும் அதிக தொடர்பு உள்ளதென்றும், புற்றுநோய்க்கும் சர்க்கரை நோய்க்கும் அதிக தொடர்பு உள்ளதென்றும் கூறுகின்றன. எனவே இவை இரண்டையும் கட்டுக்குள் வைப்பது மிக அவசியம்.

மேற்கூறிய நோய்நிலைகளுக்கு அடிப்படையாக உள்ள தொடர்பு இன்சுலின் எனும் ஹார்மோன் என்கிறது நவீன அறிவியல். உண்மையில் இன்சுலின் ஹார்மோன் சர்க்கரை நோயுடன் தொடர்புடையது என்பது பலருக்கு தெரியும். ஆனால் புற்றுநோய்க்கும், இன்சுலின் எதிர்ப்புக்கும் நெருங்கிய தொடர்புள்ளதாக தெரிய வருகிறது.

உணவை மருந்தாக்கிய சித்த மருத்துவம் உடலில் புற்றுநோய்க்கு ஆதாரமாகும் மரபணு பிழை உருவாகாமல், இன்சுலின் எதிர்பினைத் தடுக்க காயகல்ப மருந்துகளை பரிந்துரைப்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நெல்லி தேனூறல், இஞ்சித் தேனூறல், கரிசாலை கற்பம், திரிபலை கற்பம் ஆகிய மருந்துகள் உடலை அழியாமல் காக்கக்கூடியன. இவற்றில் மிகச்சிறப்பு வாய்ந்தது நெல்லி தேனூறல் தான். 

நெல்லிக்காயை லேசாக ஆவியில் வேக வைத்து, பின்னர் குண்டூசி கொண்டு சிறுதுளைகளை உண்டாக்கி, அதன்பின் தேனில் ஊறவைத்து ஒரு மண்டலம் சாப்பிட உடல் செல்கள் அனைத்திற்கும் புத்துணர்ச்சி கிடைக்கும். அதே போல் இஞ்சியும் செய்து எடுத்துக்கொள்ளலாம். சித்த மருந்தான திரிபலையில் நெல்லிக்காய் சேருவதும் குறிப்பிடத்தக்கது. ஆகவே சித்த மருந்தான திரிபலை சூரணத்தை கற்பமாக 45 நாட்கள் எடுத்துக்கொள்வது உடல் செல்களுக்கு புத்துணர்ச்சி தரும். மரபணு பிழையைத் தடுக்கும்.

நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மரபணுவில் பிழை ஏற்படாமல் தடுக்கும், ஆன்டி ஆக்ஸிடன்ட் தன்மை அதிக அளவு இருப்பது குறிப்பிடத்தக்கது. நெல்லிக்கனி மரபணு வரை சென்று காக்கும் என்று இன்றைய நவீன அறிவியல் உரக்க கூறுவதற்கு ஓராயிரம் ஆண்டுகளுக்கு முன்னமே, அதியமான் தமிழ் பாட்டி ஒவ்வையாருக்கு நெல்லிக்கனியை வழங்கியது சிறப்புமிக்கது. நம்ம ஊர் நெல்லிக்கனி போல வெளிநாட்டு பழங்களான ராஸ்பெர்ரி, ப்ளூபெர்ரி ஆகிய பழங்களும் பல்வேறு நன்மைகளை வாரி வழங்கக்கூடியன. மொத்தத்தில் பழங்கள் மரபணு பிழையைத் தடுக்கும் பேராயுதங்கள்.

அதே போல் இயற்கை வேளாண் பொருட்களைப் பயன்படுத்துவதும் இன்றைய சூழலில் அவசியமாகின்றது. மக்கள்தொகை பெருகி விட்டது, அதற்கேற்ற உணவு உற்பத்தி தேவை என்று கருதி இன்றைய சூழலில் அதிகம் பயன்பாட்டில் உள்ள பூச்சிக்கொல்லி மருந்துகளும், களைக்கொல்லி மருந்துகளும் கூட மரபணுவில் மாற்றம் உண்டாக்க காரணமாகிவிடும் என்று பல்வேறு தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஆகவே புற்றுநோயை வெல்ல வேண்டுமானால் நம் உடலுக்கு நஞ்சாக மாறும் பூச்சிமருந்துகள் கலந்த உணவுகளை தவிர்த்து, நஞ்சில்லா இயற்கை வேளாண் பொருட்களை நாடுவதும் மிக முக்கியமானது.

