- இன்றைய செலவுக்கு சம்பாதிக்கிறோம்; நாளைய செலவுக்கு சேமிக்கிறோம்; பின்னால் வரக்கூடிய செலவுகளுக்கு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குகிறோம்.
- நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது.
மாலை மலர் வாசகர்களுக்கு அன்பார்ந்த வணக்கங்கள். செல்வத்தை நோக்கிய நம் பயணத்தில் வரவை விட சேமிப்பு முக்கியம் என்று பார்த்தோம். சேமிப்புக்கான வழிகள் பற்றிப் பேசும் முன் அந்த சேமிப்பை செய்யவிடாமல் நம்மைத் தடுக்கும் தடைகளை உடைக்க வேண்டும் அல்லவா? நாம் உடைக்கவேண்டிய முதன்மையான தடை எது? நமது செலவுப் பழக்கம்.
மிதக்கும் நகரம் என்று வர்ணிக்கப்படும் மாபெரும் கப்பல்கள் கூட கடலில் மூழ்கிப் போகக் காரணம் அவற்றில் உருவாகும் சிறு ஓட்டைதான் என்று கூறப்படுகிறது. யாரும் கவனிக்கும் முன் அந்த ஓட்டை மெல்ல மெல்லப் பெரிதாகி, அதன் வழியே உள்ளே வரும் கடல் நீர் கப்பலையே முழுகடித்துவிடுமாம். இது போலவே நாம் பார்த்துப் பார்த்துக் கட்டமைக்கும் குடும்பம் என்னும் கப்பல் கூட முழுகிப் போவதற்கு, நம்மிடம் உருவாகும் அநாவசியச் செலவு என்னும் சிறு பழக்கம் காரணமாகிவிடுகிறது.
இதையெல்லாம் பேசுவதால் நான் ஏதோ செலவு செய்வதே தவறு என்று உபதேசிப்பதாக எண்ணவேண்டாம். செலவில்லாவிட்டால் ஏன் படிப்பு, எதற்கு வேலை, என்னத்–துக்கு வருமானம்? செல–வில்லாவிட்டால் வாழ்க்கையே இல்லை. இன்றைய செலவுக்கு சம்பாதிக்கிறோம்; நாளைய செலவுக்கு சேமிக்கிறோம்; பின்னால் வரக்கூடிய செலவுகளுக்கு முதலீடு செய்து பணத்தைப் பெருக்குகிறோம்.
ஆனால் சில பொருட்கள் அநாவசியம் என்று உணராமலே அல்லது உணர்ந்தாலுமே நாம் அவற்றை வாங்கிக் குவிக்கும் போக்குக்கு அடிமை ஆகிவிட்டோம். நம்பவில்லை என்றால், ஒரு முறை உங்கள் வீட்டைச் சுற்றிப் பாருங்கள். அலமாரியைத் திறந்தாலே வெளியே வந்து விழும் அளவுக்கு டிரச்கள்; பாதி படிக்கப்பட்டும், தொடவே தொடாமலும் தூசி படிந்து கிடக்கும் புத்தகங்கள்; நான்கைந்து வகை ஷூக்கள்; ஹேண்ட்பேகுகள்; போன்கள், அவற்றின் அக்சசரீஸ்; தேவையில்லாத பர்னிச்சர்கள்; அடுப்படியில் கூட ஏழெட்டு வாணலிகள், தேவைக்கு அதிகமான தட்டு, தம்ளர், கரண்டி வகையறாக்கள்; வெறும் பந்து விளையாட்டிலேயே சந்தோஷம் கொள்ளும் நாய்க்குக்கூட சிறிதும், பெரிதுமாகப் பலவித விளையாட்டுப் பொருட்கள், தின்பண்டங்கள்.
இவை போதாதென்று இன்னும் சில வீடுகளில் ஒரு ஓட்டை சைக்கிள், ஓடாத கடிகாரங்கள், பேன்கள், ரிப்பேராகிப் போன கம்ப்யூட்டர், வாசல் ஓரத்தில் மூடி முக்காடு போட்டு இரண்டு வருடங்களாகத் தூசி படிந்த பைக் போன்றவற்றையும் காணலாம். இவற்றில் தேவைக்காக வாங்கியவை சிலவே. மற்றவற்றை ஏன் வாங்கினோம்? சிலர் ஆசைக்காகவும், சிலர் அடுத்தவரை அசத்துவதற்காகவும் வாங்கியிருக்கலாம். ஆனால் இவை இரண்டையும் விட ஆபத்தான காரணம் ஒன்று உண்டு.
ஆரம்பத்தில், வேலை செய்யும் இடத்துக்கு வந்து டீ சப்ளை செய்பவரிடம் 5 ரூபாய்க்கு டீ வாங்கும் நாம், சற்று அதிக சம்பளம் கிடைத்ததும், கடைக்குச் சென்று பதினைந்து ரூபாய்க்கு இஞ்சி டீ குடிப்பதை வழக்கமாக்குகிறோம். இது மெல்ல மெல்ல வளர்ந்து கோடைக் காலத்தில் 50 ரூபாய் ஜூசாக மாறுகிறது.
