சிறப்புக் கட்டுரைகள்

காளியின் அருள்பெற்ற காளிதாசர்!

Published On 2024-05-10 11:04 GMT   |   Update On 2024-05-10 11:04 GMT
  • ஒளவைக்கு கர்வம் தோன்றியபோதுதானே `சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?` எனக் கேட்டு முருகன் சிறுவனாகத் தோன்றி அவரது கர்வத்தை அடக்கினான்?
  • தமிழில் காளமேகப் புலவர் ஈற்றடி கொடுத்தால் வெண்பா பாடியது போல, காளிதாசரும் சிக்கலாகக் கொடுக்கப்பட்ட ஈற்றடிகளுக்கெல்லாம் வடமொழியில் சுலோகங்கள் இயற்றியிருக்கிறார்.

மகாகவி காளிதாசர் சமஸ்கிருதக் கவிஞர்களில் மிக முக்கியமானவர். அவரது படைப்புகளை நீக்கி விட்டு சமஸ்கிருத இலக்கிய வரலாற்றை எழுத இயலாது.

காளிதாசரின் வரலாறு பரவலாய் அனைவரும் அறிந்த ஒன்று. தமிழில் அவரது சரிதம் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது.

காளிதேவியின் அருள் பெற்றவர் மகாகவியான காளிதாசர். அவர் மேகத்தைத் தூதுவிடும் தூது இலக்கியமான மேக சந்தேசம், மகாபாரதக் கிளைக் கதையின் புத்துருவாக்கமான சாகுந்தலம், ராமாயணக் கதையைப் பேசும் ரகுவம்சம், இன்னும் விக்கிரமோர்வசீயம், மாளவிகாக்னி மித்ரம் உள்ளிட்ட பல காவியங்களைப் புனைந்தார்.

அந்தக் காவியங்கள் மூலம் நாம் அறியும் காளிதாசரது பரந்துபட்ட பூகோள அறிவு, தாவரவியல் அறிவு, விலங்கியல் அறிவு, ஆன்மிக முதிர்ச்சி உள்படப் பல செய்திகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.

கண்ணதாசன் தம் கவிதை யில் காளிதாசரது படைப்புகளை அழகாகப் பட்டியலிடுகிறார்:

`காதல் மணம் கொண்ட

பாசம் - அந்தக்

கவிஞனின் மேக சந்தேசம்

தூதுசெல்லும் ஒரு மேகம்

- அதைச்

சொல்வது மேக சந்தேசம்

கங்கைக் கரை இருந்த

பெருவம்சம் - அந்தக்

கவிஞன் கவியுரைத்த

ரகுவம்சம்

செங்கையில் நாடாண்ட

திருவம்சம் - மன்னன்

ஸ்ரீராமன் பிறந்த ரகுவம்சம்...`


கவியரசர் கண்ணதாசனுக்குக் காளிதாசன் கவிதைகளில் மிகுந்த ஈடுபாடு இருந்தது. `கல்லெல்லாம் மாணிக்கக் கல்லாகுமா?` என்ற திரைப்பாடலில் `கம்பன் கண்ட சீதை உந்தன் தாயல்லவா? காளிதாசன் சகுந்தலை உன் சேயல்லவா?` என்ற வரிகள் மூலம் காளிதாசனைப் பெருமைப்படுத்துகிறார் அவர்.

தமிழில் காளமேகப் புலவர் ஈற்றடி கொடுத்தால் வெண்பா பாடியது போல, காளிதாசரும் சிக்கலாகக் கொடுக்கப்பட்ட ஈற்றடிகளுக்கெல்லாம் வடமொழியில் சுலோகங்கள் இயற்றியிருக்கிறார்.

`குளு குக்குளு குக்குளு` என்று அவருக்கு ஒரு ஈற்றடி கொடுத்தார்கள். பொருளற்ற இந்த ஈற்றடிக்கு எப்படித்தான் அவர் கவிதை புனையப் போகிறார் என எல்லோரும் காத்திருந்தார்ள். காளிதாசர் அசரவில்லை.