பஞ்சு மிட்டாய் முதல் பந்தியில் பரிமாறும் இனிப்புகள் வரை அனைத்திலும் செயற்கை நிறமூட்டிகளும், சுவையூட்டிகளும், நாவினை அடிமையாக்கும் வேதிப்பொருட்களும் சேர்க்கப்படுவது முதுமையில் மரபணு பிழை உருவாகும் வாய்ப்பினை அதிகரிப்பதாக உள்ளன. ஆகவே உண்ணும் உணவுப் பொருட்கள் அனைத்தும் இயற்கையாய் இருப்பது புற்றுநோயை வெல்லும் எளிய வழிமுறை.

பிளாக்ஸ் விதைகளை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளுவதும், பிளாக்ஸ் விதை எண்ணெயை பயன்படுத்துவதும் புற்றுநோய்க்கு நல்லது என்பதை அறிந்து அவற்றைப் பயன்படுத்தும் நம்மவர்கள், நமது பாரம்பரிய உணவு வகைகளை மறந்தவர்கள் தான். "என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்" என்பதைப் போல, என்ன சத்து இல்லை எங்கள் பாரம்பரிய உணவில் என்பதையும் புரிந்துகொண்டு செயல்பட வேண்டியது அவசியமான அவசரம்.

இயற்கை நிறமிகளை இயற்கையிலே தன்னகத்தே அதிகம் கொண்டவை பழங்கள் தான். பப்பாளி, மாதுளை, நாவல் போன்ற பழங்களின் நிறத்திற்கு காரணம் மரபணு பிழை உண்டாகாமல் தடுக்கும் இயற்கை நிறமிகள். அதே போல் கேரட், தக்காளி, ப்ராக்கோலி போன்ற நிறமுள்ள காய்கறிகளும் இயற்கை நிறமிகளை உடையன. இவ்வாறாக நாம் கொண்டாட வேண்டிய இயற்கை நிறமிகளை மறந்து விட்டதால், செயற்கை வேதி நிறமிகள் நம்மை ஆட்கொண்டு புற்றுநோய்க்கு ஆதாரம் அமைக்கின்றன.

 அதைப் போலவே கருப்பு கவுனியும், மாப்பிள்ளை சம்பா, காட்டு யானமும், இன்னும் பல பாரம்பரிய நிறமுள்ள அரிசிகள் அதிகப்படியான 'ஆன்தோசயனின்' எனும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் வேதி நிறமிகளை கொண்டு நம் மரபணு பிழையைத் தடுக்கும் தன்மை உடையன. இவற்றை நாடுவதும் முதுமையின் நலத்திற்கு அவசியம்.

எப்படி உடல் பருமனுக்கும், புற்றுநோய்க்கும் நெருங்கிய தொடர்பு உள்ளதோ அதை போல் ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவுக்கும் அதிக தொடர்பு உள்ளது. ஏனெனில் புற்றுநோயை உண்டாக்கும் பல்வேறு கார்சினோஜெனிக் காரணிகள் நம் உடலில் உள்ள கொழுப்பு பொருட்களுடன் ஒட்டிக்கொண்டு உடலிலேயே தங்கி விடுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆகவே தான் கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகள் புற்றுநோயை வெல்வதற்கு துணைபுரிவதில்லை. மாறாக, கொழுப்பு இல்லாத நார்ச்சத்துள்ள பழங்களும், பிஞ்சுக் காய்கறிகளும், தாவர வகை சார்ந்த உணவுப்பொருட்களும் புற்றுநோயை வெல்ல உதவும் சிறந்த உணவுப்பொருட்கள்.