10 ஆயிரம் ரூபாய்க்கு ஒரு ஸ்மார்ட் போன் வாங்கினோம், சரி. பெட்டர் மாடல், பெட்டர் கேமரா என்று ஏதேதோ சொல்லி ஒரே வருடத்தில் 25 ஆயிரத்துக்கு அடுத்த மாடலை வாங்குகிறோமே, ஏன்? நம் பணத்தைச் சுரண்டும் இந்த அபாயகரமான பழக்கத்துக்கு ஒரு பெயர் உண்டு. அதுதான் லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் – அதாவது நமக்கு வருமானம் உயர, உயர அதற்கு நிகராக செலவையும் அதிகரிக்கும் பழக்கம்.
இந்த லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் வியாதி உங்களிடம் இருக்கிறதா என்று அறிந்து கொள்ள கீழ்க்காணும் பட்டியலில் எந்தெந்தப் பழக்கங்களை நீங்கள் அனுசரிக்கிறீர்கள் என்று பாருங்கள்:
* கையில் தண்ணீர் எடுத்துச் செல்லாமல் கடையில் வாட்டர் பாட்டில் வாங்குவது.
* ஓட்டலில் 100 ரூபாய்க்குக் கிடைக்–கும் மசால் தோசைக்கு, சுவிக்கியில் 160 ரூபாய் வசூலிக்கப்படும் என்று தெரிந்தாலும் ஓட்டலுக்கு நடந்து செல்ல சோம்பேறித்தனப்பட்டு சுவிக்கி, சொமாட்டோவில் ஆர்டர் செய்வது.
* ஓட்டல், சினிமா இல்லாத வாரக்கடைசி வேச்ட் என்று எண்ணுவது
* ஒரு டிவி நிகழ்ச்சியில் கூறியது போல பிரியாணி ஆசையில் 100 கிலோமீட்டர் தூரம் கூட பயணிக்கத் துணிவது
* 50 ரூபாய்க்கான மளிகைப் பொருள் தேவை என்றால், பிரீ டெலிவரிக்கு ஆசைப்–பட்டு, 600 ரூபாய்க்கு ஏதேதோ ஆர்டர் போடுவது.
* சிறியதோ, பெரியதோ, விசேஷங்களுக்குப் போகும் முன் பியூட்டி பார்லருக்கு ஒரு விசிட் தேவை என்பது
* ஒவ்வொரு சின்ன பார்ட்டிக்கும் புதிய ஆடைகள், அணிமணிகள் அணிந்து அசத்தவேண்டும் என்று ஆசைப்படுவது.
சுந்தரி ஜகதீசன்
* முக்கியமாக இவையெல்லாம் நமது வாழ்வில் நாம் ஒரு நல்ல நிலையை அடைந்துவிட்டோம் என்பதை மற்றவர்க்குப் பறைசாற்றும் விஷயங்கள்; ஆகவே இவற்றை மாற்றுவதே கௌரவக் குறைச்சல் என்று நினைப்பது.
இந்தப் பழக்கங்கள் உங்களிடம் இருந்தால் மெல்ல மெல்ல நீங்கள் லைப்ச்டைல் இன்ப்ளேஷனுக்கு அடிமை ஆகிறீர்கள் என்று அர்த்தம்.
உங்கள் மைண்ட்வாய்ஸ் கேட்கிறது. – வாழ்வில் உயர்வை அடையத்தானே நாம் இத்தனை மெனக்கெடுகிறோம்? சற்று நமக்காக, நம் வசதிக்காக செலவு செய்வதில் என்ன தவறு என்றுதானே கேட்கிறீர்கள்?
நமக்காக செலவு செய்யலாம்; செய்யவேண்டும். ஆனால் அது நாம் விரும்பி, உணர்ந்து, அபூர்வமாக வாங்கும் ஒன்றாக இருக்கவேண்டும். தினப்படியான செலவுகளில் லைப்ஸ்டைல் இன்ப்ளேஷன் வரக்கூடாது. வருமானம் எவ்வளவு உயர்ந்தாலும், செலவும் அவ்வளவே உயரும் என்றால் சேமிப்பது எப்படி, முதலீடு செய்வது எப்படி, வாழ்வின் அடுத்தடுத்த கட்டங்களுக்கு உயர்வது எப்படி?
