சிறப்புக் கட்டுரைகள்

திரைக் கடல் பயணம்- பண்பாட்டுக் கொண்டாட்டமாய் விளங்கிய பாக்கியராஜ் படங்கள்

Published On 2022-07-01 10:13 GMT   |   Update On 2022-07-01 10:13 GMT
  • தாவணிக் கனவுகளில் சிவாஜி கணேசனை மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைக்காரராகத்தான் நடிக்க வைத்தார் பாக்கியராஜ்.
  • சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரமும் கவுண்டமணியும் பேசிக்கொள்ளும் இடங்களில் நாமும் உடனிருந்து கேட்பதைப் போன்ற உணர்வினைத் தந்துவிடுவார்.

திரைப்படம் பார்த்தல் மக்களின் தலையாய பொழுதுபோக்காக மாறிய பிறகு சில கலைஞர்களின் படங்கள் அளவில்லாத வரவேற்பினைப் பெற்றன. ஆடவர், பெண்டிர், இளையவர், முதியவர் என்ற பாகுபாடில்லாமல் அனைவரையும் மகிழ்ச்சிக்குள்ளாக்கிய படைப்பாளர்கள் பலர் தோன்றினர். அவர்களுடைய படங்கள் வெளியானால் அவற்றைத் தவறாமல் பார்த்துவிட வேண்டும் என்ற எண்ணத்தை ஆழ விதைத்தார்கள் அவர்கள். திரைப்படத்தை மதிப்பிட்டுக் கூறுகின்றவர்களும் அப்படங்களைக் கூர்ந்து நோக்கினர். அவர்களுடைய படங்கள் வெளியாகும்போது பெருநிறுவனங்களின் பட வெளியீடுகளும் தள்ளி வைக்கப்பட்டன. ஒரு கட்டத்தில் தமிழ்க் குடும்பத்தின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக அக்கலைஞர்களின் படங்கள் மாறி நின்றன.

மேற்சொன்ன வகையில் ஏறத்தாழ பத்துப் பன்னிரண்டு ஆண்டுகள் கோலோச்சியவர் என்று இயக்குனர் பாக்கியராஜைக் கூறலாம். திரையுலகின் பொற்காலம் என்று கூறத்தக்க எண்பதுகளில் தம் படங்களால் மக்களை அணியணியாகத் திரையரங்கிற்கு வரவழைத்தவர் பாக்கியராஜ். 'சுவர் இல்லாத சித்திரங்கள்' என்ற முதற் படத்திலேயே தம்மைத் தனித்த வகை இயக்குநர் என்று அடையாளப்படுத்திக்கொண்டவர். தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நூறு படங்கள் என்று வரிசைப்படுத்தினால் அப்படத்திற்குக் கட்டாயமான இடமுண்டு.

தொடக்கத்தில் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர் பாக்கியராஜ். திரைப்படத்துறையில் சேர வேண்டும் என்பதற்காகக் கோயம்புத்தூரிலிருந்து சென்னைக்கு இடம்பெயர்ந்தவர். கோபிச்செட்டிப்பாளையத்திற்கு அருகில் உள்ள வெள்ளாங்கோவில்தான் அவருடைய பிறப்பூர். அங்கே சிறுவயதைக் கழித்தவர் பிறகு கோயம்புத்தூருக்கு இடம்பெயர்கிறார்.

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களாம் கொங்குப் பகுதியினுடைய ஒரு காலகட்டத்து வாழ்வியலை பாக்கியராஜ் அளவிற்குப் படமாக்கிய இன்னொருவர் இல்லை எனலாம். சென்னையில் வீடு வாடகைக்கு விடுபவராகத் தோன்றும் ஒரு கதாபாத்திரத்தைக் கொங்குப் பகுதியின் பெரியவராகத்தான் காட்டியிருப்பார். அந்த 7 நாட்களில் கல்லாப்பெட்டி சிங்காரத்தின் பாத்திரத்தை நினைவுபடுத்திப் பாருங்கள்.

பஞ்சாலைத் தொழில்கள் பரவியபோது அன்றைய புற நகரங்களில் வாழ்ந்த மக்களின் அகவாழ்வு எவ்வாறு இருந்தது என்பதைத்தான் சுவர் இல்லாத சித்திரங்களில் காட்டியிருப்பார். அதே புறநகரச் சூழலில் வளரும் இளைஞர்களின் மனநிலைதான் இன்றுபோய் நாளைவா திரைப்படத்தில் வெளிப்படுவது.

