சிறப்புக் கட்டுரைகள்

உள் எதிரிகளை அழிக்கும் கால பைரவர்!

Published On 2025-08-18 12:45 IST   |   Update On 2025-08-18 12:45:00 IST
  • இறைவன் மீது அதிக நாட்டம் உள்ள மனிதர்கள் இருந்த காலம்.
  • முனிவர் சிறந்த பைரவ வழிபாட்டாளர்.

சில சமயங்களில் நாம் ஒன்று எழுதலாம் என்று நினைப்போம். ஆனால் அது முற்றிலும் மாறுபட்ட விதமாக வேறொரு தலைப்பு கருத்தின் கீழ் அமையும். அவ்வாறு அமைந்ததுதான் இன்று எழுதப்படும் கட்டுரையாகும்.

கால பைரவரைப் பற்றிய இந்த கட்டுரையினை ஆன்மீக நாட்டம் உடைய ஒரு தெரிந்தவர் அனுப்பி இருந்தார். அதனைப் படித்தவுடன் எனக்கு இக்கட்டுரையினை பகிர வேண்டும் என்ற எண்ணம் வலுத்தது. அதன் வெளிப்பாடே இக்கட்டுரை அப்படியே எழுதப்பட்டுள்ளது.

கால பைரவர்

* சிவனின் ஒரு உக்கிரமான சொரூபம். * சக்தி மிகுந்த தெய்வம் * தீயதை அழிப்பவர், நல்லதை காப்பவர், காலத்தோடு இணைத்தவர். * பயத்தினை போக்குபவர் * அழிவுப் பூர்வங்களை அகற்றுபவர். * வாரணாசியினை இவரது தலைமை பீடம் எனலாம்.

இப்படி நிறைய சொல்லலாம். இதனை மேலும் காக்கை சித்தர் வாக்கில் இருந்து அறிவோமா?

அய்யனே. நாம் கடவுளை சிறந்தவர் என்கின்றோம். ஆன்மாவை மேன்மை படுத்த சிவத்தினை அடைய வேண்டும் என்கின்றோம். ஆனாலும் மனிதர்கள் மகா கால பைரவரையே வணங்கி வாருங்கள் என பைரவருக்கு முன்னுரிமை அளிப்பதன் காரணம் என்ன? தவறாக கேட்டிருந்தால் எங்களை மன்னிக்கவும் என்றனர்.

அவர்களை அமைதியாய் நோக்கிய காக்கை சித்தர் ஒரு நிகழ்வினைப் பற்றிக் கூறினார்.

இறைவன் மீது அதிக நாட்டம் உள்ள மனிதர்கள் இருந்த காலம். மனித நேயம் இருந்த காலம். எங்கும் தர்மம் தழைத்த காலம். அச்சமயம் ஜனார்த்தனன் என்ற ஒரு வியாபாரிக்கு ஒரு மகன் பிறந்தான். ஜனார்த்தனன் மிகுந்த இறை பக்தி கொண்டவர்.

எழை, எளியவர்களுக்கு அதிக தானம், தர்மம் செய்து வந்தார். தனது மகனுக்கு குமணன் என்று பெயர் சூட்டினார். தன் மகனின் ஜாதகத்தினை கணித்து அவனது எதிர்காலத்தினைப் பற்றி அறிய ஜனார்த்தனன் விரும்பினார். தனது குருமாரை அணுகி குமணனின் ஜாதகத்தினை எழுதி அதன் பலனையும் கூறுமாறு வேண்டினார். குருமாரும் குமணனின் ஜாதகத்தினை ஆராய்ந்து பலனைக் கூறினர். அப்போது குமணன் வயது 12.

குமணனின் ஜாதகம் தரித்திர ஜாதகம். பிறப்பிலேயே குமணன் ஒரு தரித்திரன். அவனும் கெடுவான், அவனோடு சேருபவனும் கெடுவான். அவனுக்கு உதவுபவனும் கெடுவான். உணவளிப்பவனும் கெடுவான் என்றார். கேட்கும் நமக்கே சங்கடம் ஏற்படுகின்றதே? ஜனார்த்தனன் மனநிலை எப்படி இருந்திருக்கும்?