ஆனால் அடுத்தவர் போல வாழும் ஆசையும், கிரெடிட் கார்ட் வருகையும் நம்மை செலவு செய்யத் தூண்டுகின்றன. வீட்டு வேலைகளை எளிதாக்க மிக்சி, கிரைண்டர், வாஷிங் மெஷின்களோடு, வேலைக்குப் போய்வர ஒரு பைக் அல்லது சின்னக் கார், செல்போன், கம்ப்யூட்டர், இன்டர்நெட் என்ற எல்லாமும் ஆசைகளாக இருந்து இன்று தேவை என்றாகிவிட்டன. தவறில்லை. ஆனால் அவற்றை ஒவ்வொன்றாக வாங்காமல், மொத்தத்தையும் கடனில் வாங்க முயல்வதுதான் தவறு.
பீச், பார்க், கோவில் என்று இலவசமாகக் காற்று வாங்கிய நாம், ஓட்டல், சினிமா, எக்சிபிஷன், மால், டூர் போன்ற செலவுகள் நிறைந்த பொழுதுபோக்குகள் அத்தியாவசியம் என்று எண்ண ஆரம்பித்து விட்டோம். "சந்தையில் புதிதாக என்ன வந்திருக்கிறது என்று வேடிக்கைதான் பார்க்கிறேன்" என்று ஆரம்பித்து ஆன்லைனில் வாங்கிக் குவிக்கும் மனப்போக்கும் பெருகியுள்ளது.
ஒரு சிறிய விசேஷத்திற்கும், கொண்டாட்டத்திற்கும் கூட சக்திக்கு மீறிய ஆர்ப்பாட்டமான செலவுகள்! ஒரு சாதாரணத் திருமணத்தில் கூட பிளெக்ஸ் பேனர்கள், அரண்மனை போன்று அலங்கரிக்கப்பட்ட மண்டபம், ராஜகுமாரன் போன்ற உடைகள் அணிந்த மணமகன், சரம், சரமாக நகைகள் அணிந்த மணமகள், அதற்கு சற்றும் குறையாத அலங்காரங்களில் உறவினர்கள், தமிழ் கலாச்சாரத்துக்கு அறிமுகமேயில்லாத ஹல்தி, மெஹந்தி, சங்கீத், பேச்சிலர் பார்ட்டிகள், இலையில் இடமே இல்லாத அளவுக்கு நிரப்பப்படும் வித விதமான உணவுப் பதார்த்தங்கள் என்றாகி விட்டது.
இவை அனைத்தும் யாரையும் கசக்கிப் பிழியாத வரையில், கடன் வலையில் வீழ்த்தாத வரையில், சரி என்று கூறலாம். ஆனால் அம்பானி, நயன்தாரா போன்றவர்களின் வீட்டுத் திருமணங்களின் தாக்கம் சமூகத்தின் வேர் வரை சென்று பாய்வதையும், சாதாரண மக்களுக்கும் கடன் வாங்கியாவது ஆடம்பரமாகத் திருமணம் செய்யவேண்டும் என்ற ஒரு பெரிய அழுத்தத்தை உருவாக்குவதையும் பார்க்க முடிகிறது.
அம்பானி செய்த ரூ.5000 கோடி செலவு அவரது நிகர சொத்து மதிப்பில் 0.50 சதவீதம் மட்டுமே. நயன்தாரா தன் திருமணத்தைப் படம் எடுக்கும் வாய்ப்பை நெட்ப்ளிக்சுக்கு வழங்கி லாபம் பார்த்ததாகக் கேள்விப்படுகிறோம்.
ஆனால் நாம் நம் சொத்து மதிப்பில் 10 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை ஆடம்பரத் திருமணங்களில் இழக்கிறோம். கடன் வாங்கியாவது கொண்டாடுகிறோம். நிதி நிறுவனங்களோ தங்கள் லாபத்தையே கருத்தில் கொண்டு, திருமணத்துக்கு மட்டுமின்றி, ஹனிமூன் போவதற்குக் கூட கடன் தரத் தயாராக உள்ளன. இந்த நிலையில், கடன் என்ற புதை குழியின் மீது திருமணம் என்னும் மாளிகையைக் கட்டுவது உசிதமா என்று யோசிப்பது அவசியம்.
வாரம் ஒரு டாபிக் என்று பேசிவரும் நாம் செலவு பற்றி மட்டும் இரண்டு வாரங்கள் பேச வேண்டிய நிலைக்கு ஆளாகி இருக்கிறோம். காரணம் இது நம் ஒவ்வொருவரின் வீட்டிலும், ஒவ்வொருவரின் பொருளாதாரத்திலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. ஆகவே இந்த ஜல்லிக்கட்டுக் காளை விளைவிக்கும் பிரச்சினைகள் குறித்தும், அதை அடக்க நாம் எடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் அடுத்த வாரமும் காணலாம்.
அதுவரை மேலே கூறப்பட்ட அல்லது கூறாமல் விடுபட்ட உங்கள் அநாவசிய செலவுப் பழக்கங்கள் எவை, அவற்றைத் தவிர்ப்பதன் மூலம் எவ்வளவு பணம் மிச்சமாகும் என்பதை ஒருமுறை சிந்திக்கலாமே!