`பொய்கைக் கரையிலிருந்த நாவல் மரத்தில் நாவல் பழங்கள் பழுத்துக் குலுங்கின. அந்த நாவல் மரத்தின் கிளைகளைக் குரங்குகள் உலுக்கியபோது நாவல் பழங்கள் பொய்கைத் தண்ணீரில் பொலபொலவென உதிர்ந்தன. அப்போது எழுந்த ஒலிதான் குளுகுக்குளு குக்குளு!` என அந்த ஈற்றடிக்கும் சாமர்த்தியமாக சுலோகம் எழுதினார் அவர்.

`டடண்டடண்டண் டடடண் டடண்டண்` என்றும் அவருக்கு ஓர் ஈற்றடி கொடுக்கப் பட்டது. இந்த அர்த்தமற்ற ஈற்றடியில் எப்படியும் அவரால் கவிதை புனைய முடியாது எனப் பொறாமை கொண்ட மற்ற கவிஞர்கள் அவரின் தடுமாற்றத்தைக் காண ஆவலோடு காத்திருந்தார்கள்.

இறையருள் பெற்ற காளிதாசரா தடுமாறுவார்?

`நந்தவனப் பொய்கையில் குடத்தில் நீர்சேந்திய தலைவி, இடுப்பில் குடத்தோடு குளத்துப் படிகளில் ஏறி வந்தாள். அப்போது எதிரே வந்த தலைவனைக் கண்டதும் நாணத்தால் குடத்தை நழுவ விட்டாள். தண்ணீர்க் குடம் குளத்துப் படிக்கட்டுகளில் கடகடவென உருண்டபோது எழுந்த ஒலிதான் டடண்டடடண் டடடண் டடண்டண்!` என்று அவர் சொன்ன அழகிய கவிதையைக் கேட்டுப் பொறாமைக் கவிஞர்களின் தலைகள் கவிழ்ந்தன.

தாம் எழுதிய அற்புதமான படைப்புகளாலும் மன்னரும் மக்களும் தன்னை மிகவும் மதித்ததாலும் காளிதாசரிடம் சற்று ஆணவமும் தலைதூக்கியதாகச் சொல்கிறது அவரது வரலாறு. கவிஞர்களுக்கு கர்வம் ஏற்படும்போது இறைச்சக்தி அதை அடக்குவதைத் தமிழ் இலக்கியமும் சொல்கிறது.

ஒளவைக்கு கர்வம் தோன்றியபோதுதானே `சுட்ட பழம் வேண்டுமா, சுடாத பழம் வேண்டுமா?` எனக் கேட்டு முருகன் சிறுவனாகத் தோன்றி அவரது கர்வத்தை அடக்கினான்?


காளிதாசர் வாழ்விலும் இதுபோன்ற ஒரு சம்பவம் வருகிறது.

காளிதாசர் வெயிலில் நடந்து சென்று கொண்டிருந்தார். கடும் தாகம் அவரை வாட்டியது. தண்ணீர் எங்கு கிடைக்கும் என்று அவர் விழிகள் தேடின.

அதோ சற்று தூரத்தில் ஒரு கிராமப் பெண் இடுப்பில் தண்ணீர்க் குடத்தோடு நடந்து வந்து கொண்டிருக்கிறாளே? அவளிடம் நீர் கேட்போம். அவள் தன்னை நெருங்கும் வரை காத்திருந்த காளிதாசர், அவளிடம் `கடும் தாகம் எனக்கு. உன் குடத்திலிருந்து எனக்குச் சிறிது தண்ணீர் தருவாயா?` எனக் கேட்டார்.

அவளோ சரியான வாயாடியாக இருப்பாள் போலிருந்தது. `சரிதான் சுவாமி! நீங்கள் யார் என உங்களை அறிமுகப்படுத்திக் கொள்ளுங்கள்.