பொய்சாட்சி திரைப்படத்தில் சிற்றூராகக் காட்டப்படுவது மேட்டுப்பாளையம், தேக்கம்பட்டி வனபத்திரகாளியம்மன் கோவிலோர ஆற்றங்கரை.

தாவணிக் கனவுகளில் சிவாஜி கணேசனை மிதிவண்டி பழுதுபார்க்கும் கடைக்காரராகத்தான் நடிக்க வைத்தார் பாக்கியராஜ். எண்பதுகளில் நம் ஊர்ப்புறத்தில் பத்துக் கடைகளில் ஒன்று மிதிவண்டிக் கடையாக இருந்ததைப் பார்த்திருப்போம். கொங்குப் பகுதிச் சிற்றூர் ஒன்றில் வாய் பேச முடியாத ஒருவர் காதலுற்றுப் படும் பாடுகளை நகைச்சுவை ததும்பச் சொன்ன படம்தான் ஒருகை ஓசை.

எங்க சின்ன ராசா படத்தைப் பற்றிச் சொல்லவே வேண்டியதில்லை, இங்குள்ள நிலவுடைமைக் குடும்பத்தினுள் நிகழும் உறவுச் சுரண்டல்களைப் பற்றியது. பவுனு பவுனுதான் படத்தில் காவிரியின் எழில்கொஞ்சும் கரைப்பகுதி ஊர்களான பூலாம்பட்டியும் ஊராட்சிக் கோட்டையும் சித்தாறும் காட்டப்பட்டன. இவை எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பு வைத்ததுபோல் இரண்டு படங்கள் அச்சு அசலாகக் கொங்குப் பகுதி வாழ்வியலில் செழித்து வளர்ந்து எழுந்தன. அப்படங்கள் தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு.

எப்போது பாக்கியராஜின் படங்கள் கொங்குப் பகுதி வாழ்வியலைவிட்டு மெல்ல அகன்றனவோ அப்போது அவை தடுமாறின. பாரதிராஜாவும் அத்தகைய தவற்றினைச் செய்தார். எழுபது எண்பதுகளில் வெளிநாட்டுப் படங்களைக் கண்ட மயக்கத்தில் தமக்குக் கைவந்த கலையான ஊர்ப்புற வாழ்வியலைக் கூறும் படங்களைத் தள்ளிவைத்தார். கொலை, திகிலுணர்ச்சிப் படங்களை எடுத்தார் பாரதிராஜா. டிக் டிக் டிக்கையும் கேப்டன் மகளையும் பாரதிராஜா எடுக்க வேண்டிய கட்டாயம் என்ன? ஞானப்பழம், வேட்டிய மடிச்சுக் கட்டு, ஒரு ஊர்ல ஒரு ராஜகுமாரி, ரத்தத்தின் ரத்தமே என்று பாக்கியராஜும் தடம்புரண்டிருக்க வேண்டியதில்லை.

தமக்கு வாழ்வளித்த ஊர்ப்புற மக்கள் வாழ்வியல் கூறுகளைக்கொண்ட கதைகளை அப்போதைய வெற்றிக் களிப்பில் எளிமையாகக் கருதிவிட்டனர் என்றே தோன்றுகிறது. இத்தனை ஆண்டுகள் கழித்தும் இவ்வியக்குனர்களை எந்தப் படங்களுக்காக நினைவுகூர்கிறோம்?

பாக்கியராஜின் திரைப்படங்களுக்கு நிகழ்வு களமாகத்தான் நிலப்பகுதி அடையாளத்தை அளிக்கலாமே தவிர அவற்றில் இயங்குபவை ஆண், பெண் உறவு நிலைகளின் பலப்பல நிலைப்பாடுகள். காதலும் இல்லறமும் குடும்பமும் உறவு முரண்களும் அவற்றில் பேசுபொருள் ஆயின. அவர் வருவதற்கு முன்னரும் தமிழ்த் திரைப்படங்களின் முதன்மையான கதைப்பொருள்கள் அவையே. என்றாலும் அவற்றில் தூக்கலாகத் தெரிந்த நாடகக் கூற்று முறைகளை முற்றாகத் தவிர்த்தார். ஒரு நிகழ்ச்சியினை நாம் நேரில் நின்று பார்ப்பதுபோன்று உணருமாறு காட்சிகளை அமைத்தார். அவற்றிடையே நகைச்சுவையைப் பொதித்து வழங்கினார்.