இப்படியெல்லாம் ஒரு குருமார் சொல்லலாமா? போன்ற தர்க்கங்களை இங்கு ஒதுக்கி விடுவோம். இங்கு நாம் பேசப் போவது கால பைரவரை பற்றி மட்டுமே.

ஜனார்த்தனன் கதறி அழுதார். இறைவனிடம் தவம் இருந்து பெற்ற என் பிள்ளையின் நிலை இதுதானா? இதற்கு பரிகாரம் எதுவும் இல்லையா?- ஜனார்த்தனன். பரிகாரம் இதற்கு இல்லை. பிறப்பின் பயனை அவன் அனுபவித்தே ஆக வேண்டும். மேலும் இதன் பின் அவன் உங்களுடன் வசிப்பான் என்றால் பெற்றோரில் ஒருவரை அவன் இழக்க நேரிடும் என்று கூறி விட்டு குருமார் அங்கிருந்து சென்றார்.

குமணன் தன் தந்தை மீது மிகுந்த அன்பு கொண்டவன். தந்தை மீது கொண்ட பக்தியால் உடனே தந்தையை விட்டு விலக முடிவு செய்தான். தந்தையின் அனுமதியோடு வெளியூர் பயணம் மேற்கொண்டான்.

 

கமலி ஸ்ரீபால்

குமணன் செல்லும் இடம், செய்யும் வேலை, பழகும் நண்பர்கள் எல்லாம் ஆறு மாத காலமே நீடித்தன. இவ்வாறே ஊர் ஊராக அலைந்து குமணனுக்கும் 25 வயது ஆகி விட்டது.

ஒரு கால கட்டத்தில் மனம் நொந்த குமணன் இனிதான் வாழ்வது வீண் என்று முடிவு செய்து மலை சிகர உச்சிக்கு சென்று உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்தான். ஜனார்த்தனனும் தொழிலில் நலிவு பெற்று மிகவும் கஷ்டப்பட்டான். இருப்பினும் இறை பணிகளை தொடர்ந்து செய்து வந்தார். குமணன் காடுகளைக் கடந்து மலை உச்சிக்கு செல்லும் வேளையில் அவனுக்கு மிகுந்த தாகம் எடுத்தது. அவ்விடத்தின் அருகில் ஆசிரமம் இருந்தது.

தாகத்துக்கு நீர் கேட்போம் என்று எண்ணி ஆசிரமத்திற்குச் சென்றான். அந்த ஆசிரமம் ஒளியாய் தெரிந்தது. அந்த ஆசிரமத்தில் முனிவர் ஒருவர் இருந்தார். அவர் குமணனை அன்போடு உபசரித்தார். பின்னர் என்ன குமணா, உயிரை மாய்த்துக் கொள்வதற்காக இங்கு வந்தாயோ என்றார் முனிவர்.

தன் நிலையினை சொல்லலாமா? வேண்டாமா? என்று நினைத்த குமணனுக்கு முனிவரே எல்லாம் சொல்லி விட்டாரே என்ற ஆச்சர்யம்.

முனிவர் மேலும் தொடர்ந்தார். நான் ஒரு உபாயம் சொல்கிறேன். என்னோடு நீ வந்து செய்தால் உன் துயரம் தீரும் என எண்ணுகிறேன் என்றார். குமணனுக்கு மிக்க மகிழ்ச்சி. அவர் வார்த்தைகளை உறுதியாய் நம்பினான். ஐயா, நீங்கள் சொல்வது போல் நான் கண்டிப்பாய் நடக்கின்றேன். "எப்படியோ என் கவலைகள் தீர்தால் சரி" என்றான்.