தண்ணீர் தருகிறேன். நான் யாருக்குத் தண்ணீர் தருகிறேன் என்பது எனக்குத் தெரிய வேண்டும் அல்லவா?` என்றாள் அவள்! தண்ணீர் பெறுவதற்குக் கூட ஆளை அறிமுகப்படுத்திக் கொள்ள வேண்டுமா? வேடிக்கைதான் என நினைத்தார் காளிதாசர்.

கல்வியறிவற்ற இந்தப் பட்டிக்காட்டுப் பெண்ணுக்குத் தான் கவிஞன் என்றால் புரியுமோ? புரியாதோ? எனவே பொத்தாம் பொதுவாக அறிமுகப்படுத்திக் கொள்ளலாம் என எண்ணினார்.

`நான் ஒரு பயணி அம்மா! எங்கும் பயணம் செய்பவன். அவ்வளவுதான்!` என்றார்!

அவள் அவர் பதிலைக் கேட்டுக் கலகலவென்று நகைத்தாள்.

`உலகில் இரண்டே இரண்டுபேர் தான் பயணிகள் என்று சொல்லிக் கொள்ள உரிமையுள்ளவர்கள் சுவாமி! ஒருவர் சந்திரன்! இன்னொருவர் சூரியன்! இவர்கள்தான் இரவு பகல் என நிற்காமல் பயணிப்பவர்கள். அவர்கள் இருவரைத் தவிர மற்ற யாரையும் நான் பயணி என ஒப்புக் கொள்வதில்லை!` என்றாள் அவள்!

பெரிய வம்பு பிடித்த பெண்ணாய் இருப்பாள் போலிருக்கிறதே என்று நினைத்த காளிதாசர், `சரி. என்னை விருந்தினர் என்று வைத்துக் கொள்!` என்றார்.


`சுவாமி! உலகில் இரண்டே இரண்டு விருந்தினர்தான் உண்டு! ஒன்று செல்வம்! இன்னொன்று இளமை! இந்த இரண்டும் தான் விருந்தினராக வரும். நிலையாக நிற்காது. உடனே போய் விடும்! இந்த இரண்டைத் தவிர வேறு யாரையும் நான் விருந்தினர் என ஏற்றுக்கொள்ள முடியாது` என்றாள் அவள்!

இதென்ன, விடாப்பிடியாக ஏதேதோ ஏட்டிக்குப் போட்டியாய்ச் சொல்லிக் கொண்டே இருக்கிறாளே? காளிதாசரிடம் மெல்லிய சீற்றம் எட்டிப் பார்த்தது.

எரிச்சலான அவர், `பெண்ணே! நான் ஒரு பொறுமைசாலி! அதனால்தான் உன் இடக்குப் பேச்சை சகித்துக் கொண்டிருக்கிறேன்!` என்றார்!

அதற்கும் அந்தப் பெண் பதில் வைத்திருந்தாள்.

`பொறுமை என்றால் இரண்டைத் தான் அப்படி ஏற்க முடியும். ஒன்று நாம் வாழும் இந்த பூமி! எவ்வளவு மிதித்தாலும், எத்தனை தோண்டினாலும் தாங்கும்! மற்றொன்று மரம் ! யார் கல்லால் அடித்தாலும் வெறுக்காமல் கல்லடி தந்தவர்க்கே காய்களைக் கொடுக்கும். எனவே உங்களைப் பொறுமைசாலி என என்னால் ஒப்புக்கொள்ள இயலாது` என்றாள்!

கோபமடைந்த காளிதாசர் `உன்னிடமிருந்து தண்ணீர் பெறாமல் நான் விடமாட்டேன் பெண்ணே! நான் ஒரு பிடிவாதக்காரன், தெரிந்துகொள்` என்றார்!

அதற்கும் அந்தப் பெண் அசரவில்லை. கலகலவென நகைத்தாள்.