அதே போல் விலங்கு புரதச்சத்துக்கள் நமது உடலில் ஐஜிஎப் -1 எனும் ஹார்மோன் சுரப்பினை தூண்டுவதன் மூலம் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியைத் தூண்டுவதாக ஆய்வுத்தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹார்மோன் சுரப்பு புற்றுநோய் உண்டாவதை சுட்டிக்காட்டுவதாக உள்ளது. எனவே புற்றுநோயை வெல்ல முழுதாவர தானிய உணவுப்பொருட்களை நாடுவது அவசியம் என்று மேற்கத்திய நாடுகளின் ஆய்வுகளே தெரிவிக்கின்றன.

எல்லாவற்றையும் விட புற்றுநோயை வெல்ல இன்றைய நவீன அறிவியல் கையில் எடுக்கும் பேராயுதங்களுள் ஒன்று வைட்டமின்-டி தான். வைட்டமின்- டி என்பது எலும்புகளுக்கு வலிமை தரும் என்பது நாம் அறிந்தது. ஆனால் இரத்தத்தில் வைட்டமின்-டி அளவு குறைவது என்பது பல்வேறு புற்றுநோய்களுக்கு வழிவகுக்கும் என்கிறது நவீன அறிவியல்.

நம் தமிழ் சித்தர்கள் வெயிலில் சூரிய வணக்கம் செய்ய வலியுறுத்தியது இதற்குத்தான் போலும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை 15 முதல் 30 நிமிடங்கள் வெயில்படும்படி உடலை வெளிப்படுத்துவதும் புற்றுநோயை வெல்லும் எளிய வழிமுறை என்கின்றன ஆய்வுகள்.

சங்க காலம் முதல் உணவை மருந்தாக பயன்படுத்தியது தமிழ் சமூகம். என்ன நோய்க்கு என்ன உணவு பத்தியம்? என்பதைக் கடந்து, எந்த நிலத்தில் என்ன உணவு எடுக்க வேண்டும்? என்று வாழும் சூழலுக்கு ஏற்றார் போல் உணவு முறைகளை வகுத்து வழிநடத்தியவர்கள் நம் முன்னோர்கள்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை இவற்றுக்கு ஏற்ற உணவுகள் என்ன? காலை, மதியம், இரவு இவற்றுக்கு ஏற்ற உணவுகள் என்ன? என்பதை ஆராய்ந்து வலியுறுத்தினர். ஆக முதுமையில், சித்த மருத்துவத்தின் உணவு அறிவினை பயன்படுத்தி நலம் நாட வேண்டியது அவசியமான ஒன்று.

சோ.தில்லைவாணன்

 புற்றுநோய்க்கு மட்டுமல்ல, இன்னும் பல்வேறு நோய்களின் தீர்வுக்கான கதவுகளின் பூட்டினை திறக்கும் சாவியாக விளங்குபவை உணவுகள் தான். இதைத்தான் பண்டைய சித்த மருத்துவமும், இன்றைய நவீன ஆய்வுகளும் தம்பட்டம் அடித்துக் கூறுகின்றன.

ஆகவே முதுமையில் உண்டாகும் புற்றுநோயினை வெல்வதற்கு உணவு எனும் படைக்கலனை கையில் எடுப்பது அவசியம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகளும், காற்றேட்டப்பட்ட பானங்களும், அதிக சர்க்கரை சத்துள்ள பாஸ்டா, பேக்கரி உணவுகளும், செயற்கை நிறமி சாயம் கலந்த உணவுகளும், முதுமையில் மட்டுமல்ல எல்லா பருவத்திலும் மரபணு பிழை உண்டாக்கி, புற்றுநோயை வரவழைக்கும் என்று நவீன ஆய்வுகள் எச்சரிக்கின்றன. இவற்றை உண்பது வாய்க்கு ருசி என்பதைத் தவிர, உடல் ஆரோக்கியத்திற்கு எந்த பயனும் இல்லை. ஆக ஆரோக்கியம் அளிக்கும் பயனுள்ள உணவுகளை நாடுவது புற்றுநோயை வெல்லும் எளிய வழி முறை.

தொடர்புக்கு:

drthillai.mdsiddha@gmail.com

Tags:    

Similar News