முனிவர் சிறந்த பைரவ வழிபாட்டாளர். பைரவரே அவரது குரு. அவர் பைரவரிடம் வேண்டும் அனைத்தும் நடந்தது. முனிவர் குமணனை அழைத்துக் கொண்டு எட்டு பைரவ ஆலயங்கள் சென்றார். அங்கு ஜம், பூஜைகளைச் செய்தார். பின்னர் குமணனைப் பார்த்து, "குமணா இனி நீ உன் வாழ்க்கை பயணத்தினை தொடரலாம். அது வெற்றியாகவே அமையும்" என்றார்.

குமணனும் முனிவரின் ஆசி பெற்று வாழ்க்கை பயணத்தினை மேற்கொண்டான். அனைத்தும் வெற்றியாக அமைந்தது. செல்வந்தன் ஆனான். தாய், தந்தையரைச் சேர்ந்தான், தர்ம காரியங்களை செய்து வந்தான்.

ஜனார்த்தனன் குமணனை அழைத்துக் கொண்டு தன் குருமாரை சந்தித்து ஆசி பெற சென்றார். குமணன் வாழ்வில் நடந்த அனைத்தினையும் கூறினார்.

குருமார் சிந்தித்தார். ஜோதிடத்தில் குமணனின் வாழ்க்கை மாற வாய்ப்பே இல்லை. பரிகாரமும் இல்லை. தான் சொன்ன ஜோதிடமும் தவறில்லை. பின் இந்த மாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது? குருமாரும் ஜனார்தனன், குமணன் இவர்களுடன் முனிவர் ஆசிரமம் சென்றார்.

முனிவர் கூறியது குருமாரே. நீங்கள் ஜாதக ரீதியாக கூறிய அனைத்தும் உண்மைதான். ஆனால் எவன் ஒருவன் பைரவரை வணங்குகின்றானோ அவன் எத்தனை அசுபங்களால் ஆட்பட்டிருந்தாலும், அதில் இருந்து மீண்டு உயர்ந்த வாழ்க்கையை வாழ்வான் என்றார். இது தேவ ரகசியம்.

கால பைரவர், காலத்தினையே தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டவர் என போற்றப்படுபவர். இந்து, சைன, புத்த பிரிவுகளில் இவரை வணங்கும் முறை பற்றி குறிப்புகள் உள்ளன என்று கூறப்படுகின்றது. வணங்குபவரின் ஆணவம், மூர்க்கத் தனமும் அழியும். உண்மையில் இத்தகு குணங்களே மனிதனின் எதிரிகள்.

பிரம்மனின் 5 தலைகளில் ஒன்றினை கொய்தவர். கறுத்த உக்கிர தோற்றமும், நாய் வாகனமும் கொண்டவர். தன்னை வணங்குபவர்களின் வெளியுலக எதிரிகள், அவருள் இருக்கும் மாயை, ஆசை, ஆணவம் என்ற உள் எதிரிகள் இரண்டனையும் நீக்குபவர். 64 வகைகளாக அறியப்படும் பைரவர் 8 பிரிவுகளில் தொகுத்து 'அஷ்ட பைரவர்' என வணங்கப்படுகின்றார். தேய்பிறை அஷ்டமி இவருக்கு உகந்த நாள். கார்த்திகை மாதத்தில் வரும் தேய்பிறை அஷ்டமி காலபைரவ ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது.

உப்பில்லா தயிர் சாதம், உப்பில்லா உளுந்து வடை இவற்றினை இவருக்காக செய்வர். செவ்வரளி, சிகப்பு மலர்கள் இவருக்கு உகந்தது.

* ஆன்மீக முன்னேற்றம் வேண்டுபவர்கள்.

* பயம், அழிவுப் பூர்வ சிந்தனை நீங்க

* தெளிவான மன நிலை, கூரிய கவனம் பெற

* படபடப்பு, கவலை, ஸ்ட்ரெஸ் நீங்க

* ஒழுக்கமான நெறியினை கடை பிடிக்க

* பணப் பிரச்சினை, கடன், வம்பு, வழக்கு நீங்க

* தடைகள் உடைபட வேண்டி வழிபடுவர்கள் கால பைரவரை தொடர்ந்து வழிபட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

நம் நாட்டில் பைரவர் வழிபாடு மிகவும் சிறப்பு பெற்றது என்பதால் இக்கட்டுரை எழுதப்பட்டது. இதனை நம்பித்தான் ஆக வேண்டும் என்றோ? கடை பிடித்துத்தான் ஆக வேண்டும் என்ற கட்டாயமோ இல்லை. அவரவர் உன் மனமே அவருக்கு சிறந்த வழிகாட்டி.