சுவர் இல்லாத சித்திரங்கள் திரைப்படத்தில் கல்லாப்பெட்டி சிங்காரமும் கவுண்டமணியும் பேசிக்கொள்ளும் இடங்களில் நாமும் உடனிருந்து கேட்பதைப் போன்ற உணர்வினைத் தந்துவிடுவார். "என்னடா காளியண்ணா" என்பதில் தொடங்கி "ஞானிக்கேதுடா நாளுங்கிழமை?" என்று கேட்கவைத்து "சரோசா குப்பை கொட்டறியா கொட்டு கொட்டு" என்று வழிய விடுவதுவரைக்கும் நாம் சிரித்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்.

கவிஞர் மகுடேசுவரன்

இளைஞர்களிடத்தில் 'பொண்ணு பார்க்கப் போவது' என்பது பெரிய கனவு. போவதற்கு முன்னர்த் தொடங்குவது, போய்விட்டு வந்த பின்னரும் தீராத பேசுபொருளாவது அந்த நிகழ்வு. இரு குடும்பங்களும் அதற்குப் படுகின்ற பாடுகள், போக்குவரத்துகள், பேச்சுவார்த்தைகள் தனிக்கதை. இவற்றைக் கதைப்பொருளாக்கி எடுத்த படம்தான் 'தூறல் நின்னு போச்சு.'

தன்னைப் பெண் காண வரும் முதல் மாப்பிள்ளையே தனக்குக் கணவனாக வந்துவிட வேண்டும் என்ற வேண்டுதலோடு இருப்பவள் நாயகி. தான் முதன்முதலாகப் பார்த்த அந்தப் பெண்ணையே கட்டிக்கொள்ள வேண்டும் என்று விருப்பினான் நாயகன். பேச்சு முடிந்து நிச்சயக் கட்டம் வரும்போது சீர்வரிசைத் தொகையில் இழுபறி ஏற்படுகிறது. திருமணப் பேச்சுவார்த்தைகளில் நகையும் பணமும் வரதட்சணை, சீர்வரிசை, செய்முறை என்ற பெயரில் பெண் அடக்கு முறைகள் தலைவிரித்தாடிய காலகட்டம். அதன் வழியே நிகழும் மனப்போராட்டங்களை நகைச்சுவை மிளிருமாறு தூறல் நின்னு போச்சு திரைப்படத்தில் காட்டியிருந்தார் பாக்கியராஜ்.

அந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் ஏதேனுமொரு பண்பாட்டுச் செய்தி அடங்கியிருந்தது. சட்டையின்மீது தோள்துண்டு போட்டுக்கொள்வது, பெண் பார்க்க உழுனி (டிராக்டர்) வண்டியில் ஊர்கூடிச் செல்வது, புதுமாப்பிள்ளை வீட்டிற்கு வந்துவிட்டால் ஊர்ப்பெண்டிர் வாசற்படியோரம் வந்து வேடிக்கை பார்ப்பது, பெண்வீட்டுப் பாட்டி மாப்பிள்ளையிடம் செல்லம் கொஞ்சுவது, பார்த்துவிட்டுச் சென்ற மணப்பெண்ணைத் தனியாகப் பார்த்துப் பேச ஏங்குவது (இன்றைய கைப்பேசி வாய்ப்பு அன்று ஏது?), தன் ஒரே மகளைக் கட்டிக் கொடுப்பதில் பெண்ணின் தந்தை காட்டும் அன்பின் இறுக்கம் எனக் கண்முன்னே நம் காலப்பதிவுகள் நகர்கின்றன.

"நம் இரு வீட்டாரும் இப்படி முரண்பட்டு நிற்பதால் நமக்கு மணம் செய்விக்கமாட்டார்கள், நாம் வீட்டை விட்டு ஓடிப்போய்விடலாம்" என்று பெண்ணை வற்புறுத்துவான் மாப்பிள்ளை. காதல் உச்ச நிலையில் தலைவனுடைய அழைப்பிற்கு அடிபணிந்து வீட்டை விட்டு வெளியேறி ஆற்றங்கரையில் பெட்டியோடு காத்திருப்பாள் நாயகி. அவ்வாறு வீட்டு மதில் தாண்டி வரும் வழியில் தலைவன் வேலிமின்சாரக் கம்பி தாக்கிச் சாய்ந்துவிடுவான். தன்னை வரச்சொல்லிவிட்டு அவன் வரவில்லையே என்று வெதும்பும் நாயகி வேறு வழியின்றி வீடு திரும்புவாள். அப்போது விடிந்திருக்கும். ஊரே திரண்டிருக்கும். தலையைக் குனிந்துகொண்டே தந்தை காலில் விழுந்து "அப்பா என்னை மன்னிச்சுடுங்கப்பா, தெரியாமச் செஞ்சிட்டனப்பா" என்று கதறுவாள். இந்தக் காட்சிக் கோர்வை இருக்கிறதே, காண்போர் உள்ளம் பதைபதைத்து வெடித்துச் சிதறாத குறைதான். இத்தகைய காட்சிகளால்தான் பாக்கியராஜ் அடுத்த பத்தாண்டுகள் அசைக்க முடியாதவர் ஆனார்.