`சுவாமி! உலகிலேயே பிடிவாதக்காரர்கள் இரண்டு பேர் தான். ஒன்று தலைமுடி! இன்னொன்று நகம்! இந்த இரண்டும்தான் வேண்டாம் வேண்டாம் என்று எத்தனை முறை வெட்டினாலும் பிடிவாதமாக மீண்டும் மீண்டும் வளரும்! அந்த இரண்டோடு ஒப்பிடும்போது உங்களைப் பிடிவாதக்காரன் என்று என்னால் ஒப்புக்கொள்ள முடியாது!` என்றாள் அவள்.

பேச்சுக்குப் பேச்சு அவள் மறுபேச்சுப் பேசுவதைக் கண்டு தாகம் அதிகரிக்கவே `உன்னிடம் தண்ணீர் கேட்டேனே? நான் ஒரு முட்டாள்!` என்று தன்னை நொந்து கொண்டார் காளிதாசர்.

அந்தப் பெண், அப்போதும் விடவில்லை.

`உலகிலேயே இரண்டு முட்டாள்கள் தான் உண்டு! ஒருவன் நாட்டை ஆளத்தெரியாத அரசன். மற்றவன் நாடாளத் தெரியாத அந்த மன்னனுக்குத் துதிபாடும் மந்திரி!` என்றாள்!

காளிதாசர் செய்வதறியாது சற்றே யோசித்தார். பின் தெளிவடைந்தவராய் சடாரென அந்தப் பெண்ணின் காலில் விழுந்தார்!

அந்தப் பெண் `மகனே... எழுந்திரு!` என்றதும் நிமிர்ந்து பார்த்த காளிதாசர் திகைத்தார். அந்தப் பெண் மறைந்து போனாள்.

ஒரு கையில் சூலத்தோடும் ஒரு கையில் தண்ணீர்க் குடத்தோடும் காளிதேவி நின்றிருந்தாள். பட்டிக்காட்டுப் பெண்ணாகத் தண்ணீர்க் குடத்துடன் வந்தவள், தான் நாள்தோறும் வழிபடும் காளிதான் என அறிந்து காளிதாசர் பக்திப் பரவசத்துடன் கைகூப்பி வணங்கினார்.

காளிதேவி தன் அடியவனான் காளிதாசரைக் கனிவுடன் பார்த்துப் பேசலானாள்:


`மகனே! ஆணவத்தைத் தலையில் தூக்கிக் கொண்டு அலையாதே! என் கடாட்சம் இருப்பதால் நீ கவி பாடுகிறாய், அவ்வளவே. இறையருளாலேயே உலகில் எல்லாம் நடக்கிறது என்ற உண்மையை உணர்ந்து அடக்கமாக இருக்கக் கற்றுக் கொள். கவிஞனாக இருப்பது முக்கியம்தான்.

அதைவிட முக்கியம் கர்வம் இல்லாத மனிதனாக இருப்பது. நீ கவிஞனாக இருப்பதோடு மனிதனாகவும் இரு!" என்று கூறி தண்ணீர்க் குடத்தைக் காளிதாசர் கையில் கொடுத்து காளிதேவி மறைந்து போனாள்!

காளிதேவி கொடுத்த குடத்திலிருந்த தண்ணீரை அருந்திய பின் காளிதாசனின் கவிதையாற்றல் இன்னும் பல மடங்கு பெருகியது. எவ்வளவு ஆற்றல் படைத்தவர்களாக இருந்தாலும் அடக்கம் மிக முக்கியம் என்ற உண்மையை உணர்ந்த காளிதாசர், இந்த சம்பவம் தந்த முதிர்ச்சியால் அதன்பின் பண்பட்ட மனிதராகவும் வாழ்ந்தார் என்கிறது காளிதாசர் சரிதம்.

தொடர்புக்கு-thiruppurkrishnan@gmail.com

Tags:    

Similar News