'கடவுளை கண்ணால் பார்க்க முடியுமா?'- இது மகான் கிருபானந்த வாரியார் அவர்களிடம் ஒருவர் கேட்ட கேள்வி.

'தம்பி, உன் கேள்விக்கு பதில் சொல்வதற்கு முன் ஒரு கேள்வி. நீ உன் உடம்பை கண்ணால் பார்க்கின்றாயா?

'என்ன ஐயா! இந்த உடம்பை நான் எத்தனை காலமாக பார்த்து வருகின்றேன்' எனக்கு கண் இல்லையா என்ன?

'தம்பி- நீங்கள் படித்த அறிஞன்தான். கண் இருந்தால் மட்டும் போதாது. கண்ணில் ஒளியிருக்க வேண்டும். காது இருந்தால் மட்டும் போதாது, காது ஒலி கேட்பதாக அமைந்திருக்க வேண்டும். அறிவு இருந்தால் மட்டும் போதாது. அதில் நுட்பமும், திட்பமும் இருக்க வேண்டும்.

மகான் மேலும் கூறினார், 'உடம்பை நீ பார்க்கின்றாய். இந்த உடம்பு முழுவதும் உனக்குத் தெரிகின்றதா?"

'ஆம் நன்றாகத் தெரிகின்றது'.

' அப்பா அவசரப்படாதே. எல்லாம் தெரிகின்றதா?'

'என்ன ஐயா தெரிகின்றது. தெரிகின்றது என்று எத்தனை முறை கூறுகின்றேன்.

'தம்பி, எல்லா அங்கங்களும் தெரிகின்றதா?'

'ஆம் முழுவதும் தெரிகின்றது. பதில் எரிச்சலுடன் இருந்தது.

'அப்படியா, தம்பி உன் உடம்பின் பின்புறம் தெரிகின்றதா?'

'ஐயா, பின்புறம் தெரியவில்லை? குரல் கம்மியது.

'தெரிகின்றது, தெரிகின்றது என்று பலமுறை சொன்னாயே,. இப்போது தெரியவில்லை என்கின்றாயே. சரி போகட்டும். முன்புறம் முழுவதும் தெரிகின்றதா?'-மகான் கேள்வி

'ஆம் முன்புறம் எல்லாம் தெரிகின்றதே?-அவசர பதில்.

'தம்பி அவசரம் கூடாது. முன்புறம் எல்லா பகுதிகளையும் பார்க்க முடிகின்றதா?' வாரியாரின் அமைதியான கேள்வி.

'ஆம், எல்லா பகுதிகளையும் காண்கின்றேன்'

'தம்பி, முன்புறம் உன் முகத்தினை உங்களால் பார்க்க முடிகின்றதா?'

கேள்வி கேட்டவர்க்கு நெருப்பை மிதித்தது போல் இருந்தது. தன் அறியாமையை எண்ணி வருந்தினார்.

தம்பி இந்த உடம்பிலேயே நீங்கள் சிறிது தான் கண்டு இருக்கின்றீர்கள். இந்த உடம்பு முழுவதும் தெரிய பெரிய இரு நிலை கண்ணாடி வேண்டும். அது போல இறைவனைத் தேடவும் இரு கண்ணாடி வேண்டும்.

'அவை என்ன ஐயா?'

'ஒன்று திருவருள். மற்றொன்று குருவருள். திருவருளைக் காண குரு அருள் அவசியம். இவை இரண்டும் இருந்தால் நீங்கள் இறைவனை காண முடியும்' என்றார் வாரியார் மகான்.

Tags:    

Similar News