கணவனும் மனைவியுமாய்த் திரையரங்கத்திற்குச் சென்று ஒருவரையொருவர் பார்த்துச் சிரித்துக்கொள்ளும் படங்களாகப் பாக்கியராஜிற்கு அமைந்தன. ஜோடியாய்ச் சென்று அவர் படத்தைப் பார்த்த நினைவுகளை அந்த இணையர் மறந்திருக்கமாட்டார்கள். பாக்கியராஜின் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட எந்த மனைவியும் "இந்தப் படத்துக்கு ஏன் கூட்டிட்டு வந்தீங்க ?" என்று கணவரைக் கடிவதற்கு வழியே இல்லை. அவர்களுடைய இல்லறத்தின் அன்பையும் ஆழத்தையும் அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றவை அப்படங்கள்.

'முந்தானை முடிச்சு' திரைப்படம் உறவு முரண் திருப்பங்களின் உச்ச வடிவத்தில் அமைந்தது. தான் மனத்தில் வைத்துக்கொண்ட ஆணின் அன்பைப் பெற ஒரு பெண் எந்த முயற்சியிலும் இறங்குவாள் என்பதைச் சொன்னது. பெண்ணின் தீர்மானத்தின்முன் ஆணின் தடுப்புகட்கு வலுவே இருப்பதில்லை. என்னதான் தவிர்த்தாலும் அந்த முடிச்சிற்குள் அடங்கிக்கொள்ள வேண்டும். பெண்ணின் எல்லாத் தவிப்புகளும் இனிதே நிறைவேறும் இடம் பிள்ளைப் பேறு. அதனைக்கூட உன்மீது கொண்ட அன்பின் பொருட்டுத் துறக்கச் சித்தமானேன் என்று பரிமளம் முடிவெடுக்கும் வேளையில் வாத்தியாரின் மனம் கனிகிறது. அந்தத் துறப்பைக் கோருவது ஆணின் மனமன்று, பெண்மையின் அனைத்து நிலைகளையும் காத்து நிற்றலே ஆணின் அறம். அவற்றில் தாய்மையைத் தவிர்த்துவிட முடியுமா ? என்னே வலிமையான கதைக்களம்! இதனைப் பாக்கியராஜ் ஆக்கி அளித்தார்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க வணிக வெற்றியையும் புகழையும் பெற்றார் என்பனவற்றைக்கூடப் பொருட்படுத்தாமல் போகலாம். கதையில் இருக்கும் இந்த அடிச்சரட்டை உள்ளார்ந்து உணர்ந்த மக்கள் அதனைக் கோலாகலமாகக் கொண்டாடித் தீர்த்ததுதான் கவனிக்கப்பட வேண்டியது. மனிதப் பெருவாழ்வின் ஆழ்ந்த பொருள் என்ன என்பது மக்களுக்கு எவ்வளவு துல்லியமாகத் தெரிகிறது, பாருங்கள் ! அதனால் விளைந்ததுதான் முந்தானை முடிச்சின் வெற்றி.

தமிழ்த் திரையுலக வரலாற்றில் வாழ்க்கையின் விழுமியங்களை கதைப்பொருளாகக்கொண்டு களிநயம் குன்றாத ஆக்கத்தோடு தம் படங்களை வழங்கி வெகுமக்களை ஈர்த்தவர் பாக்கியராஜ். அவருடைய பத்துப் படங்களேனும் பல படிநிலைகளில் எடுத்துக்காட்டாகத் தகுந்தவை. என்றைக்கும் பாடங்களாக விளங்குபவை.

தொடர்புக்கு:-

kavimagudeswaran@gmail.com

செல்: 8608127679

Tags:    

Similar News